தடை விதிக்கப்பட்ட தெலுங்கு படம் சினேகா கதை அல்ல: தயாரிப்பாளர்
சென்னை, செப். 22: நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட படம் நடிகை சினேகா வாழ்க்கை பற்றிய கதை அல்ல என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தேகா தேவகுமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த விவரம்:
நடிகை சினேகா “மனசு பலிகே மெüன ராகம்‘ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். “ஏன் இந்த மெüனம்‘ என்ற பெயரில் தமிழிலும் இந்தப் படம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சினேகாவின் முன்னாள் காதலர் நாகா ரவி, இந்தப் படம் தனக்கும், சினேகாவுக்கும் முன்பு இருந்த உறவை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது; இப்படம் வெளியானால் சமுதாயத்தில் தனது நற்பெயர் பாதிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிமன்றமும் இந்தப் படம் வெளியாவதற்குத் தடை விதித்தது. இதையடுத்து படத் தயாரிப்பாளர் தேகா தேவகுமார் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: இந்தக் கதை, யாருடைய சொந்த வாழ்க்கையையும் பற்றியது அல்ல; தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது.
காதல் இருக்கும் இடத்தில் சுயநலம் இருக்காது; சுயநலம் இருக்கும் இடத்தில் காதல் இருக்காது என்பதுதான் கதை. ஒரு படம் அதன் தரத்தால் மட்டுமே பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.
வீணான சர்ச்சைகள் மூலம் கிடைக்கும் விளம்பரத்தால் படத்தை வெளியிட விரும்பவில்லை. எனவே, தற்போது படத்தைப் பற்றி வெளிவந்துள்ள தவறான சர்ச்சைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளார்.