இந்திய ஏலத்தில் சர்வதேச கிரிக்கட் வீரர்கள்
வழமைக்கு மாறான ஏல விற்பனை ஒன்று இந்தியாவின் மும்பை நகரில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
அங்கு தொலைக்காட்சி மூலமான விளம்பர வருமானத்தை இலக்கு வைத்து நடத்தப்படவிருக்கின்ற புதிய இந்திய கிரிக்கட் லீக் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான ஆட்டக்காரர்களை, பிரபல தொழிலதிபர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்தனர்.
ஏப்ரல் மாதம் முதல் இருபதுக்கு இருபது அடிப்படையில் 6 வாரங்களுக்கும் அதிகமாக நடக்கவிருக்கின்ற இந்த போட்டிகளில், இந்தியாவின் பல நகரங்களைச் சேர்ந்த தனியார் கழகங்களுக்காக முதல் தடவையாக சர்வதேச முன்னணி கிரிக்கட் ஆட்டக்காரர்கள் ஆடவுள்ளனர்.
![]() |
![]() |
ஏலம் எடுக்க வந்த நடிகை பிரித்தி ஷிந்தா |
இந்தப் போட்டிகள் விளையாட்டு வீரர்களின், தேசத்தின் மீதான விசுவாசத்தைக் குறைக்கும் என்பதால், கிரிக்கட் துறையில் இவை பாதிப்பை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இதற்காக 8 கழகங்கள் இந்திய முக்கிய நகரங்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மும்பை, டில்லி, கொல்கொத்தா, பங்களூர், ஜெய்பூர், சென்னை, சண்டிகார் மற்றும் ஹைதராபாத் ஆகிய இந்த கழகங்களில் மிகவும் முக்கிய வணிக புள்ளிகளும் மும்பை நடிகர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.
முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சீமெண்ட் சிறினிவாசன் போன்ற தொழிலதிபர்களும், ஷாருக்கான் மற்றும் பிரித்தி ஜிந்தா போன்ற மும்பை திரைப்பட நட்சத்திரங்களும் இதில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான தொலைக்காட்சி உரிமம் கூட மிகப் பெரிய தொகைக்கு விலைபோயுள்ளது.
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, யுவராஜ்சிங் மற்றும் வீரீந்தர் சேவாக் ஆகிய இந்திய பிரபல வீரர்கள் தமது சொந்த நகரங்களின் அணிகளுக்கே விளையாடுவார்கள். இவர்களுக்கு அதிகபட்ச சம்பளம் வழங்கப்படும்.
அதேவேளை இன்று நடந்த ஏலத்தில், டோணியை சென்னை லீக் 1.5 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. அதேவேளை ஆஸ்ரேலிய அடம் கில்கிறிஸ்ட் 7 லட்சம் டாலர்களுக்கும், சேர்ன் வார்ண் நாலரை லட்சம் டாலர்களுக்கும் விலை போயிருக்கிறார்கள்.
இலங்கை அணியின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை சென்னை அணி 6 லட்சம் டாலர்களுக்கு வாங்கியுள்ளது, சனத் ஜயசூரியவை மும்மை அணி 9லட்சத்து எழுபத்தையாயிரம் டாலர்களுக்கும், மஹில ஜயவர்த்டனவை சண்டிகர் அணி 4லட்சத்து எழுபத்தையாயிரம் டாலர்களுக்கும் வாங்கியிருக்கின்றன.
இந்த லீக் அணிகளைப் பொறுத்தவரை, அவற்றில், 16 வீரர்களைக் கொண்ட அணியில், இந்தியர் அல்லாத வெளிநாடுகளைச் சேர்ந்த 8 வீரர்கள் மாத்திரமே இடம்பெறமுடியும். அதிலும், முதல் பதினொருவரில், 4 வெளிநாட்டவர் மாத்திரமே இடம்பெறலாம்.
இந்த ஒவ்வொரு அணியிலும், குறைந்தது 22 வயதுக்கு உட்பட்ட 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றாக வேண்டும் என்பது விதியாகும்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கோடிகளில் புரளும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி
பிரீமியர் லீக் (ஐபிஎல்) அமைப்பு வரும் மார்ச்- ஏப்ரலில் நடத்தவுள்ள 20 ஓவர்கள் போட்டியில் விளையாடப் போகும் அணிகளை பலநூறு கோடிகளைக் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர் அம்பானி, விஜய் மல்லையா உள்ளிட்ட தொழில் பிரபலங்கள்.
இதனால் சூதாட்டம் தலைவிரித்தாடலாம் என்ற சர்ச்சை வலுத்துள்ளது.
பிசிசிஐ-க்கு எதிர் அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது எஸ்ùஸல் குழுமத்தின் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்). இந்த அமைப்பு 20 ஓவர்கள் போட்டியை சமீபத்தில் ஹரியாணா மாநிலத்தில் நடத்திக் காட்டியது.
முன்னதாக, ஐசிஎல்-லில் விளையாடும் வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அந்த அமைப்பால் ஓரங்கப்பட்டவர்களும், முன்னாள் சர்வதேச வீரர்களும் அடித்தது அதிர்ஷ்டம் என்பது போல நல்ல விலைக்கு இந்த அமைப்பில் ஒப்பந்தம் பெற்றனர்.
ஐபிஎல் உதயம்:
இந்நிலையில் அதற்குப் போட்டியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உதவியுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியை நடத்த முடிவு செய்தது.
8 அணிகள்:
44 நாள்களில் மொத்தம் 59 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 8 அணிகள் அப் போட்டியில் விளையாட உள்ளன. மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கோல்கத்தா, தில்லி, மொஹாலி, ஜெய்ப்பூர் என ஒவ்வொரு அணிக்கும் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஏலம்:
இதற்கிடையே அந்த அணிகளை யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கி, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் எனவும், குறைந்தபட்சமாக ரூ. 200 கோடி தரவேண்டும் எனவும் விலை நிர்ணயம் செய்தது பிசிசிஐ. டெண்டர் மூலம் அதற்கான தேர்வு நடைபெற்றது.
ஆனால், எதிர்பார்த்ததற்கும் மேலாக ஏலம் மூலம் கோடிகளைச் சேர்த்துள்ளது இந்திய வாரியம்.
உரிமை பெற்றவர்களது பெயர்களை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் லலித் மோடி மும்பையில் வியாழக்கிழமை அறிவித்தார்.
மும்பை அணிக்கு ரூ 436 கோடி:
அதிகபட்சமாக, மும்பை அணி ரூ. 436 கோடிக்கு விலை போனது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அதை வாங்கியுள்ளார்.
அடுத்து, பெங்களூரு அணியை ரூ. 435 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார் மதுபான தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் விஜய் மல்லையா.
ஹைதராபாத் அணியை ரூ. 419 கோடிக்கு டெக்கான் கிரானிக்கல் நிறுவனமும், சென்னை அணியை ரூ. 354 கோடிக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளன.
ஷாருக்கான்:
கோல்கத்தா அணியை, ஜுஹி சாவ்லா, ஜெய் மேத்தா ஆகியோருடன் இணைந்து ரூ. 312 கோடிக்கு பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் வாங்கியுள்ளார்.
மற்றொரு நடிகை பிரித்தி ஜிந்தா, தனது காதலர் நெஸ் வாடியாவுடன் சேர்ந்து மொஹாலி அணியை ரூ. 296 கோடிக்கு உரிமை பெற்றுள்ளார்.
தில்லி அணியை ரூ. 328 கோடிக்கு ஜி.எம்.ஆர். ஹோல்டிங்ஸ் நிறுவனமும், ஜெய்ப்பூர் அணியை ரூ. 261 கோடிக்கு எமர்ஜிங் மீடியா நிறுவனமும் பெற்றுள்ளன.
ஐசிஐசிஐ, சஹாரா, ஃபியூச்சர்ஸ் குழுமம் ஆகிய பெரும் நிறுவனங்களின் டெண்டர் நிராகரிக்கப்பட்டதாக மோடி தெரிவித்தார்.
இந்த ஏலத்தால் மொத்தம் ரூ. 7 ஆயிரம் கோடிவரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வருமானம் கிடைத்துள்ளது.
தவிர 80 வீரர்கள் இப் போட்டிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் விலைக்கு வாங்குவோர் வாங்கிக் கொள்ளலாம். அதற்கான ஏலம் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஏகப்பட்ட கோடிகள் பிசிசிஐ-க்கு கிடைக்கும்.
தீவிர கண்காணிப்பு:
இதுவரை இல்லாத அளவு ஆயிரக்கணக்கான கோடிகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால், சூதாட்டம் தலைவிரித்தாடலாம் என்ற சர்ச்சை வலுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊக்கமருந்து தடுப்பு பிரிவும், லஞ்ச ஒழிப்பு பிரிவும் தீவிரமாகக் கண்காணிக்க உள்ளனர் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
————————————————————————————————————–
ஐபிஎல் போட்டி நாயகன் கில்கிறிஸ்ட்
மெல்போர்ன், பிப். 19: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் அதிகமான தொகைக்கு ஏலம் போகும் வாய்ப்பை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் புதன்கிழமை நடைபெறுகிறது. அதில், ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணிகளை ஏலத்துக்கு எடுத்துள்ளவர்கள் கோர உள்ளனர்.
எந்த வீரரையும் ஏலம் கேட்க ஓர் அணிக்கு ஒருமுறைதான் வாய்ப்பு. இரண்டாவது முறையாக அதே வீரரைக் கேட்க வாய்ப்பு கிடையாது. ஆதலால், யார் முதலாவதாக ஏலம் கேட்கும் வாய்ப்பை பெறுகின்றனரோ, அவர்கள் முதல் ஏலத்திலேயே கில்கிறிஸ்டுக்கு சில கோடிகளை வாரி வழங்கலாம் எனத் தெரிகிறது.
ரூ. 3.5 கோடி:
இதற்கிடையே, ஐபிஎல் போட்டியில் விளையாடப்போகும் ஆஸ்திரேலிய வீரர்களில் கில்கிறிஸ்டுக்குத்தான் மவுசு அதிகம் என்ற பேச்சும் வலுத்துள்ளது. அவரை ஏலத்தில் எடுக்க ஷாருக்கானின் கோல்கத்தா, பிரீத்தி ஜிந்தாவின் மொஹாலி அணிகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றன.
6 வார காலம் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்கு கில்கிறிஸ்டுக்கு ரூ. 3.5 கோடிவரை கொடுக்க அணிகள் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே சமயம் இக்கருத்தை மறுத்துள்ள ஐபிஎல்-லின் ஆஸ்திரேலிய ஏஜென்ட் மாக்ஸ்வெல், அவர் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் ஆகப்போகிறார் என எனக்குத் தெரியாது. ஆனால் பை நிறைய பணத்துடன் திரும்புவார் என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
கங்குலி ஆதரவு:
இதற்கிடையே கோல்கத்தா அணியின் கேப்டன் செüரவ் கங்குலியும், கில்கிறிஸ்ட்டை சேர்க்க ஆதரவு காட்டி வருகிறார். கோல்கத்தா அணி உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கானும் கில்கிறிஸ்டை சேர்க்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர் ஆஸ்திரேலியா சென்றுவந்ததாகவும் தெரிகிறது.
மொஹாலி அணியின் பயிற்சியாளர் டாம் மூடியும், கில்கிறிஸ்ட்டை எடுத்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்.
இதற்கிடையே கில்கிறிஸ்ட்டை அணியில் சேர்ப்பது ஆட்டத்துக்காக மட்டுமல்ல, இக்கட்டான நிலையில் வீரர்களை ஒருங்கிணைத்து ஆடவைக்கும் தந்திரம் அவரிடம் உண்டு என்பதற்காகவே அணிகள் அவர் மீது கண் வைத்துள்ளன என்ற கருத்தும் வலுத்துள்ளது.