இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- ஜேவிபி இடையே கருத்து முரண்பாடு
இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஜேவிபி கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்துள்ள இந்தியாவின் முக்கிய இடதுசாரிக் கட்சியான இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதனைக் காரணம் காட்டி, தமது கட்சியின் தேசிய மாநாட்டுக்கு ஜேவியின் பிரதிநிதிகளை, சகோதர பிரதிநிதிகளாக அழைப்பதை தவிர்த்துள்ளது.
ஒரு இடதுசாரிக் கட்சியாக தன்னை விபரிக்கும் ஜேவிபி, இலங்கை தமிழர் விவகாரத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை எதிர்ப்பதுடன், ஒற்றை ஆட்சியின் கீழ்தான் இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் என்று கூறிவருகிறது.
இதனைக் கண்டித்துள்ள இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் அவர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்கு கூடிய அதிகாரங்களுடனான சுயாட்சி முறையை வழங்குவதை எதிர்க்கும் ஜேவிபின் நிலைப்பாட்டுடன் தாம் முரண்படுவதாக கூறியுள்ளார்.
அதேவேளை, இந்த விவகாரத்தில், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டையும் ஜேவிபி எதிர்த்தது என்று கூறுகின்ற வரதராஜன் அவர்கள், இது தமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானது என்றும் கூறுகிறார்.
அகில உலக மட்டத்தில் சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஜேவிபியின் நிலைப்பாட்டுடன் தாம் உடன்படுகின்ற போதிலும், இந்தியாவையும், அதனை அண்டிய பிராந்தியத்தையும் பொறுத்த வரை தற்போதைய நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினையே முன்னிலையில் இருப்பதாகவும், ஆகவே அந்த விவகாரத்தில் தமக்கு ஜேவிபியுடனான முரண்பாட்டை அடுத்தே, தாம் அந்தக் கட்சியின் பிரதிநிதிகளை, தமது கட்சி மாநாட்டுக்கு இந்தத் தடவை அழைக்கவில்லை என்றும் வரதராஜன் தெரிவித்தார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு, ஏகதிபத்தியத்துக்கு ஆதரவாக அமைந்துவிடும் என்று எச்சரித்துள்ள வரதராஜன் அவர்கள், தமிழர் பிரச்சினையில், பேச்சுவார்த்தை மூலமான, வடக்குக் கிழக்குக்கு கூடிய அதிகாரங்களுடனான தீர்வு ஒன்றே அனைவருக்கும் பலன் தரும் என்றும் கூறினார்.
மன்னார் தள்ளாடியில் முகாம் மீதான தாக்குதலில் 6 இராணுவத்தினர் பலி
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள இலங்கை அரசாங்க இராணுவத்தின் முக்கிய முகாம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்கியதில் 6 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் இலங்ககை இராணுவம் கூறுகிறது.
இந்தத் தாக்குதலில் தேவாலயம் ஒன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த படையினரே கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் பீரங்கித் தாக்குதல் காரணமாக மன்னார் நகரில் பெரும் பதற்றநிலை காணப்பட்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான பீரங்கி மோதல்களை அடுத்து மன்னாருக்கான போக்குவரத்து சில மணிநேரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை வட இலங்கையில் நடந்த மோதல்களில் 40 விடுதலைப்புலிகளும், 10 அரசாங்க சிப்பாய்களும் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் கூறுகிறது.
விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இது தொடர்பாக கருத்து எதுவும் வரவில்லை.
தமது தரப்பில் கடுமையான இழப்புகளை இலங்கை இராணுவம் ஒப்புக்கொள்வது குறைவு என்று கொழும்புக்கான எமது செய்தியாளர் கூறுகிறார்.
இலங்கையில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
![]() |
![]() |
ஒப்பந்தம் கைச்சாத்தான போது |
இலங்கையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இன்று இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது.
இலங்கைக்கு மூன்று நாட்கள் விஜமொன்றினை மேற்கொண்டிருக்கும் இந்திய இணை வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்னிலையில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சரத் அமுனுகமவும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதித் தலைவர் ஆருண் நந்தாவும் இன்று காலை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைக்கப்படவுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரதித் தலைவர் ஆருண் நந்தா, இலங்கை முதலீட்டு சபை இதற்காக சுமார் 53 ஏக்கர் நிலத்தை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒதுக்கியிருப்பதாகவும், இதன் நோக்கமெல்லாம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கம்பனிகளை இந்தப் பிரமாண்டமான பூங்காவில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகும் என்று தெரிவித்தார்.