பன்முக ஞானி வள்ளலார்
ஆ. முருகன்
வாழையடி வாழையாய் வந்த திருக்கூட்ட மரபில் தோன்றியவர் வள்ளலார்.
அவர் ஒருவரே நூலாசிரியராய், அருட்கவிஞராய், உரையாசிரியராய், பதிப்பாசிரியராய், பத்திரிகை ஆசிரியராய், ஞானாசிரியராய், வியாக்கியானகர்த்தராய், சித்த மருத்துவராய், சீர்திருத்தவாதியாய், அருள்ஞானியாய், சன்மார்க்கியாய் எனப் பன்முக ஞானத்தோடு விளங்கியவர்.
வள்ளலார் ஒருவரே பொதுமக்களுக்கு முதன்முறையாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர். சமஸ்கிருதத்தைத் தாய் என்றும் தமிழ்மொழியைத் தந்தை என்றும் கூறியவர்.
வள்ளலார் ஒருவரே தண்ணீரில் முதலில் விளக்கேற்றியவர். வள்ளலார் ஒருவரே தனிமார்க்கத்தை (சமரச சன்மார்க்கம்) முதலில் கண்டவர்.
ஒரு தனிச் சங்கத்தை (சமரச சன்மார்க்க சத்திய சங்கம்) முதலில் கண்டவர்.
ஒரு தனிக்கொடியை (சன்மார்க்கக் கொடி) முதலில் உருவாக்கியவர்.
ஒரு தனி மந்திரத்தைக் கண்டவர்.
ஐந்து உயிர் எழுத்துகளும் முழுமையாக அமையப் பெற்ற மந்திரத்தை முதலில் கண்டவர்.
“அ’ என்ற முதலெழுத்தாலேயே அமையப் பெற்ற முழு மந்திரத்தை முதலில் கண்டவர்.
மதச்சார்பின்றி, அனைவரும் வணங்கத்தக்க ஒளி (ஜோதி) வழிபாட்டை முதலில் தந்தவர்.
திருவள்ளுவர், திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், தாயுமானவர் என வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபில் தோன்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள்.
கிழக்கே திருப்பாதிரிப்புலியூர், மேற்கே விருத்தாசலம், தெற்கே சிதம்பரம், வடக்கே திருவதிகை ஆகிய தெய்வீக ஊர்களுக்கு நடுநாயகமாய் விளங்கி வரும் பேரூர் “பார்வதிபுரம்’ என்னும் வடலூர் ஆகும். இதுவே சன்மார்க்க பூமியாகவும் திகழ்கிறது.
இத்தகு சிறப்புடைய ஞானபூமியில்தான் அதாவது பார்வதிபுரத்தில்தான் சன்மார்க்கமும், தமிழும் தழைத்தினிதோங்க 1867-இல் வடலூருக்கு (பார்வதிபுரம்) வந்து உறையலானார். அங்கு சன்மார்க்க சங்கம் (1865), தருமச்சாலை (1867), சத்திய ஞானசபை (1872) என்ற நிறுவனங்களை நிறுவினார். இந் நிறுவனங்கள் வாயிலாகச் “சன்மார்க்கம்’ என்னும் நன்மார்க்க நெறியைப் பரப்பினார்.
இறைவனை அடைவதற்கு நான்கு மார்க்கங்கள் உண்டு. அவை தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்பனவாம்.
நான்கு மார்க்கங்களில் முதல் மார்க்கம் தாசமார்க்கம். இம் மார்க்கமே இறைவனை அடைவதற்குரிய முதல்படியாகும். தாசன் என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள். ஆதலின், தாச மார்க்கத்தை அடிமை நெறி, அடிமை வழி, அடிமை மார்க்கம் என்று கூறலாம்.
இம் மார்க்கத்தில் இறைவனே தலைவன். நாம் அவனுக்கு அடிமை. இறைவனை ஆண்டானாகக் கொண்டு, நாம் அவனுக்கு அடிமைப்பட்டு, ஆட்பட்டு, அடிமைத் தொண்டுகளைச் செய்து வழிபடுதலாகும். சுருங்கச் சொல்வதென்றால் தாச மார்க்கம் என்பது தொண்டு மார்க்கமாகும்.
இரண்டாவது மார்க்கம் சற்புத்திர மார்க்கம். இது முதல் மார்க்கமாகிய தாச மார்க்கத்தைவிட உயர்ந்தது. இதில் இறைவனுக்கும், நமக்கும் உள்ள தொடர்பு தந்தைக்கும், மகனுக்கும் உள்ள பாச உணர்வாகும்.
இறைவனைத் தந்தையாகவும், தன்னை மகனாகவும் பாவித்தலின் இது சற்புத்திர மார்க்கம் எனப் பெயர் பெற்றது. இம் மார்க்கத்தில் புதிய மலர், தூப தீபங்கள், திருவமுது முதலிய பொருள்களைச் சேகரித்துக் கொடுத்து, இறைவனின் திருப்படையலுக்கு உதவிகரமாய் இருப்பதாகும்.
மூன்றாவது மார்க்கம் சகமார்க்கம். இது முதலிரண்டு மார்க்கங்களைவிட உயர்ந்தது. இதில் நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு இரண்டு நண்பர்களுக்கு உள்ள உயிர் நட்பாகும். அதாவது சகமார்க்கம் என்பது தோழமை நெறி.
இம் மார்க்கத்தில், ஐம்பொறிகளால் உண்டாகும் ஆசைகளை அடக்கி, இறைவனையே ஒருமை உள்ளத்துடன் நாம் தியானித்திருப்பதாகும்.
நான்காவது மார்க்கமே சன்மார்க்கம். இம்மார்க்கம் முந்தைய மூன்று மார்க்கங்களைவிட மிகமிக உயர்ந்ததாகும். சன்மார்க்கம் என்ற சொல்லைச் சத் + மார்க்கம் என்று பிரித்தல் வேண்டும். சத் என்றால் நன்மை; மார்க்கம் என்றால் வழி. அதாவது சன்மார்க்கம் என்பது நல்வழியாகும். இம் மார்க்கத்தால் நாம் இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஞானத்தைப் பெறலாம்.
தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம் என்ற மூன்று மார்க்கங்களும் “சன்மார்க்கம்’ என்னும் மார்க்கத்தை அடைவதற்குரிய ஞானப்படிகளாகும். சன்மார்க்கம் ஒன்றே முடிவான பரமுத்தியைத் தரக் கூடியது.
வள்ளலார் சன்மார்க்கத்தினர் என்பதனை “”அடியன் ஆக்கி, பிள்ளை ஆக்கி, நேயன் ஆக்கியே, அடிகள் ஆக்கிக் கொண்டாய்’ என்ற அவரது திருவாக்காலேயே நாம் அறிந்து கொள்ளலாம்.
கடவுள் ஒருவரே. அக் கடவுளை உண்மை அன்பால் ஒளி (ஜோதி) வடிவில் வழிபட வேண்டும். ஏழைகளின் பசியைப் போக்க பாடுபட வேண்டும். எவ்வுயிரையும் தம்முயிர்போல் நினைத்து, அவ்வுயிர்களிடத்தில் அன்பு செலுத்தல் வேண்டும்.
தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலி இடக் கூடாது. புலால் உணவை உண்ணக் கூடாது. சாதி, சமய, இன வேறுபாடு கூடாது. இறந்தவர்களைப் புதைக்க வேண்டும்; எரிக்கக் கூடாது.
கணவர் இறந்தால் மனைவி மங்கலநாணை வாங்குதல் (நீக்குதல்) வேண்டாம். மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டாம். மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.
இறைவனுக்குத் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பொங்கல், புளியோதரை, திருநீறு, சந்தனம், பால், சூடம், சாம்பிராணி, வத்தி முதலியன கொண்டு அர்ச்சனையோ, அபிஷேகமோ செய்தல் கூடாது. இறைவனைத் திருப்பாக்களால் மட்டும், மெல்லென ஆரவாரம் இல்லாமல் துதி செய்தல் வேண்டும். இறைவனுக்கு முன் மேளதாளங்களோ, நாதசுரமோ வாசித்தல் கூடாது.
புராணங்களும், சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா. எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்பன எல்லாம் சன்மார்க்கக் கொள்கைகளாகும்.
இக் கொள்கைகளைப் பின்பற்றி சன்மார்க்கிகள் அனைவரும் நற்பண்புகளுடன் செயல்பட வேண்டும். சன்மார்க்க பூமியாய் விளங்கும் “”வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே’.
(கட்டுரையாளர்: தமிழாசிரியர், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, வடலூர்).
——————————————————————————————————————
சமயம் கடப்பதே சன்மார்க்கம்
பெ. சிதம்பரநாதன்
பள்ளி செல்லாமல், பாடப் புத்தகங்களைப் படிக்காமல், தேர்வு எழுதாமல், பட்டமே பெறாத சிந்தனையாளர்கள் – அருளாளர்கள் – மேதைகள் பலர் உண்டு. அவர்கள், ஓதாது உணர்ந்தவர்கள். கருவிலே திரு அமையப் பெற்றவர்கள். இத்தகைய பரம்பரையில் வந்த மெய்ப்பொருள் கண்ட ஞானி வள்ளலார்.
அவர் பெற்றிருந்த அளப்பரிய கவி ஆற்றலால் ஒரு மகா கவியாகப் புகழ் பெற்றிருக்க முடியும். ஆனால், கவிதையை அவர் ஒரு வழித்தடமாகவே கருதி, தனது இறுதி இலட்சியத்தைக் கவிதை வழி தேடிச் சென்றார். அந்தத் தேடல்கள்தான் அருட்பாவாகப் பிரவாகமெடுத்தது.
பல்வேறு மதங்களும் காட்டிய பார்வைக் கோணங்களால், கடவுளைக் காண்பதில் ஒரு கலகச் சூழ்நிலை நிலவியபோது, “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்று, ஒற்றைக் குரலாக இவர் ஓங்கி ஒலித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோர் பலர்; அங்கீகரித்தவர்கள் சிலர்.
மதங்கள் சண்டைகளையே பெருக்கின. ஜாதிகள் மோதல்களைப் பெருக்கின. மதத்தைப் பேய் என்றவர், பக்தி நூல்களை “”சாத்திரக் குப்பை” என்றும் வேதங்களையும் ஆகமங்களையும் “”பொய், பொய்யே” என்றும் சாடினார். ஜாதி வெறியர்களைச் “”சழக்கர்கள்” என்று, ஆதிக்க சாதியத்தை அஞ்சாமல் கண்டித்தார்.
காருணிய வேளாளர் குலத்தில் தோன்றிய அவர் விரும்பியிருந்தால், ஏதோவொரு சைவ ஆதீனத்திற்கு குருமகா சன்னிதானமாகியிருக்க முடியும். இல்லையேல் ஒரு சைவ ஆதீனத்தை இவரே உருவாக்கி இருக்கவும் முடியும்.
அவ்வாறு அவர் சிந்தனை ஓடவில்லை. இவரையும் இவர் குடும்பத்தையும் வறுமை வாட்டியது. அதனால் பள்ளி சென்று படிப்பதற்கான வாய்ப்பை இழந்தார். ஆனால், மாணிக்கவாசகரின் திருவாசகத்தை வழிகாட்டி நூலாகக் கொண்டு, ஏகலைவனைப்போல எங்கோ சென்று அதனைக் கற்று வந்தது எவருக்குமே அன்றைக்குத் தெரியவில்லை.
இளம் வயதிலேயே தன் இதயத்தை உயிர் இரக்கத்தில் ஊற வைத்து ஒவ்வோர் உயிரிலும் பொருளிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதேபோல தன்னிலிருந்து தன்னையும் அந்நியப்படுத்திக் கொண்டார். இந்த அந்நியமும் ஐக்கியமும்தான் “”ஆருயிர்களுக்கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்” என்று அவரைத் தூண்டி வந்தது.
அவர் வாழ்ந்த சமுதாயம் ஏற்றத்தாழ்வுள்ள சமுதாயம். அந்தச் சமுதாய அமைப்பை அவர் சகித்துக் கொள்ளவில்லை. அதைப் பாதுகாக்கும் ஆட்சியைக்கூட “”கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக” என்று கண்டனம் செய்தார்.
“”ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்” என்று தனது புதிய சமுதாயத்திற்கான பூபாளத்தை இசைத்தார்.
உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் எவ்வாறு ஒருமையுளர் ஆக முடியுமென்றால், இந்த இருவேறு பிரிவுகளுக்குமிடையில் ஒரு பாலம் போலப் பணி செய்பவர் இருந்தால்தான் ஒருமையாக முடியும். அவ்வாறு இரு சாராரையும் இணைப்பவர்களைத்தான் “”ஒத்தார்” என்றார்.
அவர்கள் யாரை ஒத்தவர்கள் என்றால், இறைவனை ஒத்தவர்கள். கடவுளின் தூதுவர்கள். நாயன்மார்கள் போல, ஆழ்வார்கள் போல, புத்தர் போல, மகாவீரர் போல, இயேசுபெருமான் போல, நபிகள்நாயகம் போல, குருநானக் போல, சமுதாய வீதிகளில் சரீரம் தாங்கி உலவியவர்கள் அவர்கள் – சகல உயிர்களையும் சமமாக நேசித்தவர்கள். பாலமாக அவர்களை அமைத்து, இருவேறு பிரிவுகளாக உள்ள உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையாக வேண்டும் என்பதே வள்ளலாரின் விண்ணப்பம்.
காந்திஜியின் சீடர் வினோபாஜி இப்படித்தான் ஒரு பாலமாக விளங்கினார். நிலச்சுவான்தார்களிடமிருந்து தானமாகப் பெற்ற பூமிகளை, நிலமில்லாத ஏழைகளுக்கு வழங்கினார். பூமி தானத்தை இயக்கமாக்கினார்.
இந்தியாவில் 24 கோடி மக்கள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்பவர்களாக வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். இவர்களைக் கடைத்தேற்ற வேண்டுமானால், சமுதாயத்தில் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.
அத்தகைய நடவடிக்கை எடுக்க நாட்டு மக்களைத் தயாரித்தாக வேண்டும். அவ்வாறு தயாரிப்பதற்கு அவர்களுடைய மனங்களில் நல்ல சிந்தனைகளை விதைத்தாக வேண்டும்.
நல்ல சிந்தனைகள் என்பவை எங்கோயிருந்து அசரீரியாக வருவதல்ல. ஒருவர் எதை அனுபவிக்கின்றாரோ அடுத்தவரும் அதை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவதுதான் நல்ல சிந்தனை. “”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணுகிற” மனப்போக்கு அவர்களுடைய எண்ணத்தில் அரும்பத் தொடங்கிவிட்டால், இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவுவார்கள்.
வள்ளலார் இதனைப் பற்றி நீளச் சிந்தித்துள்ளார். “அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்த…’ என்ற பிரபலமான அருட்பாவில், “”இகத்தே பரத்தைப்’ பெறுதல் என்று அவர் பேசியுள்ளது புரட்சிகரமான சிந்தனை.
பரம் என்பது என்ன? எதிர்பார்த்த எல்லாமே கிடைக்கும் வைகுந்தம், கைலாயம், இந்திரலோகம், சொர்க்கலோகம் ஆகிய லோகங்கள், வானுலகமாக உயரத்திலேயே இன்னும் வலம்வந்து கொண்டிருக்கின்றன. அதுதான் பரம். அத்தகைய “பரம்’ எங்கோ எட்டாத உலகத்தில் இருப்பதாக ஏன் கற்பனை செய்ய வேண்டுமென்கிறார் வள்ளற்பெருமான்.
அந்தப் பரத்தினை இந்த “இகத்தில்’ – இந்த உலகில் – இந்த மண்ணில் உருவாக்க வேண்டும் என்று, முன் ஏர் ஓட்டியவர் வள்ளலார்.
வள்ளலார், சமயச் சடங்குகளைக் கடந்து படிப்படியான பரிணாம வளர்ச்சியில் பரிபூரணத்தை நோக்கிச் சென்றவர். அதனால்தான் சமய சன்மார்க்கத்தைப் பூரணப்படுத்தும் புனிதநோக்கில்தான் சடங்காச்சார சமய சன்மார்க்கத்தை சுத்த சன்மார்க்கமாக்கினார்.
“சுத்தம் என்றால் அரையும் குறையுமாக இருப்பதை முழுமையாகச் செய்வது. பூரணம் அற்றதாக சமய சன்மார்க்கம் இருப்பதாகக் கருதியே, அதைச் சுத்த சன்மார்க்கமாக்கினார்.
தவ நெருப்பில் உடலின் குறைபாடுகளைத் தகனம் செய்தால், இந்தச் சதை உடம்பு காற்றுடம்பாகும்; காற்றுடம்பு பொன் உடம்பாகும்; பொன் உடம்பு ஒளி உடம்பாகும். இதைத்தான் “முத்தேக சித்தி’ என்றார். அந்த முயற்சியில் வள்ளற்பெருமான் முழு வெற்றி பெற்றிருக்கிறார்.
உடம்பு வாழ்க்கைக்குப் பிறகு வாழ்க்கையே இல்லையென்று கருதுகிற மக்களுக்கு மத்தியில், முத்தேக சித்தி என்பது, நமது சுயத்தைச் சுடரச் செய்கிற தன்னம்பிக்கைதான் என்கிற புரிதல் நமக்கு அவசியம்.
மரணத்தையும் எதிர்க்க முடியும் என்கிற துணிவை மனதுக்குள் ஊட்டிய ஒரு மார்க்கத்தைக் காட்டியவர் வள்ளலார். ஏனெனில், மரணம் எலும்புக்கும் சதைக்கும் ஏற்படலாம். ஆனால் மனிதன் காற்றாகிவிட்டால், ஒளியாகிவிட்டால், மரணம் எப்படி மனிதனை வெல்ல முடியும் என்று கேட்பதுபோல அமைந்துள்ள புதிய சிந்தனை இது.
சித்தத்தில் பெறுகிற வெற்றிதான் “சித்தி’ என்பது. சித்தி பெறுவது சுத்த சன்மார்க்கம். முக்தி அடைவது சமய சன்மார்க்கம். வள்ளற்பெருமான் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பதால், அவருக்கு சமாதி எங்கும் இல்லை.
ஒரு மனிதனுக்குள் இந்த நம்பிக்கையை நட்டு வளர்த்துவிட்டால், அவநம்பிக்கை அவனுக்குள் அணு அளவும் புகாது. ஊன் உடம்பு இல்லாமலும் உலவ முடியும் என்பது தன்னம்பிக்கை மட்டுமல்ல, ஒரு நன்னம்பிக்கையுமாகும்.