மதுரை ஆட்சியர் மாற்றம் எதிரொலி: கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர்கள் ராஜிநாமா?
மதுரை, பிப். 21: மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரனின் பணியிட மாற்றம், மாவட்ட அளவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பத்து ஆண்டுகளாக ஜனநாயகப் பாதைக்கு வராமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தி அவர் சாதனை படைத்தார்.
தற்போது அவர், ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி மாறுதல் செய்யப்பட்டதை அடுத்து, அந்த மூன்று ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து பதவி விலகவுள்ளதாக, உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியராக த. உதயச்சந்திரன் பதவி ஏற்றபின் கிராமப்புற மேம்பாட்டிலும், சுகாதார மேம்பாட்டிலும் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார்.
இந் நிலையில் அவரது பணி மாற்றம் அந்த கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தொடருமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஊராட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
மதுரை ஆட்சியர் மாற்றம்; தொடரும் சிக்கல்: விடுப்பில் சென்றார் புதிய ஆட்சியர்
மதுரை, மார்ச் 1: மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் மாற்றத்தை அடுத்து புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற டி. கார்த்திகேயன் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார்.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜாமணி, மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த த.உதயச்சந்திரன் கடந்த 20-ம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி இடமாறுதல் செய்யப்பட்டார்.
அவரது மாறுதலைக் கண்டித்து பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். உசிலம்பட்டி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் மாற்றப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் பி.மோகன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கண்டித்திருந்தனர்.
இந்நிலையில், மாறுதல் வெளியான மறுதினமே புதிய ஆட்சியராக டி.கார்த்திகேயன் பதவியேற்றார். பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகள் அளித்து அவர்களது போராட்டத்தைக் கைவிடுமாறு சமரசம் செய்யப்பட்டது.
இக் கிராமங்களுக்கு புதிய ஆட்சியர் நேரில் சென்று கிராம மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து, 5 நாள் விடுப்பில் சென்ற அவர், தற்போது தமது விடுப்புக் காலத்தை மேலும் 15 நாள் நீட்டிப்பு செய்துள்ளார். இதை அரசு ஏற்றுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியராக கார்த்திகேயன் நீடிப்பாரா என்ற சந்தேகம் மாவட்ட நிர்வாகத்தில் எழுந்துள்ளது.