பிகாரில் டாக்டர்களை கண்காணிக்க இணைய தளம்: முதல்வர் நிதீஷ் அறிவிப்பு
பாட்னா, பிப். 17: பிகாரில் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அன்றாட பணிகள் என்ன, மருந்து சரியாக கொடுக்கப்படுகிறதா, குறித்த நேரத்தில் அனைவரும் பணிக்கு வருகிறார்களா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க புதிய இணைய தளத்தை அமைக்க உள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்த இணைய தளம் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்படும். இதன்மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, மருந்துப் பொருள்களின் கையிருப்பு ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் நவீன ஆய்வகங்கள், கதிரியக்கக் கருவிகள் ஆகியவற்றை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை புதுபிக்கவும், விரிவாக்கம் செய்யவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.
4 அரசுக் கல்லூரிகள் உள்பட 13 மருத்துவக் கல்லூரிகளை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதேபுரா, நாலந்தா, பெட்டியா ஆகிய பகுதிகளிலும், பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் கழகத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.