தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி
எஸ். கோபாலகிருஷ்ணன்
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.
பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.
தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.
தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.
பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.
இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?
ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.
அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.
ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.
வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!
தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.
1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.
தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.
இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.
இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.
இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.
கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.
(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).