முழுமையாக இயற்கை விவசாயத்துக்குத் திரும்பும் கிராமம்
ிருவாரூர், ஜன. 18: திருவாரூர் மாவட்டம் கொத்தவாசல் கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாய முறையில் சாகுபடி மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.
நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இக் கிராமத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 40 ஏக்கரில் கடைபிடிக்கப்பட்ட இயற்கை விவசாய முறையின் வெற்றி காரணமாக கிராமத்தில் உள்ள 300 ஏக்கரில் முழுமையாக இச் சாகுபடிக்கு முறைக்கு மாற உள்ளனர்.
ரசாயன தொழில்நுட்ப முறையில் மேற்கொள்ளப்படும் சாகுபடிக்கு இணையான மகசூல் இயற்கை விவசாய முறை சாகுபடியிலும் கிடைத்ததே இவர்களது மனமாற்றத்துக்குக் காரணம்.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் நன்னிலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான மா. மணிமாறன் மேற்கொண்ட முயற்சி காரணமாக இக் கிராம விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாய முறையில் சாகுபடி மேற்கொள்ள முன்வந்தனர்.
இயற்கை விவசாய முறையை ஏற்க முன்வந்த விவசாயிகளை வரவேற்று, இம் முறையை விளக்கும் வகையிலான கருத்தரங்கம் பூந்தோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இயற்கை விவசாயி கோ. சித்தர் பேசியது:
“சமூகம் அழிவிலிருந்து மீள விவசாயிகள் இயற்கை விவசாய முறையைக் கடைபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு நோய், கடன் இல்லை. தற்போது அதிகளவிலான மகசூல் கிடைத்தாலும் விவசாயிகள் கடன் மற்றும் நோய்த் தொல்லையால் தவித்து வருகின்றனர்.
ரசாயன வேளாண் தொழில்நுட்பங்களே இதற்குக் காரணம்.