Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ma Po Si’ Category

Thamizhvaanan Q&A in Kalkandu : Dravidam, Anna, Periyar, China War

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

தமிழ் பத்திரிகையுலகில் கேள்வி பதில் பகுதியில் வெற்றிக் கொடி நாட்டியவர் தமிழ்வாணன். பழைய கல்கண்டு இதழ்களை புரட்டியபோது காணக் கிடைத்த அவரது ருசிகரமான கேள்வி பதில்கள் சில:

சீன யுத்த நிதிக்காக பெரியார் இன்னும் காலணா கூடத் தரவில்லையே?

உங்களுக்கு இது ஆச்சரியம்! யுத்த நிதியிலிருந்து தனக்கு எதுவும் கேட்காமலிருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியம்!

அழகிப் போட்டி நடத்துகிறார்களே?

நடத்த வேண்டியது தான்; ஆனால், அதில் எனக்கு ஒரு சந்தேகம்… முன்பு அழகாக இருந்தார்கள் என்று தேர்ந்தெடுத்து வருகிறார்களா அல்லது நாளைக்கு அழகாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து வருகிறார்களா என்பது தான் எனக்குப் புரியவில்லை.

?

நான் தராசில் நிற்க மாட்டேன். சீன யுத்த நிதிக்கு, எனது நிறையைப் பார்த்து, நீங்களே இதற்குரிய தங்கத்தைக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டாரே நேரு!

நேருவுக்கு இப்போது தங்கம் கிடைக்கிறது; நேரம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதனால்தான் நேரு அப்படிச் சொல்லி விட்டார்! தங்கள் எடைக்கு எடை புளி கிடைத்தால் கூட அதற்காக நாள் கணக்கில் தராசில் நிற்கத் தயாராக இருக்கும் தலைவர்கள் இன்று நம் தங்க தமிழ்நாட்டில் இருக்கிறார்களே!

தமிழரசுக் கழகம் (ம.பொ.சி., கட்சி) எப்படி இருந்து வருகிறது?

ஒரு தேவாரப் பாட சாலையைப் போல் நடந்து வருகிறது. ஓதுவார் ஒருவர் தான் தேவாரப் பாடசாலையில் இருப்பார். சில சீடர்கள் இருப்பார்கள். வெளியே ஒரு போர்டு தொங்கிக் கொண்டிருக்கும். இது தான் தேவாரப் பாடசாலை.

வெற்றிலை போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

வாய் சிவப்பாகும்; பல்லில் காவி ஏறும். உப்புமாவும், கேசரியும் சாப்பிடுவதற்கு ஒன்று போல் இருக்கும்.

ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதும் போது முகவரிப் பகுதியில் திராவிட நாடு என்று எழுதலாமா?

திராவிட நாடு என்று என்ன… சுவர்க்கம் என்று கூட எழுதலாம். போய் சேருமா என்பது தான் சந்தேகம்! திராவிட நாடு என்று முகவரி இடப்பட்ட கடிதங்கள் ஆயிரக்கணக்கில், “டெட் லெட்டர்’ ஆபீசில் கிடக்கின்றன என்று கேள்வி!

தமிழ் தேசியக் கட்சியிலிருந்து சம்பத்தை விலக்கி வைப்பதாக கண்ணதாசன் சொன்னாரே, அது என்ன ஆயிற்று?

என்ன சொன்னீர்கள்? சம்பத்தைத் தள்ளி வைப்பதாக கண்ணதாசன் சொன்னாரோ? ஊம், உங்களைச் சொல்ல என்ன இருக்கிறது. காலம் அப்படிக் கெட்டு கிடக்கிறது! சோப்பு தான் தண்ணீரில் கரைந்து காலியாகுமே தவிர, தண்ணீரைக் குடித்துத் தொட்டியை காலியாக்கிவிடாது சோப்பு.

“எங்கள் அண்ணாவிடம் போய் காமராஜர் கற்றுக் கொண்டு வரட்டும்…’ என்கிறாரே என்.வி.நடராசன்?

எதை? பொடி போடுவதையா?

சிவாஜி கணேசன் அமெரிக்கா போயிருந்த போது கென்னடி ஏன் கணேசனைக் கூப்பிட்டு பேச வில்லை?

கணேசன் ஒரு பிஸிமேன் என்பது கென்னடிக்குக் கூட தெரியும் போல் இருக்கிறது.

பெரியார் எப்படி இருக்கிறார்?

நாம் வைத்து வளர்ந்தவர்களெல்லாம் நம்மை விட்டுப் போய் கொண்டிருக்கிறார்களே என்று மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். நாம் வளர்த்ததில் நம் தாடி ஒன்றே இன்னும் நம்மையே நம்பி, நம்மை விட்டுப் போகாமல் நம்மோடு ஒட்டிக் கொண்டு இருக்கிறது என்று தன் தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

நடிகர் ஆனந்தன், “நானும் மனிதன் தான்’ என்ற பெயரில் சொந்த படம் எடுக்கப் போகிறாராமே?

எடுக்கட்டும். இதிலாவது நானும் நடிகன் தான் என்பதை அவர் எடுத்துக் காட்டட்டும்.

பெரியாருக்கு மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா?

ஏற்றுக் கொள்ள மாட்டார். மந்திரி வேலையில் மாதாமாதம் தான் பணம் கிடைக்கும். சமுதாய சீர்திருத்தப் பணியில் ஊருக்கு ஊர், டூருக்கு டூர் பணம் கிடைக்குமே!

Posted in Ananthan, Andumani, Anna, Answers, China War, Dinamalar, Dravidam, EVR, Indo-China, Kamaraj, kamarajar, Ma Po Si, Nehru, Pa Ke Pa, Periyar, Q&A, Questions, Sivaji, Sivaji Ganesan, Thamizhvaanan | Leave a Comment »

Golden Jubilee of Tamil Nadu state formation – History & Memoirs

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

பொன் விழா கொண்டாடும் தமிழ் மாநிலம்: எல்லை காக்க 50 ஆண்டுகளுக்கு முன் நடத்திய போராட்டம்

பா. ஜெகதீசன்

சென்னை, நவ. 1: “தமிழ் மாநிலம்’ அமைந்த பொன் விழாவை தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தற்போது கொண்டாடுகின்றன.

சென்னையையும், தனது எல்லைகளையும் காக்க சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் நடத்திய போராட்டங்களும், அவற்றில் ஈடுபட்டவர்கள் செய்த தியாகங்களும் மறக்க முடியாதவை.

சுதந்திரம் அடைந்தபோது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் தமிழகப் பகுதிகளும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்டவற்றின் சில பகுதிகளும் இடம் பெற்றிருந்தன.

தமிழகத்தின் வடக்கு எல்லை திருப்பதி வரை பரவி இருந்ததாகப் பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு காலகட்டம் வரை வடார்க்காடு மாவட்டத்தில் தான் திருப்பதி இருந்தது.

நாடு சுதந்திரம் அடைந்த மறுநாள் (16.8.1947) ம.பொ. சிவஞானம் தனது ஆதரவாளர்களுடன் திருப்பதிக்குச் சென்றார். “திருப்பதி தமிழர்களுக்கே சொந்தம்’ என முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் ம.பொ.சி.க்கு எதிராகப் பதில் போராட்டம் நடத்தினர்.

“தமிழகத்திடம் இருந்து சென்னையையும் மீட்போம்’ என ஆந்திரத் தலைவர்களில் ஒருவரான என்.ஜி.ரங்கா அப்போது பிரகடனம் செய்தார்.

ஒருமித்த எதிர்ப்பு: சென்னை ராஜதானியில் இருந்து ஆந்திரப் பகுதிகளைப் பிரித்து தனி மாநிலத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

சென்னை நகரத்தைத் தங்களுக்குத் தரும்படி ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். இதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமே குரல் கொடுத்தது.

தங்களது இடைக்காலத் தலைநகராக சிறிதுகாலத்துக்கு சென்னையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி ஆந்திரம் கேட்டது. அதை தமிழகம் ஏற்கவில்லை.

ம.பொ.சி. நடத்திய வடக்கு எல்லைப் போராட்டம்: தனி ஆந்திர மாநிலம் உருவானபோது அதுவரை தமிழகத்தில் இடம் பெற்றிருந்த சித்தூர் மாவட்டம் ஆந்திரத்தின் வசம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதை எதிர்த்து 1953 மே மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் செய்தார். காவல் துறையின் தடியடியையும் பொருட்படுத்தாது, எல்லையை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் அவர். பின்னர் ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தைத் தாற்காலிகமாக ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே, திருத்தணியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆந்திரத்தைக் கண்டித்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் புகுந்து, பொருள்களை உடைத்தனர். ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். வன்முறையை ஒடுக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

பின்னர் ம.பொ.சி. விடுத்த வேண்டுகோளையடுத்து, அங்கு வன்முறை நின்றது.

தமிழகத்தின் வடக்கு எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணாததைக் கண்டித்து, அதே ஆண்டு ஜூலை 3-ம் தேதி திருத்தணியில் ம.பொ.சி. தடையை மீறி மறியல் செய்தார். கைது செய்யப்பட்ட அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கமிஷன்கள் அமைப்பு: அப்போது பிரதமராக இருந்த நேருவிடம் முதல்வராக இருந்த ராஜாஜி பேசினார். “இரு மாநிலங்களின் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எல்லைக் கமிஷன் அமைக்கப்படும். எனவே, போராட்டங்களை நடத்த வேண்டாம்’ என நேரு வேண்டுகோள் விடுத்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, சில நாள்கள் சிறை வாசத்துக்குப் பிறகு ம.பொ.சி. விடுதலை ஆனார்.

எல்லைப் பிரச்சினையை தமிழகமும், ஆந்திரமும் சுமுகமாகப் பேசித் தீர்க்க முன் வந்தன. எனவே, எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க முதலில் அமைக்கப்பட்ட பசல் அலி கமிஷன் எத்தீர்வையும் தரவில்லை.

மேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையில் உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே, புதிதாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. 1.4.1960-ல் அக்கமிஷன் தனது தீர்ப்பை அளித்தது. அதன்படி திருத்தணி தாலுகா அப்படியே தமிழகத்துக்கு கிடைத்தது. அதேபோல, ஆந்திரத்தின் புத்தூர், சித்தூர் ஆகிய தாலுகாக்களில் இருந்தும் சில பகுதிகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன.

தெற்கு எல்லைப் போராட்டம்: அக்காலத்தில் திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் இடம் பெற்றிருந்த தமிழர் வாழும் பகுதிகளை மீட்க பெரும் போராட்டம் நடைபெற்றது.

1954 ஜூனில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நேசமணி தலைமை ஏற்று, போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். அவரது அழைப்பை ஏற்று, ம.பொ.சி. மூணாறுக்குச் சென்றார். அவரது முன்னிலையில் எல்லை மீட்கும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தது.

11 பேர் உயிர்த் தியாகம்: நேசமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 11.8.1954-ல் தென் திருவிதாங்கூரில் கல்குளம் தாலுகாவில் பேரணி நடைபெற்றது. மலபார் ரிசர்வ் போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பேரணியைக் கலைத்தனர். இதில் 11 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.

இதையடுத்து திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.

மாநிலங்களின் எல்லைகளைத் திருத்தி அமைக்க மத்திய அரசு அமைத்திருந்த பசல் அலி கமிஷன் 1955-ல் தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்தது. கல்குளம், செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு ஆகிய தாலுகாக்களை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என அந்த கமிஷன் கூறியது.

தமிழர்கள் அதிகம் வாழும் பீர்மேடு, தேவிகுளம் ஆகிய தாலுகாக்களைத் தமிழகத்துக்கு அளிக்க அந்த கமிஷன் மறுத்து விட்டது.

நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக நாட்டின் தெற்கு எல்லையான குமரி முனை தமிழகத்துக்குக் கிடைத்தது.

Posted in 50, Andhra Pradesh, Chithoor, History, Kanniyakumari, Kerala, Kumari, Ma Po Si, Ma Po Sivanjaanam, Nesamani, Puthoor, Rajaji, State, Tamil Nadu, Thirupathy, Thiruthani, TN | Leave a Comment »