Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ma Pa Gurusamy’ Category

Public Sector Undertakings – Growth : Ma Pa Gurusamy

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 15, 2006

பொதுத்துறை: வாழ்வும் வளர்ச்சியும்

மா.பா. குருசாமி

பொதுத்துறைத் தொழில்களின் மூலம் நமது நாட்டில் சமதர்ம சமுதாயத்திற்கான அடித்தளத்தை அமைக்க பண்டித ஜவாஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் எண்ணினார்கள்; செயல்பட்டார்கள். 1956ஆம் ஆண்டின் இந்திய அரசின் தொழிற்கொள்கை இதற்கு வழி வகுத்தது.

நமது நாட்டில் பொதுத் துறைத் தொழில்களை (Public Sector Enterprises) நாம் ஒரு தத்துவப் பின்புலத்தில் வளர்த்தோம். நாட்டில் “”ஏழை என்றும் அடிமை என்றும்” எவரும் இல்லாத, “”சமதர்மப் பாணி சமுதாயத்தை” (Socialistic Pattern of Society) நிர்மாணிப்பது நமது கனவாக இருந்தது. இந்திய சமதர்ம சமுதாயத்தில் அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து செயல்படுகின்ற கூட்டுப் பொருளாதாரத்தை (Mixed Economy) உருவாக்குவது கொள்கையாயிற்று. சுரண்டலற்ற, சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதில் இந்த மூன்று துறைகளும் தங்கள் பங்கினைச் செய்ய அரசு வழிகாட்ட வேண்டுமென எதிர்பார்த்தனர்.

பொதுத் துறை வளர்ச்சி: ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலேயே ரயில்வே, அஞ்சல் – தொலைபேசி நிறுவனங்கள் போன்றவை அரசுத் துறையாக (Government Sector) வளர்ந்திருந்தன. வேளாண்மை, சிறு தொழில்கள், பெருந்தொழில்கள், வங்கித்துறை போன்றவை தனியார் துறையாக (Private Sector) இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை கட்டமைப்பிற்குள் (Organised Sector) வராதவை.

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்பட, தனியார் ஈடுபடத் தயங்கும் தொழில்களை ஏற்று நடத்த, தனியார் துறையைக் கட்டுப்படுத்த, மூலவளங்களைச் சரியாகவும், முறையாகவும் பயன்படுத்த, வளர்ச்சியில் வட்டார ஏற்றத்தாழ்வைப் போக்க, தொழிலாளர், மக்கள் நலனைக் கட்டிக் காக்க பொதுத்துறை வளர்ச்சி தேவையென்று கருதினோம். பொதுத் துறையில் தொழில்களைத் தொடங்கியது மட்டுமன்றி, தனியார் துறையில் முற்றுரிமை பெற்று, செழித்து வளர்ந்திருந்த தொழில், நிதி நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினோம்.

மத்திய பொதுத்துறையில் 1951-ல் ஐந்து பெரும் நிறுவனங்கள் (Central Public Sector Enterprises) இருந்தன. அவற்றின் முதலீடு 29 கோடி ரூபாய். 2003 மார்ச் 31-ல் 240 பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தன. இவற்றின் மொத்த முதலீடு ரூ. 3,35,647 கோடி. 2004-ல் இவை 242 நிறுவனங்களாகவும், முதலீடு ரூ. 3,49,209 கோடியாகவும் கூடியுள்ளன.

2003 – 2004-ல் பொதுத் துறைத் தொழில்களின் மூலமாக அரசுக்குக் கிடைத்திருக்கின்ற மொத்த வருவாய் ரூ. 89,025 கோடி. இவற்றில் 17 லட்சத்து 70 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவை நகர வளர்ச்சி, நிர்வாகம், கல்வி போன்ற சமுதாயப் பணிகள் ஆகியவற்றிற்காக 2004-ல் ரூ. 2,929 கோடி செலவிட்டிருக்கின்றன.

பொதுத் துறை நிறுவனத்தின் பொருளாதாரப் பங்களிப்பினை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (NLC) 11,000 தொழிலாளர்கள், 5,000 பொறியாளர்கள், 3,000 பணியாளர்கள் என 19,000 நிரந்தர ஊழியர்கள் இருக்கின்றனர். இவர்கள் தவிர 12,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும், 1,500 சொசைட்டி தொழிலாளர்களும் பணி செய்கின்றனர். அதாவது 32,500 பேர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர். 19,000 நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கும் ஒரு நாள் ஊதியம் ரூ. 80 லட்சம். நிறுவனத்திற்குக் கிடைக்கின்ற ஒரு நாள் வருவாய் ரூ. 8 கோடி.

சில பொதுத்துறை நிறுவனங்கள் மிகுந்த லாபம் பெறுகின்றன. சான்று நவரத்னா நிறுவனங்கள் எனப்பெறும் 9 நிறுவனங்கள் 2003 – 2004-ல் ரூ. 30,719 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கின்றன. இது பாராட்டுக்குரிய சாதனை.

பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாட்டினை மதிப்பீடு செய்த குழு, 53 நிறுவனங்களை மிகவும் சிறப்பானவை (Excellent) என்றும், 23 நிறுவனங்களை மிகவும் நன்றாகப் (very good) பணியாற்றுபவை என்றும், 12 நிறுவனங்கள் நன்றாகச் (good) செயல்படுவதாகவும், 8 சுமாராக (Fair) இருப்பதாகவும் தரம் பிரித்திருப்பது கவனிக்கத் தக்கது.

பொதுவான போக்கு: மத்திய அரசினைப் போன்றே மாநில அரசுகளும் சில பொதுத்துறை நிறுவனங்களை ஏற்று நடத்துகின்றன. தமிழக அரசு நடத்துகின்ற போக்குவரத்துத் துறையை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அண்மைக்காலத்தில் அரசுப் போக்குவரத்தின் செயல்பாடு, இழப்புகளைச் சுட்டிக்காட்டி, அதனைத் தனியார் துறையிடம் விடலாம் என்ற கருத்து வலுத்து வருகிறது.

பொதுத் துறை நிறுவனங்களின் மீது சில குற்றச்சாட்டுகள் அடிக்கடி கூறப் பெறுகின்றன. இந் நிறுவனங்களை அரசு அதிகாரிகள் நடத்துவதால், அவர்களுக்குத் தொழில் நிர்வாகப் பயிற்சியின்மையால் தொழில்களின் ஆக்கத் திறன் குறைவாக இருக்கின்றது. ஆதலால் அவை ஈட்ட வேண்டிய ஆதாயத்தை ஈட்டுவதில்லை. பொதுத் துறை ஊழியர்கள் ஊதிய உயர்விலும், ஓய்விலும், உரிமைகளைப் பெறுவதில் கண்ணாயிருக்கின்றார்களே தவிர, கடமைகளைக் கருதுவதில்லை. பொதுத்துறையில்தான் தொழிற்சங்கங்களின் ஆதிக்கம் வலுவாக இருக்கிறது என்பனவாகும்.

தனியார் துறைகளின் திறமையும் உழைப்பும், உயர்வாகவும் சிறப்பாகவும் இருப்பதாக முதலாளித்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் வாதிடுகின்றனர். தொழில்களைத் தனியாரிடம் விட்டுவிட்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியை அரசு செம்மையாகப் பார்த்தாலே போதுமென்பது அவர்களது கருத்து.

அரசிடம் மூலதனப் பற்றாக்குறை இருப்பதால் பொதுத் துறையின் ஓரளவு பங்குகளைத் தனியாருக்கு விற்பதால் அரசுக்கு முதலீட்டு நிதி கிடைக்கும் என்கின்றனர். இத்தகைய முதலீட்டுக் கலைப்பு (Disinvestment) தொடங்கிவிட்டது.

விழிப்பும் விவேகமும்: பொதுத் துறை நிறுவனங்கள் என்பவை நமது நாட்டில் தாற்காலிகமாக வந்து போகும் அமைப்பல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றிற்கு ஒரு நிலையான இடம் உண்டு. எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டு விடுகின்ற ஏகபோக முதலாளித்துவ, கொள்கையை நமது நாடு ஏற்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எங்கெல்லாம் பொதுத் துறையின், அரசுத் துறையின் பங்களிப்புக் குறைந்து, தனியார் துறையின் ஆக்கிரமிப்பு மிகுந்திருக்கின்றதோ அங்கெல்லாம் பொதுமக்களின் நலன் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

அரசுத் துறை நடத்த வேண்டிய கல்வியை தனியாரிடம் விட்டோம். அரசின் நிதிச் சுமை குறையுமென்று கூறினார்கள். விளைவு, கல்வி ஆதாயம் தரும் வாணிபமாகிவிட்டது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் செயல்படுவதிலிருந்து இதனைக் காணலாம்.

பொதுத் துறை நிறுவனங்களின் வளர்ச்சியிலும் நிர்வாகத்திலும் தனிக்கவனம் செலுத்தினால் அவை சிறப்பாக, திறமையாக நடைபெறும் என்பதற்குப் பல சான்றுகள் கூறலாம். தனியார் வங்கியாக இருந்து நாட்டுடைமையாக்கப்பட்ட கனரா வங்கிக்கு இது நூற்றாண்டு. 2006 மார்ச்சில் இதன் வணிகம் ரூ. 1,96,000 கோடி. இதன் நிகர லாபம் ரூ. 1,343 கோடி. இதற்கு 2530 கிளைகள் உள்ளன. இது நமது நாட்டிலும் வெளிநாட்டிலும் 2.7 கோடி வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்கின்றது.

பொதுத் துறை நிறுவனங்களின் தோல்வி அரசின் தோல்வியாகும். இதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். நமது நாட்டின் தலைவர்கள் கட்சிகளின் நோக்கில் அல்லாமல், நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனையும் மனத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும்.

நமது நாட்டில் அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் துறை என்ற மூன்று துறைகளுக்கும் இடமிருக்கின்றது; வாய்ப்பிருக்கின்றது. தனியார் துறை எந்தச் சூழலிலும் செழித்து வளரும். அரசுத் துறையும் பொதுத் துறையும் வாழ்வதும் வளர்வதும் அரசு அலுவலர்கள் தொழிலாளர்கள் கையிலிருக்கின்றது. இதனை பொதுமக்கள் விழிப்போடு கவனிக்க வேண்டும். இல்லையேல் இது ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகி விடும்.

Posted in Dinamani, Economy, Govt, Ma Pa Gurusamy, PSU | Leave a Comment »