“யு.எஸ். மார்க்’ ஜனநாயகம்
ஜனகப்பிரியா
இப்புவியிலேயே மிக அமைதியான நாடு என ஜார்ஜ் புஷ் வர்ணித்த அமெரிக்கா, கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏதாவது ஒரு நாட்டுடன் ஒவ்வோர் ஆண்டும் போர் புரிந்த வண்ணமாக இருக்கிறது. இப்போதைக்கு உலகில் உள்ள எண்ணெய் வளம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
பால்கன், மத்திய ஆசியப் பகுதிகளில் அமெரிக்காவின் ராணுவத் தலையீடுகள் அங்கிருக்கும் எண்ணெய் வளத்தினை இலக்காகக் கொண்டவை. உலக எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு மேற்காசியாவில் இருப்பதனால்தான் அப்பகுதியின் அரசியல் மேலாண்மையைத் தன் பிடிக்குள் கொண்டு வரத் துடிக்கிறது அமெரிக்கா.
கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவினைக் கண்டுபிடித்த 500வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களை எதிர்த்து, ஐரோப்பிய, ஆசியப் பூர்வீகக் குடிகளின் வம்சாவளியினரும் மனித உரிமை ஆர்வலர்களும் 1992-ல் எதிர்ப்பியங்களை நடத்தினர். அதற்கான வரலாற்று ரீதியான நியாயங்கள் உண்டு. உலகின் இயற்கை வளங்கள் அனைத்தையும் தானே அடைய வேண்டுமென்ற தீவிர வெறியினால் தென் அமெரிக்கக் கண்டத்தில் சிலி, குவாட்டிமாலா, பிரேஸில், பெரு, நிகரகுவா ஹோண்டுராஸ், எல்சால்வடார், மெக்ஸிகோ போன்ற நாடுகளிலெல்லாம் தனது உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் ரகசிய, நேரடி நடவடிக்கைகளின் வழியாக அந்த நாடுகளின் அமைதியையும் சுதந்திரத்தையும் சீர்குலையச் செய்த மிகப்பெரிய “ஜனநாயகக் காவலனாக’ அமெரிக்கா இருக்கிறது!
நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களின் மீது அணுகுண்டு வீசி “அமைதியை’ ஏற்படுத்தியது தொடங்கி, வியட்நாமில் பனிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நடத்தி மக்களின் வாழ்க்கையில் “ஜனநாயகம்’ தழைக்கப் பாடுபட்டதை உலகம் மறக்க முடியுமா?
1970 மார்ச் 25-ல் அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிஞ்சர் தலைமையில் கூடிய 40 பேர் கொண்ட ஆலோசனைக் கமிட்டி, ஜனநாயக ரீதியில் தேர்ந்தடுக்கப்பட்ட சோஷலிச அரசாங்கத்தைக் கவிழ்க்க, சிலியின் ராணுவ எதிர்ப்புரட்சிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் டாலர் நிதி ஒதுக்குகிறது. 1973 செப்டம்பர் 11-ந் தேதி மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை சி.ஐ.ஏ.வின் வழிகாட்டுதலோடு ராணுவ பலத்தால் சீர்குலைத்து மக்கள் தலைவர் அலண்டேவைக் கொலை செய்தனர். பல்லாயிரக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்களும் கலைஞர்களும் சான்டியாகோ விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
1988-ல் ஆயிரக்கணக்கான குர்து இன மக்களைக் கொன்று குவித்தார் சதாம் என்று குற்றச்சாட்டு. அதே ஆண்டில்தான் அமெரிக்க விளைபொருள்களை வாங்க 500 மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசாங்கம் சதாம் உசேனுக்கு மானியமாக வழங்கியது. குர்து இனமக்கள் அழித்தொழிக்கப்பட்டதற்குப் பரிசாக அடுத்த ஆண்டில் மானியத் தொகையை இரு மடங்காக்கி 1 பில்லியன் டாலர்களை வழங்கியது அமெரிக்கா. ஆந்த்ராக்ஸ் கிருமிகளை உண்டுபண்ணும் நுண்ணுயிர் வித்துகளையும் ஹெலிகாப்டர்களையும் ரசாயன உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யத் தேவையான துணைப்பொருள்களையும் சதாமுக்குக் கொடுத்தது அமெரிக்கா. ஆனால் 1990-ல் சதாம் குவைத் நாட்டுக்குள் படைகளை அனுப்பி போர் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதற்காக அவர் மீது கோபம் வரவில்லை அமெரிக்காவுக்கு; தன்னுடைய உத்தரவின்றி அனுப்பினார் என்பதுதான் குற்றம்.
வளைகுடாப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அமெரிக்கா விதித்த தடைகளின் காரணமாக, உணவு, மருந்து, சுத்தமான குடிநீர், மருத்துவமனை உபகரணங்கள் எல்லாமும் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் ஐந்து லட்சம் இராக்கியக் குழந்தைகள் இறந்திருக்கின்றன. இதைப்பற்றி அமெரிக்காவின் ஐ.நா. தூதுவராக இருந்த, “மேடலின் ஆல்பிரெட்’ கூறியது என்னவென்றால்: “”அது ஒரு கடினமான முடிவுதான், இருந்தாலும் அடைந்த லாபத்தை எண்ணும்போது கொடுத்த விலை சரிதான் என்று நாங்கள் எண்ணுகிறோம்”.
பனிரெண்டு ஆண்டுகள் கழித்து இராக்கின் மேல் இன்னொரு போர். இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். லட்சக்கணக்கில் குழந்தைகள் நோய் கண்டு இறந்து போயின.
இறந்து போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்கூடப் பாரபட்சம். அமெரிக்க சிப்பாய் இறந்தால் 5 லட்சம் டாலர். இராக்கிய பிரஜை இறந்தால் இரண்டாயிரம் டாலர் கொடுப்பதே கடினம். ஆனால் 30 ஆயிரம் டாலர்களுக்கு மேல் வழங்குவதாக விளம்பரம். கடந்த சில ஆண்டுகளில் 300 டன் எடையுள்ள யுரேனியத்தினாலான கதிரியக்கத் தன்மை கொண்ட ஆயுதங்களை இராக்கின் நிலப்பரப்பில் வயல்வெளிகளில் வீசியிருக்கிறது அமெரிக்க ராணுவம்.
அமெரிக்க நிர்வாகத்தின் உள் அறைகளினுள் பதுங்கியிருந்த சில பழைய உண்மைகளை உலகம் இப்போது அறியத் தொடங்கியிருக்கிறது. 70களின் முற்பாதியில் ஆப்கன் பிரச்சினையில் முன்னாள் சோவியத் யூனியனின் படைகளை வெளியேற்ற நடைபெற்ற அமெரிக்க முழக்கங்களின் திரைமறைவில் சவூதி மன்னரின் குடும்பத்தினருடன் இணைந்து “அல்-காய்தா’ அமைப்பு உருவாகத் துணையாக நின்றார் சீனியர் புஷ்.
“ஹில்பர்ட்டன்’ எனும் பெயரிலான ஆயுத உற்பத்தி நிறுவனம் புஷ் குடும்பத்தினருக்குச் சொந்தமானது. இதன் சகோதர நிறுவனமான “டிக்செனி’க்குத்தான் ஆப்கனிலும் இராக்கிலும் கட்டுமானப் பணிகளுக்கான ஆணை கிடைத்திருக்கின்றன. இப்போது நமக்குப் புரியும்: “அழித்தலும் ஆக்கலும் நானே’ என்கிற அமெரிக்க கொக்கரிப்பின் பொருள்; அப்பாவி லெபனான் மக்களின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிவதை அவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்று இன்று அறிவிக்கிற அமெரிக்க ஜனநாயகத்தின் நிஜமுகம்!