லண்டன் டைரி: லண்டன் இசைவிழா!
இரா. முருகன்
ஒரு பத்து வருடம் முன்னால், நம் ஊரில் பரபரப்பான பகுதியில் ஒரு கிரவுண்ட் இடம் சும்மா கிடந்தால் என்ன நடந்திருக்கும்? சடசடவென்று ஒரு நாலு மாடிக் கட்டடம் உயரும். கேபிள் டிவியின் விளம்பர நச்சரிப்புத் தாங்காமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் பந்து மித்திரர்களோடு அங்கே படையெடுப்போம். இருபது சதவிகித வட்டிக்கு பிக்செட் டெபாசிட். மாதம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு நகைச்சீட்டு என்று ஆரம்பித்துவிட்டு வெள்ளி முலாம் பூசிய வெங்கடாஜலபதி டாலர், காமாட்சி விளக்கு என்று எதையாவது பரிசாகப் பெற்று பெருமையோடு தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேருவோம். அப்புறம் மூன்று வருடம் கழித்து பனகல் பார்க் பெஞ்சில் கூட்டம் போட்டு, போட்ட பணத்தில் முப்பத்திரண்டு சதவீதமாவது கிடைக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிப்போம். ஒரு கிரவுண்ட் இல்லாமல் இருநூற்றெழுபத்தைந்து ஏக்கர் இப்படிச் சும்மா கிடந்திருந்தால்? அந்த மீட்டிங்கை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்த வேண்டியிருக்கும் என்பதைத் தவிர வேறே வித்தியாசம் இருந்திருக்காது.
லண்டனில் ஓர் இருநூற்றெழுப்பத்தைந்து ஏக்கர் செல்வச் செழிப்பு மிகுந்த கென்சிங்டன் பகுதியில் இருநூறு வருடத்துக்கு முன்னால் சும்மா கிடந்தது. அப்போது டிவியும் அதில் விளம்பரமும் இல்லாததாலும், பிரிட்டீஷ் அரச வம்சத்துக்கு இலவச காமாட்சி விளக்கு ஆசை இல்லாத காரணத்தாலும், கென்சிங்டனில் அந்தப் பெரிய நிலப்பரப்பை கொப்பும் குழையும் புல்தரையும் பூச்செடியுமாக மாற்றி, கென்சிங்டன் தோட்டம் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்தியாவையும் சேர்த்த சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட விக்டோரியா மகாராணி இந்தத் தோட்டத்தை அடுத்த கென்சிங்டன் அரண்மனையில்தான் பிறந்து வளர்ந்ததாக அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.
கென்சிங்டன் பூங்காவில் இப்படி ஓர் அறிவிப்புப் பலகை கூட விடாமல் படித்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன். ஓர் அரை டஜன் மோட்டா சர்தார்ஜிகள் உற்சாகமாகப் பேசிக்கொண்டு, அவ்வப்போது புல்தரையில் குட்டிக்கரணம் அடித்து எழுந்து நின்று முன்னால் நகர்ந்தபடி இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளும் ஒரு பெரிய நாயுமாக வந்த வெள்ளைக்காரத் தம்பதி குழந்தைகளை ஓடக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடுகிறது. அவர்கள் சர்தார்ஜிகளையும் என்னையும் பார்க்கிற பார்வையில் நாங்கள் எல்லோரும் பிள்ளை பிடிக்கிறவர்கள் என்ற பலமான சந்தேகம் தெரிகிறது. குழந்தைகள் அடக்கமாக பூங்கா சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து சாண்ட்விச் சாப்பிட ஆரம்பிக்க கட்டவிழ்த்து விட்ட அவர்களுடைய நாய் மண்ணில் புரண்டுவிட்டு எதிரில் கால்வாய்க்குள் புகுந்து ஒரு நிமிடம் நீந்தி, திரும்ப ஈரத்தோடு மண்ணில் புரள ஓடிவருகிறது. மேலே விழுந்து பிடுங்குவதுபோல் பாய்ந்த அந்த இங்கிலீஷ் நாயின் பரம்பரையை பஞ்சாப் பாஷையில் திட்டியபடி ஒரு சர்தார்ஜி, நாய்க்கார தம்பதியிடம் நல்ல இங்கிலீஷில் புகார் சொல்கிறார். “நீங்கதான் பாத்து நடக்கணும்’ அந்தம்மா சாண்ட்விச்சில் பாதியை விண்டு நாய்க்குக் கொடுத்துவிட்டு மீதியை வாயில் போட்டுக் கொள்கிறார்.
கென்சிங்டன் பூங்காவில் இருந்து வெளியே வரும்போது பிரம்மாண்டமாக முன்னால் நிற்கிறது ராயல் ஆல்பர்ட் அரங்கம். இறந்துபோன தன் கணவர் ஆல்பர்ட் இளவரசர் நினைவாக விக்டோரியா மகாராணி கட்டியது. இந்திரா காந்தி சர்க்கார் தில்லியில் கவிழ்ந்து அல்பாயுசாக ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து குஷியாக உள்குத்து நடத்திக் கொண்டிருந்த 1977-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய இந்த ராயல் ஆல்பர்ட் ஹாலில் மேற்கத்திய சாஸ்தீரிய சங்கீத நிகழ்ச்சியிலிருந்து, ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட விழா, அரசியல்வாதிகள், அறிவியல் துறை அறிஞர்களின் சொற்பொழிவு என்று எத்தனையோ இந்த நூற்று முப்பது வருடத்தில் நடந்திருக்கிறது. தற்போது வருடா வருடம் பிரிட்டீஷ் ஒலி, ஒளிபரப்பு நிறுவனமான பி.பி.சி கோடைகால இசைவிழாவான ப்ராம் என்ற ப்ரொமனேட் விழா நடத்துகிறது இங்கேதான்.
ப்ரொமனேட் என்றால் நடந்துகொண்டே இசை கேட்கிறது என்று பொருளாம். ஆல்பர்ட் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடக்கமுடியாது. ஆனாலும் அரங்கத்தில் நின்றபடிக்கு இசை நிகழ்ச்சியை ரசிக்கலாம். ஒருத்தருக்கு ஒரு டிக்கெட்டுக்கு மேல் கண்டிப்பாக வழங்கப்படமாட்டாது.
நீண்ட க்யூவில் நின்று அன்றைய ப்ராம் நிகழச்சிக்கான நுழைவுச்சீட்டுக்காகக் காத்திருக்கிறேன். பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இசைக்குழு மேற்கத்திய இசைமேதை மோசர்ட்டின் இருநூற்றைம்பதாவது பிறந்த ஆண்டு நிறைவை ஒட்டி முழுக்க மோசர்ட் இசையமைத்த படைப்புகளை வழங்கும் நிகழ்ச்சி. நாலைந்து வெள்ளைக்காரர்கள் சுறுசுறுப்பாக பிளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சாஸ்திரீய சங்கீதத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்பதை முதன்முதலாக ஆச்சரியத்தோடு பார்க்கிறேன்.
பிளாக்கில் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒயிட்டிலேயே கிடைத்துவிடுகிறது டிக்கெட். ஐந்தே பவுண்ட்தான் செலவு. மூவாயிரம் பேர் நிற்கிற பெரிய அரங்கத்தில் புகுந்து நானும் நின்றபடி மேடையைக் கவனிக்கிறேன். பிபிசி டெலிவிஷன் காமிராக்கள் அவை பக்கம் திரும்பி அழகான வெள்ளைக்காரப் பெண்களைத் தேடிக்கொண்டிருக்க, நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. சாவு நிகழ்ந்தபோது வாசிக்க ஏதுவாக மோசர்ட் எழுதிய மேசானிக் ப்யூனரல் மற்றும் ரெக்யூம் என்ற இரண்டு படைப்புகள் மேடையேற்றப்படும் என்று அறிவிப்பு தொடர்கிறது.
இருபது வயலின், ஏழெட்டு புல்லாங்குழல், டிரம்பெட், வெள்ளைச் சீருடை அணிந்த பத்து பாடகர்கள், அக்கார்டியன், பியானோ என்று மேடை நிறைந்து சோகமயமான இழவு இசையைப் பொழிய இசைக்குழு நடத்துனர் ஆவேசமாகக் கையை இப்படியும் அப்படியும் அசைத்து இன்னும் உற்சாகமோ சோகமோ படுத்துகிறார். என் பக்கத்தில் ரெக்சின் பையைப் காலடியில் வைத்துவிட்டு ஒரு வெள்ளைக்கார முதியவர் இசைக்குறிப்பு எழுதிய புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு இசைக்குழு கூடவே மெல்ல வாய்க்குள் பாடியபடி சங்கீதத்தில் முழ்கியிருக்கிறார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, “”தனிப்பாடல் பாடகிகள்லே ரெண்டு பேர் ஸ்ருதி சேராமக் கஷ்டப்படுத்திட்டாங்க. பின்வரிசை ரொம்ப சுமார்தான்” என்றபடி பக்கத்தில் நடந்தவரிடம் சொன்னபடி வந்தவர் கூறியது அட்சரம் பிசகாமல் அடுத்த நாள் கார்டியன் பத்திரிகை இசை விமர்சனத்தில் வந்திருந்தது.
“”போன மாதம் ப்ராம் நிகழ்ச்சிக்கு லண்டனில் கச்சேரி செய்ய வந்திருந்த கர்னாடக சங்கீத வித்துவான் மணக்கால் ரங்கராஜனைக் கூட்டிப் போனேன்” என்று நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் சொல்கிறார். சென்னை சங்கீத சீசனில் சபா எதிலும் தட்டுப்படாத மணக்கால் லண்டனில் அண்மையில் அவை நிறைந்த இரண்டு கச்சேரி நடத்தி இருக்கிறார் என்பதை அறிந்து இன்னொரு தடவை ஆச்சரியப்படுகிறேன்.
அடுத்த ஆண்டு டிசம்பர் சங்கீத விழாவில் மேலும் ஆச்சரியகரமாக, லண்டன் ப்ராம் போல் பிரெஞ்சி இசைக்குழு சென்னை மியூசிக் அகாதமியில் மோசர்ட் இசை நிகழ்ச்சி நடத்தலாம். அல்லது லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நித்யஸ்ரீ கச்சேரிக்கு வெள்ளைக்காரர்கள் ப்ளாக்கில் டிக்கெட் விற்கலாம். இது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் ஆச்சரியமாக, அகாதமிக்காரர்கள் மணக்கால் ரங்கராஜனுக்கு சங்கீத கலாநிதி பட்டம் வழங்க முடிவெடுக்கலாம்.