லண்டன் டைரி: கோவண்ட் தோட்டத்துப் படைப்புகள்!
இரா. முருகன்
வெல்லிங்டன் தெருவில் நடக்கும்போது, வெள்ளைக்காரத் துரைகளைப் பின்னால் தள்ளிக்கொண்டு மனதின் உள்ளறையிலிருந்து, “”எப்படிடா இருக்கே?” என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறவன் தடிராஜா. ரொம்ப வருடம் முன்னால் பள்ளிக்கூடத்தில் கூடப்படித்தவன். புத்தகம் சேகரிப்பில் பேய்த்தனமான ஆசை. எல்லாமே சோனியான சினிமா பாட்டுப் புத்தகங்கள். அட்டையில் மசமசவென்று படத்தின் ஒரு ஸ்டில் போட்டு, உள் அட்டையில் நாலுவரி திரைக்கதை எழுதி, “மீதியை வெள்ளித்திரையில் காண்க’ என்று தவறாமல் அச்சடித்திருக்கும். மீதிப் பக்கங்களில், அந்தச் சினிமாவில் இடம் பெற்ற பாடல்கள், நடுநடுவே “ஜிஞ்ஜின்னாக்கடி ஜிஞ்ஜின்னாக்கடி’, “கும்தலக்கா கும்தலக்கா கும்மா’ போன்ற அரிய இசைக்குறிப்புகளோடு வெளியாகியிருக்கும் வயசாகி, பைண்ட் செய்த அந்தப் பாட்டு புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டு கொஞ்சமும் அபஸ்வரம் விலகாத குரலில் அதிலிருந்து நேயர் விருப்பமாக எனக்குக் கொஞ்சம் பாடிக்காட்டினான். அந்த நினைவு வெல்லிங்டன் தெருவில் இப்போது எழக் காரணம் இல்லாமல் இல்லை.
கிட்டத்தட்ட இருநூறு வருடம் முன்புவரை லண்டன் கோவண்ட் தோட்டப் பகுதி நாடகக் கொட்டகைகள் தினசரி அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலில் சக்கைப்போடு போட்டது உண்மைதான். ஆனால் ரசிகர்கள் அந்த நாடகங்களைப் பார்த்து ரசித்துவிட்டு மனதில் அசைபோட்டபடி வீட்டுக்குப் போகத்தான் முடியும். நாடகத்தைப் புத்தகமாக அச்சடித்து விற்கத் தடை இருந்ததால், வீட்டில் ஓய்வாக வசனத்தைப் படித்து ரசிக்கவோ, பலகுரலில் நடித்து மற்றவர்களை இம்சிக்கவோ முடியாத சூழ்நிலை. 1830-ம் ஆண்டு தாமஸ் லேக்கி என்ற புத்தக வெளியீட்டாளர் அரும்பாடுபட்டு இதை மாற்றி, வெல்லிங்டன் தெருவில் நாடகங்களை அச்சுப்போட்டு, மலிவுப் பதிப்பாக விற்க ஆரம்பிக்க, அவருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. தமிழ் சினிமாவுக்கு முதல் பாட்டுப் புத்தகம் போட்டவரை நாம் மறந்துவிட்டாலும், தாமஸ் லேக்கியை கோவண்ட் தோட்டம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறது.
இந்தக் கோவண்ட் தோட்டம் தலைசிறந்த ஆங்கில இலக்கியப் படைப்புகள் பலவற்றிலும் இடம் பெற்றிருக்கிறது. காரணம் அந்தக் கால இலக்கியப் பிரபலங்கள் பலரும் இந்தப் பேட்டையில் வசித்திருக்கிறார்கள். அல்லது தினசரி ஒரு தடவையாவது இங்கே வந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு, சக எழுத்தாள நண்பர்களோடு கோஷ்டியாகக் கடையில் ஏறி ஆளுக்கு ஒரு கிளாஸ் பியரோ அல்லது ஒரு கப் காப்பியோ குடித்தபடி சண்டை போட்டு, சமாதானமாகித் திரும்பிப் போயிருக்கிறார்கள். ஹென்றி ஃபீல்டிங்க் என்ற எழுத்தாளர் இந்தச் சண்டைகளுக்காகவே கோவண்ட் தோட்ட மதுக்கடைகளை நித்தியப்படி சுற்றி வருவாராம். (அந்தக் காலத்தில் சண்டை போட்டுக்கொள்ள இலக்கியச் சிற்றிதழ் போன்ற வசதிகள் இல்லையோ என்னமோ). வயதாகி நடை
தளர்ந்து சண்டை போடமுடியாமல் போனபோதும் இவர் அசரவில்லை. காசு கொடுத்து யாரையாவது கூட்டிவந்து தன் சார்பில் பொறிபறக்க மோதவைத்துவிட்டு, ஓரமாக ஸ்டூலில் உட்கார்ந்து பியர் குடித்துக்கொண்டு உற்சாகமாக வேடிக்கைப் பார்ப்பாராம்.
புகழ்பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் கோவண்ட் தோட்டப் பகுதிவாசி. அவருடைய “ஆலிவர் டுவிஸ்ட்’ நாவலில் லண்டனுக்கு வரும் அனாதைச் சிறுவன் ஆலிவர் போய்ச்
சேரும் இடம் கோவண்ட் கார்டன்தான். கோவண்ட் தோட்டப் பகுதியில் சார்லஸ் டிக்கன்ஸ் வசித்த வீட்டைத் தேடியலைகிறேன். “குடும்பத்தைப் பராமரிக்கச் சாமர்த்தியம் போதாது’ என்ற வினோத காரணத்துக்காக இந்தப் பிரபல எழுத்தாளர் அவருடைய மனைவியை விவாகரத்து செய்தபோது எழுதிய கடிதம், அவருடைய நாவல்களின் கையெழுத்துப் பிரதிகள், இவற்றோடு அவருடைய மைத்துனிக்கு எழுதிய அன்புக் கடிதங்களும் இங்கே காட்சியாக வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல். கதை அப்படிப் போகிறதாக்கும்.
இலக்கிய மேதை பெர்னார்ட்ஷா எழுதிய புகழ்பெற்ற நாடகமான “பிக்மாலியன்’ கோவண்ட் தோட்டம் ராயல் ஓபரா வாசலில்தான் தொடங்குகிறது. எலிசா டூலிட்டில் என்ற பூ விற்கும் ஏழையான இளம்பெண்ணை ஒரு பேராசிரியர் நாகரீக சீமாட்டியாக்கும் கதை இது. இந்த நாடகத்தின் அடிப்படையில் சோ தமிழில் எழுதிய “மனம் ஒரு குரங்கு’ கோவண்ட் தோட்டச் சூழ்நிலைக்குப் பொருத்தமான கொத்தவால்சாவடிப் பகுதியில் தொடங்குகிறதா என்பது நினைவில் இல்லை.
பழைய லண்டன் டவர் மிருகக்காட்சி சாலையைச் சுற்றிவந்து “புலிக்கவிதை’ எழுதிய கவிஞர் வில்லியம் ப்ளேக்கும் இன்னொரு கோவண்ட் தோட்டவாசிதான். “ஆவிகளோடு பேசுவதில்’ ஈடுபட்டிருந்த இவர், தனக்கு நூறு வருடம் முன்னால் இறந்துபோன மகாகவி மில்டனின் ஆவியோடு தொடர்பு கொண்டு, அவர் சொல்லச் சொல்ல எழுதியதாக, ஒரு காவியம் வெளியிட்டார். ஆனால் கவிதை ரசிகர்களோ, ஆவி ஆராதகர்களோ அதில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லையாம்.
ஆவி என்றதும் அடுத்து நினைவுக்கு வருகிறவர், திடுக்கிட வைக்கும் திகில் சினிமாப் படங்களை இயக்கிய ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். இந்தப் பிரசித்தி பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் கோவண்ட் தோட்டக் காய்கறிக்கடை வியாபாரி ஒருவரின் மகன். சின்ன வயதில் அப்பாவுக்கு உதவியாகக் கடையில் இருந்ததோடு கோவண்ட் தோட்டத்தையும் இண்டு இடுக்கு விடாமல் சுற்றி வந்த ஹிட்ச்காக், தன்னுடைய “பிரன்ஸி’ படத்தில் சாப்பாட்டிலும், கொலையிலும் விருப்பம் கொண்ட கதாநாயகனாக்கியது ஒரு கோவண்ட் தோட்டக் காய்கறிக் கடைக்காரரைத்தான்.
ஹிட்ச்காக்கின் மற்ற படங்களைப் பற்றி யோசித்தபடி லைசியம் தியேட்டரைக் கடக்கிறேன். நீலக் கோட்டும் டையும் அணிந்த ஒரு மத்திய வயசு வெள்ளைக்காரர் மணி கேட்கிறார். கைக்கடியாரத்தைப் பார்ப்பதற்கு முன், எனக்கு முன்னால் ஒரு கத்தை டிக்கெட்டுகள் நீட்டப்படுகின்றன. கோவண்ட் தோட்ட, மற்றும் பக்கத்து ஸ்ட்ராண்ட் பகுதி நாடகக் கொட்டகைகளில் இன்று மாலைக்காட்சிக்கான நுழைவுச் சீட்டுகள். லைசியம் அரங்கத்தில் பத்து பவுண்டுக்கு “சிங்க அரசன்’ பகல் காட்சிக்கே கிடைக்கிறது. இருபது வருடமாக லைசியம் தியேட்டரில் தொடர்ந்து நடக்கிற இசை நாடகம். ஒரு வாரம் முன்னால்தான் இன்னோர் இசை நாடகமான ஈவிதா பார்த்ததால் “லயன் கிங்’ பார்க்கும் படலத்தைச் தள்ளிப்போட உத்தேசித்திருப்பதாக அவரிடம் மரியாதையோடு தெரிவிக்கிறேன். கோட் பாக்கெட்டிலிருந்து வேறு எதையோ எடுத்து நீட்டும் முன்னால் கொஞ்சம் நடையை எட்டிப் போட்டு கோவண்ட் தோட்ட ரயில் நிலையத்தை நோக்கித் திரும்புகிறேன்.
லண்டனில் எங்கெங்கோ எல்லாம் இருந்து புறப்பட்டு பெருவெள்ளமாக ஒரு ஜனக்கூட்டம் ரயில்நிலையத்தை விட்டு வெளியேறி கோவண்ட் தோட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறது. இதில் எதிர் நீச்சல் போட்டு உள்ளே நுழைவது சிரமம். கொஞ்சம் காலாற நடந்தால் சாரிங் கிராஸ் தெரு வரும். அங்கே பழைய புத்தகக்கடைகளை மேய்ந்துவிட்டு சாரிங் கிராஸ் ஸ்டேஷனில் ரயிலைப் பிடிக்க வேண்டியதுதான். பழைய புத்தகக் கடையில் தேடினால் பழைய சினிமா பாட்டுப் புத்தகம் கிடைக்கக் கூடும். பெர்னார்ட் ஷாவின் பிக்மேலியனை இசைச் சித்திரமாக எடுத்த “மைஃபேர் லேடி’, டிக்கன்ஸ் கதையான “ஆலிவர்!’, யூல் பிரின்னர் நடித்த “கிங்க் அண்ட் ஐ’, ஜாலி ஆண்ரூஸின் “சவுண்ட் ஆஃப் ம்யூசிக்’… “கர்ணன்’கூடக் கிடைக்கலாம். தடிராஜா கலெக்ஷனில் அந்தச் சினிமாப் பாட்டுப்புத்தகம் மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறான்.
=======================================================
லண்டன் டைரி: விறைபேபான ‘பிக்கடில்’ !
இரா. முருகன்
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சென்னைக்குக் குடியேறிய புதிதில், சமர்த்தாக ஆபீஸ் போய்க்கொண்டிருந்தேன். மிச்ச நேரம் புதுக்கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். அஞ்சலில் அனுப்பினால் போய்ச்சேர நாளாகிவிடும் என்பதால், கவிதை எழுதிய காகிதத்தைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டு ஜெமினி பக்கம் தொடங்கி, அண்ணாசாலை நெடுக நடந்து, அந்தக் கோடியில் அண்ணாசிலைக்கு அருகேயிருந்த பத்திரிகை அலுவலகத்துக்குப் போகிற வழக்கம். சென்னை மாநகரின் பரபரப்பும் இரைச்சலும் வேகமும் நிறைந்த இதயத் துடிப்பை ஒளி, ஒலி, வாடை ரூபமாக நெருக்கத்தில் இருந்து அனுபவித்துக்கொண்டு மூச்சு வாங்கப் பத்திரிகை ஆபீஸ் படியேறிய அந்தக் கணங்களைக் கொஞ்சம்போல் லண்டனில் இப்போது திரும்ப அனுபவிக்கிறேன். லண்டன் மாநகரின் இதயமான பிக்கடலியின் மேற்குப் பக்கத்து கிரீன்பார்க் ரயில் நிலையத்தில் தொடங்கி, கிழக்கே பிக்கடலி சதுக்கத்தை நோக்கி அந்தி சாய்கிற நேரத்தில் ஓய்வாக ஒரு நடை.
“பிக்கடலி’ இந்த வார்த்தை காதில் விழுந்ததும், உலகம் முழுக்கக் கடைவீதி, ஒட்டுச் சந்து, வீட்டுத் திண்ணைகளில் தையல் மிஷினுக்கு முன்னால் உட்கார்ந்து மும்முரமாகத் தைத்துக்கொண்டிருக்கும் லட்சக் கணக்கான தையல்காரர்கள் ஒரு நொடி இயந்திரத்தை நிறுத்திக் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெருமைப் பட்டுக்கொள்ளலாம். காரணம், தையல் இல்லாவிட்டால் பிக்கடலி இல்லை.
பிக்கடில் என்பது விறைப்பான சட்டைக் காலருக்கான பெயர். பிக்கடில்களைத் தயாரித்து விற்றுப் பெரும் பணம் சம்பாதித்த ராபர்ட் பேக்கர் 1612-ல் வெற்று வெளியாகக் கிடந்த இந்தப் பகுதியில் முதல் வீட்டுமனை வாங்கிக் கட்டிக் குடிபோனாராம். அவர் தயாரித்த காலர் நினைவாக, இந்தப் பிரதேசமே பிக்கடலி என்று நாமகரணம் செய்யப்பட்டது என்று லண்டன் சரித்திரம் தெரிவிக்கிறது. காலர் மட்டும் தயாரித்தே இப்படி ஒரு பெரிய பிரதேசத்துக்குப் பெயர் கொடுத்த அந்தத் தையல்காரர் சட்டை, பேண்ட், பிளவுஸ் என்று தைத்துத் தள்ளியிருந்தால், லண்டன் நகரத்துக்கே தையல்கடை என்று பெயர் மாற்றியிருப்பார்களோ என்னமோ.
ராபர்ட் பேக்கர் டெய்லர் பிக்கடலியின் குடிபுகுந்த முகூர்த்தம், உள்நாட்டுக் கலகம், சண்டை சச்சரவெல்லாம் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவ ஆரம்பித்திருந்தது. பரம்பரைப் பணக்காரர்களான ரோத்சைல்ட், ரோத்மன், பர்லிங்டன் போன்ற பிரபுக்களும் இங்கே வசிக்க ஆரம்பிக்க, பிக்கடலி நவநாகரிகமான பிரதேசமானது. அடுத்த முன்னூறு வருடத்தில் பழைய பங்களாக்கள் இருந்த இடத்தில் பெரிய கடைகள் எழுந்து நிற்க, நகரின் முக்கியமான வியாபார கேந்திரமாக பிக்கடலி மாறியது. இதற்கு வழி செய்தவர் பர்லிங்டன் பங்களாவாசியான கேவண்டிஷ் பிரபு.
“”ஏங்க, நிதம் இங்கே தொந்தரவாப் போச்சு. ஊர்லே திரியற வேலைவெட்டியில்லாத ஆளுங்க சதா அழுகின முட்டை, நத்தை ஓடு, செத்தை குப்பைன்னு வீட்டுக்குள்ளே விட்டெறிஞ்சுட்டுப் போறாங்க. வேலைக்காரங்க சுத்தம் செய்யறதை மேற்பார்வை செஞ்சு செஞ்சு உடம்பெல்லாம் வலிக்குது. இதை உடனே நிறுத்த ஆம்பளையா லட்சணமா ஏதாவது வழி பண்றீங்களா இல்லே…”
காவண்டிஷ் பிரபுவின் வீட்டம்மா மிரட்டியிருக்கலாம். அவர் உடனே விரைவாகச் செயல்பட்டு, பர்லிங்க்டன் பங்களாவை ஒட்டி பர்லிங்டன் ஆர்க்கேட் என்ற கடைப் பகுதியை உருவாக்கினார். கடைகளுக்கு வாடகையாகக் கணிசமான வருமானம். பணப் புழக்கம், வரி என்பதால் அரசாங்க ஆதரவு. கடைச் சிப்பந்திகளுக்கு வேலைவாய்ப்பு என்ற ஜனரஞ்சகமான ஏற்பாடு. அங்காடிக்குக் கடைக்காரர்கள் செலவில் இருபத்துநாலு மணிநேரமும் கட்டுக்காவல் என்பதால் அதை ஒட்டிய தன் வீட்டில் அழுகிய முட்டை விழுவது நிறுத்தம். இப்படி ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்களைக் குறிவைத்து 1819-ல் உருவான இந்த பர்லிங்டன் ஆர்க்கேட் தான் லண்டனின் நாகரீகமான பெரிய கடைகள் நிறைந்த முதல் அங்காடி.
இதைக் கட்டிமுடிக்க அந்தக் காலத்திலேயே கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் செலவு. மொத்தம் நாற்பத்தேழு கடை. ஒரு கடைக்கு அறுபது பவுண்ட் வருட வாடகை. காவண்டிஷ் பிரபு அங்காடியைக் கட்டும்போது, இதைப் பெண் வணிகர்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடுவேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். நகை விற்கிற கடை, புகையிலை விற்கிற கடை, துணிக்கடை, தொப்பி விற்கிற கடை, துப்பாக்கிக் கடை, புத்தகக் கடை என்று நாற்பத்தேழு கடைகளையும் குத்தகைக்கு எடுத்தவர்களில் பெண்களைவிட ஆம்களே அதிகம். என்ன போச்சு? பர்லிங்டன் ஆர்க்கேடில் கடைபோட்ட அய்யாக்களும் அம்மணி(மேடம்) என்றே அழைக்கப்பட, காவண்டிஷ் பிரபுவின் நிபந்தனை நிறைவேறியது.
இங்கே கடை வைத்தவர்கள் கடைக்கு மேலேயே நெருக்கியடித்துக் குடும்பம் நடத்திக் கீழ்த்தளத்தில் வியாபாரம் செய்து வந்ததாகத் தகவல். இங்கிலாந்து ராஜ குடும்பம் இங்கே பல கடைகளின் வாடிக்கையாளராகச் சுருட்டும், துணியும் தொப்பியும் வாங்கியிருக்கிறது. வாடகை அதிகம் என்றாலும் முடிதிருத்தும் நிலையம்கூட நூற்றெழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இங்கே இருந்திருக்கிறது. ” எங்க கடையில் முடிவெட்டினால், ஒவ்வொருத்தருக்கும் புதுச்சீப்பு’ என்று அவர்கள் 1851-ல் “தினச் செய்தி’ பத்திரிகையில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். சவுரிமுடி, விக் விற்பனையும் கடையில் அமோகமாக நடந்ததாகத் தெரிகிறது.
மேட்டுக்குடிக்கான கடைப்பிரதேசமான இங்கே ஹாலிவுட் கனவுக்கன்னி இன்கிரிட் பெர்க்மென் (உத்தேசமாக நம் நாட்டியப் பேரொளி பத்மினி, சாவித்திரி காலம்) ஷாப்பிங் செய்ய வந்தபோது, கூட்டம் கூடாமல் தடுக்க, அங்காடியின் வெளிக்கதவை அடைத்து வைத்திருந்தார்களாம். அதையும் மீறி உள்ளே நுழைந்து துணிக்கடையில் படியேறிய ஒரு மூதாட்டியிடம் வெளியே நின்ற கடைச்சிப்பந்தி பெருமையாகச் சொன்னார்- “”உள்ளே பாருங்க, யார் இருக்காங்கன்னு..” பாட்டியம்மா கண்ணை இடுக்கி உள்ளே பார்த்துவிட்டு முணுமுணுத்தாராம்- “”ஆமா, தொந்தியும் தொப்பையுமா உங்க முதலாளி யாரோ ஒல்லியா ஒரு பொண்ணு கூடப் பேசிட்டு நிக்கறார். இந்தக் கண்றாவியை எல்லாம் வெளியேபோய் வைச்சுக்கக் கூடாதா? வியாபார நேரத்திலே எதுக்கு?” இன்க்ரிட் பெர்க்மென் கேட்டிருந்தால் தரைக்கு இறங்கியிருப்பார்.
பர்லிங்டன் ஆர்க்கேட் உள்ளே நுழைகிறேன். அதிக விலைக்குச் செருப்பு, கூடுதல் விலைக்கு நகைநட்டு, வாசனை திரவியம், பளிங்கு சமாச்சாரங்கள், ஓவியம், சிற்பம், வெள்ளிப் பாத்திரம் என்று விற்கிற கடைகள் வரிசையாக வரவேற்கின்றன. சமாதானமும் சந்தோஷமுமாகச் சாமானிய வாழ்க்கை நடத்த எதெல்லாம் தேவையில்லை என்று மனதில் பட்டியல் போட இந்த அங்காடி உதவி செய்கிறது.
தங்கக் கலர் ரேக்கு வைத்த நீளத் தொப்பி அணிந்த காவலர்கள் பர்லிங்டன் அங்காடியைச் சுற்றிவந்து காவல் காக்கிறார்கள். லண்டன் மாநகரின் முதலும் கடைசியுமான தனிநபர் காவலர்படை இவர்களுடையது. காவண்டிஷ் பிரபு “பீடில்’ என்ற இந்தக் காவலர்களை நியமித்துக் கடந்த இருநூறு வருடமாக இந்த மரபு தொடர்ந்து வருகிறது.
வெளியே வருகிறேன். அடுத்த கட்டடமான ராயல் அகாதமி சுவரில் மாபெரும் நடராசர் ஓவியம் கண்ணில் படுகிறது. இடது பாதம் தூக்கி ஆடும் பெருமான் பிக்கடலியில் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அறிய ஆவலாக, அகதாமிக்கு உள்ளே நடக்கிறேன்.