கொல்கத்தா அருகே இரண்டு தீவுகள் கடலில் மூழ்கின
கொல்கத்தா, நவ. 1: பூமியின் தட்பவெப்பநிலை மாறிவருவதால் கடல்நீர் மட்டம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டிய சுந்தரவன டெல்டா பகுதியில் இரண்டு தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன.
இதுகுறித்து ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தின் கடல் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் சுகதா ஹஸ்ரா கூறியது:
பூமியின் தட்பவெப்ப நிலை மாறிவருகிறது. இதன்காரணமாக கடல்நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. அத்துடன் கடல் அரிப்பும் தொடர்கிறது. இதன்காரணமாக மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டியுள்ள சுந்தரவன டெல்டா பகுதியில் உள்ள நூறு தீவுகளில் இரண்டு தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன. இவற்றை செயற்கை கோள்கள் மூலமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
1940 களில் இருந்து இந்தத் தீவுகள் மூழ்கி வருகின்றன. லோகசாரா எனற தீவில் உள்ள மக்கள் ஏற்கெனவே பத்திரமான பகுதிக்கு மாற்றப்பட்டனர். சாகர் என்ற தீவின் 30 கிலோமீட்டர் தூரம் கடல் அரிப்பு காரணமாக காணாமல் போய்விட்டது என்றார்.
சுந்தரவனப் பகுதியில் உள்ள நூறு தீவுகளில் 10 ஆயிரம்பேர் வசிக்கின்றனர்.