நீதித்துறையின் மீது விமர்சனம் ஏன்?
சென்னை, ஜூன் 19: நீண்டகாலமாக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தான் நீதித்துறையின் மீது விமர்சனம் எழுகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. சின்ஹா கூறினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சமரசத் தீர்வு குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:
தற்போது நம்நாட்டில் 2 கோடியே 50 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 8 லட்சத்து 56 ஆயிரம் வழக்குகள் தேங்கியுள்ளன.
தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீதிமன்றங்களிலும் சிறப்பான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனாலும், நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக நீதித்துறையின் மீது எழும் விமர்சனங்களைத் தவிர்க்க முடியவில்லை. எனவே விரைவு நீதிமன்றங்கள், சமரசத் தீர்வு மையங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் மூலம் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.
வியாபாரம் மற்றும் சிவில் வழக்குகளைத் தீர்த்து வைப்பதில் சமரசத் தீர்வு மையங்கள் முக்கிய பங்காற்றக்கூடும். இந்த மையங்களை செயல்படுத்துவதில் சென்னை வழக்கறிஞர்கள் முன்மாதிரியாக உள்ளனர். பெங்களூர், மும்பை உள்ளிட்ட நீதிமன்றங்களில் சென்னையைப் பின்பற்றி சமரசத் தீர்வு மையங்கள் செயல்படுகின்றன.
தில்லி உயர் நீதிமன்றத்தில் சமரசத் தீர்வு மையத்தை வழக்கறிஞர்கள் முதலில் புறக்கணித்தனர். ஆனால் தற்போது அனைத்துத் தரப்பினரிடையேயும் சமரசத் தீர்வு மையங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. தில்லி உயர் நீதிமன்றத்தில் 3 ஆயிரம் வழக்கறிஞர்களுக்கு சமரசத் தீர்வு செய்து வைப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டது.
சமரசத் தீர்வு மையங்களில் வழக்குகளைத் தீர்த்து வைக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். வழக்குகள் தாக்கல் செய்வது அதிகரித்து வரும் வேளையில், இம்மையங்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.
தேசிய சமரசத் தீர்வு மையத் திட்டத்துக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் சமரசத் தீர்வு மையங்கள் மேம்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்படும்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐஐ) சமரசத் தீர்வு மையங்களுக்கு நிதி உதவி அளிக்கத் தயாராக உள்ளது’ என்றார் சின்ஹா.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி. ஷா பேசும்போது, “சமீபத்தில் ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் வழக்கு ஒன்றை சென்னையிலுள்ள சமரசத் தீர்வு மையம் தீர்த்து வைத்தது. நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் பிடிக்கும் இந்த வழக்கு வெறும் 5 மாதங்களில் தீர்க்கப்பட்டது. சமரசத் தீர்வு மையங்களில் மத்தியஸ்தராக உள்ளவர்களுக்கு சம்பளம் அளிக்கும் வகையில் இந்த வழக்குகளுக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும்’ என்றார்.
தொடர்பான இந்தியா டுடே பதிவு:
Language of Lawyers – Tamil Nadu Courts Official Talk « Snap Judgment
————————————————————————-
நீதிமன்றங்கள் ரூ.440 கோடியில் கணினி மயமாக்கம்: மத்திய அமைச்சர்
கொடைக்கானல், ஜூலை 12: இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் ரூ. 440 கோடி செலவில் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன என, மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் க. வேங்கடபதி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு புதன்கிழமை மாலை வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் ரூ. 440 கோடி செலவில், கணினிமயமாக்கப்பட்டு வருவதால், நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவில் முடிவடைய வாய்ப்புகள் உள்ளன. இதற்கு வழக்கறிஞர்கள் உதவ வேண்டும்.
தற்போது மாலைநேர நீதிமன்றங்கள் மூலம் வழக்கறிஞர்களுக்கு பல பிரச்னைகள் இருந்துவருவதாகத் தெரிகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் தங்களது பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அவை வசதியாக உள்ளது.
தற்போது வழக்கறிஞர்களுக்கும், போலீஸôருக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்களிடையே சுமுக உறவு இருந்தால் பிரச்னை வர வாய்ப்பில்லை.
பல மாநிலங்களில் நீதிமன்றங்கள் குறைவாக உள்ளதாக புகார்கள் வருகின்றன. இப் பிரச்னைகள் இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் நீதிமன்றங்கள் கட்டப்பட்டு, பின் அதற்குரிய தொகையை மத்திய அரசிடம் பெற்றுக் கொள்ளலாம்.
தார்வாடா, குல்பர்க் ஆகிய இடங்களில் தலா ரூ. 70 கோடி செலவில், உயர் நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டு வருகிறது. இப் பணிகள் விரைவில் முடியும். இதனால் அப் பகுதிகளில் உள்ள பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்கும்.