உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் கே.ஜி. பாலகிருஷ்ணன்
புது தில்லி, ஜன. 15: உச்ச நீதிமன்றத்தின் 37-வது தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் (61) பதவியேற்றார்.
குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவருக்குப் பதவிப் பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணம் செய்துவைத்தார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்கும் முதல் தலித் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2010 மே 12-ம் தேதி வரை இப்பதவி வகிப்பார். சமீபத்திய ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பதவியில் இருக்கப் போவது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளத்தில் பிறந்து, சட்டம் பயின்று வழக்கறிஞராகத் தொழில் தொடங்கி பிறகு படிப்படியாக உயர்ந்து மாவட்ட முன்சீப், உயர் நீதிமன்ற நீதிபதி, தமிழ்நாடு, குஜராத் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியானவர் பாலகிருஷ்ணன். நண்பர்கள் இவரை பாலா என்றே செல்லமாக அழைப்பர்.
பதவியேற்பு விழாவைக் காண அவருடைய தாயார் கே.எம். சாரதா சக்கர நாற்காலியில் வந்திருந்தார். பாலகிருஷ்ணனின் மனைவி நிர்மலாவும் உடன் இருந்தார்.
குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், ஏ.கே. அந்தோனி, லாலு பிரசாத், ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ், சுசீல்குமார் ஷிண்டே, ராம்விலாஸ் பாஸ்வான், மீரா குமார், கபில் சிபல், ஓய்வுபெறும் கே.என். சபர்வால் மற்றும் ஏற்கெனவே ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என். சிங், ஏ.எம். அகமதி, ஏ.எஸ். ஆனந்த், வி.என். கரே, ஆர்.சி. லஹோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாழ்க்கைக் குறிப்பு: கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தின் தாலயோலபரம்பு கிராமத்தில் 1945 மே 12-ம் தேதி பிறந்தார். எர்ணாகுளம் மகாராஜா சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். கொச்சியில் 1968 மார்ச் 16-ம் தேதி வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு பணியைத் தொடங்கினார்.
1973 ஜனவரி 10-ல் கேரள நீதித்துறையில் முன்சீஃபாக நியமிக்கப்பட்டார். 1982 ஜூலை 23-ல் உதவி செஷன்ஸ் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். பிறகு கேரள உயர் நீதிமன்றத்தின் துணை பதிவாளராகப் பணியாற்றினார். 1985 செப்டம்பர் 26-ல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1986 ஜூலை 11-ல் நிரந்தரமாக்கப்பட்டார்.
குஜராத் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1998 ஜூலை 16-ல் நியமிக்கப்பட்டார்.
பிறகு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1999 செப்டம்பர் 9-ல் நியமிக்கப்பட்டார்.
நீதித்துறை- நாடாளுமன்றம் இடையே நெருங்கிய உறவு ஆபத்தானது: ஓய்வுபெறும் தலைமை நீதிபதி சபர்வால் கருத்து
புதுதில்லி, ஜன. 14: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் நீதித்துறைக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். நீதிமன்றங்கள் சுதந்திரமாகத் தீர்ப்பு வழங்குவதைப் பாதிக்கும் என்று கருத்துத் தெரிவித்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்கே. சபர்வால்.
சனிக்கிழமையுடன் பதவி ஓய்வு பெறும் நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் சபர்வால். நீதித்துறைக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். விவரம்:
தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், பல பிரச்சினைகளைச் சந்தித்து தீர்வு கண்டிருக்கிறேன். திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன்.
நீதி வழங்குவதில் காலதாமதம் இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. அதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். கீழ் நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் பத்து ஆண்டுகள் கூட தேங்கிக் கிடக்கின்றன. இருபது ஆண்டுகளைக் கடந்து, நிலுவையில் உள்ள வழக்குகளும் இருக்கின்றன. அதனால், நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோருக்கு எதிராக உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்குக் கூட கடிதம் எழுதியிருக்கிறேன்.
பிறழ் சாட்சிகளால் வழக்குகள் மேலும் காலதாமதமடைவதைத் தடுக்கும் வகையில், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தங்களது முந்தைய நிலையிலிருந்து மாறும் சாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
வாக்குமூலங்களை ஒளி, ஒலிப்பதிவு செய்ய கூடுதல் மாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட வேண்டும். நீதிமன்றங்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகளைச் செய்துதர வேண்டும்.
நீதித்துறைக்கு நிதி சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான், நீதித்துறை முழுத்திறமையுடன் செயல்பட முடியும். வேறு துறைகளில் ஒதுக்கீட்டைக் குறைத்துக் கொண்டு, நீதித்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள கே.ஜி. பாலகிருஷ்ணன், மிகவும் திறமையான நீதிபதி. ஏற்கெனவே துவக்கப்பட்ட திட்டங்களை அவர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.
நீதித்துறையில் கறுப்பு ஆடுகள்: நீதித்துறையில் ஊழல் இன்னொரு கவலை தரக்கூடிய விஷயம். எல்லோர் மீதும் களங்கம் இல்லாவிட்டாலும், ஒரு சில கறுப்பு ஆடுகளும் உள்ளன. அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
நீதித்துறைக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதாகக் கருத்து நிலவுகிறது. ஒவ்வொரு துறையும் தங்கள் அதிகார வரம்புக்கு உள்பட்டு பணியாற்றினால் எந்த மோதலும் வர வாய்ப்பில்லை. தற்போதைய நிலையில் எந்த உரசலும் இருப்பதாக நான் கருதவில்லை.
நீதிபதிகள் நியமனத்தில் தற்போது வெளிப்படையான அணுகுமுறை உள்ளது.
ஊடகங்கள், ஊழலை அம்பலப்படுத்துவதில் தவறில்லை. அதே நேரத்தில், அது நீதிபதிகளின் தீர்ப்பைப் பாதிக்கும் வகையில் இருந்தால், அதைவிட மோசமானது ஏதும் இருக்க முடியாது.
எந்த ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் சட்ட உதவி மறுக்கப்படக்கூடாது. வழக்கறிஞர்கள் தனிப்பட்ட கருத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல், யாரும் சட்ட உதவி கிடைக்காமல் தனிமைப்படுத்தக்கூடாது என்ற உணர்வுடன் தொழிலை மட்டும் கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் சபர்வால்.