எய்ட்ஸ், நீரிழிவு- கூடுதல் தண்டனை?
சிறைக்கூடங்களில் பெண் கைதிகளின் நிலைமை, அவர்களுக்கு அளிக்கப்படும் உணவுகள் யாவும் அதிகாரிகள் சொல்லிக்கொள்வதைப் போல இல்லை என்கிறது மனித உரிமை ஆர்வலர் சுதா ராமலிங்கம் அளித்துள்ள அறிக்கை.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.பி.ஷா, கே.சந்துரு ஆகியோரது உத்தரவின்பேரில், தமிழகச் சிறைகளில் ஆய்வு செய்தபின் இந்த அறிக்கையை அவர் தாக்கல் செய்துள்ளார்.
சிறைக் கைதிகளைப் பார்க்கவும், உறவினர்கள் அவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கவும் கையூட்டுத் தொகை அளிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண ஏழைக் கைதிகள் படும் மனஉளைச்சலுடன் இத்தகைய ஊழலும் சேர்ந்து அவர்களது குடும்பத்தாரை மேலும் கவலையில் ஆழ்த்தும் சூழலை அந்த அறிக்கை மூலம் உணர முடிகிறது.
கைதி வசதிகள் படைத்தவராகவோ அல்லது செல்வாக்கு பெற்றவராகவோ இருந்தால் அவரால் எதையும்- விரும்புகிற உணவு, அறை வசதிகள், செல்போன், மருத்துவம், மருந்துகள், மது வகைகள்- பெற முடியும் என்பதை சிறைக்கூடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
ஒருவர் சிறைக்குள் இருக்கும்போதும் வெளியுலகில் அவருக்கு ஆதரவு, செல்வாக்கு இருக்கும் என்றால்தான் சிறைக்குள் அவர் மனிதனாக மதிக்கப்படுகிறார் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
இத்தகைய முறைகேடுகளைவிட மனவருத்தம் தருகிற இரு விஷயங்கள் சிறைக்கூடங்களில் கவனிக்கப்படாமல் உள்ளன.
அவை: எய்ட்ஸ், நீரிழிவு நோய்.
சிறைக்கூடங்களில் கைதிகளிடம் எய்ட்ஸ் பாதிப்பு இருக்கிறது என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆய்வுகள் சொல்கின்றன. சிறையில் ஓரினச் சேர்க்கை பரவலாக இருப்பதால் அங்கு எய்ட்ஸ் வேகமாகப் பரவுகிறது என்பதைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தெளிவாகச் சொல்லியும்கூட, சிறைக்கூடங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
எய்ட்ஸ் நோய் உள்ள கைதிகளைத் தனியாகப் பிரிக்க வேண்டிய அவசியம் சிறைக்கூடத்திற்கு இருக்கிறது. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.
இன்றைய நாளில், நீரிழிவு நோய் என்பது சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இருக்கிறது. இதில் கைதிகள் மட்டும் விதிவிலக்கு அல்லர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.
நீரிழிவு நோயாளிக்கு முதன்மையான மருந்து உணவுக் கட்டுப்பாடுதான். ஆனால், சிறைக்கூடங்களில் நீரிழிவு நோயாளிக்கென தனி உணவுகள் கிடையாது. இதனால் பல நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். சில நேரங்களில் இறந்தும்போகிறார்கள்.
சிறைக்கூட பிரச்சினைகளைவிட மோசமானது எய்ட்ஸ் மற்றும் நீரிழிவு நோய். தற்போது சிறையில் உள்ளவர்களில் எத்தனை பேர் எய்ட்ஸ் நோயாளிகள், எத்தனை பேர் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் என்பதை சிறைக்கூடங்கள் வெளிப்படையாக பரிசோதனைகள் நடத்தி அறிவிப்பதன் மூலம்தான் இக்குறைகளைப் போக்க முடியுமே தவிர, இதை மூடி மறைப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது.
சிறைக்குச் சென்ற ஒருவர் விடுதலையாகும்போது திருந்தி வருவார் என்ற நம்பிக்கையைவிட நோய்களுடன் வருவார் என்ற பீதி அவர்களது உறவினர்களிடத்தில் எத்தகைய பாதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் ஏற்படுத்தும் என்று சிந்தித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.