ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூட்டு வலி குணமாக…
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
வயது 56. தொழுகையின்போது தரையில் தலை வைத்து எழுந்திருக்கும் போது, இருகால் முட்டியில் சத்தம் வருகிறது. வலியும் இருக்கிறது. குளிர் நாட்களில் மூட்டுக்கு மூட்டு வலி உள்ளது. தொண்டை கரகரப்புக்கு மருந்து சாப்பிடாவிட்டால் இருமல், தும்மல், மூச்சிரைப்பு ஏற்படுகிறது. இவை நீங்க மருந்து கூறவும்.
மூட்டுக்கு மூட்டு வலி வருவது இன்று பெருமளவில் காணப்படுவதற்கான காரணத்தை ஆயுர்வேதம் கீழ்க்காணும் வகையில் கூறுகிறது.
உப்பையும் புளியையும் காரமான சுவையையும் உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கும், சூட்டைக் கிளப்பும் உணவுப் பண்டங்களுடன் எண்ணெய்யைக் கலந்து அஜீரண நிலையில் சாப்பிடுவது, அதாவது மசாலா பூரி, பேல் பூரி, சமோஸô போன்றவை, குடலில் பிசுபிசுப்பை ஏற்படுத்தும் பிரட், சாஸ் வகைகள், நீர்ப்பாங்கான நிலைகளில் வாழும் உயிரினங்களை மாமிச உணவாகச் சாப்பிடுதல், புண்ணாக்கு, பச்சை முள்ளங்கி, கொள்ளு, உளுந்து, அவரைக்காய், தயிர், புளித்த மோர் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிடுதல், கடுங்கோபத்துடன் உள்ள மனநிலையில் உணவைச் சாப்பிடுதல், சாப்பிட்ட பிறகு பகலில் படுத்து உறங்குதல், இரவில் கண்விழித்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ளுதல் போன்றவை நம் உடலில் ரத்தத்தை கெடுக்கும். அதன்பிறகு செய்யப்படும் சைக்கிள் சவாரி, பஸ்ஸில் நின்றுகொண்டு செய்யும் பயணம் ஆகியவற்றால் ஏற்படும் வாத தோஷத்தின் சீற்றம், கெட்டுள்ள ரத்தத்துடன் கலந்து கால்பாதத்தின் பூட்டுகளில் தஞ்சம் அடைந்து பூட்டுகளில் கடும் வலியை ஏற்படுத்துகின்றன.
சூடு ஆறிப்போன பருப்பு வடை, பஜ்ஜியை சாப்பிட்டு, அதன்மேல் சூடான டீ குடித்து, சிகரெட் ஊதுபவர்கள் இன்று அதிகமாக டீ கடைகளில் காணப்படுகின்றனர். இவர்களுக்கு விரைவில் ரத்தம் கேடடைந்து மூட்டு வலி வர அதிகம் வாய்ப்பிருக்கிறது.
பூட்டுகளின் உள்ளே அமைந்துள்ள சவ்வுப் பகுதியும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயாமலிருக்க அவற்றின் நடுவே உள்ள எண்ணெய்ப் பசையும் தங்கள் விஷயத்தில் வரண்டுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு ஆகும் பட்சத்தில் எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு, அவை ஒன்றோடு ஒன்று உரசும் தருவாயில் வலியை ஏற்படுத்துகின்றன. பூட்டுகளின் அசைவுகள் எளிதாக இருக்க அதனைச் சுற்றியுள்ள தசை நார்கள் உதவி செய்கின்றன. குளிர்நாட்களில் தசை நார்கள் சற்றே இறுக்கம் கொள்வதால் பூட்டுகளின் அசைவுகள் எளிதாக இல்லாமல் மேலும் வலியை அதிகப்படுத்துகின்றன. நம் உடல் பாரத்தை தாங்குவதற்கான வேலையை கால் முட்டிகளும், கணுக்கால் பூட்டுகளும் முக்கியமாகச் செய்வதால் அவைகளை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய உடல் பகுதிகளாகும்.
உங்களுக்கு தொண்டை கரகரப்புக்கு மருந்து சாப்பிட வேண்டிய நிர்பந்தமும் உள்ளது. பூட்டுகளில் ஏற்பட்டுள்ள வலியும் போக வேண்டும். வாத-கப தோஷங்களின் சீற்றத்தை அடக்கி அவைகளை சம நிலைக்குக் கொண்டு வரும் மருந்துகளால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், ரத்தத்தில் உள்ள கேட்டையும் அகற்ற வேண்டும். அவ்வகையில் ஆயுர்வேத கஷாயமாகிய மஹாமஞ்சிஷ்டாதி சாப்பிட நல்லது. 15 மிலி கஷாயத்தில், 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். குறைந்தது 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை மருந்தைச் சாப்பிடவேண்டும். முதல் பாராவில் குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்கவேண்டும்.
குளிர் நாட்களில் வலி கடுமையாக இருந்தால் முருங்கை இலை, எருக்கு இலை, புளி இலை, வேப்பிலை, ஆமணக்கு இலை, நொச்சி இலை, ஊமத்தை இலை, ஆமணக்கு இலைகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டுக் காய்ச்சிய வென்னீர் ஒத்தடம் கொடுக்க நல்லது. நொச்சி இலை, ஊமத்தை இலை, ஆமணக்கு இலை இம்மூன்றையும் நன்கு சிதைத்து வேப்பெண்ணெய்யுடன் விட்டுப் பிசிறி அடுப்பின் மேல் இரும்பு வாணலியிலிட்டு சிறிது வேகும்படி பிரட்டி, இளஞ்சூட்டுடனிருக்கும் போது அப்படியே வலியுள்ள பூட்டுகளில் வைத்துக் கட்ட வலி குறையும். வீக்கம் இருந்தால் அதுவும் வாடிவிடும்.
முட்டைக் கோஸ் இலை இலையாகப் பிரியக் கூடியது. ஒரு இலையை லேசாக தோசைக் கல்லில் சூடாக்கி முட்டியில் வலி உள்ள பகுதியில் போட்டு, 15, 20 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடவும். இது நல்ல வலி நிவாரணியாகும். பக்கவிளைவில்லாத எளிய சிகிச்சை முறையாகும். காலை இரவு உணவிற்கு முன்பாக இதுபோல செய்வது நலம்.
நீங்கள் உணவில் பருப்பு வகைகளைக் குறைக்கவும். குளிர்ந்த நீரைக் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்த வேண்டாம். வென்னீர்தான் நல்லது. பகலில் படுத்து உறங்கக் கூடாது. தினமும் சிறிது விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் சமமாகக் கலந்து இளஞ்சூடாக மூட்டுகளில் தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகுக் குளித்து வர, முட்டிகளில் சத்தம் வருவது நிற்பதோடு, வலியும் நன்றாகக் குறைந்து விடும்.