வனச்சட்டம்-ஒரு வரலாற்றுத் திருப்புமுனை
பெ. சண்முகம்
நமது நாட்டில் முதன்முறையாக, ஆதிவாசிகளுக்கும், வனத்தைச் சார்ந்து வாழும் மற்றவர்களுக்கும், மிக மிகச் சாதகமான வரலாற்றில் முத்திரை பதிக்கத்தக்க சட்டம் 2006 டிசம்பர் 15ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம், மீண்டும் ஓர் விடுதலை பெருமகிழ்ச்சியை பழங்குடி மக்கள் பெற்றுள்ளனர். வரலாற்றில் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்தச் சட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும் உடையையும் தவிர தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளிலிருந்தே பெற்றனர். இது 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை. காடுகள் முழுவதும் பழங்குடி சமூகத்திற்குச் சொந்தமாக இருந்தது. தனி நபர்களுக்கு உடமை என்றில்லாவிட்டாலும் சுதந்திரமாகப் பயன்படுத்தி வந்தனர்.
1805ல் பிரிட்டிஷாரின் கண் வனத்தின் மீது பட்டது. 1846ல் “முதல் வனச்சட்டம்’ கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷ் அரசு காட்டை வியாபார ரீதியாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.
சென்னை ராஜதானியில் 1856ல் வன இலாகா என்ற துறை அமைக்கப்பட்டது. இத்துறை மூலம் 1865ல் முதல் வன ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து வனப் பகுதிகளும் வனப்பாதுகாப்பு என்ற பெயரில் ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால் ஆதிவாசிகள் காடுகளில் சுதந்திரமாக உலவத் தடை கொண்டு வரப்பட்டது. இத் தடை பழங்குடி மக்களின் வாழ்வையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது.
பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள் ஏராளமான காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். இத்தகைய தோட்டங்களில் அடிமைகளாகவும், பின்னர் கூலிக்காரர்களாகவும் ஆதிவாசிகள் ஆக்கப்பட்டனர்.
1882ம் ஆண்டு மதறாஸ் வன ஆணையின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அரசு அறிவித்தது. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அனுமதி பெற்றே மக்கள் பயன்படுத்த வேண்டும்.
நாடு விடுதலை பெற்ற பிறகு 1952ல் நேருவின் பழங்குடிகள் குறித்த பஞ்சசீலக் கொள்கை இந்திய அரசு பழங்குடிகளின்பால் எத்தகைய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கப் போகிறது என்பதை வெளியிட்டது.
அவை, பழங்குடியினர் தங்களது சொந்தப் புத்திகூர்மையைப் பயன்படுத்தி மேம்பாட்டை அடைவதற்கு அனுமதிக்க வேண்டும். நிலம் மற்றும் வனத்தில் பழங்குடியினருக்குரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். பழங்குடியினர் வகுப்பின் சமூக மற்றும் கலாசார அமைப்புகளுக்குப் பாதகமின்றி அவர்களுக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான குறியீடு அவர்களுடைய வாழ்க்கைத் தரமாகத்தான் இருக்க வேண்டுமேயொழிய செலவிடப்பட்ட தொகையாக இருக்கக் கூடாது.
பழங்குடி மக்களின் பிரச்சினைகளைப் பற்றி ஓரளவு அறிந்தவர்களும் இதர அதிகார வர்க்கத்தினரும் மேற்குறிப்பிட்ட நேருவின் கொள்கைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதை அறிய முடியும்.
வனத்திலிருந்து மக்களை மேலும் மேலும் அந்நியப்படுத்தும் விதத்திலேயே நமது ஆட்சியாளர்களும் சட்டங்களை இயற்றினர். 1927ம் ஆண்டு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட வனச்சட்டத்தை வைத்துக் கொண்டே 1972ம் ஆண்டு கானுயிர் பாதுகாப்புச் சட்டம், 1979ம் ஆண்டு வன (திருத்தச்) சட்டம், வனப்பாதுகாப்புச் சட்டம் 1980, வனப்பாதுகாப்பு (திருத்த) சட்டம் 1988, போன்ற சட்டங்கள் மூலம் மக்களை வனத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தன.
வனத்தில் காலங்காலமாக வாழ்ந்து வந்த மக்களை 1988 வனப்பாதுகாப்பு(திருத்த) சட்டம் “”ஆக்கிரமிப்பாளர்கள்” என முத்திரை குத்தியது. இதனால் அரசுக்கும், மக்களுக்குமான முரண்பாடுகளும், மோதல்களும் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.
எனவேதான், இந்த மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து அம்மக்களை அமைதியாக வாழவிட வனச்சட்டத்தை மாற்றியமைப்பது அவசியம் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது. வனத்தின் மீதான அம்மக்களின் பாரம்பரிய உரிமைகள் சட்ட ரீதியான உரிமைகளாக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பழங்குடி மக்களின் தலையில் பேரிடியாக இறங்கியது.
நமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டப்படி, தனி நபரின் பெயரில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிலமும் அரசுக்குச் சொந்தமாகும். இதைப் பயன்படுத்தித்தான் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி சட்டம் என்னும் ஆயுதத்தின் மூலம் அரசும், அதிகாரிகளும் பழங்குடி மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெகு சுலபமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
சட்டம் – விதி என்ற அடிப்படையை மட்டும் கணக்கில்கொண்டு பிரச்சினைகள் அணுகப்பட்டு வந்ததற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே சாட்சி. அதாவது, “”30-9-2002க்குள் வன நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது”. இந்தத் தீர்ப்பு. இது பழங்குடி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இடதுசாரிக் கட்சிகளின் வற்புறுத்தலால் காடுகளிலிருந்து மக்களை வெளியேற்றும் உத்தரவு 2004 ஜூலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
பழங்குடி மக்களின் (காடுகள் மீதான உரிமைகள் பாதுகாப்பு) மசோதா மத்திய அரசால் 2005 டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தச் சட்டம் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும்) சட்டம் 2006 என அழைக்கப்படும். இந்தச் சட்டத்தில் உள்ள சாதகமான அம்சங்கள் பின்வருமாறு:
2005 டிசம்பர் 13ம் தேதிக்கு முன்பாக காடுகளில் வசிக்கும், ஆக்கிரமித்து விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு இச்சட்டம் பொருந்தும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஏக்கருக்கும் மிகாத அளவு நிலம் வழங்கப்படும். இந்த நிலத்தை பரம்பரையாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர விற்க அனுமதி கிடையாது. இந்த நிலம் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் கூட்டாகவே பதிவு செய்யப்படும். பழங்குடிகள் அல்லாத பரம்பரையாக வனத்தைச் சார்ந்து வாழும் மற்றவர்கள் மூன்று தலைமுறைகளாக காடுகளில் தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும்.
அநேகமாக, வேட்டையாடும் உரிமையைத் தவிர பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் இச்சட்டத்தின் மூலம் மீட்கப்பட்டுள்ளன. வனவிலங்கு சரணாலயங்கள், தேசியப் பூங்காக்களில் வசிக்கும் மக்களைப் பொருத்தவரை அவர்களின் ஒப்புதலுடன் மறுவாழ்வுக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுவரை அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.
எனவே, இந்தச் சட்டம் பழங்குடி மக்களின் வாழ்வில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை என்றே சொல்ல வேண்டும். குடியரசுத் தலைவரால் 2007 ஜனவரி 29ம் தேதி இச்சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பிப்ரவரி 13ம் தேதி இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டியது அரசு மற்றும் அம் மக்களிடையே பணியாற்றும் அமைப்புகளின் உடனடிக் கடமை.
எல்லாவற்றுக்கும் மேலாக, பழங்குடி மக்களின் ஒற்றுமையும், அவர்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலும் தான் இச்சட்டத்தை அமல்படுத்தச் செய்வதில் முக்கியப் பங்காற்ற வேண்டியிருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
(கட்டுரையாளர்: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் – மாநிலக்குழு பொதுச் செயலர்).