“வீரமணி அவர்களே, இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று கருதுகிறீர்கள்?”
கோடை பண்பலை வானொலி நிலையத்தார் கேள்வி
தமிழர் தலைவர் அளித்த பதில் என்ன?
வீரமணியார் அவர்கள் இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று கருதுகிறார் என்று கோடை பண்பலை வானொலி நிலையத்தார் எழுப்பிய கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பதில் அளித்தார்.
21-1-2008 அன்று கோடை பண்பலை வானொலிக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் அய்யாவால் பார்க்கமுடியவில்லையே
அய்யா அவர்கள் விரும்பிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற நிறைவேற்றத்தை அய்யா அவர்கள் பார்க்காமலே கண் மூடினார்.
அய்யா அவர்களுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். அன்னை மணியம்மையார் அவர்களுக்குப் பிறகு எங்களை மாதிரி இருக்கின்ற எளியோர்கள் இந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.
அய்ந்தாம் முறை முதல்வராக கலைஞர்
அய்ந்தாம் முறையாக கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். முதல் திட்டமாக கலைஞர் அவர்களுடைய அமைச்சரவையைக் கூட்டி முதல் திட்டமாக அதை அவர் நிறைவேற்றியிருப்பது பாருங்கள். அது மிகப்பெரிய சாதனை வெற்றி. இது ஏதோ நான்கு பேருக்கு அர்ச்சகர் வேலை என்பது அல்ல. அதில்தான் சமுத்துவ சமுதாயம் அமைந்திருக்கின்றது.
மீதி இடங்களில் எல்லாம் ஜாதியினுடைய சின்னங்கள் இருக்கும். இன்னும் ஜாதித் திருமணங்கள் அதன் அடை யாளங்கள் குறியீடுகள் எல்லாம் இருக்கும். ஆனால் அதன் ஆதிக்கம் பச்சையாக சட்டப்பூர்வமாக இருக்கிறது. இன்னமும் சமுதாய அனுபவப்பூர்வமாக இருக்கிறது.
ஜாதியை ஒழிக்க
இரட்டைக் குவளை முறைகள் இருக்கின்றன. அதை எதிர்த்துப் போராடக் கூடிய நிலைகள் எல்லாம் நமக்கு இருக்கிறது. ஆனால், அதிகாரப் பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட, அரசியல் சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்ட முறை அங்குதான் இருந்தது.
அதனால்தான் பெரியார் அவர்கள் முழு வெற்றி அடைய வேண்டும் என்றால் ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றும் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்கள் அன்றைக்கு வைத்த கோரிக்கையில், நாங்கள் வெற்றி அடைந்திருக்கின்றோம்.
பெரியார் அவர்களால் முதல் சட்டத் திருத்தம்
பெரியார் காலத்தில் பல போராட்டங்களில் அவர் வெற்றி அடைந்தார். மத்திய அரசாங்கத்தில் இட ஒதுக்கீடு பெரியார் காலத்தில் இல்லை. அது அவ்வளவு சீக்கிரமாக வருமா? என்று பலபேர் நினைத்தார்கள். அரசியல் சட்ட முதல் திருத்தமே தந்தை பெரியார் அவர்களால்தான் உருவாக்கப்பட்டது – 1951-ஆம் ஆண்டு. கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று சொன்னவுடனே தந்தை பெரியார் அவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினார். இன்றைக்கு அவருக்குப் பிறகு அவருடைய 76-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.
69 சதவிகித இட ஒதுக்கீடு
69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வந்தது. தந்தை பெரியார் அவர்கள் 50 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு அதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறினார். அவர் அரசியலை விட்டே வெளியேறி ஒரு சமுதாய இயக்கத்தை நிலை நிறுத்தி அவர் போராடியதே 50 சதவிகித இடஒதுக்கீட்டிற்காகத்தான். இன்றைக்கு 69 சதவிகித இடஒதுக்கீட்டை நீங்கள் பார்க்கலாம்.
50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு
50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு வரவேண்டும் என்று பெரியார் சொன்னார். இன்றைக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு பெரும்பாலும் நடைமுறைக்கு வந்தாகிவிட்டது. இன்னும் 50 சதவிகிதம் வரவில்லை. பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்கள் பெரிய அளவிற்கு உத்தியோகத்திற்குப் போக ஆரம்பித்து விட்டார்கள்.
எங்களுடைய காலத்தில் மத்திய அரசு மண்டல் குழு பரிந்துரையை எங்களது தொடர் பிரச்சாரத்தின் விளைவாக அமல்படுத்தியது. மத்திய அரசில் இட ஒதுக்கீடு பெற எங்களுடைய காலத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம்.
76-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் வெற்றி
அதேபோல அரசியல் சட்ட திருத்தத்தில் 76-ஆவது திருத்தத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம். அதேபோல பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் இன்றைக்கு வந்திருக் கிறது. தந்தை பெரியாருடைய கொள்கைத் திட்டங்கள் எல்லாம் ஒரு தொடர் வெற்றிகளாக இன்றைக்கு வந்து கொண்டி ருக்கின்றன.
பெரியாருடைய காலத்திலும் வெற்றிகள் வந்திருக்கின்றன. பெரியாருடைய தொண்டர்கள் காலத்திலும் வெற்றிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
பெரியார் – மணியம்மையார் காலத்தில் வெற்றி
கேள்வி: தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இவர்களுடைய காலத்தில் தொடர்ந்து வெற்றிகள் வந்திருக் கின்றன. இதற்கு அடுத்து தலைவராக அய்யா நீங்கள் வந்திருக்கின் றீர்கள்.
வீரமணியார் அவர்களுடைய பணி இனி எப்படி?
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இவர்களைத் தாண்டி வீரமணியார் அவர்கள் என்ன செய்யலாம்? அவர்களுடைய பெயரும், புகழுக்கும் இன்னொரு மகுடம் சூட்டுவது போல் அல்லது மகுடத்தில் ஒளி முத்துக்களை, வைரங்களை வைப்பதுபோல வீரமணியார் அவர்கள் தனித்து நின்று இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று நினைக்கின்றார்?
தமிழர் தலைவர்: வீரமணி தனித்துச் சாதித்தார் என்ற சரித்திரம் வரவேண்டும் என்பது வீரமணிக்கு முக்கியமல்ல. பெரியாருடைய பணி முற்றுப்பெறவில்லை. அந்தப் பணி பெரியாரோடு முடிந்துவிட வில்லை. பெரியார் என்பது ஒரு சகாப்தம். ஒரு காலகட்டம். ஒரு திருப்பம் என்பதை ஒவ்வொரு நேரத்திலும் வருகிற தலைமுறைக்கு நினைவூட்டி, அவ்வப்பொழுது தேவைப்படுகிற செய்திகளை, செயல்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற பணியை நாங்கள் செய்துகொண்டிருக் கின்றோம். அவர்களுடைய கொள்கைகள் பரவுவதற்கு என் னென்ன திட்டங்களைச் செய்யவேண்டுமோ? அதைச் செய்கி றோம்.
தனி மனிதர் சாதித்தார் என்று சொல்லமாட்டேன்
அதில் ஒன்றுதான் நான் சற்று நேரத்திற்கு முன்னால் சொன்னதுபோல் – பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வரையிலே, கல்விக் கூடங்களாகவும், கருத்து அறிவிப்புக்குரிய நிகழ்வுகளாகவும், ஏடுகளாகவும் பிரச்சாரம், செயல்பாடுகள் நடந்துகொண்டு வருகின்றன.
பெரியாருக்குப் பின் இத்தகைய செயல்பாடுகளை தனி மனிதர் ஒருவர் சாதித்தார் என்று நான் சொல்லமாட்டேன். பெரியாருடைய அந்தத் தாக்கம், பெரியாருடைய கொள்கைகள், அதனுடைய விளைவுகள்தான் இப்பொழுது வந்திருக்கின்றன.
இப்பொழுது மார்க்சியம் என்று சொன்னால் மார்க்சிய சிந்தனைக் கருத்துகள் பல ரூபங்களில் பல நாடுகளில் பல பேரால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
`பெரியாரியம் மனித நேயம்
`பெரியாரியம் என்ற கொள்கை இருக்கிறது பாருங்கள், அது மானிடப்பற்று, மனித நேயம், மூடநம்பிக்கைக்கு எதிரானது, பேதத்திற்கு எதிரான.து, பெண்ணடிமைக்கு எதிரானது. இந்தக் கருத்துக்களை எல்லாம் எங்கெங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ, அங்கங்கு சேர்க்கப்படக்கூடிய தூதுவர்களாக தொழிலாளர்களாக நாங்கள் எங்களை ஆக்கிக் கொள்வோம்.
அதுதான் எங்களுடைய குறிக்கோள்.
கோடை பண்பலை நேயர்கள் சார்பில்
வானொலி: உங்களுடைய மனித தூதுப்பணி சிறக்க கோடை பண்பலை நேயர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்..
தமிழர் தலைவர்: ரொம்ப மகிழ்ச்சி. நல்ல ஆழமான கேள்விகளைக் கேட்டீர்கள். சிறப்பான அளவுக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தீர்கள். அதற்காக உங்களுக்கு உங்களுடைய பணிகளுக்கு நன்றி, எங்களுடைய நல் வாழ்த்துகள்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.