புதிய தொழில்கொள்கை வெளியீடு – 4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: கருணாநிதி
சென்னை, நவ. 5: நான்கு ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைக்க வகை செய்யும் புதிய தொழில்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய தொழில்கொள்கையை முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டார்.
உற்பத்தித் துறையில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், தமிழகத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சர்வதேச சந்தையில் தரத்திலும் விலையிலும் போட்டியிடக் கூடிய அளவுக்கு மேம்படுத்தவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் தொழில்துறையில் வளர்ச்சியடைய இப்புதிய தொழில்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் ஆலோசனைக்குப் பிறகு இப்புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டிற்குள் 20 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், உற்பத்தித் துறையின் பங்களிப்பை 21 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு தொழில்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களைக் கவரும் வகையில், முதன்மை முதலீட்டு மையமாக தமிழகத்தை உருவாக்குவதும், உலகளாவிய பொருள் வழங்கீட்டுத் தொடர்களுடன், உள்நாட்டு தொழில் பகுதிகளை ஒருங்கிணைக்க உதவுவதும் இதன் நோக்கமாகும்.
திறன் மிக்க தொழிலகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும், மனித வளத்தையும் அறிவாற்றல் முதலீட்டையும் உலக தரத்திற்கு மேம்படுத்துவதும் நோக்கமாகும்.
இந்த இலக்கை எட்டும் நோக்கில் சென்னைக்கு அப்பாலும் தொழிற்சாலைகள் உருவாவதற்கு ஏதுவாக பின்தங்கிய பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.
தொழில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதும், தனியார்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சிகளை ஏற்படுத்துவதும், உள்கட்டமைப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதும் பிரதான நோக்கமாகும்.
தொழிலக சிறப்புப் பகுதிகள் :
- சிப்காட் நிறுவனம்,
- தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அல்லது
- தனியார் மேம்பாட்டாளர்கள் அமைக்கும் தொழில் பூங்காக்களை சமமாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக
- சென்னை – மணலி – எண்ணூர் மற்றும்
- செங்கல்பட்டு – ஸ்ரீபெரும்புதூர் – ராணிப்பேட்டை பகுதிகள் தொழிலகச் சிறப்புப் பகுதிகளாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- அடுத்த கட்டமாக மதுரை,
- தூத்துக்குடி மற்றும்
- கோவை – சேலம் பகுதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளில் உள்ள அறிவியல் பூங்காக்களைப் போன்று நுண்ணிய உயர்தொழில்நுட்பப் பூங்காக்களை சிப்காட் மூலம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உயிரி அறிவியல் புதுமைத் திட்ட நிதி ஒன்றை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தினால் (டிட்கோ) மூலம் செயல்படுத்தவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் பயிற்சி பெற்ற பணியாளர்களின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மனித ஆற்றல் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில்பயிற்சி தர மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகள், தொழிற் பயிற்சி கல்வி நிறுவனங்கள் இடையே தொடர்புகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிஐஐசி) நிர்வகிக்கும் ஒரு மூல நிதியின் மூலம் தமிழ்நாடு தொழில்நுட்ப மற்றும் எரிசக்தி பயன்பாட்டுத் திறன்களை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத் திட்டத்துக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும்.
வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு கூடுதல் உதவிகள் அளிக்கப்படும்.
உடல் ஊனமுற்ற அதேசமயம் சிறப்பாகபணியாற்றும் திறன் பெற்றவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல
- வேளாண் தொழில்கள்,
- வேளாண் இயந்திரங்கள்,
- நுண்ணிய பாசனத்திற்கான வேளாண் சாதனங்கள் ஆகிய தொழிற்சாலைகளுக்கு சலுகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மின்னணு வன்பொருள்,
- ஜவுளி,
- தோல்,
- மோட்டார் வாகனம் போன்ற தொழில்களில் ஏற்றுமதி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இதில் அடங்கும்.
புதிய தொழிற்சாலைகளை மூன்று வகையாகப் பிரித்து அவற்றுக்கு தரச் சான்றை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைந்து அளிப்பதும் புதிய தொழில் கொள்கையின் பிரதான நோக்கம் என்றார் கருணாநிதி.
புதிய தொழில் கொள்கையின் பிரதிகளை தொழிலதிபர்களிடம் முதல்வர் அளித்தார்.
—————————————————————————————————————————————–
தமிழக புதிய தொழில் கொள்கையில் சலுகை மழை! * விவசாய தொழிலுக்கு அதிக முன்னுரிமை
சென்னை :வரும் 2011ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில்களுக்கு அனைத்து சலுகைகள் வழங்கவும் முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நலிவடைந்து வரும் விவசாய தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க விவசாயத்துக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளை கண்டறிவதற்குரிய வழிமுறைகளை நிர்ணயிக்க தொழில் துறைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவும், முதல்வர் கருணாநிதியை தலைவராகவும், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகவும் கொண்ட சிறப்புத் தொழில் முனைப்புக் குழுவும் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற் கூட்டமைப்புகள் மற்றும் வர்த்தக சபை ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, புதிய வரைவு தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது. அமைச்சரவைக் குழு விவாதித்து இறுதி செய்த, ஷபுதிய தொழில் கொள்கையை’ முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.
இந்த தொழில் கொள்கை, 2011ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் தயாரிப்புத் துறையின் தற்போதைய பங்களிப்பான 21 சதவீதத்தை 27 சதவீதமாக உயர்த்துதல், முதலீட்டாளர்களை கவரும் மையாக தமிழகத்தை உருவாக்குதல், திறமையான தொழிலகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், மனிதவளத்தையும் அறிவாற்றல் முதலீட்டையும் உலக தரத்துக்கு மேம்படுத்துதல் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டுள்ளது.விவசாயம் மற்றும் விவசாய விளை பொருட்கள் பதப்படுத்தும் தொழில்களுக்கு புதிய தொழில் கொள்கையில் அளிக்கப்பட்டுள்ள பல சலுகைகள் வருமாறு:
வேளாண் விளை பொருள் பதப்படுத்தும் தொழிலுக்கு தேவைப்படும் சட்ட அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் பெற்றுத் தந்து அவற்றுக்கு ஊக்கத் தொகை வழங்கும் அமைப்பாக வேளாண்மை விற்பனை மற்றும் வணிக இயக்ககம் செயல்படும்.
ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், அவர்களுக்கு உதவிகள் செய்யவும், ஒரு ஏற்றுமதி அபிவிருத்திப் பிரிவு அமைக்கப்படும்.
- வேளாண்மை விளை பொருள் பதப்படுத்தும் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த ஊக்க உதவிகள் அளிக்கப்படும்.
- இறைச்சி மற்றும் கடல் சார்ந்த உணவு (ராமநாதபுரம்),
- கோழியினப் பொருட்கள் (நாமக்கல்),
- மஞ்சள் (ஈரோடு),
- ஜவ்வரிசி (சேலம்),
- வாழைப்பழம் (திருச்சி),
- மாம்பழம் (கிருஷ்ணகிரி),
- முந்திரி (பண்ருட்டி),
- பனைப் பொருட்கள்,
- மருத்துவ மூலிகைச் செடிகள் மற்றும்
- கடல் சார்ந்த உணவு (தூத்துக்குடி),
- பால் பொருட்கள்,
- திராட்சை (தேனி) போன்றவற்றில் தொழில் பூங்காக்களிலும், சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் பதப்படுத்தும் தொழில் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.