Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Lawsuits’ Category

Press Freedom, Corruption of the Justice system, Media Exposure – Sting Operations

Posted by Snapjudge மேல் ஜூன் 7, 2007

“உண்மை’யைக் காட்டறீங்களா, கூடவே கூடாது!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

சில நாள்களுக்கு முன்பு “”பி.எம்.டபிள்யு.” வழக்கு என்ற கொலை வழக்கு தொடர்பாக, அரசுத்தரப்பு வழக்கறிஞரும், பிரதிவாதியின் தரப்பும் சந்தித்துப் பேசி வழக்கைச் சீர்குலைக்க நடத்திய பேரம் பற்றிய ரகசிய காட்சிகளை “”என்.டி.டி.வி.” படம் பிடித்து நேயர்களுக்கு நேரடியாகப் போட்டுக் காட்டியது.

பணம் கொடுத்தால் அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவரைத் தப்ப விடுவார் என்பதை அப்பட்டமாக சுட்டிக்காட்டும் காட்சி அது. அதே நாளில் பத்திரிகையில் மற்றொரு செய்தி கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அது, தனியார் தொலைக்காட்சிகளும், பண்பலை வானொலிகளும் கடைப்பிடிக்க வேண்டிய செய்தி ஒளி-ஒலிபரப்பு தொடர்பான நடத்தை நெறிகளைப் பற்றியது.

அந்த நடத்தை நெறிகள் என்னவென்ற விவரம் என்னிடம் கிடையாது; ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமானவற்றைப் படித்தபோது, நம்பமுடியாத, வியப்பை ஊட்டுகிற, அடக்குமுறையான கட்டுப்பாடுகள் பல இருப்பதை உணர முடிந்தது.

அதில் முதலாவது, “”நட்பு நாடுகளை விமர்சிக்கக்கூடாது” என்பது. பாகிஸ்தானைக்கூட இப்போது நட்பு நாடு என்றே வகைப்படுத்திவிட்டோம். தென்னாப்பிரிக்காவும் இஸ்ரேலும் நமக்கு வேண்டாத நாடுகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது. அப்படி என்றால், நாம் எந்த நாட்டையுமே விமர்சனம் செய்யக்கூடாது.

அதாவது, “”இராக்கை எத்தனை அடாவடியாக ஊடுருவினீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பாராட்ட வேண்டும்; எங்கள் நாட்டு என்ஜினீயர்களுக்கும் டாக்டர்களுக்கும் “”எச் 1 பி” விசா தர மறுக்கும் உங்களுடைய பண்பாடுதான் என்னே என்று வியக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டையும் நாம் விமர்சிக்கக் கூடாது; இதைவிட கேலிக்குரியவர்களாக நாம் ஆக முடியுமா?

நீதித்துறையின் நேர்மையைச் சந்தேகிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது என்று நடத்தை நெறி கூறுகிறது. 2006-வது ஆண்டில் இந்தியாவின் கீழ் நீதிமன்றங்களில் ரூ.2,630 கோடி லஞ்சமாகக் கைமாறியது என்று “”டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்” என்ற அமைப்பு வெளியிட்ட தகவலை பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலியோ தொலைக்காட்சியோ பயன்படுத்தக்கூடாது.

(இந்த ரூ.2,630 கோடி என்பதே குறைவு, உண்மையில் இதைப்போல பல மடங்கு லஞ்சமாகக் கைமாறுகிறது என்பதே என் கருத்து!)

வழக்குகளில் சாதகமான தீர்ப்புப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது, வழக்கு முடிய நீண்ட காலம் காத்திருக்க நேர்கிறது என்ற தகவல்களால் நீதித்துறையையே சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அம்சம் அதிகரித்து வருகிறது.

இதைப் பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலி, தொலைக்காட்சிகளில் வரக்கூடாது என்பது எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது. பத்திரிகைகளை ஒரு மாதிரியாகவும் வானொலி, தொலைக்காட்சிகளை வேறு மாதிரியாகவும் நடத்துவது அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு அளிக்கும் சுதந்திரத்துக்கே முரணாக அமைந்துவிடும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லவா என்று கேட்டால் சரி, “”இனி பத்திரிகைகளும் பிரசுரிக்கக்கூடாது என்று கூறி விடுகிறோம்” என்ற பதில் கிடைக்கலாம்.

எவருடைய அந்தரங்க விஷயங்களிலும் தலையிட்டு, அவதூறு கற்பிக்கக்கூடாது என்பது அடுத்த கட்டுப்பாடு. இதைக் கூற இந்த கட்டுப்பாடு அவசியமே இல்லை, இது ஏற்கெனவே சட்டமே கொடுத்துள்ள அதிகாரம். அவதூறாகப் பேசினாலோ எழுதினாலோ நடவடிக்கை எடுக்க சட்டம் இடம் தருகிறது. எது அந்தரங்க வாழ்க்கை, எது பொது வாழ்க்கை என்று பிரித்துப் பார்ப்பது எப்படி?

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்சம் வாங்குவதை படம் பிடித்தால், “”அவர் ஏதோ சொந்தச் செலவுக்காக முயற்சி எடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்” என்று கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டுமா?

அரசுத் தரப்பு வழக்கறிஞரும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் ரகசியமாகச் சந்தித்து, குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தப்பிக்கச் செய்ய ஏதாவது திட்டம் தீட்டினால், வழக்கறிஞர்களுக்கும் சாட்சிக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் அது என்று கண்ணை மூடிக்கொண்டு அப்பால் போய்விட வேண்டுமா? தனிப்பட்ட வாழ்க்கையையும் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளையும் பிரிக்கும் கோடு எது?

“”உள்ளதை உள்ளபடியே காட்டும் கேமரா” என்று தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வீதியிலும் பொது இடங்களிலும் அப்பாவிகள், தங்களை ஒரு கேமரா கண்காணிக்கிறது என்று தெரியாமல், பித்துக்குளித்தனமாக நடப்பதைப் படம் பிடித்து ஒளிபரப்புகின்றனரே அதுவல்லவோ, தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பவம்! அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக? லஞ்சம், ஊழல்களை யாரும் அம்பலப்படுத்திவிடாமல் தடுப்பதற்காகவா?

லஞ்சமும் ஊழலும்தான் அன்றாட வேலைகள் என்றாகிவிட்ட நாட்டில், இந்த நாட்டை ஆள்கிறவர்கள் எப்படிப்பட்ட சுயநலவாதிகள், மோசடிப் பேர்வழிகள் என்பதை மக்களுக்கு அவ்வப்போது நினைவூட்ட, ஊழலை அம்பலப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள்தான் உதவுகின்றன.

ஊழல்பேர்வழிகள் தயக்கமின்றிக் கொள்ளையடிக்கவா இந்த கட்டுப்பாடுகள்? அரசின் நடத்தை நெறிகளின் நோக்கமோ அல்லது விளைவோ இதுவாக இருந்தால் அது மிகவும் துயரகரமானது.

நடத்தை நெறியின் மற்றொரு அம்சம் சுவாரஸ்யமானது. தேசியத் தலைவர்கள் அல்லது மாநிலத் தலைவர்களின் உடலமைப்பு பற்றிய காட்சிகளை ஒளிபரப்புவதில் எச்சரிக்கை தேவை என்கிறது.

அதாவது இந்திரா காந்திக்கு முடி நரைத்துவிட்டதையோ, வாஜ்பாய் பேசும்போது திடீரென சில விநாடிகளுக்குத் தொடர்ந்து மெüனமாக இருப்பதையோ காட்டக்கூடாது!

இப்படிப்பட்ட தேசியத் தலைவர்களை இஷ்டப்படி கேலிச்சித்திரமாக வரைந்துதள்ளும் சுதந்திரம் பத்திரிகைகளுக்கு உண்டு, தொலைக்காட்சிகளுக்குக் கிடையாது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

தாமதப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்பது முதுமொழி. ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கு வாய்தா வாங்குவதே நமது நீதிமன்ற நடைமுறைகளின் தனிச்சிறப்பு. ஜெயலலிதா, லாலு பிரசாத் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருந்தாலும் அவர்கள் தலைவர்களாக நீடிக்கவும் ஆட்சி செய்யவும் சட்டபூர்வ தடை ஏதும் இல்லை.

இந்த வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்கும், அவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா அல்லது குற்றம் செய்தவர்களா என்பதைத் தெரிவிக்காமலே அவர்களைத் தொடர்ந்து ஆளவிடுவது சரியா? அவர்கள் நல்லவர்கள் என்றோ குற்றவாளிகள் என்றோ நான் கூறவில்லை; ஆனால், அப்படிப்பட்டவர்களின் உண்மையான நிலைமை என்ன என்பது மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் தெரிய வேண்டாமா?

அவதூறாகவோ, உள்நோக்கத்துடனோ பேசினால், எழுதினால் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்குத் தொடுக்க முன்வருவதில்லை. நீதிமன்ற நடைமுறையால் வழக்கு தாமதம் ஆவது முக்கிய காரணம்.

இந்நிலையில் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் இச்செய்திகள் இடம் பெறுவதைத் தடுப்பதென்பது, பொது மக்களின் கண்களுக்குத் தெரியாமலேயே பல முறைகேடுகள் நடந்து முடிக்கச் சாதகமாக போடும் புகைத் திரையாகவே மாறிவிடும். முறைகேடுகள் வெளியே தெரியக்கூடாது, அவற்றை எதிர்த்து யாரும் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பது அரசின் நோக்கமாக இருக்காது என்றே நம்புகிறேன்.

அரசு தனது புதிய நடத்தை நெறிகளை வானொலி, தொலைக்காட்சி நிர்வாகிகள் மீது திணிக்க முற்பட்டால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் அந்த நெருக்குதல்களை எதிர்க்க முடியாமல் பணிந்து போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும். வானொலி, தொலைக்காட்சி நடத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசின் தயவு அவர்களுக்குத் தேவை.

வானொலி, தொலைக்காட்சிக்கான புதிய கட்டுப்பாடுகள் என்பவை அரசுக்கும் தனியார் ஒளி, ஒலிபரப்புக்காரர்களுக்கும் இடையிலே மட்டும் உள்ள ஒரு விவகாரம் அல்லவே? இதில் மக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒலிபரப்பாவது அனைத்தும் மக்களுக்காகவே. மக்களின் நலன்தான் முக்கியமானது; நடத்தை நெறி என்ற பெயரில் தகவல் பெற மக்களுக்கு உள்ள உரிமையை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது.

ஜனநாயக நாட்டில் எந்தவொரு அமைப்பும் மக்களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல.

நாட்டின் முக்கிய நபர்கள் மீதும் அமைப்புகள் மீதும் தொலைக்காட்சி கேமராக்களின் வெளிச்சம் தடையின்றிப் பாயட்டும். அது நீதித்துறையாக இருந்தாலும், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்புகளாக இருந்தாலும், அரசின் பொது நிர்வாகமாக இருந்தாலும் -அது எதுவாக இருந்தாலும் மக்களின் பார்வைக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

Posted in abuse, Advocate, Attorney, Bribery, Bribes, Cartoons, Censor, Censure, Citizen, Collusion, Corruption, Courts, Defamation, Defame, Democracy, Ethical, ezine, FM, Freedom, Govt, HC, Independent, journalism, Journals, Judges, Justice, kickbacks, Law, Lawsuits, Leaders, Magazines, Mags, Media, Moral, MSM, NDTV, News, Newspaper, Order, Party, Police, Politics, Power, Preempt, Press, Prohibit, Radio, Republic, Research, SC, Shackles, Sting, Survey, Television, TI, Transparency, TV | Leave a Comment »

Ralph Nader – Profile & Biosketch: Raman Raja

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

நெட்டில் சுட்டதடா…கலக்கப் புறப்பட்ட கன்ஸ்யூமர் புயல்!

ராமன் ராஜா

உள்ளூர் செய்திகளில் டிராஃபிக் ராமசாமி என்று ஒரு பெயர் அடிக்கடி அடிபடுகிறதே, யார் இவர் என்று கவனித்தேன்; மிகப் பெரிய தலைகளுடன் மோதுவதையே முழு நேரத் தொழிலாக மேற்கொண்டு விட்ட ஒரு கெட்டித் தலை என்று தெரிகிறது. பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டித் தட்டி, பல பேருடைய தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் டிராஃபிக் ராமசாமிகள் உலகெங்கும் இருக்கிறார்கள். இதன் அமெரிக்கப் பதிப்புதான் ரால்ப் நாடர். (அமெரிக்காவில் ரால்ப் நோடர் என்றும் அழைப்பர்) கன்ஸ்யூமர் இயக்கத்தின் பிதாமகர். நாடருக்கு மெகா கம்பெனிகள் என்றாலே மகா அலர்ஜி. வால் மார்ட், மைக்ரோ சாஃப்டில் ஆரம்பித்து ஊரில் உள்ள அத்தனை பெரிய நிறுவனங்களுடனும் ஓயாத சண்டை!

1934-ல் பிறந்தவர் நாடர். லெபனானிலிருந்து அமெரிக்காவில் சென்று குடியேறிய குடும்பம். படித்தது வக்கீலுக்கு; ஆனால் உருப்படியாக ப்ராக்டீஸ் செய்வதை விட்டுவிட்டு, ஊர்ப் பிரச்சினைகளுக்காகப் பொது நல வழக்குத் தொடர்ந்து போராடுவதே முழு நேரத் தொழிலாக மேற்கொண்டு விட்டார். தன்னுடைய தாக்குதலுக்கு நாடர் முதலில் நாடியது கார் தயாரிக்கும் கம்பெனிகளை. அந்தக் காலத்து கார்களில் இருந்த சஸ்பென்ஷன் எனப்படும் முக்கியமான தொட்டில் அமைப்பு, எட்டணா கூடப் பெறாது. ஒரு மூலையில் வேகமாகத் திரும்பினால் கார் சட்டென்று பாலன்ஸ் இழந்து பல்டி அடித்து விடும். அதுதவிர ஒவ்வொரு காரிலும், ஒவ்வொரு மாடலிலும் வெவ்வேறு விதமான அமைப்புகளில் கியர் இருந்தது. சிலவற்றில் நியூட்ரல் கியர் முதலில் இருக்கும்; வேறு சில கார்களில் நடு மத்தியில் இருக்கும். பழக்கமில்லாத புதிய காரை ஓட்டுபவர்கள் திணறிப் போவார்கள். சிக்னலில் நின்றுவிட்டுக் கிளம்ப முற்படும்போது பழைய ஞாபகத்தில் முதல் கியரைப் போட்டால், ரிவர்ஸில் சீறிப் புறப்பட்டுப் பின்னால் வரும் வண்டியில் டமாலென்று இடிக்கும். கார் தயாரிப்பு கம்பெனிகள் லாபம் ஒன்றே குறியாக, மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையே இல்லாமல் இருக்கிறார்கள் என்று பொருமினார் நாடர். எல்லாத் தயாரிப்பாளர்களின் கார்களிலும் ஒரே மாதிரியான கியர் இருக்க வேண்டுமென்று வாதாடினார். கார் கம்பெனிகள் “பெப்பே’ என்றன.

அமெரிக்க நெடுஞ்சாலைகளில் சாதாரணமாகவே கார்கள் நூற்று நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அந்த வேகத்தில் ஒரு விபத்து என்றால் ஸ்டியரிங் வீலில் மோதி ஓட்டுபவரின் நெஞ்சு எலும்பு உடைந்துவிடும். இதயம் நேரடியாக அடி வாங்குவதால், ஆஸ்பத்திரி போகும் வரை ஆத்மா தாங்காது! இதைத் தடுக்க இப்போது எல்லாக் காரிலும் சீட் பெல்ட், ஸ்டியரிங்கின் நடுவே காற்று அடைத்த குஷன் பை என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் வந்துவிட்டன. சீட் பெல்ட் அணிவதால் மட்டுமே அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் பதினோராயிரம் பேர் உயிர் தப்பிப் பிழைக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் தேவை என்று நாடர் முதலில் போராடியபோது, “”இந்த மாதிரி அநாவசிய எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளுக்காக எங்கள் கார் தயாரிப்புச் செலவை ஏற்றிவிட முடியாது” என்று கார் கம்பெனிகளிடமிருந்து பயங்கர எதிர்ப்பு! நாடர் நேராக மக்களிடம் போய்விட்டார். அதிலும் குறிப்பாக அவருடைய அதிரடித் தாக்குதலுக்கு ஆளானது, புகழ் பெற்ற செவர்லே கார். கம்பெனிக்கு உள்ளிருந்தே ஒத்துழைத்த சிலரின் உதவியுடன் நிறைய டெக்னிக்கல் தகவல் திரட்டினார். அவற்றை வைத்து “எந்த வேகத்திலும் தொந்தரவு’ என்று ஒரு புத்தகம் எழுதினார். அதைப் படித்ததும் அதிர்ந்து போனார்கள் மக்கள். அரசாங்கம் என்ன செய்கிறது என்று அதட்ட ஆரம்பித்தார்கள். பொதுக் கருத்து பொங்கி எழுந்தவுடன் சர்க்கார் அவசர அவசரமாகச் சட்டம் போட்டு கார்களின் பாதுகாப்பை முறைப்படுத்தியது. கியர்கள், சஸ்பென்ஷன் என்று கார்களின் எல்லாப் பாகங்களும் திரும்ப வடிவமைக்கப்பட்டன. தனி மனிதரான நாடர் ஒருவரின் முயற்சியால்தான் இன்று அமெரிக்க சாலைகள் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றன.

ரால்ப் நாடர் டஜன் கணக்கான புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார். “உங்கள் டாக்டருடன் போராடுவது எப்படி?’ “விமானத்தில் போகிறீர்களா? ஜாக்கிரதை!’, “உங்கள் குழந்தைகளை மெகா கம்பெனிகள் மூளைச் சலவை செய்கிறார்கள்!’, “ஏமாந்து போகாமல் ஷாப்பிங் செய்வது எப்படி?’, “உங்கள் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியை ஓட ஓட விரட்டுங்கள்’ என்பவை அவருடைய பிரபலமான புத்தகங்களில் சில. இன்னும் அரசியல், தேர்தல் பற்றித் தெளிவாக நிறைய அலசியிருக்கிறார். அவருடைய வெப் சைட்டில் போய்ப் பார்த்தால், மனிதர் அமெரிக்காவில் முக்கால்வாசிப் பேரிடம் சண்டை போட்டு முடித்துவிட்டார் என்று தோன்றுகிறது.

ஓயாமல் தொல்லை கொடுக்கிறாரே என்று ஜெனரல் மோட்டார் போன்ற கார் தயாரிப்பு கம்பெனிகளுக்கெல்லாம் ஏகக் கடுப்பு. அதற்குள் நாடறிந்த மனிதராகிவிட்டிருந்த நாடரின் நல்ல பெயரை நாசம் செய்வது எப்படி என்று மில்லியன் டாலர் செலவில் தீவிரமாக யோசித்தார்கள். அவர் போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்து கண்காணிக்க ரகசிய ஏஜெண்டுகள் ராப்பகலாகச் சுற்றி அலைந்தார்கள். ஏதாவது தப்புப் பண்ண மாட்டாரா, கப்பென்று பிடித்துக் கொள்ளலாமே என்று நப்பாசை அவர்களுக்கு. ஒன்றும் சிக்காமல் போகவே ஈனச் சதிகளில் இறங்கினார்கள். விலை மாதர்களை ஏற்பாடு பண்ணி விசுவாமித்திரரின் தவத்தைக் கலைத்த மேனகை போல் அனுப்பி, ஆசாமி செக்ஸ் விவகாரங்களிலாவது சிக்குவாரா என்று பார்த்துவிட்டார்கள். (நாடர் கட்டைப் பிரம்மச்சாரி). வலிய வந்த பெண்ணைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுத் திருப்பி அனுப்பிவிட்டார் நாடர். பிறகு தனக்கு எதிராக நடக்கும் சதி வேலைகளைப் புரிந்துகொண்ட அவர், நேராகக் கோர்ட்டுக்குப் போய், தன்னுடைய பிரைவஸியைக் கெடுத்து நிழல் போலத் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள் என்று கேஸ் போட்டு நஷ்ட ஈடும் வாங்கிவிட்டார். ஜெனரல் மோட்டார், பப்ளிக்காக நாடரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு ரிவர்ஸ் கியரைப் போட்டுக் கொண்டு ஓட நேர்ந்தது. நஷ்ட ஈடாக வந்த பணத்தில் இளைஞர்களைத் திரட்டி ஒரு பறக்கும் படை அமைத்தார். எங்கெல்லாம் நுகர்வோர் உரிமைகள் பறி போகிறதோ, அங்கெல்லாம் இவர்கள் புகுந்து புறப்பட்டு விலாவரியாகத் தகவல் சேகரித்துக் கொண்டு வருவார்கள். உடனே கோர்ட்தான், கேஸ்தான், புத்தகம்தான், போராட்டம்தான்! நாடர் ஆரம்பித்த நுகர்வோர் இயக்கத்தைப் பற்றியே எவ்வளவோ எழுதலாம். அதுபற்றி மற்றொரு சமயம்.

இப்போது அமெரிக்க ஜனநாயகத்தில் சர்வ சாதாரணமாகப் போய்விட்ட பல உரிமைகள், நாடர் ஆரம்பித்து வைத்தவைதான். சுற்றுச் சூழல் பாதுகாப்பு எஜென்ஸி என்ற அரசாங்க அமைப்பு தோன்றக் காரணமே நாடரின் போராட்டங்கள்தான். இப்போது நம்ம ஊரில் கூடப் பிரபலமாக இருக்கும் தகவல் அறியும் உரிமையை அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தி, அதற்கென்று சட்டம் போட வைத்தவர் -நாடர். அமெரிக்கர்களும் ரொம்பக் காலம் வரை நம்மைப் போல முனிசிபாலிட்டி குழாயில் கால்ரா தண்ணீரைத்தான் குடித்துக் கொண்டிருந்தார்கள். நாடரின் முயற்சியால் 1974-ல் பாதுகாப்பான குடிநீர் சட்டம் வந்தது. குடிக்கிற தண்ணீரில் எத்தனை அளவுக்கு மேல் உப்பு, உலோகங்கள், பாக்டீரியா இருந்தால் ஆபத்து என்று விஞ்ஞானிகளை வைத்துக் கொண்டு விளக்கி, குழம்பின குட்டையைத் தெளியவைத்தவர்- நாடர். அதேபோல் அப்போது கசாப்புக் கடைகளிலெல்லாம் ஒரே ஊழல் மயம். சீக்கு மாடு, சொறி ஆடு எல்லாவற்றையும் வெட்டிக் கலந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை உள்ளே எட்டிப் பார்த்தவர்கள் சைவத்துக்கு மாறிவிடுவார்கள். மாநில சுகாதார இன்ஸ்பெக்டர் வந்து மாமிசக் கூடங்களைச் சோதனை போட்டு சர்டிபிகேட் தர வேண்டும் என்று சட்டம் இயற்ற வைத்தது- நாடர்.

அரசியலிலும் இறங்கி, எலெக்ஷனிலும் நின்று தன்னந்தனியாக விஜயகாந்த் மாதிரி கலக்கினார் நாடர். ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் சுயேச்சையாகப் போட்டியிடத் தவற மாட்டார். 2000-வது வருடத் தேர்தலில் எதிரே ஜார்ஜ் புஷ், அல் கோர் என்று இரண்டு மாபெரும் அரசியல் மலைகள். நாடர் தயங்கவில்லை. “”விற்பனைக்கு அல்ல” (ய்ர்ற் ச்ர்ழ் ள்ஹப்ங்) என்று பொருள் பொதிந்த போர்டு போட்டுக் கொண்டு அரசியல் கடையைத் திறந்தார். ஊர் ஊராகப் பிரசாரம் செய்தார். குடியரசுக் கட்சிக்காரர்கள், ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இரண்டு பேருமே நாடருக்கு ஓட்டுப் போட்டார்கள். “”இவனும் திருடன், அவனும் திருடன்தானே; ஆகவே நான் ஓட்டெல்லாம் போடும் வழக்கமே இல்லை” என்று வீட்டில் சப்பையாகக் குந்திக் கொண்டு பேப்பர் படித்து விமரிசன மழை பொழிந்து கொண்டிருந்த அறிவு ஜீவிக் கும்பலைக் கூட வெளியே இழுத்துத் தனக்கு ஓட்டுப் போட வைத்தவர் நாடர். இதுவே பெரிய சாதனைதான். மொத்தம் விழுந்த ஓட்டுக்களில் சுமார் மூன்று சதவிகிதம் வாங்கிவிட்டார். அவர் மட்டும் ஓட்டைப் பிளக்கவில்லையென்றால் நிச்சயம் புஷ் வெற்றியடைந்திருக்க முடியாது. பல இடங்களில் புஷ் ஜெயித்த ஓட்டு வித்தியாசத்தை விட நாடருக்கு அதிகம் விழுந்திருந்தது.

டைம் பத்திரிகை செல்வாக்கு மிகுந்த நூறு அமெரிக்கர்களைப் பட்டியலிட்டு அதில் நாடருக்கு ஒரு நாற்காலி கொடுத்திருந்தது. அவரை மையமாக வைத்து நிறைய கார்டூன்கள், டி.வி. காமெடி ஷோக்கள் எல்லாம் உண்டு. ஒரு முறை நாடருக்கு எதிர்க் கட்சி வேட்பாளர் ஜான் கெர்ரியுடன் டி.வி.யில் நேருக்கு நேராக விவாதம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்களாம். நிகழ்ச்சி முடிந்தவுடன், சந்திப்பு எப்படி இருந்தது என்று கெர்ரியிடம் கேட்டார்களாம். “”சே…! தப்பிச்சுட்டான். கடைசி நேரத்தில் என்னுடைய துப்பாக்கி வெடிக்காமல் மக்கர் செய்துவிட்டது!” என்று புகைந்தாராம் கெர்ரி.

Posted in activism, America, Analysis, Attorney, Biography, Biosketch, Bush, Capitalism, Consumer Activism, Elections, General Motors, GM, Green Party, John Kerry, Law, Lawsuits, Lawyer, Lebanon, Massachusetts, Order, people, Persons, profile, Ralph Nader | Leave a Comment »