Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Laws’ Category

Ko Krishnakumar – The Significance of an annual ritual called Indian Financial Budget

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் தேவைதானா?

கோ. கிருஷ்ணகுமார்

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) சமர்ப்பிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

பொருளாதார நிபுணர்களாக இல்லாத நிதியமைச்சர்கள் தயாரிக்கும் பட்ஜெட்டுகளால் கணிசமான பயன்களோ, கடுமையான பாதிப்புகளோ ஏற்படுவதில்லை. காரணம், அவர்கள் துணிச்சலான முடிவுகள் எதையும் எடுப்பதில்லை.

ஆண்டுதோறும் பட்ஜெட் தயாரிப்பது என்பது சராசரிக்கும் குறைவான திறமையுள்ள நிதியமைச்சர்களுக்கு பெரும் பிரச்சினையாகத்தான் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் குறித்த தெளிவான பார்வை இல்லாத இவர்கள் ஒவ்வோர் ஆண்டும் கடந்த ஆண்டு, தான் தயாரித்த பட்ஜெட்டில் ஏதேனும் சில மாற்றங்கள் செய்தாக வேண்டியுள்ளது.

ஒரு பட்ஜெட்டில் சில அம்சங்களுக்கு வரிச்சலுகை தரப்படுகிறது. வேறு பல அம்சங்களுக்கு வரிவிதிப்பு கடுமையாக்கப்படுகிறது. இந்த வரிச்சலுகையின் பயனை அனுபவிக்கவும், புதிய வரிச்சுமையிலிருந்து மீளவும் ஓராண்டுக் காலம் போதுமானதாக இருப்பதில்லை.

நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்கள் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வீடு கட்டுகிறார்கள். அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது, அசலுக்கும், வட்டிக்கும் கணிசமான வரிச்சலுகை பெறுகிறார்கள். இந்த வரிச்சலுகைகள் நிரந்தரமானவையல்ல, இவை எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என்ற உண்மை பலருக்குத் தெரியாது.

எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு நிதியமைச்சர் இந்தச் சலுகையைத் திரும்பப் பெற முடிவு செய்தால், அது மத்திய தர மக்களுக்குப் பேரிடியாக அமையும். ஆண்டுதோறும் பட்ஜெட் வெளியிடுவதில், இதைப்போன்ற பல இன்னல்கள் உள்ளன.

பட்ஜெட் வருவதற்கு 45 நாள்களுக்கு முன்பிருந்தே தொழிலதிபர்கள், மாத ஊதியக்காரர்கள், ஓய்வூதியதாரர்கள் போன்ற பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்பார்ப்புகளை வெளியிடுவார்கள். பெரும் எதிர்பார்ப்பிற்குப் பிறகு பட்ஜெட் வெளிவரும்.

இதன்பின்னர் ஒவ்வொரு துறையினரும் பட்ஜெட்டின் தன்மைக்கேற்ப தங்கள் தொழில் உபாயங்களை மாற்றியமைத்துக் கொண்டு செயல்படத் தொடங்குவார்கள். எல்லாம் ஓர் ஒழுங்குக்கு வருவதற்குள் அந்த ஆண்டு முடிந்து விடும். அடுத்த பட்ஜெட்டுக்கான நேரமும் வந்துவிடும்!

இந்தக் குழப்பங்களால் தொழில் துறையினர் சரியான திட்டமிடுதலில் ஈடுபட முடிவதில்லை.

இப்பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு?

ஆண்டுதோறும் பட்ஜெட் தயாரிப்பதற்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டால், ஒரு பட்ஜெட்டிற்கும், அடுத்த பட்ஜெட்டிற்கும் இடையில் உள்ள கால இடைவெளி அதிகமாக இருக்கும்.

தொழில் புரிவோர் தங்கள் செயல்பாடுகளை நிதானத்துடன் வகுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இடையில் தேவைப்பட்டால் சிறு மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

ஆனால் மூன்றாண்டுக் கால பட்ஜெட்டை சரியான தொலைநோக்குப் பார்வை இல்லாத நிதியமைச்சரால் தயாரிக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நீண்ட நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒரு நடைமுறையை மாற்றும்படி சொன்னால், சமுதாயம் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முன்வராது. ஆனால் விருப்பு – வெறுப்பு இல்லாமல் சீர்தூக்கிப் பார்ப்பவர்களுக்கு இந்த யோசனை (இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில்) சரியானதே என்று எண்ணத்தோன்றும்.

(கட்டுரையாளர்: விரிவுரையாளர், கோ.வெ.நா. கல்லூரி, கோவில்பட்டி).

Posted in Analysis, Budget, Economics, Economy, Expenses, Finance, Financial Statement, Income, Income Tax, Industry, IT, Laws, Necessity, Op-Ed, P Chidambaram, P Chidhambaram, Policy, Private, Public, revenue, rules, Tax | Leave a Comment »

Gay and Lesbians Laws to be revamped

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் தண்டனைச் சட்டப் பிரிவு நீக்கப்படும்

புதுதில்லி, செப். 27: ஓரினச்சேர்க்கையை தடை செய்யும், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 377-வது பிரிவை நீக்குவதற்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் இரண்டு முறை ஆலோசனை நடந்துள்ளது என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவரும் சுகாதார அமைச்சக கூடுதல் செயலருமான சுஜாதா ராவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இச் சட்டப் பிரிவை நீக்கக் கோரி எழுத்தாளர்கள்

  • அருந்ததி ராய்,
  • விக்ரம் சேத்,
  • திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் உள்ளிட்ட பிரமுகர்கள் மத்திய அரசுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியதை அடுத்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இச் சட்டப் பிரிவு மிருகத்தனமானது என்றும், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் மத்திய அரசுக்கு தனியே எழுதிய கடிதத்தில், நோபல் விருது பெற்ற பொருளாதார மேதை அமார்த்தியா சென் குறிப்பிட்டிருந்தார்.

Posted in AIDS, Gay, GLBT, Indian Penal Code, IPC, Laws, Lesbian, Tamil | Leave a Comment »

Technology & Electronics Trach – Recycle

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

குப்பையோ குப்பை… மின்னணுக் குப்பை!

வைகைச் செல்வி

தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுச் சந்தையின் வளர்ச்சி அதீத வேகத்தில் நடைபெறுகையில், இன்றைக்குப் புதியதாக வாங்கும் ஒரு பொருள், நாளையே அரதப் பழசாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரே பொருளின் புதுப் புது மாடல்கள் புற்றீசல் போல நுகர்வோரை மொய்க்கின்றன. மின்னணுச் சந்தையில் புதிய பொருள்கள் உருவாக உருவாக, பழைய பொருள்களின் கழிவும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது.

பல்வேறு மின்னணு மற்றும் மின் கருவிகள் அவற்றின் உடைமையாளர்களுக்குப் பயன்படாமல் போகும் பட்சத்தில் அவை மின்னணு குப்பையாக உரு மாறுகின்றன. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டத் துறை 2005-ல் நடத்திய ஆய்வானது, உலகில் ஒவ்வோர் ஆண்டும் 20 முதல் 50 மில்லியன் டன்கள் மின் குப்பை உருவாகிறது எனத் தெரிவிக்கிறது. மின்னணுக் கருவிகளின் ஆயுள்காலம் அவ்வளவு அதிகமில்லை. உதாரணத்திற்கு ஒரு கம்ப்யூட்டரின் ஆயுள் 5 முதல் 6 ஆண்டுகள்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மின்னணுக் கருவிகள் கம்ப்யூட்டர், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் ஆகும். இவற்றிலிருந்து உருவாகும் கழிவுகள் 2004-2005ல் 1,46,180 டன்கள் எனக் கணக்கிடப்பட்டு, 2012ஆம் ஆண்டில் இது 16,00,000 டன்களாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தில்லி, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து உருவாகிறது.

நகரங்கள் என்று பார்க்கையில் மும்பை, தில்லி, பெங்களூர், சென்னை, கோல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், புனே, சூரத் மற்றும் நாக்பூராகும். சமீபகாலமாக அதிகரித்து வருவது செல்பேசிக் குப்பையாகும். ஓர் ஆய்வின்படி 2005ல் மட்டும் உலகில் 130 மில்லியின் செல்பேசிகள் கழித்துப் போடப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் கழிவுகள், அதாவது பாட்டரிகள் மற்றும் சார்ஜர்களையும் சேர்த்து, ஆண்டொன்றிற்கு 65,000 டன்கள் ஆகும்.

மின் குப்பையில் அபாயகர வேதிப்பொருள்கள் இருப்பதாலேயே அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதாயிருக்கிறது. இக் கழிவுகளைச் சரியான முறையில் கையாளாவிட்டால், சுற்றுச்சூழல் கேடுகளும் சுகாதாரக் கேடுகளும் பின்னிப் பிணைந்துவிடும். அது மட்டுமல்லாது, வீடுகளில் இருந்து உருவாகும் மின் குப்பையும் எல்லாக் குப்பையோடும் சேர்ந்து, பெரும்பாலும் சாக்கடைக்கோ அல்லது நகராட்சிக் கழிவிற்கோ செல்லுகிறது. தாமிரம் போன்ற உலோகங்களை மீட்டெடுக்க கேபிள் மற்றும் வயர்களைத் திறந்த வெளியில் மனம் போன போக்கில் எரிக்கையில் நச்சு வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடும். இக்குப்பையை யாரோ உருவாக்க, யாரோ பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

இவற்றில் மிகவும் அக்கறை செலுத்தப்பட வேண்டிய கழிவுகள் என்னவெனில், கம்ப்யூட்டர் கழிவுகளே. இவற்றின் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர்களின் விலை குறைந்து கொண்டே வருவதாலும், கடன் வசதிகள் பெருகியுள்ளதாலும், நடுத்தரக் குடும்பத்தினரால்கூட எளிதில் கம்ப்யூட்டர் வாங்க இயலுகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் அசுர வேகத்தில் பயணிக்கும் நம் நாட்டில் ஓர் ஆண்டிற்கு சுமார் 40 மில்லியன் கம்ப்யூட்டர் பாகங்கள் கழிக்கப்படுகின்றன. இதே வேகத்தில் கழிக்கப்பட்டால் 2010 ஆம் ஆண்டிற்குள் இது 100 மில்லியனாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது.

பெங்களூர் மட்டும் ஒரு வருடத்திற்கு 8000 டன்கள் கம்ப்யூட்டர் கழிவுகளை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. இங்கு தகவல் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளிலிருந்து மட்டும் ஒரு வருடத்தில் 30,000 கம்ப்யூட்டர்கள் பயனற்றதாகக் கழிக்கப்படுகின்றன.

ஒரு கணினியில் உள்ள நச்சுப் பொருள்களின் பட்டியலைப் பார்த்தால் அசந்து போக நேரிடும். தற்சமயம் பிரபலமாயுள்ள தட்டை ஸ்கிரீன் கம்ப்யூட்டரில் பாதரசம் உள்ளது. பொதுவாக கணினி உதிரி பாகங்களில் காரீயம் மற்றும் காட்மியம் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்கள் உள்ளன. மேலும் டயாக்சின் மற்றும் ஃப்யூரான் ஆகிய நச்சு வாயுக்களை வெளிப்படுத்தும் பாலி வினைல் குளோரைடு கேபிள் இன்சுலேஷன்களில் உள்ளது. ஓசோன் படலத்தை மெலிவடையச் செய்யும் ரசாயன நச்சுப்பொருள்கள் உள்ளன. ஒரு கம்ப்யூட்டரில் 20 சதவிகிதம் பிளாஸ்டிக் உள்ளது. இத்தகு நச்சுப் பொருள்கள் எல்லாம், பயனற்ற கம்ப்யூட்டர்கள் தவறான முறையில் கழிக்கப்படுகையில் வெளியாகின்றன.

தகவல் தொழில் நுட்பத்துறை எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அவ்வளவு வேகமாய் மின்னணுக் குப்பை விகிதமும் அதிகரிக்கிறது. எனினும், இக் குப்பைக்கு சந்தையில் ஒரு மதிப்பு உள்ளது. ஒரு விலை உள்ளது. மின் குப்பையில் நச்சுத்தன்மை வாய்ந்த உலோகங்களோடு தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்களும் கிடைக்கின்றன. “குப்பையே செல்வம்’ என்ற கோட்பாட்டிற்கு உதாரணமாக மின் குப்பையைச் சொல்லலாம். பல கழிவுப் பிரச்சினைகளுக்கு ஆதாரமாக விளங்கும் அதே மின் குப்பை மறுசுழற்சி செய்கையில் ஒரு லாபகரமான தொழிலாகவும் மாறலாம். ஆனால் விஞ்ஞானபூர்வமற்ற முறையில் மறுசுழற்சி செய்கையில், தொழிலாளர்களுக்கு சுகாதாரக் கேட்டை விளைவிப்பதோடு, சுற்றுச்சூழலையும் நச்சாக்குகிறது.

வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மின்னணுக் குப்பையை “பின் வாசல்’ வழியாகக் கொட்டுகின்றன. அதாவது ஏற்கெனவே பயன்படுத்திய கம்ப்யூட்டர்களை “டொனேஷன்’ என்ற பெயரில் மறுபயன்பாட்டிற்காகத் தொண்டு நிறுவனங்களுக்கோ அல்லது பள்ளிகளுக்கோ தானமாக இங்கு அனுப்புகின்றன. சிறிது காலத்திற்குப் பின் இவை குப்பைகளே. வளர்ச்சியடைந்த நாடுகளில் இக்கழிவை மறு சுழற்சி செய்ய அதிகச் செலவாகும். ஆனால் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் குறைந்த செலவில் மறு சுழற்சி நடைபெறுவதால் இக்கழிவுகள் இங்கே தள்ளிவிடப்படுகின்றன. எனவே, இந்நாடுகளில் சுற்றுச்சூழலும் சுகாதாரமும் கெடுகிறது.

அபாயகரக் கழிவுகளை உலகின் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்புவதை முறைப்படுத்த உலக நாடுகளிடையே பேசல் ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பேசல் செயல் திட்டத்தின் (Basel Action Network) அறிக்கையின்படி, அமெரிக்காவில் உருவாகும் மின்னணுக் குப்பையில் 50 முதல் 80 சதவிகிதம் வளரும் நாடுகளுக்கு, மறுசுழற்சி செய்வதற்காகத் தள்ளிவிடப்படுகிறது. மின் குப்பைக்கென நம் நாட்டில் தனியே சட்டம் இல்லாத நிலையில் மத்திய அரசு ஜூலை 2004-ல் தேசிய மின்னணு மற்றும் மின் கழிவிற்கான பணிக்குழுவை (National Waste of Electronic and Electrical Equipment Task Force) நியமித்துள்ளது.

நகராட்சிக் கழிவுகளையே இன்னும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துப் போடும் மனநிலையில் இல்லாத பொது மக்கள் மின்னணுக் குப்பையைச் சரியான முறையில் கையாளுவது சிரமம். எனவே “சுற்றுச்சூழல் சீர்கேட்டினை உண்டுபண்ணுபவரே, அதற்கான இழப்பை ஈடு செய்ய வேண்டும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இச்சாதனங்களின் உற்பத்தியாளரே இக்கழிவுகளை விஞ்ஞான முறையில் சுத்திகரித்து இறுதி நிலைக்குத் தள்ள வேண்டும் என்பதையும் பரிசீலனை செய்யலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தற்சமயம் காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர மற்றும் உயர் நிலைத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளன. சென்னையிலுள்ள தரமணி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் போன்ற இடங்களில் பல தொழில்நுட்பப் பூங்காக்கள் அமையவுள்ளன. மின்னணுக் கழிவுகளை முறையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் உருவாகும் மின்னணுக் கழிவுகளின் அளவைக் கண்டறிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது. பொதுவாக இக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு எளிதான, செலவு குறைந்த தொழில் நுட்பமே இந்தியாவைப் போன்ற வளரும் நாடு களுக்குத் தேவை.

Posted in Analysis, Anti-dumping, cell phones, Cities, computers, Dumping, Electronics, Environment, Global Warming, India, Laws, Op-Ed, Recycle, States, Statistics, Tamil, Technology, Trash, Vaigai Chelvi, Vaigai Selvi, Waste Management | Leave a Comment »