குஷ்பு நடிக்கும் விளம்பரத்தை எதிர்த்து தலைமை நீதிபதியிடம் புகார்
சென்னை, ஜன.24: நீதித்துறையை அவமதிக்கும் நோக்கில் டிவியில் வெளியாகும் தங்க நகை விளம்பரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் டி. ரவிகுமார் புகார் கொடுத்துள்ளார்.
அவரது புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 21-ம் தேதி காலை 8.30 மணிக்கு சன் டிவியில் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் லலிதா ஜுவல்லரியின் விளம்பரம் இடம் பெற்றது. அதில் நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்று கொண்டு லலிதா ஜுவல்லரியின் சலுகைகளைப் பற்றி எடுத்துக் கூறுவார். அதைக் கேட்ட நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் திடீரென காணாமல் போவது போல (நீதிமன்றமே காலியாக இருப்பது போல) விளம்பரக் காட்சி இடம் பெறுகிறது.
இந்த விளம்பரம் நீதித்துறையையும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களைக் கேவலப்படுத்துவது போல உள்ளது. எனவே இந்த விளம்பரத்தை மீண்டும் ஒளிபரப்பாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வழக்கறிஞர் ரவிகுமார் கூறியுள்ளார்.