Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Lakshmanan’ Category

KB Sundarambal – Path breaking Tamil Actress: Chitra Lakshmanan series on Thamizh Cinema History

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

கே.பி.சுந்தராம்பாள் — எஸ்.ஜி. கிட்டப்பா காதல்

கே.பி.சுந்தராம்பாளின் முழுப் பெயர் : கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்

பிறந்த தேதி : 26.10.1908

மறைந்த தேதி : 24.09.1980

நடித்த படங்கள் : 12

தமிழ் பேசும் படத்தின் முதல் கதாநாயகி டி.பி. ராஜலட்சுமி. அவரைத் தொடர்ந்து எம். எஸ். விஜயாள், கே.டி. ருக்மணி, எஸ்.டி. சுப்புலட்சுமி, எம்.ஆர். சந்தானலட்சுமி என்று எத்தனையோ நடிகைகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதிலும் இவர்கள் அனைவரையும் விட புகழோடு விளங்கியவராக இருந்தார் நாடக மேடைகளில் மட்டுமே பாடி நடித்துக் கொண்டிருந்த இசையரசி கே.பி. சுந்தராம்பாள்.

ஏறக்குறைய ஒரு திரைப்படக் கதையைப் போன்றதுதான் கே.பி. சுந்தராம்பாள் அவர்களுடைய வாழ்க்கையும். ஆம், அவருடைய வாழ்க்கையில் தாழ்வு, உயர்வு, வறுமை, செம்மை, காதல், பிரிவு, சோகம் என்று எல்லா அம்சங்களுமே இடம் பெற்றிருந்தன.

தமிழில் முதன் முதலாக லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை என்ற புகழினைப் பெற்ற கே.பி. சுந்தராம்பாள் இசையுலக வாழ்க்கை வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள புகை வண்டியில் பாடி அதன் மூலம் வந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துகின்ற மோசமான நிலையில்தான் துவங்கியது. ஆனால் அந்த ரயில் பயணங்கள்தான் சுந்தராம்பாள் வாழ்க்கைப் பயணத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி திருப்பிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

கே.பி.எஸ். பாடியபடி பயணம் செய்த புகை வண்டியில் அதிகாரியாக பணியாற்றிய நடேச அய்யர் அவரது இசைஞானத்தைக் கண்டு வியந்தார். அந்த அதிகாரி ஒரு நடிகர். சிறு சிறு வேடங்களில் நடித்தவர். கலைகளில் ஈடுபாடுடைய கலாரசிகரான அவர்தான் வேலு நாயரின் நாடகக் கம்பெனியில் சுந்தராம்பாள் சேரக் காரணமாக இருந்தவர்.

அந்த காலகட்டங்களில் வேலு நாயரின் நாடகக் கம்பெனியில் சேருவது என்பது சாதாரணமான விஷயமல்ல. நடேச அய்யர் அறிமுகப்படுத்தினாலும் சுந்தராம்பாளுக்கு நாடகக் கம்பெனியில் ஒரு தனி இடத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது அவரது கணீர்க் குரல்தான் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். தனித்துவம் பெற்ற கே.பி.எஸ்.ன் குரலைக் கேட்ட வேலு நாயர் மெய்சிலிர்த்தார்.

உடனே “பாலபார்ட்’ பாத்திரத்தில் நடிக்கின்ற வாய்ப்பையும் தந்தார். “நல்ல தங்காள்’ நாடகத்தில் ஏழாவது குழந்தையாக நடித்து தனது பத்தாவது வயதில் நாடக வாழ்க்கையைத் தொடங்கினார் கே.பி.எஸ்.

சங்கரதாஸ் சுவாமிகள் போன்ற மேதைகளின் பாட்டு வரிகள் திருத்தமான உச்சரிப்பு, அற்புதமான சாரீரம், அருமையான பாவம் போன்ற எல்லாவற்றையும் ஒரு சேர பெற்றிருந்த சுந்தராம்பாள் அவர்களின் மூலம் பாட்டாக வெளிப்பட்டபோது தமிழகம் முழுவதும் அதற்கு தலையாட்டத் தொடங்கியது.

சுந்தராம்பாள் அளவிற்கு உச்ச ஸ்தாயியில் பாடக் கூடிய பெண் கலைஞர் யாரும் இல்லை என்பதால் அவரது புகழ் நாளுக்கு நாள் கூடியது. நாடக வாய்ப்புகளும் தொடர்ந்து வரத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் தன் இசையால் ஈர்த்த கே.பி.எஸ். பாலபார்ட்டில் இருந்து ஸ்திரீ பார்ட்டுக்கு மாறினார். “வள்ளித் திருமணம்’, “பவளக்கொடி’, “சாரங்கதாரா’, “நந்தனார்’ போன்ற நாடகங்களில் தன் தனி முத்திரையைப் பதித்தார் கே.பி.எஸ்.

அப்போதெல்லாம் பேசும் படங்கள் கிடையாது என்பதால் தினமும் நாடகங்கள் நடக்கும். அதிலும் கே.பி. சுந்தராம்பாள் நடிக்கும் நாடகம் என்றால் இன்று ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு கூடுவதைப் போல கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். முருக பக்தையான சுந்தராம்பாள் அவர்களின் பெருமை கடல் கடந்தும் பரவியது. அவரது நாடகங்களை இலங்கையில் நடத்த அழைப்பு வந்தது. அதை ஏற்று 1926 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் இலங்கைக்கு பயணமானார் கே.பி.எஸ்.

அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தை உண்டு பண்ணப் போகிற பயணம் அது என்று அப்போது அவருக்குத் தெரியாது.

கே.பி.எஸ். போன்று உச்ச ஸ்தாயியில் பிசிறின்றி பாடக் கூடிய ஆற்றல் படைத்த அற்புதமான கலைஞராக விளங்கியவர் எஸ்.ஜி. கிட்டப்பா. காங்கிரசில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த கிட்டப்பா கதர் ஆடைகளைத்தான் அணிவார். தீரர் சத்தியமூர்த்தியுடன் கிட்டப்பாவிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சுந்தராம்பாள் ஒரு புறம் தன்து தெய்வீகக் குரலால் நாடக மேடையை கலக்கிக் கொண்டிருந்தார் என்றால் அவருக்கு இணையாக இன்னொரு புறம் மேடைகளை கலக்கிக் கொண்டிருந்தவர் எஸ்.ஜி. கிட்டப்பா.

1906 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் நாள் கங்காதரஅய்யருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் தாலுகா ஆழ்வார்குறிச்சியில் அவதரித்த கிட்டப்பாவின் ஆரம்ப கால வாழ்க்கை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேதான் தொடங்கியது.

தந்தை கங்காதர அய்யரின் வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லாததால் கிட்டப்பாவின் சகோதரர்கள் எஸ்.ஜி. சுப்பையர், எஸ்.ஜி. செல்லப்பா, எஸ்.ஜி. சாமி அய்யர் ஆகிய எல்லோருமே நாடகத் துறையில் ஈடுபட்டனர். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் பணியாற்றிய இவர்களோடு சேர்ந்து கிட்டப்பாவும் தனது ஐந்தாவது வயதில் நடிக்கத் தொடங்கினார். தனது ஆறாவது வயதில் “நல்லதங்காள்’ நாடகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக நடித்தார் கிட்டப்பா.

கிட்டப்பாவின் சங்கீத ஞானமும், அயராத அவரது பயிற்சியும் கிட்டப்பாவிற்கென்று ஒரு தனி ரசிகர்கள் வளையத்தை உருவாக்கியது. ஒவ்வொருநாளும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. பின்னாளில் அவரது பாட்டைக் கேட்க பைத்தியமாக பலர் அலையத் தொடங்கினார்கள்.

தங்களது வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவரது பாடலைக் கேட்பதற்காக நாடகக் கொட்டகைகளில் தவமிருப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யர் போன்ற இசை மேதைகள் எல்லாம் “”கிட்டப்பா நாடக மேடையை விட்டு விட்டு கச்சேரி நடத்த சபா மேடைகளுக்கு வந்தால் நம் நிலை என்னவாகும்?” என்று பேசிக் கொள்வார்களாம்.

தன்னைப் போல பாட எவருமில்லை என்பது கிட்டப்பாவிற்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், தனக்கு இணையாக பாடக் கூடிய பெண் நாடகக் கலைஞர் இல்லையே என்ற வருத்தமும் இன்னொரு புறம் அவரை வாட்டியது. அவருடைய சுதியில் சேர்ந்து பாட முடியாதபடி பல பெண் பாடகிகள் திண்டாடினார்கள்.

இந்தச் சூழ்நிலையில் 1924-ஆம் ஆண்டு ஜூன் 23-ம் நாள் திருநெல்வேலி விஸ்வநாத அய்யர் மகள் கிட்டம்மாளுக்கும் கிட்டப்பாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கிட்டப்பாவும், காசி அய்யரும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க இலங்கைக்குப் பயணமானார்கள். அப்போது கே.பி. சுந்தராம்பாள் இலங்கையில் நாடகங்கள் நடத்தி இலங்கை வாழ் மக்களை தன் பக்கம் முழுமையாக ஈர்த்திருந்தார். தமிழ் நாட்டைப் போலவே இலங்கையிலும் அவரது நாடகங்களுக்கு கூட்டம் அலை மோதியது.

எஸ்.ஜி. கிட்டப்பாவிற்கு இணையாக பாடக் கூடிய பெண் கலைஞர் இல்லாதது போல் கே.பி. சுந்தராம்பாளுக்கு இணையாக பாடக் கூடியவர் இல்லாதது அவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. சுந்தராம்பாளுடன் நடிக்கும் நடிகர்கள் அவரோடு இணைந்தும், ஈடு கொடுத்தும் பாட முடியாததால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள் அவர்களை கேலி பேசத் தொடங்கினர். இதனால் பல நடிகர்கள் கே.பி.எஸ். அவர்களோடு நடிக்கவே அச்சப்படத் தொடங்கினர்.

இந்த நேரத்தில் இலங்கை வந்த கிட்டப்பா “தில்லானா மோகனாம்பாள்’ திரைப் படத்தில் பத்மினி நடனத்தைப் பார்க்க சிவாஜி போவாரே, அது போன்று சுந்தராம்பாள் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க கிளம்பினார். அவர்கள் சந்திப்பைப் பற்றி “இசை ஞானம் பேரொளி பத்மஸ்ரீ கே.பி. சுந்தராம்பாள்’ என்ற தனது புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு சுவைபட விவரித்துள்ளார் பாஸ்கரதாசன்.

“”சுந்தராம்பாளின் ஓங்காரமான ரீங்கார நாதத்தைக் கேட்ட கிட்டப்பா கதி கலங்கி, மதி மயங்கி கிறு கிறுத்தும் போனார். “”என்ன சங்கீத ஞானம், என்ன சுகமான சாரீரம், என்ன தெய்வீகமான குரல்” என்று துதிபாட ஆரம்பித்தார். நமக்கு இணையாக பாடக் கூடிய வல்லபி இவர்தான் என்று முடிவு செய்து கொண்டார்.

கிட்டப்பா சுந்தராம்பாளைச் சந்திக்கிறார். ஏற்கனவே கிட்டப்பாவின் மகிமையைக் கேள்விப்பட்டிருந்த சுந்தராம்பாள் அவரை நேரில் பார்த்ததும் காந்தத்தின் வடதுருவமும், தென்துருவமும் சந்திப்பதைப் போல ஈர்க்கப்படுகிறார்.

இருவருமே புகழ் பெற்ற பாடகர்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். இருவருமே தங்களுக்கான இசை ஜோடியை தேடிக் கொண்டிருந்தவர்கள். எனவே, இவரும் ஒரு நாடகத்தில் இணைந்து நடிப்பது என்று முடிவு செய்கின்றனர்.
சங்கீத ஜாம்பவான் என்று புகழப்படும் கிட்டப்பாவிற்கு இணையாகப் பாட வேண்டுமே என்ற பயம் சுந்தராம்பாளுக்கும், உச்ச ஸ்தாயியில் பாடும் சுந்தராம்பாளுக்கு ஈடு கொடுத்து பாட வேண்டுமே என்ற அச்சம் கிட்டப்பாவிற்கும் இருந்தது.

இருவரும் சேர்ந்து நடித்த நாடகம் இலங்கையில் அரங்கேறியது. எட்டுக்கட்டை சுதியில் பாடும் கிட்டப்பாவை யாரும் எட்டாத நிலையில் சுந்தராம்பாள் அதே சுதி லயத்தோடு தொட்டுவிட்டார். உச்ச ஸ்தாயியில் பாடலையும், உள்ளத்தையும் ஒரு சேரத் தொட்டுவிட்டார் அவர் என்பது தான் உண்மை.

சுந்தராம்பாளுக்கு இணையாக நடித்த ராஜபார்ட்டுகளை மதிக்காத கலா ரசிகர்கள் சுந்தராம்பாளோடு உச்ச ஸ்தாயியில் ஒன்றிப் போன கிட்டப்பாவின் சங்கீத ரசனையில் மூழ்கித் திளைத்தார்கள்.

ஓங்கிக் குரலெடுத்து இருவரும் பாடினால் ஒரு மைல் தூரத்திற்குக் கேட்கும் என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். சுந்தராம்பாளும், கிட்டப்பாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். ரசிகர்கள் “”இருவரும் நல்ல ஜோடி” என்று அவர்கள் காதுபாட வாழ்த்திப் பேசினார்கள்.

இலங்கைக்குச் சென்ற சில மாதங்களிலேயே இசை மேதைகள் இருவரும் புகழின் உச்சியில் பறந்தார்கள். வானம்பாடியாய் இசை வானில் பாடித் திரிந்தார்கள். ஈடு இணையற்ற ஜோடி என்று நிரூபித்துக் காட்டினார்கள்.

இருவரும் சேர்ந்து நடிப்பதென்றால் நாடகக் கம்பெனிகள் பெரிய தொகையை கொட்டித் தர தயாராக இருந்தனர். அதற்குக் கட்டணமாக ரசிகர்களும் அள்ளித்தர ஆவலாக இருந்தனர். இருவரும் பல இடங்கள் பயணம் செய்து நாடகங்கள் நடித்து ஏராளமாக சம்பாதித்தார்கள். கிட்டப்பா மீது சுந்தராம்பாள் அபரிமிதமான பக்தியும், விசுவாசமும் கொண்டிருந்தார்.

சுந்தராம்பாளின் இசையில் மயங்கிய கிட்டப்பா நாடகத்திற்கு மட்டுமின்றி இல்லறத்திற்கும் சுந்தராம்பாள்தான் சரியான ஜோடி என்ற முடிவில் திட்டவட்டமாக இருந்தார். கலை வாழ்க்கையில் உள்ள உறவும், பரிவும் சுந்தராம்பாளின் வாழ்க்கையிலும் இருந்தது. கிட்டப்பாவையே தனது வாழ்க்கைத் துணையாக ஏற்க சுந்தராம்பாளும் முடிவு செய்தார்.

இந்த முடிவில் சுந்தராம்பாளின் தாய் மாமனான மலைக்கொழுந்துவிற்கு (இவர் தான் கே.பி.எஸ். அவர்களுக்கு நிர்வாகியாக பணியாற்றியவர்) உடன்பாடு இல்லை என்றாலும் சுந்தராம்பாளை எதிர்த்து அவர் ஒன்றும் செய்யவில்லை.

சதிபதிகளின் கலைப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் ஆரம்பத்தில் இனிதாகவே போய்க் கொண்டிருந்தது.

——————————————————————————————————————————————————————————————

எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கு
கே.பி.சுந்தராம்பாள் எழுதிய கடிதங்கள்

கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் ஒருவரை ஒருவர் அளவிட முடியாத அளவுக்கு நேசித்தாலும் மேடையில் மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். மேடையில் அவர்கள் போட்டி போட்டு நடிப்பதையும், வசனங்கள் பேசுவதையும் பார்த்த பல ரசிகர்கள் இந்தப் போட்டி அவர்கள் வாழ்க்கையில் எந்த விரிசலையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள்.

சுந்தராம்பாள் குணக்குன்று. ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர். எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாதவர். ஆனால் கிட்டப்பா அப்படிப்பட்டவர் அல்ல. மது போன்ற சில தீய பழக்கங்கள் அவரிடம் குடி கொண்டிருந்தன. இதையெல்லாம் மீறி கிட்டப்பா மீது மாறாத நேசம் கொண்டிருந்தார் கே.பி.எஸ். என்பதுதான் உண்மை.

கிட்டப்பா சுந்தராம்பாளை மணமுடிக்க தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது கே.பி.எஸ். கேட்டது ஒரே கேள்விதான்.

“”என்னைக் கண்கலங்காமல் கடைசிவரை வைத்துக் கொள்வீர்களா?” என்பதுதான் அக்கேள்வி.

“”கடைசிவரை என்னை கைவிடக் கூடாது” என்று சத்தியம் வாங்கிக் கொண்ட பிறகே கிட்டப்பாவை கணவனாக ஏற்றுக்கொண்டார் கே.பி.எஸ்.

1927-ன் தொடக்கத்தில் மாயவரத்தில் உள்ள கோவிலில் இருவரது திருமணம் நடைபெற்றதாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கே.பி.எஸ்.
தமிழ் நாடாக மேடைகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ஜோடிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக வாரிசு ஒன்று கே.பி.எஸ். வயிற்றில் வளர ஆரம்பித்தது.

இந்த நேரம் செங்கோட்டை சென்ற கிட்டப்பா, கே.பி.எஸ். அவர்களைப் பார்க்க வரவேயில்லை. கடிதங்கள் மட்டுமே அவரது எண்ணங்களைச் சுமந்து வந்தது. தன் முதல் மனைவியான கிட்டம்மாவுடன் கிட்டப்பா இருந்தாலும் கே.பி.எஸ். அதற்காக பொறாமைப்படவில்லை. ஆனால் யாரோ சிலர் விதைத்த விஷ விதை கிட்டப்பா மனதில் விருட்சமாக வளர்ந்ததால் சுந்தராம்பாளை விட்டு விலகியே இருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான கே.பி. சுந்தராம்பாள் தன் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் அவர் எந்த அளவு கிட்டப்பா மேல் பாசமும் நேசமும் கொண்டிருந்தார் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.

கரூர். நவம்பர் 1927

அன்புள்ள பதி அவர்களுக்கு, அடியாள் அநேக நமஸ்காரம். என்னிடம் நேரில் சொன்னபடி நடப்பதாகத் தெரியவில்லை. நான் செய்த பாக்கியம் அவ்வளவுதான்.

உங்கள் மீது வருத்தப்படுவதில் பிரயோசனமில்லை. தாங்கள் பார்த்துச் செய்வதென்றால் செய்யலாம். “வளைகாப்பு’ இட வேண்டுமென்று தங்களிடமும் சொன்னேன். தங்கள் அண்ணாவிடமும் சொன்னேன். ஒருவரும் கவனிக்கவில்லை.

என்னைப் பற்றி கவனிக்க ஏதாவது கொடுத்து வைத்திருக்கிறேனா? உங்களுடைய சுக துக்கங்களில் பாத்யப்படும் தன்மையில்தான் இருக்கிறேனா!

நான் இங்கும் நீங்கள் அங்கும் இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கவனிக்கப் போகிறீர்கள். ஏதோ என் மீது இவ்வளவு அன்பு வைத்து தவறாமல் எழுதியதைப் பற்றி அளவு கடந்த சந்தோஷமடைகிறேன். தவறாமல் கடிதமாவது அடிக்கடி எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்று அன்போடு நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

எது எப்படியிருந்தாலும், தங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். தங்கள் உடம்பு இளைத்தால் தங்களைத் திட்டமாட்டேன். கிட்டம்மாளைத்தான் திட்டுவேன் என்று அவளிடம் சொல்லுங்கள்.

அடிக்கடி வெளியில் சுத்த வேண்டாம். தூக்கம் முழிக்க வேண்டாம். காலா காலத்தில் சாப்பிடவும். அனாவசிய விஷயங்களில் புத்தியைச் செலவிட வேண்டாம். நானும் அப்படியே நடக்கிறேன்.

மாதமும் ஆகிவிட்டது. தங்களுக்குத் தெரியாதது அல்ல. அவ்வளவுதான் நான் எழுதலாம். நேரில் வாருங்கள். உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.

இப்படிக்கு,

தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள்,
சுந்தரம்.

சுந்தராம்பாளை மணமுடிப்பதற்கு முன்னால் கிட்டப்பா அவருக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே அவர் காப்பாற்றவில்லை என்றபோதிலும் கூட கிட்டப்பாவை தன் மனதில் ஏற்றி வைத்திருந்த இடத்திலிருந்து ஒரு அங்குலம் கூட கீழே இறக்கவில்லை சுந்தராம்பாள்.

1928 ஜனவரி மாதம் 28-ஆம் தேதி சுந்தராம்பாளுக்குப் பிறந்த குழந்தை பத்து நாள் மட்டுமே ஜீவித்திருந்தது. குழந்தையின் பிறப்பு, இறப்பு இரண்டிற்குமே கிட்டப்பா வரவில்லை.

சுந்தராம்பாளின் கடிதங்களுக்கு கிட்டப்பா எழுதிய பதில் கடிதங்களிலும் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்ததாகத் தெரிகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுந்தராம்பாள் தன் மன உணர்ச்சிகளையெல்லாம் கடிதமாக வடித்து கிட்டப்பாவிற்கு அனுப்பினார்.

தேவரீர் அவர்கள் சமூகத்திற்கு எழுதியது.

தங்கள் லெட்டர் கிடைத்துச் சங்கதி அறிந்தேன். தங்களுக்கு எந்த வகையிலும் நான் துரோகம் செய்தவளல்ல, தாங்கள் அறிந்த கிண்டல் வார்த்தைகளை எனக்கு எழுத வேண்டாம். இந்த மாதிரி எழுதி என் மனம் கொதித்தால் தாங்கள் ரொம்ப காலத்திற்கு úக்ஷமமாக இருப்பீர்கள். அம்மாதிரியெல்லாம் எழுதினால் தங்களுக்கு பலன் மீளாத நரகக் குழிதான்.

கிருஷ்ணலீலா பார்த்ததில்லையே என்று பார்க்கப் போனேன். அதைப் பற்றி வித்தியாசம் என்றால் இருக்கட்டும் எத்தனையோ வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.

மனம் போலிருக்கும் வாழ்வு. என்னைப் பற்றி கவலையே தங்களுக்கு வேண்டாம். நான் இப்படியெல்லாம் எழுதினேன் என்று வருத்தம் வேண்டாம்.

தங்களுக்கு பதில் போட இஷ்டம் இருந்தால் எழுதவும். இல்லையென்றால் வேண்டாம்.

இதுதான் கடைசி லெட்டர். இதுதான் கடைசி. இதுதான் கடைசி. இது உண்மையென்றும், பொய்யென்றும் பின்னால் தெரியும்.

இப்படிக்கு
சுந்தரம்.

“”தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள் சுந்தரம், தங்கள் அன்பை என்றும் மறவாத காதலி கே.பி. சுந்தராம்பாள்” என்றெல்லாம் எழுதி கடிதத்தை முடித்த சுந்தராம்பாள் மேற்கண்ட கடிதத்தை எந்த அடைமொழியுமின்றி சுந்தரம் என்று முடித்திருப்பதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு கோபமாக இருந்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது அல்லவா?

நம்மாலேயே உணர முடியும்போது கிட்டப்பா அதை உணரமாட்டாரா? உணர்ந்தார். அதன் விளைவாக நீண்ட காலத்திற்குப் பின்பு அன்பான கடிதமொன்றை தன் பண்பான மனைவிக்கு எழுதி அனுப்பினார்.

தனியாக இருந்த காலகட்டங்களில் சுந்தராம்பாள் நாடகத்தில் உச்சக் கட்டத்தில் இருந்தபோதிலும் நிம்மதி இல்லாமல் தவித்தார். அதே போன்று கிட்டப்பாவும் நாடகங்களில் புகழோடு இருந்தபோதிலும் சுந்தராம்பாள் இல்லாததால் தவிப்புக்கு ஆளாகியிருந்தார். அவர்களைப் பிரித்த காலமே 1931-ல் மீண்டும் அவர்களை இணைத்தது.

அவர்கள் பெயரிலேயே நாடகக் கம்பெனி அமைத்து இருவரும் நடத்தத் தொடங்கினர். ரசிகர்கள் பெருமகிழ்ச்சியோடு அவர்கள் நாடகத்திற்கு உற்சாக வரவேற்பினைத் தந்தனர். சுந்தராம்பாள் – கிட்டப்பா ஆகிய இருவரது பாடல்களும் இசைத் தட்டாகவும் வெளிவந்து விற்பனையில் சக்கைபோடு போட்டது.

1931-ல் பேசும்பட காலம் வந்த பிறகும் நாடகங்கள் தங்கள் செல்வாக்கை இழக்காது இருந்தன.

“”கே.பி. சுந்தராம்பாள் வேடன், வேலன், விருத்தன் என்று ராஜபார்ட்டாக நடிப்பார். கிட்டப்பா வள்ளியாக ஸ்திரீ பார்ட்டாக நடிப்பார். இருவரும் மேக்அப் போட்டு வெளியில் வருவதற்குள் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருக்கும். கிட்டப்பா திரைக்கு முன்னால் வந்து ஒரு ஆலாபனை செய்துவிட்டுப் போனால்தான் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியடைவார்கள்.

சுந்தராம்பாளும் வந்து பாடமாட்டாரா என்று ஜனங்கள் ஏங்கிக் கிடப்பார்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். ஒலிபெருக்கி வசதியில்லாத அந்த காலகட்டத்தில் அவர்கள் குரல் கடைசியில் உள்ளவர்களுக்கும் கேட்கும்” என்று கிட்டப்பா – சுந்தாரம்பாள் நாடகங்கள் பற்றி தன் அனுபவங்களைக் கூறுகிறார் குன்னக்குடி வைத்தியநாதன்.

கிட்டப்பா மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் நாடகங்களில் நடிக்கும்போது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு வருவதற்கு முன் திரையின் ஓரமாக சாராயத்தை சுடுதண்ணீரில் கலந்து சுடச் சுட குடிப்பார். இந்த குடிப்பழக்கம் தனது நாடக முதலாளியான கன்னையா இறந்த பின் அதிகரித்தது. காலையில் எழுந்தவுடன் காப்பி குடிப்பதற்கு பதில் சுடச் சுட சாராயம் சாப்பிட ஆரம்பித்தார் அவர். அதன் விளைவாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. வருமானம் குறைந்தது. ஆனால் செலவு கூடியது.

உடல் நலம் சரியாக இல்லாததால் நாடக நிகழ்ச்சிகளை குறைத்துக் கொண்டாலும், நாடகத்தில் நடிக்காமலும், பாடாமலும் இருப்பது பித்து பிடித்திருப்பது போல் உள்ளதாக அவர் உணர்ந்தார்.

இந்த சமயத்தில் மீண்டும் விதி அவர்கள் வாழ்க்கையில் தன் விளையாட்டைத் தொடங்கியது. அவர்கள் இருவருக்குமிடையே இருந்த தீவிரமான அன்பையும் மீறி அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன. மீண்டும் சுந்தாரம்பாளைப் பிரிந்து சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா. மீண்டும் தனி மரமானார் சுந்தராம்பாள்.

மதுபானம் போன்ற தீய பழக்கங்களால் கிட்டப்பாவின் உடல் நாளுக்கு நாள் மெலிந்தது. 1933 மார்ச் 29-ஆம் நாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தகவல் அறிந்த சுந்தாராம்பாள் அவரை சென்னைக்கு அழைத்து வந்து டாக்டர் பீமாராவ் அவர்களிடம் காட்டினார். அவரைப் பரிசோதித்த பீமாராவ் குடல் வெந்து புண்ணாகி இருப்பதாகவும், ஈரல் சுருங்கிப் போய்விட்டதாகவும், எவ்வளவு செலவு செய்தாலும் அவர் குணமாவதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.

இருப்பினும் செலவுப் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையைத் துவங்கச் சொன்னார் சுந்தராம்பாள். தீவிர சிகிச்சை தொடங்கியது. கிட்டப்பாவின் அருகிலேயே இருந்து அவரைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார் சுந்தராம்பாள்.

எந்நேரமும் அவரது நெற்றியில் திருநீறைப்பூசி அவர் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை. கிட்டப்பா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வதற்காக மைலாப்பூரில் பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார் சுந்தாரம்பாள்.

விதி விரட்டவே பூரண குணமடைவதற்கு முன்பே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் செங்கோட்டைச்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா.

உடல் பூரண குணமடையாத நிலையில் திருவாரூரில் ஒரு நாடகத்திற்கு ஒப்புக் கொண்ட அவர் அதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தார். அதிலிருந்து படுத்த படுக்கையிலிருக்கும் நிலைக்கு ஆளானார் அவர். கால்கள் வீக்கம் கண்டன. கண்கள் மஞ்சளாயிற்று. நாட்கள் செல்லச் செல்ல அவரது முகம் வெளிறிப் போனது. உடல் துரும்பாக இளைத்தது. மெல்ல பேசும் சக்தியும் குறைந்தது.

1933 டிசம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் வயிற்று வலியால் தூடித்த அவரைப் பரிசோதித்த டாக்டர் ஒரு ஊசி போட்டார். கிட்டப்பா நாக்கு வறண்டது. சிறிதளவு தண்ணீரை விழுங்கி விட்டுத் திரும்பிப் படுத்தவர் அதற்குப் பிறகு திரும்பவேயில்லை.

கிட்டப்பாவின் மரணச் செய்தி நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டு பண்ணியது. சுந்தராம்பாளை யாராலும் தேற்ற முடியவில்லை. உயிருக்குயிராக நேசித்த தன் காதல் கணவனின் மறைவைத் தாங்க முடியாது துடித்தார் அவர்.

கிட்டப்பா இறந்தபோது அவரது வயது 28. தனது 20-வது வயதில் அவரை மணந்த சுந்தராம்பாள் ஆறு வருடங்கள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். அதிலும் பல மாதங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்திருந்தனர்.

சாதாரணமாக பெண்கள் மணமுடிக்கும் வயதான 26 வயதில் தன் கணவரை இழந்த சுந்தராம்பாள் மிகுந்த மன உறுதியோடு பொட்டையும், பூவையும் துறந்தார். வெள்ளைச் சேலை உடுத்தத் தொடங்கினார். இல்லற வாழ்விலிருந்து துறவறத்திற்குள் புகுந்தார்.

கணவன் இறந்த பிறகு பல மாதங்கள் கொடுமுடி வீட்டிற்குள்ளேயே அடைந்து கொண்டிருந்தார்.

——————————————————————————————————————————————————————————————
லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற
முதல் நடிகை சுந்தராம்பாள்

இந்தியாவிலேயே திரைப்படத்தில் நடிக்க ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள் அவர்கள்தான். எந்த கால கட்டத்தில் அவர் ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றிருக்கிறார் என்பதை சரியா உணர்ந்தால்தான் கே.பி.எஸ். படைத்திருப்பது எவ்வளவு பெரிய சரித்திரம் என்பதை உணர முடியும்.

கே.பி.எஸ். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு 14 ரூபாய். அதன்படி பார்த்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 7143 சவரன் வாங்கலாம். இன்றைய சவரன் விலை தோராயமாக ரூபாய் ஏழாயிரம் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டால்கூட கே.பி.எஸ். அன்று பெற்ற தொகை 5 கோடி ரூபாய்க்கு சமம். அதன்படி பார்த்தால் முதலில் மட்டுமல்ல- இன்று வரை அதிக சம்பளம் வாங்கிய ஒரே இந்திய நடிகை கே.பி. சுந்தராம்பாள் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

1935-ம் ஆண்டு “பக்த குசேலா’வை முந்திக்கொண்டு “நந்தனார்’ திரைக்கு வந்தது. “நந்தனார்’ வெற்றிப்படமாக அமைந்தபோதிலும் அந்த படத்திற்குப் பின் கே.பி.எஸ். வேறு படங்களில் நடிக்கவில்லை. படங்களில் நடிக்கவில்லையே தவிர காங்கிரஸ் கூட்டங்களில் தேசியப் பாடல்களையும், கோவில் கச்சேரிகளில் தெய்வீகப் பாடல்களையும் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் அவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும், செயலாளரான காமராசரும் சுந்தராம்பாளை பல கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

காங்கிரஸ் கூட்டங்களில் கூட்டம் சேர கே.பி.எஸ். அவர்களின் பாட்டுக்கள் பெரிதும் உதவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜாஜி, “”என்ன இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே” என்று வியந்தார். “”இது சுந்தராம்பாள் பாட்டுக்கு கூடிய கூட்டம்” என்று சத்தியமூர்த்தி கூறியதும் ராஜாஜி ஆச்சர்யம் அடைந்தார்.

மகாத்மா 1936-ல் தமிழிகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சுந்தராம்பாள் பிறந்த ஊரான கொடுமுடி அருகே கார் பழுதடைந்தது. அப்போது காந்தி அடிகளை கே.பி.எஸ். இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் சத்தியமூர்த்தி. வீட்டிற்கு வந்த காந்தியடிகளுக்கு வெள்ளி டம்ளரில் பால் தரப்பட்டது. “”பாலோடு இந்த டம்ளரும் எனக்குத்தானே” என்று மகாத்மா கேட்க, முகமலர்ச்சியோடு அதைத் தந்தார் கே.பி.எஸ். அதை ஏலமாக விட்டு நிதியாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அளித்தார் மகாத்மா.

1935-ஆம் ஆண்டு வெளியான “நந்தனார்’ திரைப் படத்திற்குப் பிறகு 1940-ல் வெளியான “மணிமேகலை’ திரைப்படத்தில் நடித்திருந்தார் கே.பி.எஸ். அதற்குப் பின் எந்தப் படத்திலும் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கச்சேரி, தேசியப் பாடல்கள் என்று அவரது வாழ்க்கைப் பயணம் நடைபெற்றது.

1940-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த கே.பி.எஸ். மீண்டும் 1948-ல் நடிக்க ஒப்புக் கொண்ட படம் “ஒüவையார்’. அந்த நாட்களில் “ஒüவயார்’ நாடகத்தை டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்தனர். அதில் டி.கே. சண்முகம் ஒüவையாராக நடித்தார். மிகச் சிறப்பாக மேடைகளில் ஒüவையாராக நடித்த அவரைத்தான் “ஒüவையார்’ படத்தில் நடிக்க முதலில் அணுகினார் எஸ்.எஸ். வாசன்.

ஆனால் டி.கே. சண்முகம் அவர்கள் “”நான் பெண் வேடம் போட்டது நாடக மேடைக்கு மட்டுமே சரி. சினிமாவிற்கு சரிப்பட்டு வராது. ஒரு பெண் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்றார். “”அப்படியென்றால் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்களே கூறுங்கள்” என்று எஸ்.எஸ். வாசன் கேட்க, டி.கே. சண்முகம் சொன்ன பெயர்தான் கே.பி. சுந்தராம்பாள்.

ஒüவையாராக நடிப்பதற்கு ஏற்ற தமிழ் உச்சரிப்பும், கணீர்க் குரலும் உள்ள ஒரே நபர் கே.பி.எஸ். அவர்கள்தான். அவர் ஒüவையாராகத் தோன்றினாலே போதும்~ நடிக்கவே தேவையில்லை” என்று டி.கே.எஸ். சொல்ல அதை ஏற்றுக் கொண்டார் எஸ்.எஸ். வாசன்.

கே.பி.எஸ். அவர்களிடம் யார் மூலம் தொடர்பு கொள்வது என்று சிந்தித்த வாசன் அவர்களுக்கு “ஹிந்து’ சீனிவாசன் நினைவு வந்தது. சீனிவாசன் வாசனுக்கு நல்ல நண்பர். கே.பி.எஸ். அவர்களுக்கோ அவர் வழிகாட்டியாக இருந்தார். சீனிவாசன் அவர்கள் துணையுடன் வந்த வாசன் கேட்க தட்டாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.

கே.பி.எஸ். படத்தில் நடிக்க வருடம் ஒருலட்ச ரூபாய் சம்பளம், அது தவிர மாதம் ஒரு தொகை தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த லட்ச ரூபாய் சம்பளத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இன்னொரு விவரத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நாளில் ஜெமினி ஸ்டூடியோவை வாங்க வாசன் கொடுத்த பணம் 86,496 ரூபாய்தான்.

1947-ல் தொடங்கப்பட்ட “ஒüவையார்’ படம் 15.8.1953 அன்று சுதந்திரதின வெளியீடாக வெளிவந்தது. “”படம் முடிவடைந்ததும் எஸ்.எஸ். வாசன் அவர்கள் அப்போது ஜெமினியில் பொது மேலாளராக இருந்த நம்பியாரிடம் காசோலையைக் கொடுத்தனுப்பி ஆறு வருடத்துக்குரிய தொகையை அம்மையாரையே எழுதிக் கொடுக்கும்படி சொல்லி அனுப்பியிருந்தார்.

ஆனால் சுந்தராம்பாள் அந்த காசோலையில் பெருந்தன்மையுடன் நான்கு லட்சும் ரூபாயை மட்டும் பூர்த்தி செய்து கொள்வதாக அவரிடம் சொன்னார்” என்று “”இசைஞானப் பேரொளி பத்மஸ்ரீ சுந்தராம்பாள்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பாஸ்கரதாசன். ஆனால் “”இது ராஜபாட்டை அல்ல” என்ற தனது புத்தகத்தில் நட்சத்திரத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த சம்பவத்தைப் பற்றி மட்டும் சிவகுமார் எழுதியுள்ள தகவல் பாஸ்கரதாசன் கூற்றுக்கு மாறுபட்டதாக இருக்கிறது.

ஜெமினி உருவாக்கிய ஒரு படம் முடிய ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. படத்தின் கதாநாயகிக்கு (ஆண்டுக்கு) ஒரு லட்சம் சம்பளம் பேசி ஓராண்டுக்குள் படத்தை முடிப்பதாக ஒப்பந்தம். திட்டமிட்ட காலவரைக்குள் படம் முடியவில்லை. காலம் கடந்தாலும் மாபெரும் படைப்பாக அது உருவாகியது.

தனது அந்தரங்கச் செயலாளர் பி.பி. நம்பியாரை அழைத்தார் வாசன். “”ஹீரோயினுக்கு ஓராண்டில் படம் முடிப்பதாகப் பேசி ஒரு லட்சம் சம்பளம் முடிவு செய்தோம். இப்போ ஏழு வருஷம் ஆயிடுச்சு. அதனால நாம கொஞ்சம் கூட்டி நாலு லட்சம் தருவோம்” என்றார்.

பேராசை பிடித்த ஹீரோயின் “”ஐயறு சொன்ன சொல் தவறமாட்டாரு. ஏழு வருஷம் வேலை செஞ்சிட்டு நாலு லட்சம் சந்தா எப்படி?” என்று கேள்வி கேட்டார்.
உடனே நடிகையின் விருப்பப்படி ஏழு லட்சம் தர சம்மதித்தார். ஆனால் அவர் பேராசையைக் கண்டிக்கும் வகையில் ஓராண்டு வருமானம் 7 லட்சம் என்பது போல எழுதி வாங்கிக் கொண்டார்.

வருமானவரி இலாக்காவுக்கு விபரம் தெரிந்தால் ஏழு லட்சத்தில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் வரியாகப் போய்விடும்” என்பதைப் பின்னர் அறிந்த நடிகை தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்க, உடனே ஏழாண்டுக்கும் வருமானத்தைப் பிரித்து எழுதிக் கொடுத்தார்.”

மேற்கண்டவாறு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சிவகுமார்.

“ஒüவையார்’ படத்தைப் பார்த்த டி.கே. சண்முகம் “”நீங்கள் நடிக்கவில்லை. ஒüவையாராகவே வாழ்ந்திருக்கிறீர்கள்” என்று கே.பி.எஸ்.ûஸ புகழ்ந்தார்.

“ஒüவையார்’ திரைப்படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த திரைப்படம் கலைஞரின் கை வண்ணத்தில் உருவான “பூம்புகார்’.

“”பூம்புகார்” திரைப்படத்தை எடுப்பது என்று முடிவெடுத்தவுடன் கவுந்தியடிகளாக கே.பி.எஸ், அவர்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுத்த கலைஞர் எஸ்.எஸ். ராஜேந்திரனையும் அழைத்துக்கொண்டு கே.பி.எஸ். அவர்களின் சம்மதம் பெற கொடுமுடி புறப்பட்டார். அவர்கள் கோரிக்கையை கேட்டவுடன் முதலில் தனது மறுப்பைத் தெரிவிக்கிறார் கே.பி.எஸ்.

“”கவுந்தியடிகளாக நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும்” என்று இருவரும் வற்புறுத்த “”நான் கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவள், நீங்களோ திராவிடர் கழக கொள்கையுடையவர்கள். எப்படிப் பொருத்தமாக இருக்கும்?” என்று தேங்காய் உடைப்பது போல் பட்டென்று உடைக்கிறார் கே.பி.எஸ்.

கலைஞரும் விடவில்லை. “”நாங்கள் எடுப்பது கடவுள் படமோ, கட்சிப் படமோ அல்ல. கற்புக்கரசி கண்ணகி பற்றிய படம். நீங்கள் நடிக்கப் போவது சமணத்துறவி வேடம்” என்கிறார்.

“”சரி, மகனே. பழனிக்குச் சென்று முருகனின் உத்தரவு பெற்ற பிறகுதான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும்” என்று இறுதியாக கே.பி.எஸ். சொல்ல, “”முருகனிடம் கேட்கும்போது கருணாநிதி கேட்டதாகச் சொல்லுங்கள். என் கோரிக்கை என்பதால் முருகன் மறுக்கமாட்டார். உடனே ஒப்புதல் அளித்து விடுவார்” என்று விளையாட்டாகச் சொல்கிறார் கலைஞர்.

அவர் விளையாட்டாகச் சொன்னது பலிக்கிறது. சில நாட்களில் கொடுமுடியில் இருந்து கலைஞருக்குத் தகவல் வருகிறது. “”முருகன் உத்தரவு கொடுத்து விட்டான்” என்று.

தன்னுடைய லட்சியத்தில் யாருக்கும் விட்டுக் கொடுக்காத போக்கை கே.பி.எஸ். கொண்டிருந்தார்.

“”கடவுளை நிந்திக்கும் பாடலைப் பாடமாட்டேன்” என்று “பூம்புகார்’ படப்பிடிப்பில் நிர்த்தாட்சண்யமாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது. மாற்றப்பட்டது பாடல் வரிகள்” எனது தனது “வியப்பளிக்கும் ஆளுமைகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமினாதன்.

“பூம்புகார்’ திரைப் படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் என்று “திருவிளையாடல்’, “துணைவன்’ ஆகிய படங்களைச் சொல்லலாம். இவைகள் தவிர “மகாகவி காளிதாஸ்’, “கந்தன் கருணை’, “உயிர் மேல் ஆசை’, “சக்திலீலை’, “காரைக்கால் அம்மையார்’, “திருமலை தெய்வம்’ (கடைசி படம்) ஆகிய படங்களிலும் நடித்தார் அவர்.

கே.பி.எஸ். நடித்து வெளிவராத ஒரே படம் சிவாஜி, தேவிகா ஜோடியாக நடித்த “ஞாயிறும் திங்களும்’. படம் ஏழாயிரம் அடி வளர்ந்த நிலையில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சடகோபன் இறந்துவிட படமும் நின்று போனது.

அன்று சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரை “ஏண்டாப்பா’ என்றும், கலைஞர் கருணாநிதியை “”மகனே” என்றும் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியை “அண்ணா’ என்றும், அழைக்கும் உரிமை பெற்றிருந்த கே.பி. சுந்தராம்பாள் உடல்நிலை 1980-ஆண்டு நலிவடையத் தொடங்கியது.

24.9.80 அன்று இரவு 9.30 மணிக்கு அறிஞர் அண்ணாவால் “”கொடுமுடி கோகிலம்” என்று அழைக்கப்பட்ட கே.பி.எஸ். முருகனடி சேர்ந்தார். உடன் தகவல் அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த உத்தரவிடும் எம்.ஜி.ஆர். அப்போது நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்த மேஜர் சுந்தரராஜனை அழைத்து செலவுகளுக்கு தன் சொந்தப் பணத்தைத் தருகிறார்.

கலைஞர் காலையில் கே.பி.எஸ். அவர்கள் வீட்டுக்கு வந்து மலர் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல, நடிகர் சங்கத்தில் 25.9.80 அன்று காலை முதல் மாலை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கே.பி.எஸ். அவர்களின் உடல் வைக்கப்பட்டது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், சிவகுமார், பி.எஸ். வீரப்பா, எஸ்.வி. சஹஸ்ரநாமம், இயக்குநர்கள் முக்தா சீனிவாசன், பா. நீலகண்டன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

கலைஞர் வானொலியில் இரங்கற்பா பாடினார்

கலை உலகில் தமிழ் இன்பம் கொட்டக் கொட்ட
கொடிகட்டிப் பறந்த கோகிலம் மறைந்ததோ

Posted in Actress, Cinema, Drama, Films, History, Hits, KBS, Kittappa, Lakshmanan, Movies, music, Nandhanar, Singer, Stage, Sundarambaal, Sundarambal, Sundharambaal, Sundharambal, Suntharambaal, Suntharambal, Superhits, Theater, Theatre | Leave a Comment »

Chithra Lakshmanan series in Cinema Express – K Subramaniyam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

நெஞ்சம் மறப்பதில்லை – BBC Tamil

 

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம்பிடித்தவர்கள் பற்றிய தொடர்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த மேதைகள்,சிரிக்க வைத்த சிந்தனையாளர்கள், நையாண்டி நாயகர்கள், நடிப்புச் சுடர்கள் மற்றும் சிந்திக்க வைத்த எண்ணற்ற இயக்குனர்கள் என்று, தமிழ் திரையுலகில் முத்திரை, பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர் நிகழ்ச்சி ஒன்று, செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், தமிழோசையில் ஒலிபரப்பாகும்.

இத் தொடரை பி பி சியின் முன்னாள் தயாரிப்பாளர் சம்பத்குமார் தயாரித்து வழங்குகிறார்.

பகுதி 1

முதல் பகுதியில் தியாகபூமி, சேவாசதன் போன்ற திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனரான கே சுப்பிரமணியன் அவர்களின் திரையுலக சாதனைகள் குறித்து அவரின் மகன் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துக்களை கேட்கலாம்.

————————————————————————————–

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

இயக்குனர்களின் முன்னோடி!

“பவளக் கொடி’யின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த முருகன் டாக்கீஸ் என்ற நிறுவனத்திற்காக கே. சுப்ரமணியம் அவர்கள் இயக்கிய படம் “நவீன சாரங்கதாரா’. அப்போதெல்லாம் ஒரே கதையைப் பல தயாரிப்பாளர்கள் படமாக எடுப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

அதே போன்று “”சாரங்கதாரா’ கதையையும் லோட்டஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்தினர் படமாக்கிக் கொண்டிருந்ததால் தனது படத்திற்கு “நவீன சாரங்கதாரா’ என்று பெயரிட்டார் கே. சுப்ரமணியம். “பவளக் கொடி’யில் ஜோடிகளாக இணைந்த தியாகராஜ பாகவதரும், எஸ்.டி. சுப்புலட்சுமியும் இந்த படத்திலும் நாயகன் நாயகியாக நடித்தனர்.

இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான ஊதியத்தை முன்னதாகவே பெற்றுக்கொண்டு, அந்த பணத்தை மூலதனமாகக் கொண்டு “மதராஸ் யுனைடட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தை கே. சுப்ரமணியம் அவர்களும், எஸ்.டி. சுப்புலட்சுமி அவர்களும் கூட்டாகத் தொடங்கினர். அந்த பட நிறுவனத்தின் மூலம் சமூக சீர்திருத்தக் கதைகள் கொண்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தனர்.

“பவளக் கொடி’ படத்தில் பணியாற்றியபோதே ஒரு இயக்குனர் என்ற நிலையில் மட்டுமின்றி நற்குணங்கள் பலவற்றிற்கு சொந்தக்காரராக சுப்ரமணியம் அவர்கள் விளங்கியது சுப்புலட்சுமி அவர்களின் மனதைக் கவர்ந்தது. சுப்ரமணியம் அவர்களுடைய கலைத் திறனும், பெண்களை அவர் மதிக்கின்ற பாங்கும் அவர் மீது சுப்புலட்சுமி கொண்டிருந்த உயர்ந்த அபிப்ராயத்தை உறுதி செய்தன.

ஆகவே தன்னை அறிமுகப்படுத்திய அந்த கலை மேதையையே மணந்துகொண்டு இல்லற வாழ்க்கையைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்தார் அவர். இருவரும் ஏற்கனவே கூட்டாக ஒரு பட நிறுவனத்தை நடத்தி வந்ததால் இருவருக்குமிடையே ஏற்பட்ட நெருக்கத்தால் சுப்ரமணியம் அவர்களும் சுப்புலட்சுமி அவர்களின் விருப்பத்திற்கு தடையேதும் கூறாமல் அவரை மணந்து கொண்டார்.

“நவீன சாரங்கதாரா’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன் சுப்ரமணியம் – சுப்புலட்சுமி தம்பதியர் தாங்கள் துவங்கியிருந்த நிறுவனத்தின் மூலம் “சதாரம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தனர். இந்தத் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெறவில்லை.

அதே நேரத்தில் லோட்டஸ் நிறுவனத்தினர் தயாரித்த “சாரங்கதாரா’ படமும் படு தோல்வியடைந்தது. இப்படத்தின் தோல்வியை பற்றி கவலைப்படாமல் “நவீன சாரங்கதாரா’வின் கதை முடிவில் சில மாற்றங்களைச் செய்து படமாக்கினார் கே. சுப்ரமணியம். படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அடுத்து “உஷா கல்யாணம்’, “கிழட்டு மாப்பிள்ளை’ ஆகிய இரண்டு கதைகளை ஒரே திரைப்படமாக எடுத்து வெளியிட்ட கே. சுப்ரமணியம் அதைத் தொடர்ந்து தனது சொந்த நிறுவனத்தின் சார்பில் “பக்த குசேலா’ படத்தை எடுத்தார். இப்படத்தில் கிருஷ்ண பகவானாகவும், குசேலரின் மனைவியாகவும் இரு வேடங்களில் நடித்தார் எஸ்.டி. சுப்புலட்சுமி.

ஆண், பெண் ஆகிய இரு வேடங்களில் படம் முழுவதிலும் நடித்த ஒரே பெண்மணி இன்றுவரை எஸ்.டி. சுப்புலட்சுமி ஒருவர் மட்டுமே. குசேலர் பாத்திரத்திற்கு அன்று நடித்துக் கொண்டிருந்த எந்த நடிகரும் பொருந்த மாட்டார்கள் என்று சுப்ரமணியம் அவர்கள் கருதியதால் தான் ஏற்கனவே பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியிருந்த பாபநாசம் சிவன் அவர்களையே அந்த பாத்திரத்திற்கு தேர்வு செய்தார்.

பாபநாசம் சிவன் அவர்களின் ஒல்லிய தோற்றம், இடுங்கிய கண்கள், ஒட்டிய வயிறு ஆகியவைகள் குசேலராகவே அவரை சுப்ரமணியம் அவர்களின் கேமரா கண்களுக்கு அடையாளம் காட்டியுள்ளன. “”நாடக மேடையில் நடித்து அனுபவம் பெற்ற நடிகர்களோ, நடனக் கலையில் தேர்ச்சி பெற்றவர்களோதான் சினிமாவில் நடிக்க தகுதியானவர்கள் என்றில்லை. கலை ஆர்வம் உள்ள எவராலும் நடிக்க முடியும்” என்ற கருத்தினைக் கொண்ட கே. சுப்ரமணியம் அவர்கள் திரை உலகின் எல்லா பிரிவுகளிலும் ஏராளமான புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர்.

பின்னாளில் தொடர்ந்து பல புது முகங்களை கே. சுப்ரமணியம் அவர்களைப் போலவே பல துறைகளிலும் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற திரைப்பட இயக்குனர்களுக்கு முன்னோடி என்றே அவரை குறிப்பிட வேண்டும். அவர் அறிமுகப்படுத்திய கலைஞர்களின் பட்டியலை பின்னால் பார்ப்போம்.

“பக்த குசேலா’வைத் தொடர்ந்து அவர் தயாரித்த “பாலயோகினி’ திரைப்படம் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்தது. அந்தத் திரைப்படத்தில் பிராமண விதவைப் பாத்திரம் ஒன்றில் நிஜ வாழ்க்கையில் விதவையாக இருந்த ஒரு பிராமண பெண்மணியையே நடிக்கச் செய்தார் அவர்.

அதனால் பழைமையில் ஊறிய சிலர் கூடி அவரை பிராமண ஜாதியைவிட்டு தள்ளி வைத்தனர். அதனாலெல்லாம் அவர் மனம் தளரவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு மேலும் வேகமாகவும், அழுத்தமாகவும் சமுதாய சீர்திருத்தப் படங்களை எடுக்கத் தொடங்கினார். அவரை ஒரு “பிராமணப் பெரியார்’ என்றே சொல்லலாம் என்று “தமிழ்ப்பட உலகின் தந்தை’ என்ற நூலில் அதன் ஆசிரியர் வலம்புரி சோமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் உருவாகி வெளியான “பாலயோகினி’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

திறமையான தொழில் நுணுக்கக் கலைஞர்கள், தரமான லாபரெட்டரி, படமெடுக்க எல்லா வசதிகளும் கொண்ட ஸ்டூடியோ இப்படி எல்லா சூழ்நிலையும் சாதகமாக அமைந்திருந்ததால் தனது முதல் படத்திற்குப் பிறகு ஆறு படங்களை கல்கத்தாவிலேயே தயாரித்த சுப்ரமணியம் அவர்களுக்கு சென்னையில் எல்லா வசதிகளும் அமையப் பெற்ற ஒரு ஸ்டூடியோவை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமுள்ள சுப்ரமணியம் சில தயாரிப்பாளர்களை கூட்டாக சேர்த்துக்கொண்டு இப்போது ஜெமினி பார்சன் அப்பார்ட்மென்ட், பார்க் ஹோட்டல், பார்சன் காம்ப்ளெக்ஸ் ஆகியவை உள்ள இடத்தில் “மோஷன் பிக்சர் புரொட்யூசர்ஸ் கம்பைன்ஸ்’ என்ற நிறுவனத்தை நிறுவினார்.

அவர் ஸ்டூடியோவை நிறுவுவதற்கு முன்னால் அந்த இடம் “ஸ்பிரிங் கார்டன்ஸ்’ என்ற பெயரில் பெரும் காடாக இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் இந்த ஸ்பிரிங் கார்டன்ஸ் என்ற இடத்தில் இருந்து கொண்டுதான் ஆங்கிலேயர் ஆட்சிக்கு இந்தியாவில் அடிகோலிய ராபர்ட் கிளைவ் ஆட்சி புரிந்ததாக கூறப்படுகிறது. ஸ்டூடியோவை நிறுவியதும் கல்கத்தாவிலிருந்து சைலன்போஸ், கமால்கோஷ் ஆகிய ஒளிப்பதிவாளர்கள், திரன்தாஸ் குப்தா என்ற லாபரெட்டரி நிபுணர், சின்ஹா என்ற ஒலிப்பதிவாளர், ஹரிபாபு என்ற ஒப்பனைக் கலைஞர் என்று பல திறமைசாலிகளை சென்னைக்கு அழைத்து வந்தார்.

இவர்களில் பலர் அதற்குப் பிறகு சென்னை வாசிகளாகவே மாறி பல திரை படங்களில் தங்கள் திறமையைக் காட்டினார்கள். தனது சொந்த ஸ்டூடியோவில் தனது அடுத்த படமான “சேவா சதனம்’ திரைப் படத்தைத் தயாரித்தார் சுப்ரமணியம் அவர்கள்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த “சேவா சதனம்’ கதையின் மூலக்கதை ஒரு ஹிந்தி நாவல்.

அந்த நாவல் மொழி பெயர்க்கப்பட்டு “சேவா சதனம்’ என்ற பெயரில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. இதை எந்த இடத்தில் கே. சுப்ரமணியம் அவர்கள் தயாரித்தாரோ அந்த “மோஷன் பிக்சர் புரொட்யூசர்ஸ் கம்பெனி’ என்ற ஸ்டூடியோவை பின்னாளில் வாங்கியவர் “ஆனந்தவிகடன்’ அதிபரான எஸ்.எஸ். வாசன் அவர்களே.

ஆகவே பின்னாளில் ஜெமினி ஸ்டூடியோ ஸ்தாபிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்தில் முதலில் படமாக்கப்பட்ட கதையும் எஸ்.எஸ். வாசன் அவர்களின் ஆனந்த விகடனில் வெளியான கதைதான் என்பதை எண்ணிப் பார்க்கும்போது காலம் போகும் சில விசித்திர முடிச்சுகள் பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை.

“சேவா சதனம்’ படத்தில் இந்தியாவின் இணையற்ற இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அறிமுகமானதைப் பற்றி அவரது வாழ்க்கைக் குறிப்பில் விரிவாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதால் அதைத் தவிர்த்துவிட்டு பெரும் புரட்சியைத் தமிழ்ப் பட உலகில் உண்டு பண்ணிய “தியாக பூமி’யைப் பற்றி அடுத்து பார்ப்போம்.

அந்தப் படம் உருவான விதம் குறித்து கீழ்க்கண்டபடி தனது “தமிழ் சினிமாவின் கதை’ என்ற புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் அந்த நூலின் ஆசிரியரான அறந்தை நாராயணன். “”டைரக்டர் கே. சுப்ரமணியமும், அப்போது “ஆனந்த விகடன்’ ஆசிரியராயிருந்த “கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் நண்பர்கள்.

தமிழிப் பத்திரிகை உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உருவாக்க இந்த நண்பர்கள் திட்டமிட்டார்கள். பாக்யராஜின் “மெüன கீதங்கள்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே படத்தின் ஃபோட்டோக்களுடன் “குமுதம்’ வார ஏட்டில் அதே கதை தொடர் கதையாக வெளி வந்ததே! நினைவிருக்கிறதா?

இந்தப் புதுமையைத் தமிழில் முதன் முறையாக செய்தவர்கள் டைரக்டர் கே. சுப்ரமண்யமும், கல்கி கிருஷ்ணமூர்த்தியும்தான். ஆனந்த விகடனில் தொடர் கதையாக வரத் தொடங்கியபோதே அந்தக் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வந்தது. திரைப்படத்தின் ஸ்டில் ஃபோட்டோக்களே தொடர் கதைக்கான படங்களாகப் பிரசுரிக்கப்பட்டன. சினிமாவுக்கென்றே அதுவும் எஸ்.டி. சுப்புலட்சுமி, பேபி சரோஜா, பாபநாசம் சிவன் ஆகிய நடிகர்களை மனதில் வைத்தே கல்கி இந்தக் கதையை எழுதினாராம்.

அந்தத் தொடர் கதைதான் திரைப்படமாக வெளிவந்த “தியாக பூமி’.
மே மாதம் 20-ஆம் தேதியன்று வெளியான “தியாக பூமி’ படம் நல்ல வெற்றி பெற்றது. தியாகபூமி புடவை, தியாகபூமி வளையல் என்றெல்லாம் பார்டர்களும், புடவைகளும், வளையல்களும் தோன்றின. அது மட்டுமல்ல, படத்தின் நாயகியான உமாராணி பேரிலும் பொருள்கள் விற்பனைக்கு வந்தன. “உமாராணி பார்டர், உமாராணி ஹேர் ஸ்டைல்’ ஆகியவையும் தோன்றின. பட்டிக்காட்டு சாவித்திரியாகவும், உமாராணியாகவும் இரு வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார் எஸ்.டி. சுப்புலட்சுமி.

“தியாக பூமி’ படத்தின் இறுதிக் காட்சிகளில் தேசியக் கொடியைக் கரங்களில் தாங்கியவாறு பெண்கள் ஊர்வலமாகப் போகிறார்கள்.

“”பந்தம் அகன்று நம் திருநாடு உயர்ந்திட வேண்டாமா?” என்று பாடியபடி அவர்கள் போகிறார்கள்.

சாவித்திரியின் இதயத்தில் இந்த ஊர்வலமும் இந்தப் பாடலும், புதிய உணர்ச்சியை, உத்வேகத்தை ஊட்டுகிறது.

தேசத்துக்காகப் பாடுபட புறப்படுகிறாள் சாவித்திரி.

“ஜெய ஜெய பாரதம்’ என்ற தேச பக்தர்கள் முழக்கத்துடன் போலீஸ்வேன் காராக்கிரகம் நோக்கிப் போகிறது.

“தியாக பூமி’ படத்தின் கதை இவ்வாறு முடிகிறது இந்தப் படம் ஓடலாமா? புகழ் பெறலாமா?

எனவே “தியாக பூமி’ படத்துக்கு தடையுத்தரவு தேடிவந்தது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயணன்.

பிரச்சினைகளை எதிர்கொண்டே பழக்கப்பட்ட கே. சுப்ரமணியம் வெள்ளையர் ஆட்சி தடை விதித்தால் அடங்கி விடுவாரா? “தியாக பூமி’ படம் மக்களைச் சென்றடைய வேகமாக திட்டங்கள் வகுத்தார்.

cinemaexpress.com

Posted in Bhagyaraj, Bhakyaraj, Chithra, Chitra, Cinema, Director, Express, Films, History, Incidents, Kalki, Lakshmanan, Lashmanan, Laxman, Life, MKT, Movies, Papanasam Sivan, Pavalakkodi, Sarangadhara, Sarangathara, SD Subbulakshmi, Seva sadhanam, Sevasadhanam, Sevasathanam, Subramaniam, Subramaniyam, Subramanyam, Thyaga Bhoomi, Thyaga Boomi | Leave a Comment »

Bharathidasan University’s Professor gets ‘Young Scientist’ award

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

பாரதிதாசன் பல்கலை. விரிவுரையாளருக்கு இளம் விஞ்ஞானி விருது

திருச்சி, பிப். 14: பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை உணர்வு மைய விரிவுரையாளர் சொ. இலக்குமணனுக்கு மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் “இளம் விஞ்ஞானி’ விருது வழங்கியுள்ளது.

இவருக்கு ஆய்வு நிதியாக ரூ. 10.80 லட்சமும் வழங்கப்படுகிறது.

தமிழக கடலோரப் பகுதிகளில் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், சுனாமி பேரழிவு, இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் கடலோர வேளாண் நிலங்கள், சதுப்பு நிலங்கள், இறால் வளர்ப்புப் பகுதிகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் ஆகியன எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றுக்கான மறுசீரமைப்பு ஏற்பாடுகள் குறித்தும் இவர் ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த ஆய்வை செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட நுண்ணிய புகைப்படங்களைக் கொண்டும், புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தின் மூலமும் மேற்கொள்ள உள்ளார்.

Posted in Agriculture, Award, Bharathidasan University, Environment, Factory waste, Forest, Global Warming, Impact, Lakshmanan, Pollution, Prize, Recognition, Research, S Lackumanan, scientist, Seashore, So Lakkumanan, Technology | Leave a Comment »