டி.ஜே.எஸ். ஜார்ஜ்
ஏனிந்த மௌனமம்மா..?
காந்தியக் கொள்கை விஷயத்தில் நாம் ஆஷாடபூதித்தனத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறோம். காந்திஜியின் சொந்த மாநிலமான குஜராத்தே வன்முறைக் களமாகத் திகழ்ந்து அவரைச் சிறுமைப்படுத்துவதில் வியப்பு ஏதும் இல்லை.
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அகிம்சை குறித்துத் தேனொழுகப் பேசிய சோனியா காந்தி, இந்தியாவிலோ, மியான்மரிலோ ஏற்பட்டுவரும் ரத்தக்களரி குறித்து வாய் திறவாமல் இருந்ததிலும் வியப்பு ஏதும் இல்லை.
உலகின் எந்தப் பகுதியிலாவது நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை ஆட்சி மீது இந்திய அரசு கண்டனக் குரல் எழுப்பி நாம் கடைசியாக கேட்ட சந்தர்ப்பம் எது என்று நினைவுகூரமுடியுமா?
அநியாயத்தைத் தட்டிக்கேட்காமல் அமைதி காத்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த அமைதிக்கு அர்த்தம் இருக்கிறது; அப்படியாவது நமக்கு எந்த ஆதாயமாவது கிடைத்திருக்கிறதா?
இப்படிப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் சீனாதான் சமர்த்து. நம்முடைய அந்தமான் தீவின் வடக்கு முனைக்கு அருகில் கல்லெறி தூரத்தில், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் கடற்படை தளத்தை சீனா நிறுவியுள்ளது.
பாகிஸ்தானில் மலைப்பகுதியில் நெடுஞ்சாலைகளையும், ஆழ்கடலில் கடற்படை தளத்தையும் அமைத்துக்கொண்டு ராணுவரீதியாகத் தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ளது சீனா.
சர்வதேச அரங்கில், ராஜீயரீதியாக தான் விதைக்கும் ஒவ்வொரு விதைக்கும் ஈடாக, 10 பழங்களைப் பறித்துக் கொள்கிறது சீனா.
வங்கதேசத்துக்காக நமது முப்படைகளைத் திரட்டிச் சென்று போரிட்டு விடுதலை வாங்கித் தந்தோம், பதிலுக்கு நமது எல்லையில் புதிய எதிரியை இப்போது சம்பாதித்துள்ளோம். போதாதக்குறைக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வேறு தலையில் கட்டிக்கொண்டு அழுகிறோம்.
வங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்ததற்காக நம்மை மிரட்ட தனது விமானந்தாங்கிக் கப்பலை இந்துமகா சமுத்திரத்துக்கு அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.
இராக்கைவிட மியான்மரில் இயற்கை வளம் அதிகம் என்கிறார்கள், இது இன்னமும் அமெரிக்காவின் துணை அதிபர் டிக் சினீயின் கண்ணில் படவில்லை என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது; இல்லை ஒருவேளை பட்டுவிட்டதா?
ராணுவத் தலைமை ஆட்சியாளர் தாண் ஷ்வேயின் மாப்பிள்ளை தேசா, சாதாரணமானவராக இருந்து குபேரனாகிவிட்டார் என்கிறார்கள்.
நாட்டின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம், ராணுவக் கொள்முதல் எல்லாமே அவரைச்சுற்றித்தான் இருக்கும் என்பது புரிகிறது. அவருக்கென்று சொந்தமாகவே ஒரு விமானம் கூட இருக்கிறதாம்.
சர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடை இருக்கிறதோ இல்லையோ, ஹால்பர்ட்டன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மியான்மரில் ஜனநாயகம் மலர காலூன்ற இது நல்ல நேரம். (ஹால்பர்ட்டன் என்பது எண்ணெய்த் துரப்பணத் துறையில் அனுபவம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனம்).
நான் சொல்வது கற்பனையோ அதீதமோ அல்ல; எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் அமெரிக்காவின் கரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கின்றன என்பது சமீபகாலத்தில் சி.ஐ.ஏ.வின் ரகசியங்கள் அம்பலமானபோது தெரியவந்துள்ளது.
1988-ல் லாக்கெர்பி விமான விபத்து நினைவில் இருக்கிறதா? அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான்! இறுதியில் ஒரு லிபியர்தான் அந்த விபத்தின் பின்னணியில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
மால்டாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்தான் அந்த சாட்சியத்தையும் அளித்தார். அவருக்கு அமெரிக்க அரசு 20 லட்சம் டாலர்களைப் பரிசாகத் தந்தது. லிபியர் இப்போது கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.
1980-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்டு அந்நாளைய சோவியத் யூனியன் திண்டாடியது நினைவுக்கு வருகிறதா? அமெரிக்க, பிரெஞ்சு உளவுப்படையினர்தான் அதற்குக் காரணம்.
ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் மீள முடியாமல் சிக்கிக்கொண்டால், சோவியத் யூனியனே சிதறுண்டுவிடும் என்று பிரெஞ்சு உளவுப்பிரிவினர் தகவல் அளித்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகளில் அதிபர் ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியது.
சோவியத் துருப்புகளை ஹெராயின் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்குவதும் பிரெஞ்சு உளவுத்துறை வகுத்துக் கொடுத்த திட்டம்தான் என்று “”காவ் பாய்ஸ்” என்ற நூலின் ஆசிரியர் பி. ராமன் தெரிவிக்கிறார்.
சோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட ஜிகாதிகளுக்கும் தனி ஊக்குவிப்பு தரப்பட்டது. உலகெங்கிலுமிருந்தும் ஜிகாதிகள் அணி திரண்டு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து சோவியத் துருப்புகளுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களைப் படுதோல்வி அடையவைத்தனர்.
அமெரிக்கா பணமும் ஆயுதமும் கொடுத்து அப்படி ஊக்குவித்த ஜிகாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.
காலப்போக்கில் எதிர்பார்த்தபடியே சோவியத் யூனியன் சிதறுண்டு போனது.
அதே சமயம் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியும் கலகலத்துக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கர்களே இஸ்லாத்துக்கு மாறிவிடுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் மிதக்கிறார் பின் லேடன்.
மியான்மரில் நடக்கும் கலவரங்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; பாகிஸ்தானிலும் தில்லியிலும் நடப்பனவற்றின் பின்னணியில் எந்த அளவுக்கு அமெரிக்காவின் கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மியான்மரிலும் இருக்கும்.
(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)