Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘LA’ Category

External Affairs – Indians held in Foreign Prisons: N Sureshkumar

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

அந்நியச் சிறைகளில் வாடும் இந்தியர்கள்

என். சுரேஷ்குமார்

ஆஸ்திரேலியாவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் ஹனீஃபை விடுதலை செய்ய இந்திய நீதிமன்றங்கள் முதல் உள்துறை, வெளியுறவுதுறை அமைச்சகங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஹனீஃப் ஜூலை 29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, மீண்டும் ஹனீஃப்புக்கு ஆஸ்திரேலியா செல்ல விசா வழங்க வேண்டும் என்று, வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய தூதரகமும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹனீஃபை போல சந்தேகத்தின்பேரில் பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக அடைபட்டிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்ய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் கேள்வி.

சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அந்தப் புள்ளி விவரத்தில், வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியர்களுள் சுமார் 6,700 பேர் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்

  • சவூதி அரேபியாவில் உள்ள இந்தியக் கைதிகளின் எண்ணிக்கை 1,116,
  • துபாயில் 825,
  • சிங்கப்பூரில் 791,
  • பாகிஸ்தானில் 655,
  • மலேசியாவில் 545 பேர் என்ற புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.

இதேபோல

  • லண்டனில் 239 பேர்,
  • அமெரிக்காவில் 218,
  • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 64,
  • ஆப்பிரிக்காவில் 29 பேர்,
  • பெல்ஜியம்,
  • டென்மார்க்,
  • பிரான்ஸ்,
  • ஹாங்காங்,
  • லிபேரியா,
  • நெதர்லாந்து,
  • சுவிட்சர்லாந்து சிறைகளில் கிட்டத்தட்ட 419 பேர்,
  • இத்தாலி,
  • ஸ்பெயின்,
  • கிரீஸ்,
  • போர்ச்சுகலில் 103 பேர்,
  • செக் குடியரசு,
  • போலந்து,
  • பெலாரஸ்,
  • மால்டோவாவில் சுமார் 150 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வெளிநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்களுள் 1379 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் 1,343 பேர் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், இதுசம்பந்தமாக இந்தியத் தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

இவ்வாறு வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் 90 சதவீத குற்றம் முறையான விசா சம்பந்தமான ஆவணங்கள் இல்லாததுதான்.

இக்குற்றத்திற்கு யார் காரணம்? முதலாவது, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக முதன்முதலாகச் செல்லும் இந்தியர்களுக்கு குடிபெயர்தல் குறித்த போதிய விவரமும், விழிப்புணர்வும் இல்லாதது.

இரண்டாவது நமது இந்திய அரசு.

புற்றீசலாய் முளைத்துள்ள வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் தனியார் ஏஜென்சிகள். இவற்றின் மூலமாகத்தான் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இன்று வெளிநாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.

வங்கதேச சிறையில் தண்டனைக் காலம் முடிந்து கிட்டத்தட்ட 200 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டுத் தூதரகம் நம் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, விடுதலையடைந்த கைதிகளை மீட்டுச் செல்லுமாறு அழைப்பு விடுத்தும் இந்தியத் தூதரகம் பாரா முகமாய் இருப்பதாக ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள தனியார் தொண்டுநிறுவனம் ஒன்று ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேசியாவில் வசிக்கிற இந்தியர்கள் மொத்தம் 16 லட்சம். இதுதவிர கடல்கடந்து வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் மொத்தம் 1,39,716 பேர். இதில் தற்போது 20,000 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 90 சதவீத இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குடிபெயர்தல் (ஐம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) தொடர்பான சரியான ஆவணங்கள் இல்லாதது. மேலும் 10 சதவீதத்தினர் போதைப் பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனராம். இவர்களின் உடல்கள் கூட முறையாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கசப்பான உண்மை.

இப்போதைய அவசரத்தேவை புற்றீசலாய் முளைத்துள்ள தனியார் ஏஜென்சிகளைக் கண்காணிப்பது, குடிபெயர்தல் குறித்த தகவல் மையங்களை பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் அமைத்தல் ஆகும்.

வெளிநாட்டுக்கு வேலைநிமித்தமாக முதன்முறையாகச் செல்லும் இந்தியர்களுக்குக் குடிபெயர்தல் குறித்த ஆயத்த பயிற்சி, அதாவது அந்நாட்டின் கலாசாரம், அந்நாட்டினுடைய அடிப்படையான சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி அவசியமானது.

குடிபெயரும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட உதவி, குடிபெயர் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலமே வருங்காலங்களில் இந்த கைது எண்ணிக்கையை குறைக்கலாம்.

இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலைக்காக ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்த நமது அரசு இன்னும் வெளிநாட்டுச் சிறைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் நிராதரவாக வாடிக் கொண்டிருக்கும் நமது இந்திய தொழிலாளர்களுக்கு விடுதலை பெற்று தருவது எப்போது?

Posted in acquit, Affairs, africa, Ambassador, America, Analysis, Arms, Arrest, Australia, Bangladesh, Belarus, British, Civil, Cocaine, Consulate, Convict, Correction, Crime, Diaspora, Drugs, Dubai, Emigration, England, External, Extremism, Extremists, Force, Foreign, Greece, Gulf, guns, Haneef, Hanif, Holland, Immigration, Inmate, International, Issue, Italy, Jail, Judge, Justice, LA, Law, LAX, London, Malaysia, MNC, Netherlands, New Zealand, NRI, NYC, Op-Ed, Order, Pakistan, Passport, PIO, Poland, Police, Portugal, Prison, Prisoner, Saudi, Singapore, Spain, Swiss, Tamils, Terrorism, Terrorists, Tourist, Travel, UAE, UK, US, USA, Visa, Visit, Visitor, Weapons, World | Leave a Comment »

The High Cost Of Living in Chennai

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

நகரம்: சென்னை – 133!

ரவிக்குமார்

தலைப்பைப் பார்த்துவிட்டு “133′-ஐ ஏதோ தபால்துறையில் பயன்படுத்தப்படும் பின்கோட் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உலக அளவில் வாழ்வதற்கு அதிகமான செலவு பிடிக்கும் நகரங்களில், நமது சென்னை மாநகரம் 133-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. “காஸ்ட் ஆஃப் லிவிங் பெங்களூர்ல ரொம்ப அதிகம்பா’ன்னு யாராவது கூறினால்… நம்பாதீர்கள். ஏனென்றால், பெங்களூர் இந்த வரிசையில் நமக்கு அடுத்துதான் வருகிறது!

மாஸ்கோ, லண்டன், சீயோல், டோக்கியோ, ஹாங்காங், கோபன்ஹெகன் வரிசையில் நம்முடைய சென்னையும். அமெரிக்காவின் புகழ்பெற்ற “மெர்சர்ஸ்’ நிறுவனம் தான் உலகளாவிய இந்தச் சர்வேயை ஆறு கண்டங்களில் எடுத்திருக்கிறது. சென்னைவாசிகள் தங்களின் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் வகையில், அந்தச் சர்வேயில் இருக்கும் இதர விவரங்களைப் பற்றியும், அது தொடர்பாக சிலரின் கருத்துகளும் இதோ:

  • கல்வி,
  • பொருளாதாரம்,
  • அன்னியச் செலாவணியை கவரும் வகையிலான திட்டங்கள்,
  • போக்குவரத்து,
  • உடை,
  • உணவு வகையிலான மாற்றங்கள்,
  • மக்களின் வாங்கும் திறன்,
  • அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,
  • தனிமனித வருவாய்,
  • வீட்டு உபயோகப் பொருள்கள்,
  • பொழுதுபோக்கு அம்சங்கள்…

இப்படி 200 வகையான அளவுகோல்களின் மூலம், வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களை தரப்படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையில் உலகிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக தேர்வாகியிருப்பது

  • மாஸ்கோ நகரம்.
  • சீயோல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆசியாவின் எட்டு நகரங்கள் 50-வது இடத்தைப் பிடித்திருக்கின்றன.
  • மும்பை 52-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
  • புதுதில்லி 62-வது ரேங்கில் இருக்கிறது.

அமெரிக்காவின் மெர்சர்ஸ் நிறுவனம் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களாக 143 நகரங்களை ஆறு கண்டங்களில் அறிவித்திருக்கிறது. இதில் 133-வது இடத்தை சென்னை பெற்றிருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்?சென்னையைப் பொறுத்தவரை நகரத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது. வியாபாரம், தொழில் நிமித்தமாகவும், கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களுக்காகவும் ஒருநாளில், அதிகமான எண்ணிக்கையில் சென்னை நகரத்துக்கு வந்து போகும் மக்கள் தொகை (Floating Population) நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.

“”சென்னை ஒரு காஸ்ட்லியான நகரமாக இருப்பதற்கு, பரவலாக அதிகரித்திருக்கும் தனிநபர் வருமானமும் ஒரு காரணம். மற்ற நகரங்களைப் போல மக்கள் இங்கிருந்து புறநகர்களுக்கு இடம்பெயர்வதற்கு விரும்புவதில்லை” என்கிறார் மத்திய வணிக வளர்ச்சிக் குழுமத்தின், தமிழ் மாநிலப் பிரிவைச் சேர்ந்த ரஃபிக் அகமத்.

“”தங்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதற்காக, பணி செய்யும் இடத்திற்கு அருகாமையில் வாடகை வீட்டிலாவது இருந்து நிலைமையைச் சமாளிப்போம்” என்ற யோசனையோடு நாளுக்கு நாள் புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.

“”கும்மிடிப்பூண்டியில இருந்து நான் மட்டும் வேலைக்கு வந்துட்டிருந்தேன். அப்போது அங்கேயே ஒரு சின்ன ஸ்கூல்ல குழந்தைங்களைப் படிக்க வச்சிட்டிருந்தேன். இப்போ என் மனைவியும் வேலைக்குப் போறாங்க. அதனால தைரியமா சென்னைக்கு வந்துட்டோம். குறைஞ்ச வாடகைக்கு கும்மிடிப்பூண்டியில இருக்கிற எங்க வீட்டை விட்டுட்டு இங்க குடித்தனம் இருக்கிறோம். கஷ்டப்பட்டாலும் பிள்ளைங்கள நாங்க நினைச்சா மாதிரி நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம்கிற திருப்தி இருக்கு” என்கிறார் சென்னை, சாலிக்கிராமத்திலிருக்கும் கல்யாணராமன்.

சென்னை நகரத்திற்குள் இடம் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில் ஏற்கனவே இருக்கும் பழைய வீடுகளின் மதிப்பும், ஃபிளாட் வகையான வீடுகளுக்கும் கூட இன்றைக்கு மிகப் பெரிய டிமாண்ட் இருக்கின்றது.

நாளுக்கு நாள் சென்னை நகரத்தில் பெருகிவரும் ஐ.டி. தொழில்நுட்ப வளாகங்களும், தொழிற்சாலைகளும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஏறுமுகத்தில் கொண்டு செல்வதற்குக் காரணமாக இருக்கின்றன. “”பெங்களூரோடு ஒப்பிடுகையில் நில வியாபாரம் சென்னையில் கடந்த சில மாதங்களில் விலை அதிகம் உயர்ந்திருக்கின்றது” என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் சிலர்.

சென்னை-133 எஃபெக்டுக்கு, தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாடு அரசாங்கத்தின் அணுகுமுறையும் ஒரு காரணம். கடந்த 12 மாதங்களில் 6,985 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழிற்சாலைகளையும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களையும் சென்னையில் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே ஆட்டோ-மொபைல், எலக்ட்ரானிக் போன்ற துறைகளில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற நகரம் என்ற அங்கீகாரத்தை சென்னை பெற்றிருக்கிறது.

உலக அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகச் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கும் “நாஸ்காம்’ என்னும் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் முதலீடுகளைச் செலுத்துவதற்கு தகுதியான ஒன்பது நகரங்களில், சென்னைக்கு மூன்றாவது ரேங்க் கொடுத்திருக்கின்றது.

-என்ன இருந்தாலும் பாரீஸ் போல வருமா… என்று இழுக்கும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். நமக்கும் கீழே பத்து நகரங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுங்கள்!

Posted in 133, America, Analysis, Bombay, Boston, Chennai, Compensation, Consumer, Customer, Dress, Economy, Education, Exchange, Expenses, Finance, France, GDP, Homes, Household, Houses, Income, India, Inflation, Interest, job, Korea, LA, London, Madras, Moscow, Moskva, MoU, Mumbai, NYC, Paris, Price, Prices, Purchasing, Rates, Recession, Rent, Russia, Salary, Schools, Seoul, Stagflation, UK, US, USA, USSR, Work | Leave a Comment »

Raman Raja – Caught in the Traffic (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

நெட்டில் சுட்டதடா…: மைல் கணக்கில் நின்ற மலைப் பாம்பு வரிசை!

ராமன் ராஜா


முன்பு ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு மும்பை செல்ல வேண்டிய விமானத்தைக் கோட்டை விட இருந்தேன். ரிஷப ராசிக்கு “விரயம்’ என்று ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக தினப்பலன் போட்டிருந்ததை மதிக்காமல் டாக்ஸியில் புறப்பட்டு, அண்ணா சாலையில் திரும்ப வேண்டிய நேரத்தில் போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஒரு முக்கிய பிரமுகர் அந்த வழியாக வருகிறாராம்; அவருக்கு ஓட்டுப் போட்டு முக்கிய பிரமுகராக்கியவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமாம். அடுத்த நாற்பது நிமிடம், பல்லைக் கடித்துக் கொண்டு எஃப் எம் ரேடியோவில் “தமில்ப்’ பாட்டு கேட்டுக் கொண்டு கழித்தேன். நல்லவேளை, நான் பிரசவத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் பெண்மணியாக இல்லையே என்று நிம்மதியுடன் அடி வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டேன். கடைசியில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, ப்ளேனும் ஒரு மணி நேரம் தாமதம் என்று தெரிய வந்தது. (பைலட்டும் பக்கத்துக் காரில்தான் வந்தாரோ?)

போக்குவரத்து நெரிசல் என்பது முன்னேறிய நாடுகள் எல்லாமே முன்னேற்றத்துக்குத் தப்பாமல் கொடுக்கும் விலை. இந்தியாவிலும் வங்கிகள் வண்டிக் கடன்களை “ஊரான் வீட்டு நெய்யே’ என்று வாரி வழங்குவதால், இப்போது ஏழை எளியவர்கள் அனைவரும் வாகனம் வாங்குவது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் ஒரு பிரச்னை: தமிழ் நாட்டில் ஓடும் சற்றேறக்குறையத் தொண்ணூறு லட்சம் வாகனங்களில் கால் பாகத்தை, பிடிவாதமாக அவர்கள் சென்னை நகரத்தில்தான் கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். இதைக் கண்ட பன்னாட்டுக் கம்பெனிகள், “சிக்கியதடா ஒரு மார்க்கெட்’ என்று இங்கே வந்து கடை பரத்தி, நம் ஜனத் தொகையை விட வேகமாகக் கார், டூ வீலர் முதலியவற்றை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, எனக்கு இருபது நிமிட தூரத்தில் இருந்த அதே அலுவலகம் இப்போது அறுபது நிமிடமாகிவிட்டது. டெல்லி, கல்கத்தா எங்கும் இதே கதைதான். பெங்களூரோ, ஏற்கனவே “பூட்ட கேஸ்’ என்று முடிவு கட்டப்பட்டு விட்ட நகரம். சென்னையில் நகைச்சுவை உணர்வு மிக்க உணவு விடுதிக்காரர் ஒருவர், தன் கடைக்கு ஹோட்டல் டிராபிக் ஜாம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

இங்கிலாந்தில் உள்ள எம்6 என்ற நெடுஞ்சாலையில் 87-ம் வருடம் ஒரு நெரிசல் ஏற்பட்டது. ஐம்பதாயிரம் வாகனங்களில் இரண்டு லட்சம் பேர் மாட்டிக் கொண்டார்கள். இருபது லட்சம் கெட்ட வார்த்தைகளில் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்தார்கள். உலகத்திலேயே மிக நீளமாக நின்ற டிராபிக் ஜாம் எது என்று கின்னஸ் புத்தகத்தைப் புரட்டினால், மிரட்டுகிறது: 1980-ம் வருடம், காதலர் தினத்துக்கு இரண்டு நாள் கழித்து ஃப்ரான்ஸில் நடந்தது அது. விடுமுறைக்கு ஜாலியாக எல்லாரும் பனிச் சறுக்கு விளையாடிவிட்டு பாரீஸ் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் எங்கோ ஒரு லாரி மக்கர் செய்ய, மழை வேறு சேர்ந்துகொள்ள, திடீரென்று ட்ராபிக் ஜாம். லியான் நகரில் ஆரம்பித்து பாரீஸ் வரை, சுமார் 176 கிலோ மீட்டருக்கு அடைத்துக் கொண்டு நின்று விட்டது. ஒரு வழியாக விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்ததும், பல பேர் கடுப்பில் தத்தம் கார்களைக் கொளுத்தியிருப்பார்கள்!

டிராபிக் ஜாம் என்பது ரோட்டில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை; எங்கெல்லாம் அவசரக்காரர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தவறாமல் இது நடக்கும். வெனிஸ் நகரின் கால்வாய்ப் போக்குவரத்தில் அவ்வப்போது படகுகள் ஜாம் ஆகி நிற்பது உண்டு. பாங்காக் நகரின் மிதக்கும் மார்க்கெட்களில், படகுகள் சிக்கித் திணறுகின்றன என்று கால்வாய்களையெல்லாம் தூர்த்து சாலைகளாக்கினார்கள். இப்போது அவற்றில் கார்கள் நெரிசலாடுகின்றன!

போக்குவரத்து நெரிசல்கள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை கம்ப்யூட்டர் உதவியுடன் விஞ்ஞானிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஃப்ளூயிட் டைனமிக்ஸ் என்று குழாயின் வழியே தண்ணீர் ஓடுவதுடன் ஒப்பிட்டு, போக்குவரத்தைக் கணித சூத்திரங்களில் அடக்கமுடியும். இப்போது டிராஃபிக் எஞ்சினியரிங் என்பதை பட்டப் படிப்பாகவே எடுத்துப் படிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கே உரிய சாலைத் தொல்லைகளான சாக்கடைப் பள்ளங்கள், எருமை மாடுகள், வி.வி.ஐ.பிகள் போன்றவற்றை எந்த கம்ப்யூட்டராலும் மாடலிங் செய்ய முடியாது. எனவே என்னதான் புள்ளியியல் புரபசராக இருந்தாலும், தெருவில் இறக்கிவிட்டால் அவருக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. ஒரு முறை இந்தியப் பிரதமரின் காரைத் தப்பான சாலையில் திருப்பி விட்டு, அவரும் நம்முடைய அவஸ்தைகளைச் சில மணித் துளிகள் அனுபவித்தார். (அங்கே டூட்டியில் இருந்த போலீஸ்காரர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சஸ்பென்ட் செய்தார்கள், பாவம்).

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பல வழிகளை ஆலோசித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, ரோட்டில் வண்டி ஓட்டுவதற்குக் காசு வசூலிப்பதுதான். டோல் ரோடுகள், டோல் பாலங்கள் என்று முக்கியமான பிரதேசங்களையெல்லாம் கட்டணப் பகுதிகளாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். லண்டன் நகரின் பயணம் செய்ய “நெரிசல் கட்டணம்’ ஐந்து பவுண்டு என்று தொடங்கி, வருடா வருடம் விலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் பல ரோடுகளில் அலுவலகம் போகும் பீக் அவர் நேரங்களில், தெருவில் வீல் வைத்தால் டிக்கெட் வாங்க வேண்டும். சனி, ஞாயிறு இலவசம். அதிலேயே சிக்கனமான சிறிய கார்களுக்கு சற்றுக் குறைந்த கட்டணம், மண்ணெண்ணை கலந்து கரும் புகை கக்கினால் அதிக சார்ஜ் என்று பல பாலிசிகளை ஒன்றாகக் கலந்து குழப்படி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சாலைக் கட்டணங்களை மறுக்கவும் எதிர்க்கவும் பலர் கோஷ்டிகள் அமைத்து கோஷம் போடுகிறார்கள். “”சாலைகள் போடுவது, அசோகர் காலத்திலிருந்தே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீது பயங்கரக் கந்து வட்டி வரி என்று உறிஞ்சிக் கொழுத்தது போதாமல், இப்போது தெருவில் போவதற்கும் காசு கேட்கிறீர்களா? இது மனிதனின் அடிப்படையான நடமாடும் உரிமையையே கட்டுப்படுத்துகிறதே” என்பது அவர்களுடைய அனல் மூச்சு. “” வழியில் இருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் பாலத்துக்கும் தண்டல் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றால், பணக்காரர்கள் எப்படியும் பயணம் செய்துவிடுவார்கள். அடித்தட்டு மக்கள்தான் நாலு இடத்துக்குப் போய் வேலை செய்து பிழைக்க முடியாமல் தன்னுடைய பேட்டைக்குள் சிறைப்பட்டு விடுவார்கள்” என்பதும் நியாயமாகவே படுகிறது.

கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றால் அடுத்த ஆயுதம், வாகனம் ஓட்டுவதில் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்துவது. கூட்டம் கூடும் பகுதிகளில் வேண்டுமென்றே பார்க்கிங் வசதிகளைக் குறைத்து விடுவது. தியேட்டர் அருகே காரை நிறுத்த இடமில்லாமல் லொட்டு லொட்டென்று ஒரு கிலோமீட்டர் நடந்து போய் சினிமா பார்க்க வேண்டுமென்றால், பலர் விடுமுறை நாள்களில் அங்கே போய் அம்முவதைத் தவிர்ப்பார்கள். அமெரிக்காவில் ஒற்றை ஆள் ஒருவர் தன்னந்தனியாகக் காரில் சென்றால் பொதுப் பாதையில் நீண்ட வாகன வரிசையில்தான் போக வேண்டும்; ஒரே காரில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து போனால், ரோடு ஓரத்தில் தனியாக ராஜ பாட்டையில் சல்லென்று சீக்கிரமாகப் போகலாம். கார்பூல் பாதை என்ற இந்த வசதிக்காகவே, ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முறை போட்டுக் கொண்டு தினம் ஒருவருடைய காரில் சேர்ந்து பயணம் செய்வார்கள். நெரிசலைக் குறைப்பதற்கு எல்லாவற்றையும் விடச் சிறந்த ஆயுதம், பஸ், ரயில்தான்!

சாலைச் சுங்கம் வசூலிக்கும் சாவடிகளில் தினமும் லட்சக் கணக்கான வண்டிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்துக் கொடுத்து நாக்கு உலர்ந்து போய்விட்டதால், ஆட்டோ பாஸ், டெலி பாஸ் போன்ற தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சுங்கச் சாவடியில் நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ கூடத் தேவையில்லை; ரேடியோ அலைகள் வழியே தொடர்பு கொண்டு காரே போகிற போக்கில் தன் கட்டணத்தைக் கட்டி விடும். சிங்கப்பூரில் நகர மையத்துக்குப் போகிற எல்லா ரோடுகளிலும் வருக வணக்கம் என்று தோரண வாயில்கள், வளைவுகள் உண்டு. எல்லாம் தானியங்கிப் பணம் பிடுங்கி வளைவுகள்! கலீலியோ என்று செயற்கைக் கோள் அமைப்பின் வழியாக ரோட்டில் போகும் அத்தனை வண்டிகளையும் கடவுள் போல் கண்காணித்து நீங்கள் எப்போது, எந்தத் தெருவில் எத்தனை நேரம் பயணம் செய்தீர்கள் என்று கூட துல்லியமாக பில் போட்டு வசூலித்து விடமுடியும். அரசியல், பிசினஸ் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்தத் தொழில் நுட்பத்தில் இருக்கும் துஷ்பிரயோக வசதியைக் கருதி, இதைப் பல நாடுகளில் பரவலாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். இடது சாரிகள் “உயிரே போனாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று எதிர்க்கிறார்கள்.

பப்லுவுக்குப் பிடித்த புராதனமான கடி ஜோக் ஒன்று: பசியுடன் இருந்த ஒருவன், காலை உணவுக்கு ப்ரெட் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டு மவுண்ட் ரோடில் போய்க் காத்திருந்தானாம். ஏன்? அங்கே ட்ராபிக் ஜாம் கிடைக்கும், தொட்டுத் தின்னலாம் என்று!

Posted in Accidents, Auto, Carpool, Cars, Chennai, City, Comfort, Commute, Congestion, Diesel, Dinamani, Driver, Environment, Freeway, Gas, Highway, infrastructure, Insurance, Kathir, LA, Lights, Limo, Limousine, London, Luxury, Manufacturing, Metro, NYC, Paris, Parking, Parkway, Patterns, Petrol, Pollution, Pooling, Raman Raja, Roads, Rotary, Rural, Signals, Singapore, Sprawl, Street, Suburban, Tax, Toll, Traffic, Transport, Travel, UK, Urban, Warming | Leave a Comment »