இந்தியாவில் பொருளாதார, ஐ.டி. தொழில் வளர்ச்சியால் அமெரிக்காவில் இருந்து திரும்பிய 60 ஆயிரம் பேர்
நியூயார்க், மே 15: பொருளாதார மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியால் அமெரிக்காவில் இருந்து சுமார் 60 ஆயிரம் பேர் அண்மையில் இந்தியா திரும்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இருப்பினும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த சிலிக்கான்வேலி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை, தாயகம் திரும்புவோர் இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்குவதாகவும் அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தாயகம் திரும்பியோருக்கான அமைப்பின் உறுப்பினர் மிஸ்ரா கூறுகையில், 2003-ம் ஆண்டு இந்தியா திரும்பியோரின் எண்ணிக்கை 15 ஆயிரமாக இருந்தது, அதன்பின்னர் 4 ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் பேர் தாயகம் திரும்பியுள்ளனர் என்றார்.
இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் சிலிக்கான்வேலியில் உள்ள ஏராளமான நிறுவனங்கள் இந்தியாவின் மீது தங்களது கவனத்தை திருப்பியுள்ளன என்றார்.
சிலிக்கான்வேலியில் “கிளியர்ஸ்டோன்’ என்ற அவரது நிறுவனத்திற்கு மும்பையிலும் கிளை உள்ளது.
இதனிடையே, அன்னா லீ மற்றும் பெர்கிலி ஆகிய இரு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிலிக்கான்வேலியில் உள்ள 15 சதவீத நிறுவனங்களை ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலிக்கான் வேலியில் அறிவியல் மற்றும் பொறியியல் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் 53 சதவீதம் பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனங்களில் 25 சதவீதத்தை ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள் என்றும் அம் மாணவர்கள் தங்களது ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் ரூ. 34440 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளன. 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே “மெர்குரி நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கிளைகள் திறக்காமல் அமெரிக்காவில் எந்த பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் செயல்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2015-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அவுட்சோர்சிங் பெறுவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
அதற்கு பல்வேறு காரணங்களையும் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் 25 வயதிற்குள்பட்டவர்கள். குறைந்த ஊதியத்தில் திறமையாகப் பணியாற்றக் கூடியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
“இன்டல் இந்தியா’ நிறுவனத்தின் அமர்பாபு என்பவர் கூறுகையில், ஆராய்ச்சி -வளர்ச்சிப் பணி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ளதால் இந்தியச் சந்தையின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்றார்.