தணிக்கைச் சான்றிதழ் பிரச்சினை: “குற்றப்பத்திரிகை’ திரைப்படத்தை தலைமை நீதிபதி நாளை பார்க்கிறார்
சென்னை, நவ.21: தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாதது பற்றிய வழக்கு தொடர்பாக, “குற்றப்பத்திரிகை’ திரைப்படத்தை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் புதன்கிழமை பார்க்கின்றனர்.
பல ஆண்டுகளாக இத்திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் தர மறுத்து தில்லியில் உள்ள தணிக்கைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரவி யாதவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கொல்ல இலங்கை தீவிரவாதிகள் முயற்சிப்பது போலவும் அத்திட்டத்தைத் தடுத்து, ராமகிருஷ்ணன் என்பவர் ஜெயலலிதாவை காப்பது போலவும் அப்படத்தில் காட்சி வருகிறது. அந்த காட்சிகளை நீக்குமாறு கடந்த மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்காட்சிகளை நீக்கிவிட்டால் “குற்றப்பத்திரிகை‘ திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சென்னை மண்டல அதிகாரி பாபு ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இத்திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் தருமாறு தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தவறு உள்ளது. படத்தின் மூலக்கதையே, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை ஆதரிப்பதாக உள்ளது. இந்நிலையில் சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டால், பொதுமக்களுக்காகக் திரையிட தணிக்கைச் சான்றிதழ் தரலாம் என்று நீதிபதி கூறியிருப்பது சரியல்ல.
இலங்கையில் தற்போது பதற்றமான சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகளை ஆதரிக்கும் இப்படத்துக்கு அனுமதி அளித்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவைத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் திங்கள்கிழமை விசாரித்தனர். இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு அதன்பிறகு முடிவு செய்வதாக நீதிபதிகள் கூறினர். அதன்படி சென்னையில் உள்ள குட்லக் பிரிவியூ தியேட்டரில் இத்திரைப்படத்தை நீதிபதிகள் புதன்கிழமை மாலை பார்க்கின்றனர். அதன்பிறகு வியாழக்கிழமை இவ்வழக்கை மீண்டும் விசாரிப்பர்.