குர்து பிரிவினைவாதிகள் மீது எல்லை கடந்து தாக்க துருக்கிய நாடாளுமன்றம் அங்கீகாரம்
வட இராக்கில் குர்து இன பிரிவினைவாதிகளின் தளங்களின் மீது எல்லை கடந்த தாக்குதல்களை நடத்த, துருக்கிய இராணுவத்துக்கு அனுமதி அளித்து, துருக்கிய நாடாளுமன்றம் பெரும் ஆதரவுடன் வாக்கெடுப்பு ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்த தாக்குதல்களை ஓராண்டு காலம் நடத்த அரசுக்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் ஒன்றை, 550 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.
துருக்கிய பிரதமர் ரசெப் தயிப் எர்தோவான், இராக்குக்குள் ஊடுருவல்கள் என்பது உடனடியாக நடக்கப்போவதில்லை என்று கூறினார். ஆனால் குர்துகளின் பிராந்திய அரசோ, இந்த ஆமோதிக்கும் வாக்கெடுப்பு சர்வதேச சட்டத்தை மீறியதாகும் என்று கூறியது.
இந்த முடிவு அறிவிக்கப்படும்போது, அமெரிக்க அதிபர் புஷ், துருக்கியை பெரிய எல்லைகடந்த ஊடுருவல் எதையும் தொடங்கவேண்டாம் என்று வலியுறுத்தினார்.
![]() |
![]() |
அத்தகைய தாக்குதல் எதுவும், துருக்கியின் நலன்களுக்கு உகந்தது அல்ல என்றும் அவர் கூறினார்.
துருக்கிய நாடாளுமன்றத்தின் இந்த நடவடிக்கை, ஒரு புதிய இராஜிய முயற்சிகளை தூண்டியுள்ளது. இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்பதுதான் ஒருவேளை இந்த நடவடிக்கையின் பின்னுள்ள பிரதானமான நோக்கமாக இருக்கலாம்.
ஆனால், இராக்கின் வடக்கே உள்ள, பெரும்பாலும் சுயாட்சி பெற்ற குர்திஷ் பகுதியில் இராக்கின் மத்திய அரசுக்கு பெருமளவு செல்வாக்கு, அதிகாரம் இல்லை என்பது துருக்கிக்கு தெரிந்ததுதான்.
உடனடியாக ஏதும் போர் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சாத்தியக்கூறு பெருமளவு இல்லை என்று துருக்கிய பிரதமர் ரெசெப் தயிப் எர்தோவான் கூறியுள்ளார்.
பெரிய அளவில் ஏதும் ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளிப்படையாகத் தெரியவில்லை என்றுதான் மேலை நாடுகளின் இராணுவ வட்டாரங்களும் கூறுகின்றன.
ஆனால் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு துருக்கியில் பெருத்த மக்கள் ஆதரவு இருக்கும். எந்தவொரு தாக்குதலுக்கும் குறிப்பிடத் தகுந்த பின்விளைவுகளும் இருக்கும் என்பது நிச்சயம்.
![]() |
![]() |
இராக்கிய எல்லைக்கு அருகே துருக்கிய காவலரண் |
துருக்கிய இராணுவம் சிறிய தாக்குதல்களை அல்லது வெறும் விமானத் தாக்குதல்களை மட்டும் நடத்துவது என்பதோடு நிறுத்திக் கொண்டால்,அதற்கு சிறிய பின்விளைவுகள்தான் இருக்கும்.
ஆனால் அவைகளில் கூட ஆபத்துக்கள் இருக்கின்றன.
கிர்க்குக் நகருக்கு அல்லது அருகில் உள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு அச்சுறுத்தல்களை விளைவிப்பது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் ஒரு பெரிய நெருக்கடியை தோற்றுவித்து, இராக்கிய படைகளையோ, அமெரிக்காவையோ அல்லது இரானையோகூட மோதலில் ஈடுபடுத்திவிடக்கூடும்
கவலையில் அமெரிக்கா
![]() |
![]() |
அதிபர் புஷ் |
நிச்சயமாக அமெரிக்கா கவலையில் இருக்கிறது. இராக்கில் இதற்கு மேலும் இராணுவ சவால்களை சந்திக்க அதற்கு வசதிகள் இல்லை.
மேலும்,அங்கு அது இருப்பதற்கே, துருக்கியின் ஆதரவு அமெரிக்காவுக்கு பெருமளவில் தேவைப்படுகிறது.
மேலும், முதலாம் உலகப்போர் காலத்தில் துருக்கியில் ஆர்மீனியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டது ஒரு இனப்படுகொலை என்று கண்டனம் செய்து, அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி ஒன்று வாக்களித்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே, அமெரிக்க-துருக்கி உறவுகள் ஒரு சிக்கலான கட்டத்தில் உள்ளன.
அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்படும் ஆபத்தை உணர்ந்தோ என்னவோ, அமெரிக்க காங்கிரசில், இந்த பிரேரணைக்கு ஆதரவு குறைந்து வருவது போல் தோன்றுகிறது.
குழப்பத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயலும் துருக்கியின் ஆட்சியாளர்களுக்கு, இவை எல்லாம் ஒரு சிக்கல் நிறைந்த கணக்குகள்தான்.