முகங்கள்: “மொய்தாய்’
கே. இளந்தீபன்
“மொய்தாய்’ விளையாட்டில் பட்டையைக் கிளப்புகிறார் கனகராஜ். கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஸ்டார் ஆங்கிலப் பள்ளியில் ஐந்தாவது படிக்கும் இம்மாணவர், சமீபத்தில் பாங்காக்கில் நடந்த உலகளவிலான போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசைத் தட்டி வந்துள்ளார்.
“மொய்’ தெரியும். “தாய்’ தெரியும். அது என்ன “மொய்தாய்’ கலை? கனகராஜே சொல்கிறார்:
“”தாய்லாந்து நாட்டிலிருந்து வந்ததுதான் “மொய்தாய்’ என்று அழைக்கப்படும் தற்காப்பு கலை. ஒருவர் தன்னுடைய முஷ்டி, பாதம், முழங்கால், முழங்கை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தற்காத்துக் கொள்ளும் பயிற்சியாகும்.
இந்தத் தற்காப்பு கலைக்கு “மொய்தாய்’ என்ற பெயரைச் சூட்டியவர் “அபித்கரு மொய்’ என்பவர்.
இந்தத் தற்காப்பு கலையில் “சங்க்மொய்’ என்பது முஷ்டி பாதம் முழங்கை, முழங்கால் ஆகிய உறுப்புகளை விளையாட்டின்போது பயன்படுத்தும் முறையை விளக்குவதாகும்.
“லுக்மாய்’ என்பது எல்லா வீரர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை முறையாகும். மொய்தாய் தற்காப்பு கலையைத் துவங்கும் முன் “க்ராபி-க்ராங்’ என்ற பயிற்சிக் கருவியின் மூலம் குருவணக்க நடனம் ஆடப்படுகிறது.
பழைய முறைகளைத் தவிர்த்து இந்த “மொய்தாய்’ இப்போது சீருடை, கையுறை, தடுப்பு உறை போன்ற பாதுகாப்பான வசதிகளுடன் விளையாடப்படுகிறது.
தாய்லாந்து நாட்டின் தேசிய விளையாட்டாகவும் தாய்லாந்து ராணுவத்தில் கடைபிடிக்கப்படும் முக்கிய பயிற்சியாகவும் இருக்கிறது.
மொய்தாய் தற்காப்பு கலை இந்தியாவில் முதன்முதலாக பெங்களூர் நகரில் 1996-ல் வந்தது. ஆந்திரா சென்று தற்போது தமிழ்நாட்டில் 2005-ல் அறிமுகமாகி கல்லூரி மாணவர்களுக்கும் பிடித்த பயிற்சியாக மாறி வருகிறது.
உலகளவில் உள்ள வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டி தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, கொரியா, கனடா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். இந்தப் போட்டியில்தான் நான் இரண்டாம் பரிசு பெற்றேன்.
இந்த விளையாட்டோடு ஜிம்னாஸ்டிக், கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொண்டேன். மாவட்ட அளவில் தேசிய அளவில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன். மொய்தாய் விளையாட்டில் நான் இவ்வளவு தூரம் சாதிப்பதற்கு முக்கியக் காரணம் என்னுடைய பயிற்சியாளர் செந்தில் மாஸ்டர்தான். மொய்தாய் தற்காப்பு கலையில் கின்னஸ் சாதனை செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்கிறார் கனகராஜ்.
கின்னஸ் கனவு வெல்லட்டும்!