சென்னை விமான நிலைய விரிவாக்கம்: திருவள்ளூவர்-தொல்காப்பியர் பெயரில் விருதுகள்: பிரதமருக்கு கருணாநிதி வேண்டுகோள்
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மோட்டார் வாகன தொழிலை மேம்படுத்த சென்னை அருகே ஒரகடத்தில் வாகன சோதனை ஆராய்ச்சி மையத்தை இங்கு அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தோம். பிரதமர் மன்மோகன்சிங் மதுரையில் சேதுசமுத்திர திட்ட விழாவை தொடங்கி வைக்க வந்தபோது இந்த கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தார்.
அதன்படி இன்று அடிக்கல் நாட்ட வந்துள்ளார். ஏறக்குறைய 300 ஏக்கர் நிலத்தில் இந்த வாகன மையம் அமைகிறது. நீண்ட காலம் நெஞ்சில் கனவாக இருந்த இந்த திட்டம் இன்று எழுச்சியுடன் தொடங்கி உள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தியும் தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உதவி இருக்கிறார்கள்.
150 ஆண்டுகள் கனவாக இருந்த சேதுசமுத்திர திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. 100 ஆண்டு கோரிக்கையான தமிழ் மொழியை செம்மொழி ஆக்கும் எண்ணத்துக்கும் வடிவம் கொடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நோக்கியா உள்பட பல தொழிற்சாலைகள் வர ஒத்துழைப்பு அளித்துஉள்ளனர். தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.1553 கோடி செலவில் இரும்பு உருட்டாலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை அருகே வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு கேட்டதை கேட்டபடி வழங்கி வரும் பிரதமர் மன்மோகன்சிங், கூட்டணி தலைவர் சோனியாவுக்கு தமிழக மக்கள் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை பல திட்டங்கள் வழங்கி இருந்தாலும் இன்னும் சில கோரிக்கைகளையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
குமரி மாவட்டம் குளச்சலில் பெரியதுறைமுகம் அமைக்கப்பட வேண்டும். 1.1.07 முதல் தமிழ்நாட்டில் மதிப்பு கூட்டுவரி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான இழப்பீட்டையும் ஈட்டுத் தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை உருவாக்குதல், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தி நவீன மயமாக்குதல், சென்னை, மதுரை, சென்னை-கோவை இடையே அதிவேக புல்லட் ரெயில் விட ஏற்பாடு செய்தல், தமிழை செம்மொழி ஆக்கினாலும் அது தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வழி வகுக்கப்பட வேண்டும். செம்மொழி பெயரில் ஆண்டுதோறும் “வள்ளுவர் விருது” “தொல்காப்பியர் விருது” ஆகியவை வழங்கப்பட வேண்டும்.
மேலும் பல கோரிக்கைகளை கடிதம் வாயிலாகவும் நேரிலும் தெரிவித்து இருக்கிறோம். அவற்Ûயும் நிறைவேற்றி தர வேண்டும்.
தமிழக அரசு மத்திய அரசுடன் ஒரு இணக்கமான உறவை கடைபிடித்து வருகிறது. இது மேலும் தொடரும். அந்த வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மோட்டார் வாகனம் தொடர்பான முதலீடு இந்திய அளவில் 50 ஆயிரம் கோடி. இதில் 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி நடக்கிறது.
தமிழ்நாடு மோட்டார் வாகன தொழிலில் முதன்மை பெற்று திகழ்கிறது. ஏற்கனவே அசோக் லேலண்ட், டி.வி.எஸ். போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.
1996-க்கு பிறகு போர்டு, ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வாகன உற்பத்தியை தொடங்கி இருக்கின்றன. இந்திய அளவில் தமிழ்நாட்டில் 35 சதவீத மோட்டார் உதிரிப்பாகங்கள் தயார் ஆகின்றன. 20 சதவீத வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகின்றன.
இந்த ஆராய்ச்சி மையத்தில் இந்திய அளவிலான முதலீடு 1718 கோடி. இதில் ரூ.470 கோடி முதலீட்டில் இங்கு ஆய்வு மையம் தொடங்கப்படுகிறது. இந்த ஆய்வு மையத்தில் ஐரோப்பிய விதிமுறைப்படி சோதனை சான்றிதழ் பெற முடியும். பல்வேறு நவீன அமைப்புகளை வாகனங்களில் புகுத்த முடியும்.
1.8 கிலோ மீட்டர் நீள சோதனைப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். உள்ளூர் தொழிலாளர்கள்தான் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் 5 தொழிற்சாலைகள் இங்கு வந்துள்ளன. 24 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 26 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைத்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் இந்த வாகன சோதனை மையம் மூலம் 5 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
2015-க்குள் 6 அல்லது 7 மடங்கு இது வளர்ச்சி பெறும். 17 முதல் 20 மில்லியன் டாலர் அளவு ஏற்றுமதி பெருகும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.