சென்னையில் இருந்து செல்லும் பயணிகளுக்கு விசா விதிமுறைகளை தளர்த்தியது மலேசியா
கோலாலம்பூர், மார்ச் 16: சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகளுக்கான விசா விதிகளைத் தளர்த்தியுள்ளது மலேசிய அரசு.
இதையடுத்து, சென்னையைத் தவிர தென்னிந்திய நகரங்களில் இருந்து மலேசியாவுக்கு வரும் பயணிகள் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கியதும் விசா பெற்றுக் கொள்ளலாம் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் வசிப்போர் அங்குள்ள மலேசியத் தூதரகத்தில் இருந்து முன்கூட்டியே விசா பெறும் வசதி உள்ளதால் அவர்களுக்கு புதிய விதி பொருந்தாது என்று கோலாலம்பூரில் வியாழக்கிழமை தெரிவித்தார் துணைப் பிரதமர் நஜீப் ரஸôக்.
சென்னையில் இருந்து வருவோர் விசாவில் அனுமதிக்கப்பட்ட நாள்களை விட கூடுதல் நாள்கள் மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கி விடுவதை அடுத்து, விசா வழங்குவதைக் கடந்த டிசம்பரில் நிறுத்தியது மலேசியா.
சென்னையில் இருந்து வருவோரில் 25 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்ட நாள்களை விட அதிக நாள்கள் சட்டவிரோதமாகத் தங்குகின்றனர் என்று நஜீப் கூறினார்.
மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 19 ஆயிரம். இதில் 3 ஆயிரம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகள், ஈரான், இராக், பாலஸ்தீனம் மற்றும் சிரியாவில் இருந்து வருவோருக்கும் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே விசா வழங்கப்படும் என்று மலேசியா அறிவித்துள்ளது.