Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Krishnasami’ Category

State of Tamil Nadu Congress Party – Internal Politics

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

காங்கிரஸில் மேலும் ஒரு புதிய கோஷ்டி

சென்னை, ஜூன் 16: ஏற்கெனவே பல்வேறு கோஷ்டிகள் நிறைந்து காணப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு புதிய அணி உதயம் ஆகிறது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் இந்த அணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை இறங்கினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்

  • மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தலைமையிலான பழைய த.மா.கா. அணி,
  • கட்சியின் மாநிலத் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் அணி,
  • மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அணி,
  • முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர். பிரபு,
  • கே.வீ. தங்கபாலு,
  • ஜெயந்தி நடராஜன் போன்றவர்களின் தலைமையிலான அணிகள் என்று பல அணிகள் இயங்கி வருகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை: மாநிலங்களவைத் தேர்தல், மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியைக் கட்சியின் அகில இந்திய மேலிடம் சமீபத்தில் மேற்கொண்டது.

அப்போது இந்தக் கோஷ்டிப் பூசல் பூதாகாரமாக விசுவரூபம் எடுத்தது. வாசனின் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக மேலிடம் தேர்வு செய்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் இதர அணிகள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. போளூர் வரதனின் தலைமையில் ஒன்றுபட்டன. ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. வாசன் அணிக்கு எதிராக மேலிடத்தில் புகார்களைத் தெரிவித்தன.

ஆனால், இறுதியில் வாசனின் “கை’யே ஓங்கியது. மாநிலங்களவைத் தேர்தலிலும், மதுரை மேற்கு இடைத் தேர்தலிலும் வாசனின் தீவிர ஆதரவாளர்களுக்கே மேலிடம் வாய்ப்பு அளித்தது.

கட்சிக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும், மேலிடத்தின் அறிவுரையை ஏற்றும், வாசன் அணிக்கு எதிரான அணிகளைச் சேர்ந்தவர்கள் தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் முகாமிட்டு, பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

காமராஜர் இல்லம் அருகே…: இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் காமராஜரின் இல்லத்துக்கு அருகே உள்ள ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் புதிய அணியின் மதிய விருந்து -ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  • மூத்த நிர்வாகி தமிழருவி மணியன்,
  • மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன்,
  • சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி,
  • வி.ராஜசேகரன்,
  • சட்டப் பேரவை உறுப்பினர்கள் திருவாடானை கே.ஆர்.ராமசாமி,
  • காரைக்குடி சுந்தரம்,
  • முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆ. கோபண்ணா,
  • கிருஷ்ணசாமி வாண்டையார்,
  • சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் உள்ளிட்ட 20 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Posted in Analysis, Backgrounders, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Divisions, Elangovan, Elankovan, Elections, Faction, Fights, Ilangovan, Ilankovan, Internal, Jayanthi, Jayanthy, Jeyanthi, Jeyanthy, Kaarthi, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthi, Krishnasaamy, Krishnasami, Krishnasamy, Krishnaswamy, Leaders, Madurai, Manmohan, Members, MLAs, MPs, Party, PC, Petty, PMK, Politics, Polls, Sonia, Thangabaalu, Thangabalu, Thankabalu, TMC | Leave a Comment »

Congress performance in Punjab, Uttarakhand, Manipur Elections

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

பதில் வராத கேள்வி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசிய சுருக்கமான பேச்சில், கட்சி தன்னைத் தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

ஆத்ம பரிசோதனை என்பது மகாத்மா காந்தி அடிக்கடி பயன்படுத்திய சொல். இதற்கு இப்போதைய அரசியல் உலகிலும் ஒருவகை மதிப்பு இருக்கவே செய்கிறது.

கட்சி தன்னை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடும்போது, கட்சித் தலைமையும் கட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்களும் தங்கள் நடவடிக்கைகளை, தாங்கள் செய்து முடித்த காரியங்களை ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமாக, தனது செயல்களில் குறைபாடு இருப்பதாகத் தனது “ஆத்மாவின் குரல்’ சொல்லுமானால், அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், சத்தியத்தின் பாதையில் மீண்டும் உறுதியுடன் நடக்கவும் முன்வர வேண்டும் என்பதுதான் ஆத்ம பரிசோதனையின் நோக்கம்.

உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்குக் காரணம் விலைவாசி உயர்வு என்று முதல்முறையாக, வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் சோனியா.

அப்படி ஒப்புக் கொண்டபோதிலும்கூட, அதற்கான காரணங்களை, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றுள்ள தவறுகளை ஒப்புக் கொள்ளவோ, அதற்கு மாற்றுவழி காண்பது குறித்துப் பேசவோ அவர் விரும்பவில்லை. “இந்தியப் பொருளாதாரத்தை உயர்ந்த வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறது நமது அரசு’ என்று சோனியா சமாளிக்கும்போது ஆத்ம பரிசோதனை முழுமையடையாமல் போகிறது.

சோனியா இதைக் குறிப்பிட்ட அதே நாளில், “விலைஉயர்வுக்கு உணவுப்பொருள் தட்டுப்பாடு காரணமல்ல, மாறாக அவற்றை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறைபாடு” என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் கூறியது தவறான தகவல் என்று பொருளாதார வல்லுநர் அர்ஜுன் சென்குப்தா (சுயேச்சை உறுப்பினர்) கடுமையாக விமர்சித்தார். பருப்பு தட்டுப்பாடு இருந்தபோதிலும் 40 ஆயிரம் டன் பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது ஏன்? என்று பாஜகவும் தன் பங்குக்கு விவாதத்தைக் காரசாரமாக்கியது.

விலைவாசி உயர்வு காங்கிரஸின் தோல்விக்கு ஒரு காரணம் என்றாலும், பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி நடத்தும் காங்கிரஸ், தன் கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்துப் போவதும் அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளது என்பதை சோனியா புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு மாநிலப் பிரச்சினையிலும் சரியான அணுகுமுறையை மேற்கொள்வது மிகமிக அவசியம் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

கேரளம் – தமிழ்நாடு இடையே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையிலும், தமிழ்நாடு – கர்நாடகம் இடையே காவிரிப் பிரச்சினையிலும், ஆந்திரத்தில் தெலங்கானா விவகாரத்திலும், தற்போது உ.பி. அரசில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் முலாயம் சிங் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் உள்ள பலவீனங்கள் அம்பலமாகியுள்ளன.

சிமெண்ட் விலையைக் குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று ப. சிதம்பரம் கூறிய பிறகும் விலை இறங்கவே இல்லை. அப்படியானால் அந்த அரசுக்கு பொதுமக்களிடத்தில் எத்தகைய வரவேற்பு இருக்கும்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய சோனியா, “சமுதாயத்தில் பல்வேறு மக்களின் உணர்ச்சிகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் கட்சிக்கு இருக்கிறதா?’ எனக் கேட்டுள்ளார். அவரிடம், அதே கேள்வியைத்தான் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது!
===========================================

காங்கிரஸ் தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும்!

நீரஜா செüத்ரி

காங்கிரஸ் கட்சி தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையே பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

தில்லி மாநகரத் தேர்தல், குஜராத் உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் காங்கிரஸýக்கு எளிதான வெற்றி கிட்டிவிடவில்லை. ஜார்க்கண்ட் மாநிலமும் பிரச்சினைக்குரிய களம்தான். உத்தரகண்டில் ஏற்பட்ட முடிவுகள் உத்தரப்பிரதேசத்திலும் எதிரொலிக்கும். மேல் சாதியினர் பாஜக பக்கமும் தாழ்த்தப்பட்டவர்கள் மாயாவதி பக்கமும் போகக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன.

பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் பாஜகவுக்கு புத்துயிர் கிட்டியிருப்பதால் முஸ்லிம்கள் கலக்கம் அடைந்து, இதை எதிர்கொள்ளக்கூடிய உறுதியான ஒரே தலைவர் முலாயம்தான் என்று அவர் பக்கம் சாயக்கூடும்.

பாஜகவிடமிருந்தே காங்கிரஸ் கட்சி சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். “இந்தியா ஒளிர்கிறது’ என்று பேசி வீணாகிப்போன பாஜக பாதையிலேயே காங்கிரஸ் இப்போது போவது போலத் தெரிகிறது.

2004 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த சாமான்ய மனிதனை (ஆம்-ஆத்மி) விட்டு கட்சி விலகிச் செல்கிறது. விலைவாசி உயர்ந்துவிட்டது என்று ஒப்புக்கொள்வது மட்டும் போதாது. பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு நிற்காமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் சோனியா முயற்சிக்க வேண்டும்.

அடுத்தபடியாக, முடிவுகளை எடுக்கும் முறையை காங்கிரஸ் மாற்றிக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அல்லது அரசின் சிலர் மட்டும் கூடி முடிவுகளை எடுக்காமல், பலர்கூடி விவாதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுடைய உணர்வுகளுக்கு எதிரான முடிவுகளைத் தவிர்க்க முடியும்.

இப்போது நடந்து முடிந்த தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அம்சம், “”மதம் சார்ந்த” உணர்ச்சிகரமான பிரச்சினைகளைப் பேசி எந்தக் கட்சியும் வாக்கு கோரவில்லை. ஹிந்துத்துவாவைப் பற்றிப் பேசுவதைக் கைவிட்டு விலைவாசி உயர்வை மட்டும் அதிகம் வலியுறுத்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. அகாலிதளமும் சீக்கியமார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசியல் மேடையில் விவாதிக்கவில்லை.

விதிவிலக்காக, காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் பாஜகவின் மதவாதத் தன்மையைப் பற்றி பொதுக்கூட்டங்களில் பேசினர். பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த ஹிந்துக்கள்தான் பஞ்சாப் நகர்ப்புறங்களில் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர். அவர்களிடம் போய் “”மதச்சார்பின்மை, சிறுபான்மையினருக்கு ஆபத்து” என்ற விஷயங்கள் எல்லாம் எடுபடுமா என்று யோசித்திருக்க வேண்டும்.

3 மாதங்களுக்கு முன்னால் பாஜகவின் தலைமையே கவலையோடு இருந்தது, “”பஞ்சாபில் நம்முடைய கட்சியை வெற்றிபெற வைக்க, பிரபலமான முகங்களே இல்லையே?” என்று. காங்கிரஸின் ஹிந்துத்துவ எதிர்ப்புப் பிரசாரமே பாஜகவுக்கு பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றுத்தந்தது என்றால் மிகையில்லை. பஞ்சாபின் மால்வா பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை ஆதரவு அதிகம் கிடைத்தும், ஆட்சி போனது துரதிருஷ்டவசமானது. இந்த இடம் அகாலிகளின் கோட்டை என்றே கருதப்பட்டுவந்தது.

லூதியானாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய பொதுக்கூட்டத்துக்கு சில ஆயிரம் பேர்களே வந்தது, பிரசாரத்தின் விறுவிறுப்பையே குறைத்துவிட்டது.

அதேசமயம், அத்வானி, வாஜபேயி ஆகியோரின் செல்வாக்கை ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது என்பதை அவர்களுடைய தேர்தல் பொதுக்கூட்டங்கள் சுட்டிக்காட்டின.

சோனியா காந்தி கட்சித் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்ட புதிதில் தினமும் நாட்டு நடப்புகளை கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் விவாதித்தார். அதனால் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் தலைமைக்குக் கிடைத்து வந்தது. இந்த எண்ணிக்கை குறைந்ததால், வெகுஜனங்களைவிட்டு தலைமை தனிமைப்பட்டு போக ஆரம்பித்துவிட்டது. அப்படியொரு ஆலோசனை நடந்திருந்தால், உத்தரப்பிரதேசத்தில் முலாயம் ஆட்சி கலைப்பு நிச்சயம் என்ற பரபரப்பும், அதனால் காங்கிரஸýக்கு கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்காது.

காங்கிரஸ் காரியக்கமிட்டி என்பது மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பாக அது வலுப்படுத்தப்பட வேண்டும். வேறு எந்தப்பதவியும் கொடுத்து திருப்திப்படுத்த முடியாத பிரமுகர்களுக்கான ஓய்வில்லம் போல அதை நடத்தக்கூடாது. சமீபத்திய தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தும் மிக முக்கிய பாடம் இதுதான்.

தமிழில்: சாரி.

Kalki Editorial (March 9, 2007 )

கட்டெறும்பு காங்கிரஸ்!

பஞ்சாப் தேர்தலில் அம்மாநில நிதியமைச்சராக இருந்த சுரிந்தர்
சிங்க்லா, பா.ஜ.க. வேட்பாளர் சித்துவிடம் தோற்றுப் போயிருக்கிறார். இத்தனைக்கும் சித்து மீது கொலை வழக்குத் தொடரப்பட்டு, அவர் அக்குற்றத்துக்காக தண்டனையும் விதிக்கப் பெற்றவர்!

பஞ்சாப் மக்களுக்கு காங்கிரஸிடமும் அதன் பொருளாதாரக் கொள்கையிடமும் சிறிதும் நம்பிக்கை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.

பஞ்சாபிலும் சரி, உத்தரகாண்டிலும் சரி, காங்கிரஸ் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் தேசிய கட்சியாக, நாட்டின் நான்கு திசைகளிலும் வலுவாக இருந்த காங்கிரஸ், இன்றைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது.

இதற்கான காரணங்களை ஆராய்ந்து சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கட்டெறும்பாகத் தேய்ந்து போயிருக்கும் காங்கிரஸ், சில ஆண்டுகளுக்குள் காணாமலே போய்விடும்.

நேரு குடும்பத்தினரின் தலைமைக்காக மட்டுமே இனிமேல் வோட்டு
விழாது என்பது தெளிவாகிவிட்டது. கட்சியின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சோனியா காந்தி, இவ்வுண்மையை ஏற்று, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதுடன், அதன் கொள்கைகளையும்
மறுபரிசீலனைக்குட்படுத்தி, மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

பஞ்சாப் முதல்வராக விளங்கிய அமரிந்தர் சிங், ‘எடுத்தேன்
கவிழ்த்தேன்’ என்று ஆட்சி நடத்தியிருக்கிறார். பழிவாங்கும் நடவடிக்கை, அண்டை மாநிலத்துடனான நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுதல் என்று ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயர் தேடிக் கொண்டிருக்கிறார். உத்தரகாண்ட் முதல்வரோ, தமக்கு
வயதாகிவிட்டது; ஆட்சிப் பொறுப்பில் நீடிப்பது கஷ்டம் என்று
வெளிப்படையாகவே புலம்பியிருக்கிறார்!

காங்கிரஸ் தலைமை, உட்கட்சி ஜனநாயகத்தைக் கடைப்பிடித்து சட்டமன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்திருந்தால், இதுபோன்ற குளறுபடிகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. கட்சித்
தலைமையின் ஆசி மட்டும் இருந்து, தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால், ஒரு முதல்வர்
சிறப்பாகச் செயல்பட முடியாது. தனிநபர் ஆளுமைக்குத் தரப்படும் வெற்று முக்கியத்துவத்தைக் களைந்து, உட்கட்சி ஜனநாயகத்தை காங்கிரஸ் ஏற்றாக வேண்டும்.

மாநில அளவில் மட்டுமின்றி மத்திய ஆட்சி அளவில் எடுக்கப்படும் முடிவுகளும் கடைபிடிக்கப்படும் கொள்கைகளும்கூட காங்கிரஸின் வெற்றி வாய்ப்புகளைப் பாதித்துத் தோல்விக்கு வழிவகுத்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் இதை அவசரமாக மறுத்தாலும், நாடு தழுவிய
விலைவாசி உயர்வுதான் அதன் இமேஜை மிக அதிகமாகக் காயப்படுத்தியிருக்கிறது.

‘‘பண வீக்கம் மிக அதிகமாக இருப்பது கவலை தருகிறது. அதைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்’’ என்று மத்திய நிதியமைச்சரே பேசி என்ன பயன்? ‘ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மறு கண்ணுக்குச் சுண்ணாம்பு’ என்பதுபோல், மத்திய அரசு ஐ.டி. கார் உற்பத்தித் துறைகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், வரி விலக்குத் தந்துவிட்டு, பிற
நிறுவனங்களுக்கு வரிச் சுமையை ஏற்றுகிறது. வரி கூடுவதால் வரி ஏய்ப்பும் கூடி, கறுப்புப் பணப் புழக்கத்துக்குக் காரணமாகிறது. ஐ.டி. துறையின் சம்பள விகிதங்களும் அதில் குவியும் லாபமும் ஏகப்பட்ட பணப் புழக்கத்துக்குக் காரணமாகின்றன. இதனால், ஒரு பிரிவினர் மட்டுமே வசதி கூடி ராஜபோகமாய் வாழ, பிறர் அன்றாடச் செலவுகளைச் சரிக்கட்டவே அவஸ்தைப்படுகின்றனர்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் மேற்கொண்டுள்ள விவசாயத் தொழில் மீதும் அதைச் சார்ந்த பிற தொழில்கள் மீதும் கவனம் திருப்பி, ஆதரவு அளித்து, அவை பெருகி உணவுப் பற்றாக்குறையும்
வேலையில்லாத் திண்டாட்டமும் தீர வேண்டும். காங்கிரஸின் கொள்கையும் செயல்பாடும் இத்திசை நோக்கித்
திரும்பினாலேயழிய அக் கட்சிக்குக் கதிமோட்சம் இல்லை!
Congress TV – Kalki

வாசனும், இளங்கோவனும் இணைந்து விட்டதாகக் கிசுகிசுக்கிறது தமிழக காங்கிரஸ் வட்டாரம். வாசனுக்கு எதிராக அணி திரள முதலில் கிருஷ்ணசாமிக்கு ஓகே சொன்னார் இளங்கோவன். ஆனால், காலப்போக்கில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட கிருஷ்ணசாமி, இளங்கோவன் தரப்புப் பிரமுகர்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டாராம். அதுதான் இளங்கோவன் கோபத்துக்குக் காரணம். ஆனால் ப. சிதம்பரம் மிகவும் உறுதியாகத் தன்னை ஆதரிப்பதால், தன் பதவிக்கு ஆபத்து இருக்காது என்று நம்புகிறார் சாமி!

காங்கிரஸ் கட்சியும் தமக்காக ஒரு டி.வி. சேனல் துவங்க ஏற்பாடு செய்து விட்டதாம்! காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், வியாபாரப்
பிரமுகருமான வசந்தகுமார், தமது பெயரிலேயே துவங்கும் சேனல் காங்கிரஸார் ஆசையைத் தீர்த்து வைக்கப் போகிறது. இதற்காக, தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘இமயம்’ என்ற சேனலை
வாங்கிவிட்டார்களாம்!

தி.மு.க.வை காங்கிரஸிடமிருந்து பிரிப்பதற்கு விடுதலைப்புலிகள்
விவகாரம்தான் சரி என்ற அணுகுமுறையை ஜெயலலிதா
கையிலெடுத்திருக்கிறார். சமீபத்தில் புலிகளின் ஆயுதக் கப்பல்
பிடிபட்டது, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ‘புலிகள் சென்னையில் பங்கு மார்க்கெட் நிறுவனங்கள் வைத்திருக்கிறார்கள்’ என்று சொன்னது ஆகியவற்றை காங்கிரஸின் டெல்லிப் பிரமுகர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று ‘பிரிக்கும்’ வேலையில் ஈடுபட, அ.தி.மு.க.வின் ராஜ்ய சபா உறுப்பினர்கள்
முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக அரசியல்வாதிகள் தங்கள் கல்விச் ‘சேவை’யை நம்
மாநிலத்துக்கு வெளியேயும் விஸ்தரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தங்கபாலு ஜம்முவில் மருத்துவக் கல்லூரி ஒன்றைத் துவக்க
இருக்கிறாராம்!

சைதை துரைசாமி ஆண்டொன்றுக்கு நூறு மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

============================

Dinamani – March 13, 2007

காஷ்மீரில் துணிச்சலான முடிவை எடுக்குமா காங்கிரஸ்?

நீரஜா செüத்ரி

காஷ்மீர் அரசியலில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான உறவில் புதிய உரசல்கள் ஏற்பட்டிருக்கின்றன; உறவை உடைக்கும் அளவுக்கு அந்த உரசல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

எனவே, அது தொடர்பாகப் பேச வருமாறு முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான முப்தி முகம்மது சய்யீதை தில்லிக்கு அழைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். தனக்கு உடல்நலம் சரியில்லாததால், தனது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தியை தில்லிக்கு அனுப்பினார் சய்யீத்.

காஷ்மீரின் பல பகுதிகளில் காவல் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய தலைவர்களிடம் நேரில் வலியுறுத்துவதற்காக மெஹ்பூபா அனுப்பப்பட்டார். அதோடு, தமது கருத்துகள் அடங்கிய கடிதத்தையும் அனுப்பி வைத்தார் சய்யீத். எனினும், படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார் பிரதமர்.

ஜம்மு ~ காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் முன்மொழிந்துள்ள யோசனைகளில் ஒன்று, காஷ்மீரை ராணுவம் இல்லாத பகுதியாக அறிவிப்பதாகும். இந்த யோசனையைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர், ஜம்மு ~ காஷ்மீர் முதல்வரான குலாம் நபி ஆசாத்.

“காஷ்மீரில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்வது என்பது வேறு; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் பணியில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது வேறு. ராணுவமில்லாப் பகுதியாக அறிவிப்பது என்றால், எல்லையில் இருந்தும் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருவதாகும். இதை நாங்கள் கோரவில்லை. மாநிலத்தில் நிலைமை மேம்பட்டுள்ளதால், பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள், தனியார் இல்லங்கள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை’ என்று மக்கள் ஜனநாயகக் கட்சி வாதிடுகிறது.

உண்மையில், “”காஷ்மீரில் கூட்டு நிர்வாகம்” என்பதுதான் முஷாரபின் அமைதித் திட்டத்தில் சர்ச்சைக்குரிய அம்சமாகும். “”கூட்டு நிர்வாகம்” என்பது காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மையைக் காவுகொடுப்பதாக அமைந்துவிடும் என்று பிரதமரை பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.

ஆனால், “”கூட்டு நிர்வாகம்” என்ற யோசனையல்ல; மாறாக, “படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது’ என்ற யோசனையே, ஜம்மு ~ காஷ்மீரில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது.

இந்தியா ~ பாகிஸ்தான் இடையிலான சமாதான முன்முயற்சிகளின் வேகம் தற்போது குறைந்துள்ளது; காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளின் வேகமும் குன்றியிருக்கிறது. இதற்கும் நாட்டின் அரசியல் நிலைமைக்கும் தொடர்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதான்.

தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் எங்காவது தவறாக ஓர் அடியை காங்கிரஸ் எடுத்து வைத்துவிட்டால் போதும்; அதற்கும் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பூர்வீகத்துக்கும் முடிச்சுப் போட்டு, அதைப் பெரும் பிரச்சினையாக்கிவிட எதிர்க்கட்சியான பாஜக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் அறிந்தே இருக்கிறது. அதனால்தான் மிக மிக எச்சரிக்கையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் சோனியா.

சியாச்சின் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரிகள் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அதில் ராணுவத்துக்கு ஆட்சேபம் இருப்பதால், சியாச்சின் பனிச்சிகரப் பகுதிகளில் இருந்து இந்தியப் படைகளை வாபஸ் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் சோனியாதான் என்று கூறப்படுகிறது.

சியாச்சின் பகுதியில் இருந்து இந்தியப் படைகளைத் திரும்பப் பெற்றவுடன் பாகிஸ்தான் படை அதை ஆக்கிரமித்துவிட்டால், மீண்டும் அதைக் கைப்பற்றுவது மிகக் கடினமான செயலாகிவிடும் என்று அரசிடம் தெளிவுபடுத்திவிட்டனர் ராணுவ அதிகாரிகள்.

பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இல்லாமலே, வெளியுறவு விவகாரங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு அந்த அமைச்சகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் அமைச்சர் பிரணப் முகர்ஜி.

பாகிஸ்தானுடன் நல்லுறவு, காஷ்மீர்ச் சிக்கலுக்குத் தீர்வு ஆகிய பிரச்சினைகளில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்காமல், படிப்படியாக முன்னேறிச் செல்வதையே அவரும் விரும்புகிறார்.

ஆனால் காஷ்மீரைப் பொருத்தவரை காலம் கரைந்து கொண்டிருக்கிறது. ராணுவத்துடனான மோதல்களில் பலியானவர்கள் என்று கூறப்படுவோரின் சடலங்கள் அண்மையில் காஷ்மீரில் தோண்டி எடுக்கப்பட்டன; அப் பிரச்சினை மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது கவலை அளிக்கும் அறிகுறி. புதிய முன்முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் மத்தியில் தமக்கு இருக்கும் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற பதற்றம் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜம்மு ~ காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நோக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் வாதத்திலும் நியாயம் இல்லாமலில்லை. ராணுவ ரீதியிலான தீர்வு இல்லை என்றாகிவிட்டது; மாநிலத்தின் அமைதிச் சூழலிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசின் மீதான நல்லெண்ணம்தான் அதிகரிக்கும் என்று அக் கட்சி கூறுகிறது.

நிலைமை மோசமாக இருந்தபோது பாதுகாப்புப் படைகள் வந்தன; நிலைமை மேம்பட்டவுடன் அவை திரும்பப் பெறப்படுகின்றன என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும்; இது, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்; காங்கிரஸýக்கும் இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும்.

தமிழில்: லியோ ரொட்ரிகோ.

Posted in ADMK, Agriculture, Aklai Dal, Amitabh, BJP, BSP, Chaari, Chidambaram, Coalition, Commerce, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Delhi, DMK, Economy, Elangovan, Elankovan, Elections, Finance, Ghulam, Gujarat, Gulam, Gulam Nabi Azad, Ilangovan, Ilankovan, Inflation, Jammu, JJ, Kalki, Kashmir, Kisukisu, Krishnasami, Krishnasamy, LTTE, Manipur, Manmohan, Manmohan Singh, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Mehbooba, Mufthi, Mufti, Mulayam, Muslims, Neeraja, Neeraja Chowdhry, News, Pakistan, Punjab, Results, Rumor, Rumour, Sayeed, Sayid, Siachen, Sonia, Srinagar, Thangabalu, UP, Uttar Pradesh, Uttarkand, Uttarkhand, Vambu, Vasan, Vasanth & Co, Vasanthakumar | Leave a Comment »