Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Krishna’ Category

Water supply & distribution in Tamil Nadu – Inter-state relations, Dam Construction, Rivers

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

மூன்று பக்கமும் துரோகம்; ஒரு பக்கம் கடல்!

கே. மனோகரன்

தமிழகம்போல இன்று தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் மாநிலம் இந்தியாவில் வேறொன்று இருக்க முடியாது.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன. நமக்குப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரே நீர்ஆதாரம் கடல்தான். தாகத்துக்கு கடல்நீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய முடியுமா?

தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மல்லு கட்டுவதற்கே ஆண்டுகளை இழந்ததுடன், இருக்கும் ஏரி குளங்களையும் நாம் பாழாக்கி இழந்து வருகிறோம்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது பூண்டி நீர்த்தேக்கம். குசஸ்தலை ஆற்றிலிருந்துதான் இந்த நீர்த்தேக்கத்துக்குத் தண்ணீர் வரவேண்டும். இந்த ஆறு பள்ளிப்பட்டில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் 12 கி.மீ. தூரத்தில் தொடங்குகிறது.

அங்குள்ள அம்மபள்ளி என்ற இடத்தில் 1975-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை இருமலைகளையும் இணைத்து அணை கட்டும் பணி நடந்தது. ஆனால் இப்படி ஓர் அணை கட்டப்படுவதுகூட தெரியாமல் தமிழக அரசு அமைதியாக இருந்தது. அதன் பிறகு குசஸ்தலை ஆறு தமிழகத்துக்குத் தண்ணீர் தரவில்லை. தலைவலி தந்தது. வறண்டுபோனது பூண்டி நீர்த்தேக்கம்.

குசஸ்தலை ஆறு தடைபட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயம் குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பற்றித்தான் கவலைப்பட்டது. ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் பல கோடிகளை தமிழக அரசிடம் பங்குத்தொகையாகப் பெற்ற ஆந்திர அரசு, அந்த நிதியில் சித்தூர், கடப்பா போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள ஏரிகளைப் புனரமைத்தும், மிகப்பெரிய ஏரியான பிச்சாட்டூர் ஏரியை சீரமைத்தும், புதிய நீர்த்தேக்கங்களையும் கட்டி கால்வாய்கள் மூலம் இணைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டது.

சென்னைக்கு தண்ணீர் தருவதாகச் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் “ஜீரோ பாய்ண்ட்’ எனப்பட்ட கண்டலேறு வரை தண்ணீர் வந்ததே தவிர சென்னைக்கு வரவில்லை. இதனால் தவிர்க்க முடியாமல் புதிய வீராணம் திட்டத்தை தமிழகம் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் பாலாற்றுக்கு முதல் பாதிப்பை ஏற்படுத்தியது கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா நீர்த்தேக்கம். கர்நாடகம் படிப்படியாக அதன் கொள்ளளவையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் பாலாற்றின் நீர்வரத்து குறைந்து போனது.

கர்நாடகத்துக்கும், தமிழக எல்லைக்கும் இடையில் பாலாற்றுக்கு வரும் உபநதிகளான மல்லிநாயக்கனஹள்ளி ஆறு, பெட்மடு ஆறு ஆகியவற்றின் குறுக்கே தலா 4 ஏரிகளை ஆந்திர அரசு கட்டிவிட்டது. இதேபோல் தமிழக எல்லையின் 3 கி.மீ. தூரத்தில் 2000-ம் ஆண்டில் பாலாற்றின் உப நதியான மண்ணாற்றின் குறுக்கே பெரியபள்ளம் என்ற இடத்தில் ரூ. 65 லட்சத்திலும், அதே நேரத்தில் எல்லையின் சில நூறு அடிகள் தூரத்தில் பிரம்மதேவர் கொல்லை என்ற லட்சுமிபுரத்தில் ரூ. 1.20 கோடியில் இருமலைகளை இணைத்து ஆந்திர அரசு அணைகளை கட்டியது.

இவற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் தற்போது குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே பெரிய அளவிலான அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் தமிழக அரசு புதிய அணைத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் காவிரி வடிகாலில் கிடைக்கும் கூடுதல் நீர் சராசரியாக 30 டி.எம்.சி. கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த தண்ணீரில் மட்டுமே 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம்.

ஆளியாறு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காத கேரளம், முல்லைப் பெரியாறு அணையில் முரண்டு பண்ணிக்கொண்டு வருகிறது. சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு குறையும் வகையில், அதன் துணைநதிகளை தனியார் குடிநீர் ஆலைகளுக்கு தாரை வார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது கேரளம்.

காவிரியை தமிழகத்தின் வாய்க்கால் போலக் கருதி, மிகைநீரை மட்டுமே வழங்குகிற திட்டத்தை கர்நாடகம் எப்போதோ தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கான நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த மூன்று மாநிலங்களும் மறித்துக் கொண்டு வருகின்றன.

இழந்த தண்ணீரைப் பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் நீரையாவது உருப்படியாகப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர்களின் கண்ணீரால் கடல் நீர் மேலும் கரிக்கும்.

————————————————————————————————————————–
பாலாற்றில் விளையாடும் அரசியல்!

ஆர். ராமலிங்கம்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு விரைவில் அணை கட்டத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உறுதிபட கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய விவரம் கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. தமிழக முதல்வரும் இவ்விஷயத்தில் நம்பிக்கையூட்டும் தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை.

இதை எதிர்க்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலாறு விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற தோழமைக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.

கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 40 கி.மீ. தூரமும் ஆந்திரத்தில் 31 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரமும் பயணிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக, அவ்வப்போது பெய்யும் கனமழைதான் தமிழக பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையை ஈரப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே பாலாற்றில் நீர்வரத்து இருந்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு பேத்தமங்கலத்தில் அணை கட்டியுள்ளது. அந்த மாநிலம் வெளியேற்றும் உபரி நீரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி ஆந்திர அரசு நீர்நிலைகளை நிரப்பி வருகிறது.

மழைக் காலங்களில் அதிர்ஷ்டவசமாக ஆந்திர எல்லையில் இருந்து ஒருசில தினங்கள் வரும் நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் பாலாறு பொய்த்துவிடுமே என தமிழகத்தின் வடமாவட்ட மக்களின் அச்சப்படுகின்றனர்.

தற்போது மணல் சுரண்டல், நீர்வளம் பறிபோதல், தோல் தொழிற்சாலைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கழிவுநீரை வெளியேற்றுவதால் படுகை மாசுபடுதல் போன்ற மும்முனைத் தாக்குதலில் தமிழக பாலாற்றுப் பகுதி சிக்கியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1892-ல் தமிழகத்தில் பாயும் 12 ஆறுகளுக்கு நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் பாலாறும் இடம் பெற்றுள்ளது.

அன்றைய மைசூர் மற்றும் மதராஸ் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்கள் 1952 வரை அமலில் இருந்தது. அன்றைக்கு சித்தூர் மாவட்டம், சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பாலாற்று நீர்வளத்தில் ஆந்திர மாநிலத்துக்கும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பாரம்பரிய உரிமை அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழகம் பாலாற்று பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.

இரு மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாலாற்று பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதில் பங்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, காவிரி நீர் பங்கீட்டை போன்று பாலாற்று நீரில் தனக்குள்ள பங்கீட்டு உரிமையை தமிழகம் நிலைநாட்டுவது ஒன்றே தீர்வாக அமையும்.

நதிநீர் பங்கீடு உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பாலாற்று நீர்வரத்தில் 60 சதவீதத்தை தமிழகம் பெற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு 1956-ல் கொண்டு வந்த நதிநீர் வாரியச் சட்டத்தை பயன்படுத்த முடியும். தமிழக அரசு மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இச்சட்டத்துக்கு உயிரூட்டலாம்.

மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை எழுந்தால் இச்சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு வாரியத்தை ஏற்படுத்த முடியும்.

அதன் மூலம் மாநிலங்களுக்கிடையே உள்ள நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தக்க அறிவுரையை வழங்க முடியும். புதிதாக நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஒன்றையும் மாநிலங்களுக்கிடையே ஏற்படுத்த முடியும்.

தமிழக அரசியல் கட்சிகளிடையே மக்களின் பொதுப் பிரச்னைகளில் கூட ஒற்றுமையின்மை நிலவுவது உலகறிந்த உண்மை. இது அண்டை மாநிலங்களுக்கு பலமாக அமைந்துள்ளது.

பாலாறு விஷயத்தில் திமுக அரசும், எதிர்கட்சிகளும் ஒன்றையொன்று குறைகூறி அரசியலாக்குவதைத் தவிர்த்து ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இறங்கினால் மட்டுமே நதிநீர் பங்கீட்டில் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இதன் மூலம் பாலாற்று பிரச்னையில் மத்திய அரசும், நீதிமன்றமும் தலையிடுவதற்கான நெருக்கடியை தமிழகத்தால் ஏற்படுத்த முடியும்.

ஆர்ப்பாட்ட அரசியலைக் காட்டிலும், ஆரோக்கிய அரசியலே ஆபத்தைத் தடுக்க முடியும். தமிழக அரசியல் தலைவர்கள் சிந்திப்பார்களா?

—————————————————————————————————————–
மக்கள் திரள் போராட்டம்-காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்


தமிழ்நாட்டில் ஏரி, குளம், ஆறுகளுக்குப் பஞ்சம் இல்லை. காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் உண்டு. தென்மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவ மழை ஆகிய இரு பருவ மழைகள் ஒருபோதும் பொய்த்ததில்லை. முப்புறம் கடலும் உள்நாட்டில் ஏராளமான கனிம வளங்களும் உள்ளன. உழைப்பதற்குச் சலிக்காத மக்களும் உண்டு. அறிவாற்றலுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வளங்களும் நிறைந்திருந்த தமிழ்நாடு இன்றைக்கு என்னவாகியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வேதனையும் விரக்தியுமே மிஞ்சுகின்றன.

நீரில்லா ஆறுகள்

தமிழ்நாடு எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மீள முடியாதபடி தவிக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிப்பதற்கு கர்நாடகமும் கேரளமும் பிடிவாதமாக மறுக்கின்றன. பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரம் தனது எல்லைக்குள் அணை கட்ட முற்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆறுகளின் மூலம் தமிழ்நாட்டில் இருபது மாவட்டங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் இப்போது இந்த மாவட்டங்கள் பாசனத்திற்குரிய நீரை இழந்து வறண்ட பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக மாறினால் உணவுக்காக பிற மாநிலங்களிடம் தமிழகம் கையேந்தி நிற்கக்கூடிய நிலைமை உருவாகிவிடும்.

விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் போதுமான நீரில்லாமல் நாம் தவிக்கும்போது, ஆறுகளிலும் நிலத்தடியிலும் எஞ்சியுள்ள சிறிதளவு நீரையும் உறிஞ்சி எடுத்து விற்பனைப் பொருளாக “கோகோ கோலா’, “பெப்சி’ போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அவலமும் நடைபெறுகிறது.

நகர்ப்புற மக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கே குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மணல் கொள்ளை

அண்டை மாநிலங்களின் வஞ்சனையால் வறண்டுவிட்ட இந்த ஆறுகளிலிருந்து மணல் மிக எளிதாகக் கொள்ளை அடிக்கப்படுகிறது. எந்த மாநிலங்கள் நமக்குத் தண்ணீர் தர மறுக்கின்றனவோ அதே கேரள மாநிலத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் லாரிலாரியாகத் தமிழக ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் கொள்ளை அடிப்பதற்கு வசதியாக இந்த ஆறுகளில் நீரோட்டம் இல்லாமல் அண்டை மாநிலங்கள் செய்து விட்டனவோ என்றுகூட சந்தேகம் எழுகிறது. இந்த ஆறுகள் வறண்டு போவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் தமிழக அரசு இருப்பதற்கு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பவர்கள் சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி ஆளும் கட்சியினரே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழகத்தின் மற்ற ஆறுகளிலும் ஓடைகளிலும் மணல் அடியோடு சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழக ஆறுகளின் இரு பக்கமும் உள்ள கிணறுகளும் நீரூற்றுகளும் வறண்டு போய் மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உருவாகிவிடும். மேலும் இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள், பாலங்கள் ஆகியவை மணல் கொள்ளையின் விளைவாக பலவீனம் அடைந்து இடியும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் சென்னைக்கு அருகே காரனோடை பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறையும் ஏரிகள்

ஆறுகளின் கதி இதுதான் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சுருங்கி வருகின்றன. பல ஏரிகள் உண்மையிலேயே காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமான 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. தமிழக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு இந்த ஏரிகள் பாசன வசதி அளித்து வந்தன. இவற்றின் மூலம் பத்து லட்சம் ஹெக்டேர்கள் பயன் பெற்றன.

1980-ஆம் ஆண்டில் இந்த ஏரிகளின் பாசன வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் மேலும் 54 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன் பெறும் என மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 200 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டபோது அந்தத் தொகையை ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு தருவதாக ஒப்புக்கொண்டு இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 27 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இது ஏன் என்பதை ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.

தமிழ்நாட்டில் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள ஏரிகளைப் பொதுப்பணித்துறையும் அதற்குக் குறைவாக உள்ள ஏரிகளை ஊராட்சி ஒன்றியங்களும் நிர்வகித்து வருகின்றன. இவை தவிர அணை நீரைப் பெற்று பாசனம் செய்யும் 100 ஏக்கருக்கும் குறைவான சில ஏரிகளையும் பொதுப்பணித்துறை நிர்வகிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் 12 ஆயிரம் ஏரிகளும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 27 ஆயிரம் ஏரிகளும் உள்ளன.

கடந்த நாற்பதாண்டுகளில் இந்த ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. ஏரிகளில் மட்டுமல்ல; ஏரிகளுக்கு மழை நீரைக் கொண்டு வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீரை நிலங்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாய்களும்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. இதன் காரணமாக பல ஏரிகள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தனி நபர்கள் ஆக்கிரமித்த ஏரிகளை விட அரசுத் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் இன்னும் அதிகமாகும். நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் ஏரிகளுக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளன.

ஏரிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் கட்டடமே உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது என்பது வேதனையான உண்மை.

ஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 27 ஆயிரம் கண்மாய்களில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் எல்லைகள் சுருங்கி அழிந்து வரும் அபாயம் உள்ளது. ஏரிகளிலும் கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்கவும் அதன் நீர் வழி எல்லைகளை வகுக்கவும் அண்மையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்திருப்பவர்களை வெளியேற்றும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கோ அல்லது ஊராட்சித் தலைவர்களுக்கோ இல்லை.

ஆக்கிரமிப்புகள் திடீரென்று ஓரிரு நாள்களில் நடைபெற்றுவிடவில்லை. ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டோ அல்லது அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கடமை தவறிய இந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற ஆணையில் எதுவும் கூறப்படவில்லை என்பது திடுக்கிட வைக்கும் உண்மையாகும்.

காடுகள் அழிப்பு

1967-ஆம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் 23 விழுக்காடாக இருந்தது. இப்போது தமிழகக் காடுகளின் பரப்பளவு என்பது 17 விழுக்காடாகும். 6 விழுக்காட்டிற்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுவிட்டன. காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளின் ஊழலால் இது நடைபெறுகிறது. அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெறாது. இதன் விளைவாக பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் ஆறுகள் வற்றத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கடற்கரை 1000 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. பல இடங்களில் கரையோரமாக அலையாற்றுக் காடுகள் இருந்தன. தென் மாவட்டங்களில் கடற்கரை நெடுகிலும் தேரிகள் என அழைக்கப்படும் மணற்குன்றுகள் இயற்கையாக அமைந்திருந்தன. ஆனால் இந்தக் காடுகளையும் மரம் வெட்டுபவர்கள் விட்டு வைக்கவில்லை. மணற்குன்றுகளையும் சிதைத்து விட்டார்கள். இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுனாமி அலைகள் வீசியபோது அவற்றைத் தடுக்கும் அலையாற்றுக் காடுகளும் தேரிகளும் இல்லாததன் விளைவாக பேரழிவு ஏற்பட்டது.

மோதல் சாவுகள்

காவல்துறை மக்களை வேட்டையாடும் துறையாக மாறிவிட்டது. ஆளும் கட்சியினரின் ஏவல்படையாக காவல்துறை மாற்றப்பட்டு நீண்ட நாள்களாகிவிட்டது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான பல்வேறு வகையான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.

சொல்லாமலேயே மற்றொரு பெரும் கொடுமை தமிழகத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள் எனக் குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க காவல்துறை முயல்கிறது. அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் நீதிமன்றங்களிடமிருந்து காவல்துறை, தானே பறித்துக் கொண்டது. இந்தக் குற்றவாளிகளை உருவாக்கி வளர்த்துவிட்டதில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதில் சமபங்கு காவல் துறைக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் ஆட்டிப் படைக்கப்படுகிறார்கள் – சுரண்டப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், சமூகவிரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்குதடையின்றி நடத்துகிறது.

மீறப்படும் சட்டமன்ற மரபுகள்

சட்டமன்றத்தில் இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்கள் பேச முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். வெவ்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசுக்கு எதிராக யாரும் எதுவும் கூறிவிடாதபடி தடுக்க முயற்சி வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது.

ஆளும் கட்சிதான் இவ்வாறு சட்டமன்ற மரபுகளைத் துச்சமாகக் கருதி மதிக்காமல் போனால் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அவ்வாறே நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதே கிடையாது. வெளியே இருந்து கொண்டு ஆளும் கட்சியை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிடுவதோடு தன் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். அவர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் சட்டமன்றக் கூட்டத்தை அறவே புறக்கணித்தார். முதலமைச்சராக இருந்தால்தான் சட்டமன்றத்திற்கு வருவது. இல்லையேல் வருவது தங்கள் கௌரவத்திற்கு இழுக்கு என்று இருவருமே கருதுகிறார்கள். சட்டமன்ற ஜனநாயகத்தை உண்மையிலேயே இவர்கள் மதிப்பவர்களாக இருந்தால் சட்டமன்ற கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். முடியவில்லை என்றால் தங்கள் பதவியை விட்டு விலகி வெளியேற வேண்டும்.

மக்கள் போராட்டம்

சட்டமன்ற மரபுகள் துச்சமாக மதிக்கப்பட்டு மக்கள் பிரச்னைகள் பற்றி அங்கே பேச முடியாத நிலைமையில் வெளியில் மக்கள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய – மாநில அரசுகளின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் ஒடுக்குமுறைகளையும் சர்வாதிகார சட்டங்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது எழுந்துள்ளது.

பதவிகளைக் காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தலுக்குத் தேர்தல் கொள்கையற்ற கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

தமிழக அரசியல் சீர்கேடுகளை எதிர்த்தும் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் மக்கள் திரண்டு எழுந்து போராட முன்வர வேண்டும். அந்தந்த ஊரில் இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினால், எத்தகைய அடக்குமுறையாலும் அப்போராட்டத்தை ஒடுக்க முடியாது.

1965ஆம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டமாக நடைபெற்றது. இந்தியை எதிர்த்த திராவிடக் கட்சிகள்கூட அந்தப் போராட்டத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல் பதுங்கின. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்களான கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சி. இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்களே நடத்திய இந்தப் போராட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 1970களின் பிற்பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகளின் ஆதரவும் கிடைத்தது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடினார்கள். 1975ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் தொடங்கியபோது மக்கள் பேராதரவு அளித்தனர். பெரும் தியாகசீலரும் தன்னலமற்றவருமான அவரை மக்கள் நம்பினார்கள். மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி இந்திராவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றி மீண்டும் ஜனநாயக ஆட்சியை அவர் நிலைநாட்டினார்.

மேற்கண்ட போராட்டங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கொதிப்புணர்வுடன் போராடினார்கள். இந்த மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாகத்தான் ஆட்சியாளர்கள் அடிபணிய நேரிட்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. நாடு பூராவிலும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு திரண்டு எழுந்து போராடுவதென்பது அத்தனை எளிதானதல்ல. மக்கள் தங்கள் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல், கள்ளச் சாராயம், மணல் கொள்ளை, ஏரிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, காவல் துறையின் காட்டாட்சி மற்றும் சமூகக் கேடுகளை எதிர்த்து அந்தந்தப் பகுதிகளில் மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் நாடு தழுவிய பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

மக்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்டி அவர்களைத் திரட்டி இத்தகைய வேண்டாத சக்திகளை எதிர்த்துப் போராட முயற்சி எடுக்க வேண்டிய கடமை தன்னலமற்ற மக்கள் தொண்டர்களுக்கு உண்டு.

ஜனநாயகச் சிதைவு, தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து நிற்றல் போன்றவற்றிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் தமிழக மக்களைத் திரட்டி மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்கள் திரள் போராட்டம் நமது கடமை மட்டுமல்ல. வரலாற்றுக் கட்டாயமும் ஆகும்.

இந்த வேலையை நாம் செய்யாமல் நமது சந்ததியினர் செய்யட்டும் என்று விட்டுவிடுவோமானால் எதிர்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in Agreements, Agriculture, Alliance, Andhra, AP, Bengaluru, Bethamangala, Blind, Border, Cauvery, Center, Chennai, Construction, Dam, Distribution, DMK, Drink, Drinking, Drinking Water, Farming, Farmlands, Flood, Flow, Govt, Inter-state, Interstate, Intrastate, Karnataka, Kaveri, Kerala, Krishna, Kuchasthalai, Kusasthalai, Lakes, Limits, Madras, Management, Mullai, Mullai Periyar, Mullai Periyaru, Mysore, Nature, Nedumaaran, Nedumaran, Paalar, Paalaru, Palar, Palaru, peasants, Periyar, Periyaru, Pethamangala, Pichathoor, Pichathur, Pichatoor, Pichatur, Politics, Poondi, reservoir, River, Rivers, Sea, Shortage, State, Storage, Supply, Tamil Nadu, TamilNadu, TMC, TN, Waste, Water | Leave a Comment »

SriKrishna Commission Report – Pay Commission suggests Firing over Suspension

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

ஆபத்துக்கு அச்சாரம்!

மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் ஒரு பிரச்னை நிர்வாகத்தையும், நாட்டின் வருங்காலத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் தன்மையது என்பதால், தவறான முடிவு எடுக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. இந்த விஷயம் ஊடகங்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை என்பது அதைவிட வருத்தமாக இருக்கிறது.

முன்னாள் நீதிபதி பி.எஸ். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த அறிக்கையை அரசு அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றாலும், அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் வருங்காலத்தில் அரசு ஊழியர்களின் பணி நியமனங்கள் மற்றும் அவர்களது ஊதியங்கள் தீர்மானிக்கப்படும்.

தான் சமர்ப்பிக்க இருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் பற்றி சமீபத்தில் பேசும்போது, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

இனிமேல், மூத்த அரசு அதிகாரிகளின் நியமனத்தில் வேலை உத்தரவாதப் பிரிவு அகற்றப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பணியிலிருந்து அகற்றப்படும் வகையில் திருத்தங்கள் செய்ய சிபாரிசு செய்யப்போவதாக அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய அரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளின்படி, ஓர் அரசு ஊழியர் தவறிழைத்திருக்கிறார் என்று நிரூபிக்கப்படாதவரை அவரை வேலையிலிருந்து அகற்ற முடியாது. அதாவது, திறமையின்மை ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க சரியான காரணமாக இருக்காது.

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்துப்படி, அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி நிரந்தரமானது என்கிற காரணத்தால் அலட்சிய மனப்போக்குடன் செயல்படுகிறார்கள் என்பதுடன் பொதுமக்களையும் அவர்களது கோரிக்கைகளையும் பொருள்படுத்துவதில்லை. ஒருவகையில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால், அவர் மறந்துவிடும் மற்றொரு பக்கமும் இருக்கிறது.

அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளும் மேலதிகாரிகளும் இடமாற்றம் செய்ய முடியுமே தவிர பணியிலிருந்து அகற்ற முடியாது என்பதால்தான், இன்னமும் பல அதிகாரிகள் நேர்மையாகவும் பயமின்றியும் செயல்பட முடிகிறது.

ஆட்சியில் இருப்பவர்களிடம் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை அளித்துவிட்டால், தங்களுக்கு அடிபணிந்து நடக்காத அதிகாரிகளை அகற்றிவிட்டு, குற்றேவல் புரியத் தயாராக இருக்கும் அதிகாரிகளை மட்டும்தான் வைத்துக் கொள்வார்கள். இதுவே, நிர்வாகம் சீர்கெடவும், அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யவும், ஊழல்கள் அதிகரிக்கவும் வழிகோலிவிடும் என்பது ஏனோ நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவுக்குத் தெரியாமல் போய்விட்டது.

தனியார் வர்த்தக நிறுவனங்களிலுள்ள திறமையும் சுறுசுறுப்பும் ஏன் அரசு நிர்வாகத்தில் இல்லை என்பதற்கு, அரசு ஊழியர்களின் சேவை விதிகள்தான் காரணம் என்பது நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்து. முதலாவதாக, அரசு இயந்திரத்தை, வியாபார நிறுவனங்களுடன் ஒப்பிடும் போக்கு அபத்தமானது. மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசு நிர்வாகமும், வியாபார லாபத்துக்காக நடத்தப்படும் தொழில் நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. எந்தவிதத்திலும் ஒப்பிடத்தக்கவை அல்ல.

அரசு நிர்வாகம் செம்மையாக இல்லாமல் இருப்பதற்கும், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் இருப்பதற்கும், சுறுசுறுப்பாகவும் பொறுப்புணர்வுடனும் இயங்காமல் இருப்பதற்கும் காரணம், அந்த நிர்வாகத்தை நடத்துகின்ற நமது அரசியல் தலைவர்கள்தான் மிக முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது அரசியல்வாதிகளின் தரத்திலும், அவர்களது செயல்பாடுகளிலும், கண்ணோட்டத்திலும் மாறுதல் ஏற்படாத வரையில் நிர்வாகச் சீர்திருத்தம் என்பது வெறும் கானல்நீராகத்தான் இருக்க முடியும். ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும், தூய்மையானவர்களாகவும் இருப்பார்களேயானால், அரசு நிர்வாகமும் அதற்குத் தகுந்தாற்போல மாறும் தன்மையது என்பதுதான் உண்மை.

அரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, அவர்களை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யும் அதிகாரம் ஆட்சியாளர்கள் கையில் கொடுக்கப்படுவது ஆபத்துக்கு அச்சாரம் போடும் விஷயம். இதனால் பாதிக்கப்படப் போவது திறமையற்றவர்களும் ஊழல் பேர்வழிகளுமல்ல. மாறாக, திறமைசாலிகளும் நேர்மையானவர்களும்தான். விபரீதத்தை விலை கொடுத்து வாங்கிவிடக் கூடாது!

Posted in Appeals, Commission, Compensation, Corruption, employees, Fired, Government, Govt, job, Justice, kickbacks, Krishna, Law, Mull, Order, Pay, Report, Salary, Security, Sri Krishna, SriKrishna, Suggestions, Suspend, Suspension, Work | Leave a Comment »

No water supply shortage in Chennai till October 2007

Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007

சென்னையில் அக்டோபர் வரை குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது

சென்னை, ஜூன் 3: சென்னையில் வரும் அக்டோபர் வரை குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என்று சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் (பணிகள் மற்றும் பராமரிப்பு) வி. சிவகுமரன் தெரிவித்தார்.

போதுமான நீர் கையிருப்பு உள்ளதால், தினமும் 64 கோடி லிட்டர் நீர் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியது:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம் மற்றும் புழல் ஏரிகளில் 332 கோடி கன அடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 109 கோடி கன அடியும், வீராணம் ஏரியில் 42 கோடி கன அடியும் நீர் உள்ளது.

இவற்றைத் தவிர, தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதியிலிருந்து ஜூலை முதல் ஆகஸ்ட் வரை 8 டி.எம்.சி. நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் வரும் அக்டோபர் மாதம் வரை சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 64 கோடி லிட்டர் நீர் தொடர்ந்து வழங்கப்படும்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கடந்த ஏப்ரல் முதல் நாளொன்றுக்கு 11 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தேவைப்பட்டால் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் அளவாக உயர்த்தப்படும் என்றார்.

Posted in 2007, Aquafina, Boring pump, Bottled water, Chembarampakkam, Chennai, Cholavaram, Chozhavaram, Consumer, Customer, Dam, Dasani, Drink, Drinking, Expenses, Krishna, Lake, Land water, Liter, Litres, Lorry Water, Madras, October, Poondi, Pump Water, Pumping Station, Puzhal, River, Shortage, Spring water, Supply, Tap Water, Teleugu Ganga, TMC, TN, Water | Leave a Comment »

Krishna Canal project farmland acquisition – Poonamallee Taluk office furniture as compensation

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்காததால் பூந்தமல்லி தாலுகா அலுவலகம் ஜப்தி

கிருஷ்ணா கால்வாய்க்காக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருள்களுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

சென்னை, மார்ச் 27: அரசு கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு உரிய தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

கிருஷ்ணா நதி நீர் கால்வாய் பணிக்காக திருவள்ளூர் அருகே 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்களை அரசு 1990-ல் கையகப்படுத்தியது. இதில் புள்ளரம்பாக்கம், பொத்தூர், ஆலத்தூர், பாக்கம், பூண்டி அருகே உள்ள மயிலாப்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கு சென்டுக்கு ரூ.200 வீதம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதிக தொகை வழங்கவும் கோரி நில உரிமையாளர்கள் பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கினை விசாரித்த நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என 2003-ல் உத்தரவிட்டார்.

இதையடுத்து அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என 2004-ல் உத்தரவிட்டனர்.

ஆனாலும் 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி 3-வது விரைவு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கே. அசோகன், பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய கடந்த பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டார். இழப்பீட்டுத்தொகை வழங்க மார்ச் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆனால் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் பூந்தமல்லி தலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர், இயங்காத ஜீப் உள்ளிட்டவற்றை நீதிமன்ற அமீனா, பாதிக்கப்பட்ட விவசாயிகள், வழக்கறிஞர் அருள் சுப்பிரமணியன் ஆகியோர் ஜப்தி செய்தனர்.

ஜப்தி செய்யப்பட்ட பொருள்களை லாரியில் ஏற்றி நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.

தாலுகா அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்த தாலுகா அலுவலக ஊழியர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை தனி அறையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தனர். தாசில்தாரும் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து நில உரிமையாளர்களுக்கும் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் கோஷமிட்டனர்.

Posted in Aalandhoor, Aalandhur, acquisition, Agriculture, Alandoor, Alandur, Asset, Canal, Collector, Compensation, Court, Dam, encroachment, Farmer, Farming, Farmlands, Finance, Government, Govt, Irrigation, Judge, Justice, Krishna, Lake, Land, Law, Local Body, Municpality, Mylapore, Officer, Order, Poonamallee, Poondi, Poonthamallee, Poonthamalli, Poovirunthavalli, Property, Ransack, revenue, River, Scheme, SEZ, Taluk, Thiruvalloor, Thiruvallur, Water, Weird | Leave a Comment »

State of Andhra Pradesh Temples – Financial statement

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

ஆந்திரத்தின் 2 ஆயிரம் கோவில்களில் அன்றாட நைவேத்தியத்துக்கே வழியில்லை!

விசாகப்பட்டினம், மார்ச் 5: ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய 3 கடலோர மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அன்றாட பூஜைக்கும் நைவேத்தியத்துக்கும் வழியில்லாமல் இருக்கிறது.

ஆலயத்துக்கு கிடைக்கும் வருவாய் அடிப்படையில் கோயில்களை மாநிலத்தில் 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருப்பவை “ஏ’ பிரிவு. ஆண்டு வருவாய் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை இருப்பவை “பி’ பிரிவு. ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கும் குறைவானவை “சி’ பிரிவு. இவை தவிர மேலும் 2,800 கோவில்கள் உள்ளன. அவை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிந்தவை.

இப்போது சி பிரிவு கோயில்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.1,500 அர்ச்சகர்களுக்கு ஊதியமாக தரப்படும். தூப, தீப, நைவேத்திய செலவுக்காக ரூ.1,000 வழங்கப்படும். முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிருஷ்ணா மாவட்டத்தில் இத்திட்டத்தை சமீபத்தில்தான் தொடங்கி இருக்கிறார்.

Posted in Andhra Pradesh, AP, Budget, Chandrababu Naidu, Congress, Constraints, Districts, Finance, Hindu, Hinduism, Krishna, Naidu, NTR, Pilgrim, Pilgrimage, Politics, Politics+Religion, Poor, Religion, Rich, Srigakulam, Srikakulam, Telugu, Telugu Desam, Temple, Tourism, TTD, Vijayanagar, Vijayanagaram, Vishakapatnam, Vishakapattinam, Visit, Vizag, Y.S. Rajasekhar Reddy, YS Rajasekhara Reddy, YSR | Leave a Comment »

Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு

ஐதராபாத், ஜன. 29-

LIGHTS, CAMERA, ACTION: Chief Minister Y.S. Rajasekhara Reddy sounds the clapper board to launch the celebrations of the platinum jubilee of the Telugu film industry. Also seen are (L-R) film actor Krishna, his wife Vijayanirmala, Union Minister Dasa ri Narayana Rao, Finance Minister K. Rosaiah, Information Minister Mohd Ali Shabbir, film actor Mohan Babu, producer Seshagiri Rao.— Photo: Mohd. Yousuf

தெலுங்கு பட உலகின் 75-ம் ஆண்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. முதல்-மந்திரி ராஜ சேகர ரெட்டி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டார்.

விழாவில்

  • தாசரி நாராயணராவ்,
  • அஞ்சலிதேவி,
  • சிரஞ்சீவி ஆகியோருக்கு சாதனை யாளர் விருதுகள் வழங் கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தாசரி நாராயணராவ் மேடைக்கு சென்று விருதை பெற்றார். சிரஞ்சீவிக்கு விருது கொடுக்கும் முன் நடிகர் மோகன்பாபுவை பேச அழைத்தனர். அவருக்கு பிரபலமானவர் என்ற விருதை அளித்தனர். அவ்விருதை பெற மோகன்பாபு மறுத்து விட்டார்.

விழாவில் மோகன்பாபு ஆவேசமாக பேசியதாவது:-

எனக்கு சாதளையாளர் விருது தராதது துரதிர்ஷ்டவசமானது. நான் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளேன். மேல்- சபை எம்.பி. பதவி வகித்துள்ளேன். சாதி மதத்துக்கு அப்பாற் பட்டு பள்ளிக்கூடம் நடத்துகி றேன். அந்த பள்ளியில் ஏழைகளுக்கு 25 சதவீதம் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கிறேன். 510 படங்களில் நடித்து இருக்கி றேன். 49 படங்களை தயாரித்து இருக்கிறேன். நான் “சாதனையாளன்” கிடையாதா? எனக்கு ஏன் அந்த விருதை தரவில்லை.

விஜயநிர்மலா பெண் இயக்குனர். அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை. கிரிபாபு நடிகராக, இயக்குனராக தயாரிப்பாளராக இருக்கிறார். அவரை இவ்விழாவுக்கு அழைக்க வில்லை. தெலுங்கு பட உலகம் இரண்டு, மூன்று பேருக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் நினைக்கிறார்கள்.

இவ்வாறு பேசி விட்டு விருதை வாங்காமல் இறங்கிவிட்டார்.

இதையடுத்து சிரஞ்சீவி பேசியதாவது:-

நாமெல்லாமல் இப்போது நன்றாக இருக்கிறோம். நம் ஆரம்ப காலத்தையும், எங்கிருந்து வந்தோம் என்பதையும் மறக்க கூடாது. ஏழைகளாக இருந்து கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். கர்வம், அகந்தை இருக்ககூடாது.

சினிமா ஒரு குடும்பம். நிறைய பிரச்சினைகள் இருக்கலாம். அதை திரைக்கு பின்னால்தான் பேச வேண்டும். எல்லோருக்கும் தெரியுற மாதிரி பேசி அவமானப்படுத்தக்கூடாது. நாம் சண்டை போடுவது வெளியே தெரியக்கூடாது.

கோவா பட விழாவில் என்.டி.ஆர். படம் வைக்கவில்லை. மும்பை, டெல்லி, கோவா வரை நம்மால் போக முடியவில்லை. சாதிக்க முடியவில்லை. அதற்கு காரணம் நமக்குள் ஒற்றுமை இல்லாததுதான்.

ஒரு திருமணத்துக்கு போய் இருந்தேன். தாலி கட்டுவதை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. கோபத்தை அடக்கிக் கொண்டேன். மற்றவர்கள் சந்தோஷம்தான் முக்கியம்.

நான் வயதில் சிறியவன், வெங்கடேஷ், நாகார்ஜுனா என் வயதில் உள்ளவர்கள். அவர்களுக்கு விருது கொடுக்கப்படவில்லை. சாதனையாளர் விருதுக்கு நான் தகுதி இல்லை. 100-வது நாள் பட விழா நடக்கும்போது நான் திரையுலகில் இருப்பேன். அப்போது விருதை வாங்கி கொள்கிறேன்.

இவ்வாறு பேசி விட்டு விருதை வாங்காமல் சென்று விட்டார்.

Posted in 75, Andhra Pradesh, Andhra Pradesh State Film, Anjali Devi, APSFTTDC, Awards, Celebrations, Chandrababu Naidu, Chiranjeevi, Cong (I), Congress, Dasari Narayana Rao, Dhasari Narayanarao, Fights, Giribabu, Indira Congress, K. Rosaiah, Krishna, Lifetime Achievement, Mallemala, Mogan Babu, Mohan Babu, Mohd Ali Shabbir, Nagarjuna, NT Ramarao, NTR, Padhmashree, Padma Sri, Platinum Jubilee, Raja shekara Reddy, Rajasekara Reddy, Seshagiri Rao, Siranjeevi, Teleugu Film, Television and Theatre Development Corporation, Telugu Cinema, Telugu Desam, Tollywood, Venkatesh, Vijaya Nirmala, Vijayanirmala, YS Rajasekhara Reddy | 1 Comment »

Reliance to bring piped cooking gas to Tamil Nadu by 2008

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2006

தமிழகத்துக்கு எரிவாயு

தமிழகத்துக்கு எரிவாயு கிடைக்கச் செய்ய தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய திட்டம் வகுத்துள்ளது. தமிழக முதல்வரை சந்தித்துப் பேசிய பிறகு அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இதை தெரிவித்துள்ளார். இத் திட்டம் ஈடேறுமானால் தமிழகத் தொழில் வளர்ச்சி உத்வேகம் பெறும். வீடுகளில் சமையலுக்கும் எரிவாயு கிடைக்க ஆரம்பிக்கும்.

இந்தியாவில் நிலப்பகுதியிலும் கரையோரக் கடல்பகுதிகளிலும் எரிவாயு மற்றும் பெட்ரோலிய எண்ணெய் ஊற்றுகளைத் தேடும் பணியில் ஆரம்பத்தில் அரசு நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. தாராளமயக் கொள்கை அமலாக்கப்பட்ட பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் அனுமதிக்கப்படலாயின. ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திரத்தையொட்டிய கடல் பகுதியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. 2002-ல் அந்த நிறுவனம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கடலுக்கு அடியில் பெரிய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்தது. பின்னர் அது வேறு ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டபோது மேலும் பல எரிவாயு ஊற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்விதம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டால் பொதுவில் அங்கு குழாய்களை இறக்கி உற்பத்தியில் ஈடுபட மூன்று முதல் ஐந்தாண்டுகள் ஆகும். இதன்படி 2005-ம் ஆண்டிலேயே அங்கு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். சில காரணங்களால் இது தாமதம் அடைந்தது. இப்போது அங்கு 2008 ஜூன் வாக்கில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தினமும் 4 கோடி கனமீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. கடலில் இருந்து எரிவாயுவைக் கரைப்பகுதிக்குக் கொண்டுவந்து பலநூறு கிலோ மீட்டர் நீளக் குழாய்களை அமைத்து, தேவையான பகுதிகளுக்கு குழாய் மூலம் எரிவாயுவை அளிப்பது என்பது வழக்கமான ஏற்பாடாகும். ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்து, அதைத் தொடர்ந்து தமிழகத்துக்கும் குழாய்கள் மூலம் எரிவாயுவைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

குடிநீர் விநியோகம் போல தெருத்தெருவாகக் குழாய்களை அமைத்து வீடுகளுக்கும் எரிவாயுவை அளிக்க ரிலையன்ஸ் நிறுவனம் உத்தேசித்துள்ளது. முதலில் சென்னை நகரில் இது மேற்கொள்ளப்படும். பிறகு மாநிலத்தின் இதர இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படுகிற சமையல் வாயுக்குப் பதில் இவ்விதம் குழாய் மூலம் எரிவாயு அளிக்கப்படும். இந்த எரிவாயு இப்போதைய எல்பிஜி சமையல் வாயுவை விட விலைகுறைவாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் எரிவாயுவை சமையலுக்கு மட்டுமன்றி கார்களில் பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படுத்த இயலும். எரிவாயுவைக்கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். உரங்கள் தயாரிக்கலாம். ஆலைகளை இயக்கலாம்.

ஆந்திரத்தின் கரையோரக் கடல்பகுதியில் குஜராத் மாநில அரசின் பெட்ரோலிய நிறுவனமும் நிறைய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் இங்கு எரிவாயு ஆய்வில் வெற்றி கண்டுள்ளது. குஜராத் அரசு நிறுவனம் அடுத்த ஆண்டு டிசம்பரில் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ள எரிவாயு ஊற்றுகள் கரைக்கு அருகில், அதுவும் குறைந்த ஆழத்தில் இருப்பதே இதற்கு காரணம்.

பெட்ரோலிய மற்றும் எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் கரையோரமாக உள்ள கடல்பகுதிகளிலும் நிலப்பகுதியிலும் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளில் இதுவரை சிறு அளவில்தான் வெற்றி கிடைத்துள்ளது. உள்ளபடி இந்தியாவில் எரிவாயு உற்பத்தியானது தேவையைப் பூர்த்தி செய்கின்ற அளவில் இல்லை என்பதால் ஈரான், மத்திய ஆசியா ஆகிய இடங்களிலிருந்து குழாய்மூலம் எரிவாயுவைப் பெறுவதற்கு முயற்சிகள் நடந்துவருகின்றன.

Posted in Ambani, Andhra, Andhra Pradesh, AP, Bio-gas, CNG, Compressed Natural Gas, Cooking Gas, Dayanidhi maran, Diesel, Environment, Exports, Fuel, gasoline, Godavari, Indane, Iran, Jet Fuel, Kakinada, Karunanidhi, Krishna, Liquefied Petroleum Gas, LPG, Mukesh D. Ambani, Natural, ONGC, Petrol, Reliance, Rivers, Sea, South Africa, Sri lanka, TamilNadu, TN | Leave a Comment »

‘Jothi Basu is Kalyug’s Krishna’ – Subash Chakraborty

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 19, 2006

என்னை கலியுகக் கண்ணன் என்று வருணித்த அமைச்சர் சக்ரவர்த்திக்கு மூளை பிசகிவிட்டது: ஜோதிபாசு

கோல்கத்தா, செப். 20: என்னை கலியுகக் கண்ணன் என்று வருணித்த போக்குவரத்து அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்திக்கு மூளை பிசகிவிட்டது என்று மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசு கூறினார்.

மேற்கு வங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி. இவர் சமீபத்தில் வங்க மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவை “கலியுகக் கண்ணன்’ என்று வருணித்திருந்தார். இதன்மூலம் அவர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கோல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய ஜோதிபாசுவிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர்.

“என்னை கலியுகக் கண்ணன் என்று அமைச்சர் சக்ரவர்த்தி கூறி வருணித்துள்ளார். அதை ஏற்கமுடியாது. சமீபகாலமாக மனம்போனபடி அவர் பேசி வருகிறார். அவருக்கு மூளை பிசகிவிட்டது போல் தெரிகிறது’ என்று ஜோதிபாசு கூறினார்.

சமீபத்தில் பிர்பும் மாவட்டம், தாரபீடத்தில் உள்ள காளி கோயிலுக்குச் சென்று வந்த சுபாஷ் சக்ரவர்த்தி, “நான் முதலில் ஹிந்து, பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவன்; அப்புறம்தான் கம்யூனிஸ்ட்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலர் பிமன் போஸ் கருத்து தெரிவிக்கையில், மத நம்பிக்கை உள்ள ஒருவரை கட்சியிலிருந்து விலக்கி வைக்க கட்சி விதிகளில் இடமில்லை. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்த ஒருவர் மார்க்சீய, லெனினீய கொள்கைகளை பற்றி நடப்பதுதான் சரியான முறையாகும் என்று கூறியிருந்தார்.

இப்போது ஜோதிபாசுவை கலியுகக் கண்ணன் என்று கூறியதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் சுபாஷ் சக்ரவர்த்தி.
“முடிந்தால் வெளியேற்றுங்கள்’: மேற்குவங்க அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி

கோல்கத்தா, செப். 20: முடிந்தால் என்னை கட்சியிலிருந்து வெளியேற்றட்டும் என்று மேற்குவங்க மாநில போக்குவரத்து அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி கூறினார்.

“மகாபாரதத்தில் கிருஷ்ணன் எப்படியோ அதுபோல மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலைவர் ஜோதிபாசு கலியுகக் கண்ணனாக இருக்கிறார்’ என்று தான் நான் குறிப்பிட்டேன்.

ஆனால், நான் எந்த அர்த்தத்தில் சொன்னேன் என்பது புரியாமல் ஜோதிபாசு என்னை மூளையில்லாதவன் என்று கூறியுள்ளார். எனக்கு மூளை இல்லை என்று கட்சி கருதுமானால் என்னை கட்சியிலிருந்து வெளியேற்றட்டும். மூளையில்லாதவன் எப்படி கட்சியிலிருந்து செயல்பட முடியும் என்றார் சுபாஷ் சக்ரவர்த்தி.

Posted in Chakrvarthy, Communist, CPI (M), Jothi Basu, Jyothi Baasu, Kali Ghat, Kalyug, Krishna, Marxist, Subash Chakraborty, Tamil, Temple, West Bengal | Leave a Comment »

Rajni will act as Lord Krishna after Sivaji

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

கிருஷ்ணர் வேடத்தில் ரஜினிகாந்த்

தெலுங்கில் என்.டி.ராமராவ் கிருஷ்ணர் வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “பாண்டுரங்கா மகாத்மயம்‘.

இப்போது இதே பெயரில் மோகன்பாபுவை வைத்து ராகவேந்திர ராவ் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் வரும் கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்தை மோகன்பாபு கேட்டுக்கொண்டார்.

ரஜினியும் “”சிவாஜி‘ படப்பிடிப்பு முடியட்டும்; அதன் பிறகு முடிவு செய்யலாம்” என்று கூறியிருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில் இருந்து ரஜினியும், மோகன்பாபுவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் “பாண்டுரங்கா மகாத்மயம்’ படத்தில் ரஜினி உறுதியாக நடிப்பார் என்று தெரிகிறது.

இதற்கு முன்பு “நாட்டாமை‘ படத்தின் தெலுங்கு ரீ மேக்கான “பெத்தராயுடு‘ படத்தில் மோகன்பாபு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருக்கு தந்தையாக நடித்திருந்தார் ரஜினிகாந்த்.

Posted in Krishna, Mohan Babu, NTR, Paanduranga Mahathmiyam, Peddarayudu, Raghavendra Rao, Rajini, Rajniganth, Shivaji the boss, Sivaji, Tamil, Telugu, The Boss Sivaji | Leave a Comment »