மெரீனா கடற்கரையில் 400 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, ஆக. 29-
சென்னை நகருக்கு அழகு சேர்ப்பதில் மெரீனா கடற்கரை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏழை, நடுத்தர மக்களின் ஒரே பொழுது போக்கு மெரினா கடற்கரைக்கு சென்று வருவதுதான்.
சென்னை நகர மக்கள் தொகை அதிகரிப்பது போல, மெரீனா கடற்கரையில் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோல சிறுசிறு கடைகளும் அங்கு அதிகரித்து வருகிறது. முறையில்லாமல் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு உருவாகும் கடைகளால், கடற்கரைக்கு வந்து போகும் பொதுமக்களுக்கு இடைïறு ஏற்படுகிறது. மெரீனா கடற்கரை அழகு பாதிக்கப்படு கிறது என்று புகார்கள் கூறப்பட்டன.
இதையடுத்து, பொதுமக்களுக்கு இடைïறாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பலர் ஆண்டுக்கணக்கில் மெரீனாவில் கடை வைத்து பிழைத்து வருகிறார்கள்.
பல ஆக்கிரமிப்பு கடைகள் முறையான அனுமதி இல்லா மல் சமீபத்தில் உருவாகி உள்ளன. அவற்றின் எண்ணிக்கை 400-க்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை அகற்றப்போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
புதிய ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று முன்தினம் போலீஸ் உதவியுடன் அகற்ற மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால் குப்பை அகற்றும் பணிக்கு மாநகராட்சி ஊழியர்கள் செல்ல வேண்டியுள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 நாட்களில் கடற்கரையில் உள்ள புதிய ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பல நடமாடும் கடைகள் இரவில் கடற்கரையில் நிறுத்தப்படுகின்றன. அவற்றையும் ஒழுங்குப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இது குறித்து மேயர் மா. சுப்பிரமணியன் கூறும்போது, “மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே பலர் 10 முதல் 15 ஆண்டுகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் புதிதாக தோன்றிய கடைகள் இடைïறாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. புதிய ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவதும் மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதிதான்” என்று கூறினார்.
சென்னை நகரை அழகு படுத்த ரூ.25 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதில் 17 கோடி ரூபாய் மெரீனாவை அழகுபடுத்த செலவிடப்படுகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக கடற்கரை அழகை பாதிக்கும் புதிய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுகின்றன.
இது கடற்கரையை நம்பி பிழைக்கும் சிறு வியாபாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அண்ணா, எம்.ஜி.ஆர். கடற்கரை மணல் பரப்பு சிறு வியாபாரிகள் சங்க துணை தலைவர் ராமலிங்கம் கூறும்போது, “நாங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வியாபாரம் செய்து வருகிறோம். எங்கள் கடைகள் எந்த வகையிலும் இடைïறாக இல்லை” என்றார்.
காந்தி சிலை கடற்கரை மணல் பரப்பு சிறு வியாபாரிகள் சங்க செயலாளர் நாராயணன், “நாங்கள் கடைகளை இரவில் இங்கிருந்து அப்புறப்படுத்த தயாராக இருக்கிறோம். மாநகராட்சி சிறு வியாபாரிகளுக்கு முறைப்படி அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.
இதுபோல பல்வேறு வியாபாரிகள் தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயத்தில் உள்ளனர். மாநகராட்சி கடற்கரை சிறு வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
————————————————————————————————–
கோயம்பேடு பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர்
சென்னை, ஆக. 30: சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண கோயம்பேடு பஸ் நிலையத்தை 3-ஆக பிரித்து வெவ்வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் சுனில் குமார் தெரிவித்தார்.
சி.எம்.டி.ஏ. உருவாக்கியுள்ள 2-வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கை குறித்த பயிலரங்கில் அவர் புதன்கிழமை பேசியது:
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்படுவதாகக் கூறி நகரின் உள்ளே இருந்த வெளியூர் பஸ் நிலையத்தை கோயம்பேட்டுக்கு மாற்றினார்கள்.
தற்போது கோயம்பேடு பஸ் நிலையத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, உள்வட்ட சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இதற்கு தீர்வாக, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள் ஆகியவற்றுக்கான பஸ் நிலையத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும்.
இவ்வாறு பிரித்து பூந்தமல்லி வழியாகச் செல்லும் பஸ்களுக்கு பூந்தமல்லியிலும், தாம்பரம் வழியாகச் செல்லும் பஸ்களுக்கு தாம்பரத்திலும், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்லும் பஸ்களுக்கு அந்த பகுதியிலும் தனித்தனி பஸ் நிலையங்கள் அமைக்கலாம்.
கோயம்பேடு பஸ் நிலையம் தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் போக்குவரத்து மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்.
சென்னைக்கு வெளியே கண்டெயினர் லாரிகளுக்கான டெர்மினலை அமைப்பதாக முதலாவது மாஸ்டர் பிளானில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அத்தகைய டெர்மினல் இதுவரை அமைக்கப்படவில்லை. சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி இல்லாதது, போக்குவரத்து நெரிசலுக்கும், சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்து விடுகிறது.
சென்னையில் இருக்கும் பூங்காக்களில் தரைகீழ்தள வாகன நிறுத்தும் இடங்களை அமைக்கலாம்.
மேலும், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வுகான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடும் நாள்களை மாற்றி அமைக்கலாம். அதேபோல, அதிக அளவில் கடைகள் இருக்கும் மார்க்கெட் பகுதிகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கலாம். இந்த புதிய அணுகுமுறைகளை திட்டமிட்டு நிறைவேற்றினால் பல்வேறு பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு ஏற்படும் என்றார் சுனில் குமார்.
————————————————————————————————–