லண்டன் டயரி: லண்டன் கொத்தவால்சாவடி!
இரா.முருகன்
ஒரு மாநகரம். தலைநகரும் கூட. அங்கே போக்குவரத்தும் , ஜன நெருக்கடியும் இரைச்சலும் பரபரப்புமாகச் சதா இருக்கப்பட்ட வீதிகளை ஒட்டி ஒரு பெரிய சந்தை. நகர் முழுவதற்கும் காய்கறியும், பழமும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்க ஏற்படுத்தப்பட்ட அந்த மார்க்கெட் கிட்டத்தட்ட முன்னூறு வருடம் அதே இடத்தில்தான் இருந்தது. இனியும் நெரிசல் தாங்காது என்ற நிலைமை ஏற்பட, அதை ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கு இடையே இடம் மாற்றினார்கள்.
லண்டன் டயரியில் சென்னை கொத்தவால் சாவடி நுழைந்த காரணம் புரியாமல் விழிக்க முற்படுவதற்கு முன்பாக ஒரு வார்த்தை. இது கொத்தவால் சாவடி பற்றிய தகவல் இல்லை. கோவண்ட் தோட்டம் என்ற லண்டன் கோவண்ட் கார்டன் சந்தை பற்றியது. ஆதியில் அதாவது எழுநூறு வருடம் முன்னால் கோவண்ட் தோட்டம் கான்வென்ட் தோட்டமாகத்தான் இருந்தது. தேவ ஊழியத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட கிறிஸ்துவப் பாதிரியார்கள் தங்கியிருந்த இடம் “கான்வென்ட்’ என்று அழைக்கப்பட்டது. அந்தத் துறவிகள் பிரார்த்தனைக்கு மிஞ்சிய நேரத்தில் குழந்தைகளைக் கூட்டிவைத்துக் கொண்டு அங்கேயே கல்வி கற்பிக்கத் தொடங்கியபோது, மேற்படி பள்ளிகளின் பெயரில் கான்வென்ட் ஒட்டிக் கொண்டது. லண்டன் கான்வெண்ட் தோட்டத்துக்கு அந்தப் பெயர் ஏற்படக் காரணம், அந்தக் காலப் பாதிரியார்கள் மடாலயத்துக்குத் தேவைகளுக்காக நகருக்கு நடுவே காய்கறித் தோட்டம் போட்டு கத்தரிக்காயும், முள்ளங்கியும், தக்காளி, வெண்டையும் பயிர் செய்ததுதான்.
தேம்ஸ் பாசனம், அற்புதமான மண். போட்டது எல்லாம் பொங்கிப் பூரித்து அமோகமாக விளைய, மடாலயத் தேவைக்கு மிஞ்சிய காய்கறி, பழத்தை எல்லாம் நகர மக்களுக்கு விற்க ஆரம்பித்தார்கள். “தினசரி மூணு வேளையும் வெண்டைக்காய்க் குழம்புதானா? ரெண்டு பக்கமும் வெண்ணெய் தடவி மொறுமொறுவென்று தணலில் வாட்டிய ரொட்டி கிடைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்’ என்று புதிய , பழைய மடாலயவாசிகள் உரக்க முணுமுணுக்க ஆரம்பித்திருக்கலாம். ரொட்டியும் வெண்ணையும் வாங்க, மடாலயத்தில் நிதி நிலைமை சரியில்லாத காரணத்தால் காய்கறிக்கடை நடத்த ஆரம்பித்து, அந்தக் காலத்திலேயே இருபது பவுண்ட் மாத வருமானம், அதாவது இன்றைய கணக்குக்குக் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய்.
லாபம் எல்லாம் சரிதான். ஆனால் காய்கறி பயிரிட, களையெடுக்க, பறித்து எடுத்துப் போய்க் கடையில் குவித்து வைக்க, விற்றுக் காசை எண்ணிக் கல்லாவில் போட்டுக் கணக்குப் பார்க்க இப்படியே பொழுது கழிந்ததால் பிரார்த்தனைக்கு நேரம் சரியாகக் கிடைக்காமல் போனது. இது சரிப்படாது என்று முடிவு செய்து, கோவண்ட் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு , மடாலயத்துக்குச் சப்ளை செய்து, மிஞ்சியதைப் பொதுமக்களுக்கு விற்று வருமானத்தை ஒப்படைக்கும் காரியம் குத்தகைக்கு விடப்பட்டது. காண்ட்ராக்ட் எடுக்க ஏகப்பட்ட போட்டி. எடுத்தவர்கள் தொப்பையும் தோல்பையும் பெருத்து வளைய வருவதை அன்றைய இங்கிலாந்து அரசன் எட்டாம் ஹென்றி அரண்மனைக்குள் இருந்து பெருமூச்சோடு பார்த்தான். இந்தப் புண்ணியவான்தான் கட்டிய பெண்டாட்டி ஆன்போலின் அரசியை லண்டன் டவர் வளாகத்தில் வைத்து நோகாமல் தலையை வெட்டிவிட்டுச் சற்றும் தாமதியாமல் அடுத்த கல்யாணம் செய்து கொண்டான் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நினைவு.
ஆன்போலின் அரசியின் தலையை வெட்டியதுபோல் ஏகப்பட்ட மடாலயத் துறவிகளை வரிசையாக நிற்க வைத்துத் தீர்த்துக் கட்டுவது கொஞ்சம் சிரமமான காரியம். மக்கள் எதிர்ப்பும் கூடுதலாக இருக்கும். எனவே எட்டாம் ஹென்றி ரொம்ப யோசித்து, ஓர் அவசரச் சட்டம் போட்டான். கோவண்ட் தோட்டம் அடுத்த நாள் காலையில் அரசுடமை ஆனது. அங்கே பயிர் செய்த காய்கறி, பழங்களைச் சில்லறை, மொத்த விற்பனை செய்வதும் கஜானாவுக்குக் காசு சேர்க்கும் விஷயமானது. நாளடைவில் அவ்
விடத்தில், காய்கறிச் சாகுபடியைவிட, நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வண்டிகளிலும் , கால்நடையாகவும் கொண்டு வந்த சரக்கை நிறைத்து வைத்து விற்பனை செய்வது பிரதானமான பணியாக மாறியது.
ஆமை புகுந்த வீடு பற்றிய அனுபவம் இல்லாத இங்கிலாந்து மக்கள், அரசாங்கம் புகுந்த தோட்டம் என்ன ஆகும் என்று நோக்க அடுத்த சிலபல வருடங்களில் சந்தர்ப்பம் கிடைத்தது. பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட கோவண்ட் தோட்டம் அரசாங்கத்து வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. சும்மா இல்லை. பிரதியுபகாரமாக அவர்கள் சிம்மாசனத்துக்கு அடியிலும், மேலேயும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசனுக்கு ஆள், அம்பு , பட்டாளம் , தங்கக்காசு, வெள்ளியில் அண்டா குண்டா என்று சேவை சாதித்து, அனுபோக பாத்தியதையாகக் கிடைத்த சொத்தை அனுபவிக்க வேண்டும். இந்த ஆள் நம்ம கட்சியில் இல்லை, அல்லது எதிர்ப்பு அறிக்கை விடுக்கத் தயாராகிறான் என்று அரசருக்குப் பட்டால் உடனே அந்தப் பிரமுகரின் கழுத்து அளவு எடுக்கப்பட்டு , கத்தி தயாரிக்கப்படும். அன்னாரை லண்டன் டவர் சிறையில் தற்காலிகமாக ஓய்வெடுக்க வைத்துவிட்டு , அவருக்கு வழங்கப்பட்ட தோட்டம் துரவு பிடுங்கப்பட்டு, அரசரின் புது ஜால்ராவுக்கு அன்பளிக்கப்படும். அந்தக் கால அரசியல் நிலைமை அப்படி.
ஆனாலும் ஆயிரத்து எழுநூறாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து அரசியல் அமைதி ஏற்பட, இந்தக் களேபரம் ஓய்ந்து, கோவண்ட் தோட்டத்தில் நகர் முழுவதற்கும் காய்கறி, பழம் சப்ளை செய்யும் பேரங்காடி எழுந்தது. பெட்போர்ட் வம்ச நாலாம் பிரபுவான பிரான்சிஷ் ரஷ்ஷல் ஏற்படுத்திய இந்த அங்காடி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குத் தினசரி மும்முரமாக வியாபாரம் நடக்கும் இடமாக மாறியது. வருடம் ஒரு முறை கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் விடுமுறை. மற்றபடி முன்னூற்று அறுபத்து நாலு நாளும் விற்பனை என்று தொடர்ந்து முன்னூறு வருடம் சாதனை படைத்த மார்க்கெட் இது. 1877 – ல் காய்கறி லோடு ஏற்றி வந்த வண்டிகளில் இருந்து சரக்கு இறக்கிக் கடைகளுக்கு எடுத்துப் போக மட்டும் இங்கே கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பாரம் சுமக்கும் தொழிலாளிகள் இருந்தார்கள். பழைய கொத்தவால் சாவடியைவிட இது பத்து மடங்கு அதிகம் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
கோவண்ட் தோட்டக் காய்கறி, பழ அங்காடியை இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஒரு முப்பது வருடத்துக்கு முன் பூதாகரமாக உருவெடுத்தது. மார்க்கெட் நெரிசல் மட்டும் இல்லை இதற்குக் காரணம். இந்தப் பகுதியில் ஏகப்பட்ட நாடகக் கொட்டகைகள், பிரசித்தமான உணவு விடுதிகள், தினசரி லட்சக்கணக்கில் வருமானம் நிறைய, சகலவிதமான பொருட்களையும் விற்கும் கடைகள், போக்குவரத்துச் சிக்கல், அசுத்தமடையும் சூழல் என்று ஏகப்பட்ட மற்ற விஷயங்களும்தான்.
1974 – ல் கோவண்ட் தோட்ட அங்காடியை அங்கேயிருந்து மூன்று மைல் தொலைவில் இடம் மாற்றிய போது முன்னூறு வருடப் பரபரப்பு ஓய்ந்த மயான அமைதியில் கிடந்த அந்தப் பெரிய நிலப்பரப்பையும், காலியான கட்டடங்களையும் பார்க்க லண்டன் மக்களுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. நகருக்கு மத்தியில் நடுநாயகமாக இத்தனை அழகும் பாரம்பரியப் பெருமையும் கம்பீரமும் நிறைந்த இடத்தைச் சும்மா கிடக்க விடலாமா என்று எல்லாரும் ஒருமித்து அரசாங்கத்தை நோக்கிக் கோரிக்கை எழுப்பினார்கள். ஆக, எட்டே வருடத்தில் அந்த இடம் திரும்பவும் சுறுசுறுப்பும் பரபரப்பும் ஆனது. புதுப்பிக்கப்பட்ட அந்தக் கோவண்ட் தோட்டத்தில்தான் இப்போது நின்று கொண்டிருக்கிறேன்.