குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்
தஞ்சாவூர்க்கவிராயர்
புத்தகங்களைக் கிழித்துவிடாதீர்கள் என்று குழந்தைகளிடம் சொல்லுகிறோம்.
புத்தகங்களே! குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்கிறார் ஒரு புதுக்கவிஞர்.
குழந்தைகள் படிக்கிற புத்தகங்களைப் பார்க்கும்போது அவை எங்கே குழந்தைகளைக் கிழித்து விடுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது.
மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன.
குழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்கு மேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம். இது தவறு. குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள்.
குழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. இன்னும் களங்கப்படாத மனசு அல்லவா குழந்தைகள் மனசு?
குழந்தைகள் பார்வையில் தென்படும் உலகம் குற்றமற்றது. அழகு நிரம்பியது. அதனால்தான் குழந்தை எதைப் பார்த்தாலும் சிரிக்கிறது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும். “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு; அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி…’ அப்படியே ஒரு குழந்தை எழுதிய மாதிரியே அல்லவா இருக்கிறது.
குழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழதாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.
நரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள் மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன!
சின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விட வேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றும் நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் மேசைமீது ஒரு காமிக்ஸ் புத்தகம் இருந்தது. “பையனுக்கா?’ என்றேன்.
“எனக்குத்தான்’ என்றார் சிரித்தபடி.
“அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட நான் காமிக்ஸ் புத்தகங்கள்தான் படிப்பேன்’ என்றார்.
குழந்தை வளர வளர குழந்தமை தொலைந்து போகிறது. “இன்னும் என்ன குழந்தையா நீ?’ என்று கேட்டு கொஞ்சநஞ்சம் பாக்கியிருக்கும் குழந்தை மனத்தையும் கருகச் செய்து விடுகிறோம்.
குழந்தையின் கேள்விகள் அற்புதமானவை. அவற்றுக்குப் பதில் சொல்லும்போது நாமும் குழந்தையாகி விடுகிறோம்.
புகைவண்டிப் பயணத்தின்போது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தன் குழந்தையை “சும்மா இரு, சும்மா இரு’ என்று அதட்டிக் கொண்டே வந்தார்.
“குழந்தை பாவம். என்ன வேண்டுமாம்?’ என்று கேட்டேன்.
“என்னவோ அசட்டுத்தனமாக தொணதொணக்கிறான். எரிச்சலாக வருகிறது’ என்றார்.
அவனை என் அருகே அழைத்து, “சொல்லு, என்ன வேணும்?’ என்று கேட்டேன்.
“மாமா, ரயில் என்ன சாப்பிடும்?’ என்று கேட்டான்.
இதுவா அசட்டுத்தனமான கேள்வி? அழகான கவிதை அல்லவா இது? ரயிலுக்கு உயிர் உண்டு. அதுவும் மனிதர்களைப் போலவே நகர்கிறது. மூச்சு விடுகிறது. கத்துகிறது என்பதால்தானே இந்தக் கேள்வியை குழந்தை கேட்கிறது?
நாம்தான் குழந்தைகளை உதாசீனப்படுத்துகிறோம். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பெரிய மனிதர்களாகவே நடத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி:
லண்டனில் ஒரு குழந்தைகள் பூங்கா. அங்கே வாத்துகளோடு ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதன் விரலை ஒரு வாத்து கடித்துவிட்டது. காயம் ஒன்றும் பலமில்லை. பூங்கா நிர்வாகமே குழந்தையின் விரலுக்கு மருந்து போட்டுவிட்டது. அங்கே ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கே இருந்த வாத்துகள் மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மகாராணியாரின் பெயரில் உள்ள கருணை நிதியிலிருந்து பராமரிக்கப்படுவதாக ஒரு குறிப்பு இருந்தது.
குழந்தை உடனே இங்கிலாந்து மகாராணியாருக்கு ஒரு கடிதம் எழுதியது: “நீங்கள் வளர்க்கிற வாத்து என்னைக் கடித்துவிட்டது. விரலில் காயம்’ என்று எழுதியது.
கடிதம் மகாராணியாரின் பார்வைக்குப் போயிற்று. அவர் உடனே பதில் எழுதினார்:
“குழந்தாய்! உன் கடிதம் கிடைத்தது!
நான் வளர்க்கும் வாத்து உன்னை விரலில் கடித்து விட்டதற்காக வருந்துகிறேன். அதற்காக உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். காயம் ஆறியிருக்கும் என்று நம்புகிறேன்.
உன் பிரிமுள்ள,
விக்டோரியா.
நம் நாட்டில் இப்படிப்பட்ட கடிதம் எங்கே போயிருக்கும் என்று சொல்லத் தேவையே இல்லை அல்லவா?
குழந்தைகளை மதிக்கிற, குழந்தைகளைப் புரிந்துகொள்கிற, குழந்தமையைப் பாதுகாக்கிற பொறுப்புணர்ச்சி சமுதாயம் முழுவதும் உண்டாக வேண்டும். அப்போதுதான் அசலான குழந்தை இலக்கியம் இங்கே சாத்தியப்படும். பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட குழந்தை இலக்கியத்தின்பால் அக்கறை காட்டுவதில்லை.
குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லாத சமூகம் என்பது தண்ணீரில்லாத நாற்றங்காலுக்குச் சமம்.
பள்ளிக்கூடங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக மாற்றும் வேலை அங்கே மும்முரமாக நடக்கிறது. குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அபத்தக் களஞ்சியமாக இருக்கின்றன.
குழந்தைகளை நூலகங்களில் பார்க்கவே முடிவதில்லை. வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. தொலைக்காட்சியும் கணினி விளையாட்டும் குழந்தைகளை கூடத்தை விட்டு வெளியேறாதபடி கட்டிப் போட்டுவிட்டன.
அண்மையில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தக அரங்குகளில் கூட்டம் மொய்த்தது. புத்தக வாசிப்புக்காக குழந்தைகள் ஏங்குவதையும், தொலைக்காட்சி தோற்றுப் போய்விட்டதையும் காண முடிந்தது.
தஞ்சாவூரில் அனன்யா பதிப்பக அதிபர் அருள் என்பவரும் இரா. சேதுராமனும் சேர்ந்து ஓசைப்படாமல் ஒரு மாபெரும் குழந்தைகள் கதைக் களஞ்சியத்தை உருவாக்கி வருகிறார்கள்~விழுதுகள் என்ற பெயரில்.
குழந்தைகளால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது இக் களஞ்சியம் என்பது தான் இதன் சிறப்பு. பாட்டி வடை சுட்ட கதையை ஒரு குழந்தை எப்படிச் சொல்கிறது பாருங்கள்.
“ஒரு ஊரில் காக்கா இருந்தது. அப்போது காக்கா வடை சுட்டது. அந்தக் காக்கா வடை சுட்டு முடித்ததும் காக்காக்கள் பறவைகள் காக்காகிட்ட வந்தது. காக்காவும் பறவையும் சேர்ந்து சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் சேர்ந்து விளையாடின. பிறகு எல்லோரும் தூங்கினார்கள். மறுநாள் காலையில் எல்லோரும் எழுந்தனர். முகம் கழுவினர். எல்லோரும் சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் வீட்டுக்குச் சென்றார்கள்.’
இது மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுமி எழுதிய கதை. மற்றொரு கதையில் கரடியும் யானையும் ஒரே வீட்டில் வசிக்கின்றன. அங்கு விருந்தாளியாக சிங்கம் வருகிறது. ஒரு கதையில் பால் வேண்டும் என்று பூனையிடம் எலி கெஞ்சுகிறது. குழந்தைகளின் மனங்களிலிருந்து புறப்பட்டு வரும் புதிய காற்று அப்பப்பா என்ன ஒரு வாசம். எப்பேர்ப்பட்ட கற்பனை.
உலகம் பூராவும் ஹாரிபாட்டரின் கதைப் புத்தகங்கள் பரபரப்பாக விற்கப்பட்டதன் காரணம் என்ன? குழந்தைகளின் மனசைப் புரிந்துகொண்டு எழுதியதுதான் காரணம்!
தமிழ்நாட்டில் வசதி படைத்த குழந்தைகள் மட்டும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கிப் படித்து மகிழ்ந்தார்கள். “ஏழைக் குழந்தைகள் பாவம் என்ன செய்வார்கள்?’
இப்போதுதானே அவர்களை ஓட்டல்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் கல்குவாரிகளிடமிருந்தும் மீட்டிருக்கிறோம்? அவர்களின் கைகளிலிருந்து மேசை துடைக்கும் துணியையும், ஸ்பானரையும், பெட்ரோல் பிடிக்கும் குழாய்களையும் அப்புறப்படுத்தி நல்ல புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்.
அழகான ஆச்சரியமான புத்தகங்கள்.
குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்!
(இன்று உலகக் குழந்தைகள் புத்தக தினம்)