முகங்கள்: ஒரே கதையத்தான் டிவி நாடகத்தில் போடுறாங்க!
அவர் படித்தது வெறும் ஐந்தாம் வகுப்பு. ஆனால் அவர் எழுதிய புத்தகங்களை பிஎச்.டி படிப்பிற்காக ஆய்வு செய்கிறார்கள். நான் பதினேழு வயதுவரை மாடுதான் மேய்த்தேன் என்று கபடமில்லாமல் கூறும் அந்த ஒளிவுமறைவற்ற அவரின் தன்மைதான் அவர் எழுத்திலும் வெளிப்படுகிறது.
சிறுகதை, குறுநாவல், நாவல், நாடகம் என்று எழுத்தின் பல்வேறு தளங்களிலும் செயல்படும் பாரத தேவியின் கதைகள் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.
பாசாங்கற்ற இயல்பான கிராமத்து எழுத்துக்குச் சொந்தக்காரரான பாரததேவியிடம் பேசினோம்.
பாரததேவி என்பது உங்கள் புனைப் பெயரா? இல்லை சொந்தப் பெயரே அதுதானா?
நான் காந்தி இறந்த நாள் அன்னைக்கிப் பொறந்தேன். என் சித்தப்பா ராணுவத்திலே மேஜரா இருந்தவர். அப்பா போலீஸ்காரர். அவுக வச்சபேர்தான் பாரததேவி. சொந்தப் பேரே அதுதான்.
கதை எழுதுவதில் ஆர்வம் எப்படி வந்தது?
ராஜபாளையம் சொக்கலிங்கபுரத்தில அஞ்சாவது வரைக்கும் படிச்சேன். அப்பா நான் சின்னப்புள்ளையா இருக்கிறப்பவே இறந்துபோயிட்டார். அதனால சின்ன வயசுல மாடுதான் மேய்ச்சேன். அந்த நேரத்தில நிறையக் கதைகள் கேட்பேன்.
அப்புறம் எனக்கு கல்யாணமாச்சு. நெறையக் கதை புஸ்தகம் படிக்க ஆரம்பிச்சேன். மு.வ. புத்தகங்கள், நா.பார்த்தசாரதி புத்தகங்கள்ன்னு படிச்சேன். அப்பத்தான் கி.ராஜநாராயணனின் “கோபல்ல கிராமத்து மக்கள்’ படிச்சேன். நான் அப்ப எந்த எழுத்தாளரோட புத்தகத்தைப் படிச்சாலும் அவுகளுக்கு லெட்டர் போடுற பழக்கம் வச்சிருந்தேன். கி.ரா.வுக்கும் போட்டேன்.
அதுமட்டுமில்லாம அவர நேரில் பார்க்கிறதுக்காக கோவில்பட்டி பக்கத்திலே இருக்குற அவரு சொந்த ஊரான இடைசெவலுக்குப் போனேன். அவரைப் பார்த்ததுமே எனக்கு அப்பா மாதிரி தோணிருச்சி.
“”நான் அப்பான்னு உங்களைச் சொல்லட்டுமா”ன்னு அவர்ட்ட கேட்டப்ப அவரும் சந்தோஷமா, “”எனக்குப் பொம்பளைப் புள்ள இல்ல. கல்யாணம் முடிச்சி எந்தச் செலவில்லாம பேரனோட எனக்கு மகள் கிடைச்சா எனக்குச் சந்தோஷம்”னார்.
எனக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சு.
நான் அப்பயே ஒன்றிரண்டு கதைங்க எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பிச்சு வச்சிருந்தேன். ஆனா ஒண்ணுல கூட அதப் போடலை. அதைக் கி.ரா.விடம் சொன்னேன். அவரு, “”நீ கதைய எழுதி எனக்கு அனுப்பி வை”ன்னு சொன்னாரு. அப்புறம் நான் ஊர்ப்பக்கத்தில நடந்த கதையை அவருக்கு அனுப்பி வச்சேன். அவரு அதைப் படிச்சிட்டு இது நாட்டுப்புறக் கதையில்ல. நிகழ்வுன்னார். எது நாட்டுப்புறக் கதை, எது நிகழ்வுன்னு எனக்கு அப்பத் தெரியலை.
அதுக்குப் பின்னால என் முதல்கதை “தாமரை’ பத்திரிகையில வந்துச்சு.
புத்தகம் எதுவும் எழுதியிருக்கிறீர்களா?
நானும் அப்பாவும் (கி.ரா) சேர்ந்து 4 புத்தகம் எழுதினோம்.
நான் தனியா எழுதின புத்தகங்களும் வர ஆரம்பிச்சிச்சு. ” பெண்மனம்’ ரெண்டு பாகம், “நாட்டுப் புறத்துப் பெண்கள்’ எல்லாம் வந்துச்சு. தமிழினி பதிப்பகம் “நிலாக்கள் தூரம் தூரமாக’ன்னு ஒரு புத்தகம் போட்டாங்க. அது 320 பக்கம். எனது 10-17 வயசுல கிராமத்திலே நடந்த உண்மைச் சம்பவங்களை அதில எழுதினேன். நான் எழுதின புத்தகம் இதுவரை 6 வந்திருச்சு.
பத்திரிகைகளில் எதுவும் எழுதியிருக்கிறீர்களா?
“கரிசல் காட்டுக் காதல் கதைகள்’னு அவள் விகடன்ல தொடர் வந்துச்சு. அப்ப தினகரன் வசந்தத்துல எஸ்.கே.முருகன் இருந்தாரு. அவரு முயற்சியால அதில “சுமைதாங்கிக் கற்கள்’னு தொடர் வந்துச்சு.
தூரதர்ஷன்ல, ரேடியோவில, “பெண்ணே நீ’ பத்திரிகையில என் பேட்டி வந்துச்சு. சன்டிவி, மக்கள் டிவியிலும் பேட்டி வந்துச்சு.
நான் படிக்கலையே தவிர என் புத்தகத்தை ரெண்டு பேரு பிஎச்.டி பண்றதுக்காக எடுத்திருக்காங்க. அசோக்குமாருன்னு ஒரு தம்பி இதுக்காக என்னை வந்து பார்த்துச்சு.
ஐந்தாவது வகுப்புதான் படித்திருக்கிறீர்கள். இவ்வளவு புத்தகம் எழுதும் அளவுக்கு நீங்கள் முன்னேறியதற்கு என்ன காரணம்?
நான் இந்த அளவுக்கு முன்னேறுனதுக்குக் காரணம், நான் படிக்காமப் போனதுதான். படிச்சிருந்தா ஒரு வேளை டீச்சர் வேலை பார்த்துக்கிட்டு இருந்திருப்பேன். உலகத்துக்கு நான் இருக்கிறது தெரிஞ்சிருக்காது. புத்தகம் எழுதியிருக்கமாட்டேன். படிக்காமப் போனது பெரிய இழப்பு மாதிரி எனக்குப் பட்டுச்சு. அந்த இழப்பை ஈடுகட்டுற மாதிரிதான் கதை எழுதுற முயற்சியில இறங்கியிருக்கேனோன்னு தோணுது.
வேறு துறைகளில் முயற்சி செய்யாமல் கதை எழுதியதற்குக் காரணம்?
அப்ப கிராமத்தில எல்லாருக்கும் கதை சொல்ற பழக்கம், கேக்ற பழக்கம் இருந்துச்சு. எங்க வீட்டுக்காரரோட அக்கா நல்லா கதை சொல்லுவாங்க. எங்க சின்னம்மா கதை சொல்லுவாங்க. களையெடுக்க, கதிரறுக்கப் போறப்ப கதை சொல்லிக்கிட்டே வேலை நடக்கும். கதையைக் கேட்டு வளர்ந்த நான் கதை எழுத இறங்கினது ஆச்சரியம் இல்லை.
இப்போது கதை சொல்லும் பழக்கம் குறைந்துவிட்டதே? இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்தக் காலத்துப் பொம்பளைங்க வேலைங்கள எவ்வளவு சீக்கிரமா முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டு டிவி பார்க்க உக்காந்துடுறாங்க. பிள்ளைகள்ட்ட பேசுறது, அன்பா சாப்பாடு கொடுக்கிறது எல்லாம் கெடையாது.
நான்லாம் பிள்ளைகளோட சேர்ந்து பொழுதக் கழிக்கணும்னு நெனைப்பேன். அப்பத்தான் பிள்ளைக கிட்ட மனந்திறந்து பேசமுடியும். கஷ்டம், குடும்பச் சூழ்நிலை பிள்ளைங்களுக்குத் தெரியும். பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளா வளர்வாங்க.
இப்பல்லாம் சீக்கிரமே மூணுவயசுல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிடுறாங்க. இது பிள்ளைங்களுக்கும் நல்லதில்ல. சமுதாயத்துக்கும் நல்லதில்லை.
பிள்ளைகள் போனப்பறம் டிவி பார்க்க உக்காந்திடுறாங்க. ரெண்டு பொம்பளைங்க பேசினா அது நாடகத்தப் பத்தின பேச்சாத்தான் இருக்கு. டிவியில ஒரே கதையத்தான் திரும்பத் திரும்பப் போடுறாங்க. ஒருத்தர் ரெண்டு பெண்டாட்டி கட்டிக்கிறது, மாமியார் கொடுமை இதத்தான் காட்டுறாங்க. இப்பல்லாம் மாமியார் கொடுமை இல்லை. மாமியாரப் பிடிக்கலைன்னா தனியாப் போயிடுறாங்க. அப்புறம் எங்க கொடுமையிருக்கு? நல்லா வாழ்றவங்களுக்கு எப்பிடி இடைஞ்சல் கொடுக்கலாம்?னு காட்டுவாங்க. நாம முன்னேறுறதுக்கு என்ன செய்யணும்னு யோசிக்கணும். அடுத்தவங்களைக் கெடுக்க யோசிக்கக் கூடாது.
ஆனா இந்த நாடகமெல்லாம் சீக்கிரமே மாறிடும்னு நெனைக்கிறேன். ஏன்னா எல்லாமே மாறிக்கிட்டிருக்கு. சனங்களுக்கு இந்த டிவி நாடகத்தைப் பார்த்துப் பார்த்து சலிச்சுப் போயிடும். ஒரு காலத்தில சரித்திரப் படங்கள் அதிகமா வந்துச்சு. இப்ப வருதா? ஏன்? சனங்களுக்கு அதைப் பார்க்கப் பிடிக்கலை.
உங்களுடைய குடும்பத்தைப் பற்றி?
எங்க வீட்டுக்காரரு பள்ளிக்கூடத்தில வாத்தியாரா இருந்து ஹெட்மாஸ்ட்டாரா ஆயி இப்ப ரிடையர் ஆயிட்டார். அவரு எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்கலேன்னே இந்த அளவுக்கு நான் முன்னேறியிருக்க முடியாது.
எனக்கு ஒரே பையன். கஷ்டப்படுத்தாம, காயப்படுத்தாம வளர்ந்தான். நான்தான் படிக்க முடியலை. பையனை நல்லாப் படிக்க வச்சோம். இப்ப அமெரிக்காவில் பெரிய படிப்பு படிக்கிறான். பொம்பளைப் பிள்ளை இல்லைன்னு கவலையில்லை. எனக்குக் கல்யாணமாகி 11 வருஷம் கழிச்சுத்தான் இவன் பிறந்தான். குழந்தையே இல்லாம இருந்த எனக்கு “இவனாவது பிறந்தானே’ன்னு இருந்துச்சு.