அணுசக்தி மூலம் மின்சாரம் :: கூடங்குளம் பயங்கரம் (கல்கி)
Kalki 24.06.2007
– ஜி.எஸ்.எஸ்.
“பூச்சி மருந்தில்கூட அனுமதிக்கப்பட்ட அளவு என்பது (permissible level) உண்டு. ஆனால், கதிரியக்கத்தைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு (safe dose) என்பதே கிடையாது.” அணுக் கதிரியக்கத்தின் விளைவுகள் தொடர்பாக ஐ.நா. அறிவியல் குழு இவ்வாறு அறிக்கை அளித்திருக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை மீண்டும் முழு வீச்சோடு தலையெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, அங்குள்ள இரண்டு அணு உலைகள் போதாதென்று மேலும் நான்கு அணு உலைகள் அமைக்க முடிவெடுத்துச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு.
கூடங்குளம் என்று குறிப்பிடப்பட்டாலும் அதற்கு அருகே உள்ள கிராமமான இடிந்தகரையில்தான் அணுமின் நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் உதவியுடன் நிறுவப்படும் இந்த அணுமின் நிலையம் கடல் நீரைக் கொண்டு அணு உலைகளைக் குளிர்ப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் இதை நிறுவியிருக்கிறார்கள்.
கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்க, அரசும் தன் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
“இதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நான்கு அணு உலைகளுக்குமான அனைத்து திட்டங்களையும் எல்லா ஏற்பாடுகளையும் அரசு செய்துவிட்டது. இதற்கான ஒப்பந்தங்களும் ரஷ்ய அதிகாரிகளுடன் கையெழுத்திடப்பட்டுவிட்டன. பிறகென்ன கருத்துக் கேட்புக் கூட்டம்?” என்று கொதிக்கிறார்கள் மக்கள்.
இது குறித்துச் சுற்றுப்புற ஆய்வாளரும் லயோலா கல்லூரிப் பேராசிரியருமான டாக்டர் வின்சென்ட்டைக் கேட்டபோது “நம் நாட்டில் மின்சாரம் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. மரபுசார்ந்த எரிபொருட்கள் (பெட்ரோல், டீசல் போன்றவை) மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. மரபுசாராத சக்திகள் – காற்றாலைகள், சூரியசக்தி போன்றவை மிக அதிக தயாரிப்புச் செலவு பிடிப்பவை. தவிர பொது மக்களால் இவை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
வளர்ந்து வரும் நாடு என்பதிலிருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அணுசக்தியை மாற்றாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது ஏற்கத்தக்கது தான். பாதுகாப்பு உணர்வு, வீண் பொருட்கள் வெளியேற்றம் இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். இந்த இரண்டையும் கவனித்து கண்காணிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எனவே, கவலை வேண்டாம். அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரை அணு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் நம் நாடும் சுயச் சார்போடு விளங்க அணுசக்தி உற்பத்தி அவசியம்தான் என்றார். ஆனால், கல்பாக்கம் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மருத்துவக் குழு’வின் உறுப்பினரான டாக்டர் புகழேந்தி இந்தக் கருத்திலிருந்து
வேறுபடுகிறார்.
“தமிழகம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. வரவிருக்கும் அணு உலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இரண்டிலுமாகச் சேர்ந்து, மொத்தம் பத்து அணு உலைகள் தமிழகத்தில் செயல்படப் போகின்றன.
“அணுமின் நிலையம் தேவையா? என்பது முதல் கேள்வி. இதனால் பாதிப்பு உண்டா? என்பது அடுத்த கேள்வி.
“அணுசக்தியின் மூலம் மின்சாரம் என்று கூறப்படுவதே ஒரு பொய். அணுகுண்டு தயாரிக்கதான் இந்த உலைகள் உருவாக்கப்படுகின்றன. மின்சாரம் என்பது இதில் ஒரு உபரிப் பொருள், அவ்வளவு தான். தவிர, அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது அதிக செலவு பிடிப்பது. இதனால் மக்களுக்குப் பயன் இராது.
“மாறாக, கதிரியக்கம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தாக இருக்கப் போகிறது.
“2005 ஜனவரி 31 அன்று அமெரிக்காவின் பொது சுகாதாரத் துறை அளித்த அறிக்கையின்படி எக்ஸ்ரே, நியூட்ரான், காமா கதிர்கள்
ஆகியவை கார்சினோஜின்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கார்சினோஜின் என்பது புற்றுநோயை உண்டாக்கும் காரணி. இதுவரை இவற்றால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதுபோல் கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பாதிப்புகள் நிச்சயம் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.
கல்பாக்கத்தில் அறிவியல் பூர்வமான ஒரு சோதனையை மேற்கொண்டோம். ‘மல்டிபிள் மைலோமா’ என்ற நோய் குறித்த
ஆராய்ச்சியை மேற்கொண்டோம். இது கதிரியக்கத்தால் எலும்பு மஜ்ஜையில் உருவாகக் கூடிய ஒரு வகை புற்றுநோய். கல்பாக்கம் பகுதியில் ஒன்றரை வருடங்களுக்கு நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் அணு உலைகளில் பணியாற்றிய இரண்டு பேரும், கல்பாக்கம் நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகம் ‘ஆண்களில் ஒரு லட்சத்தில் 1.7 பேரும், பெண்களில் ஒரு லட்சத்தில் 0.7 லட்சம் பேரும் இதனால் இறக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஒரு லட்சத்துக்கு 2.4 நபர்கள்.
ஆனால் கல்பாக்கத்தின் மக்கள் தொகை அதிகபட்சம் 25,000தான். பாதிப்போ மூன்று பேருக்கு – அதாவது, பொதுவான விகிதத்தைவிட நான்கு மடங்கு அதிகம்!
“மேலும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிப்பார்கள். அமெரிக்காவில் இதற்கெனவே ஒரு (எனர்ஜி எம்ப்ளாயீஸ் ஆக்ட்) சட்டம் உண்டு. இங்கே சட்டமும் கிடையாது. இழப்பீடும் கிடையாது” என்று குமுறினார்.
இந்த வாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியவை. சோவியத் யூனியனின் (இன்றைய உக்ரைன்) செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அணுசக்தி இல்லாமலேயேகூட விஷவாயுவின் கோரத் தாண்டவத்தை போபாலில்
அனுபவித்திருக்கிறோம். மார்ச் 1999-ல் கல்பாக்கத்தில் கனநீர்க் (heavy water) கசிவு ஏற்பட்டபோது ‘அதெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள்தான்’ என்றனர் அதிகாரிகள்.
‘இன்னும் எதையெல்லாம் அனுமதிக்கப் போகிறோம்?’ என்பதுதான் அச்சுறுத்தும் கேள்வி.
– ஜி.எஸ்.எஸ்.
—————————————————————————————-
நாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை தொடக்கம்
ஜாம்ஷெட்பூர், ஜூன் 26: நாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜாம்ஷெட்பூர் அருகேயுள்ள டுராம்டியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் ஆலையை தொடங்கி வைத்தார்.
நாள் ஒன்றுக்கு 3000 டன் யுரேனியம் தாதுவை பதப்படுத்தும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலை, இந்திய யுரேனியம் நிறுவனத்தால் ரூ.350 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் யுரேனியம் தாது இந்த புதிய தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.
முன்னதாக இந்திய யுரேனியம் நிறுவனத்தால் கடந்த 1967-ம் ஆண்டு முதல்முதலாக யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜடுகோராவில் துவங்கப்பட்டது.
————————————————————————————————————–
அணுமின் நிலையங்களால் ஆபத்தா?
வீர. ஜீவா பிரபாகரன்
அணுசக்தியை ஆக்க சக்தியாகவும் பயன்படுத்த முடியும்; அழிவு சக்தியாகவும் பயன்படுத்த முடியும். அணுசக்தியால் பாதிப்புக்கு உள்ளான ஜப்பான், அதே அணுசக்தியால் முன்னேற்றமும் கண்டது என்று பலரும் சுட்டிக் காட்டுவது உண்டு.
ஆனால், ஜப்பானில் தற்போது நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவடைந்துள்ளது. அணுமின் நிலையத்தில் ஏராளமான கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
தற்போது நில நடுக்கத்தால் ஜப்பான் நாட்டில் சேதம் அடைந்துள்ள அணுமின் நிலையம் உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம். நில நடுக்கத்துடன், கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1986-ம் ஆண்டு ரஷியாவில் செர்னோபில் விபத்தில், அணுக்கதிர் வீச்சு வெளிப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம். இவ்விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்தின் பாதிப்பு இன்றளவும் தொடர்கிறது.
2007 ஜனவரி 31 நிலவரப்படி நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 1 லட்சத்து 28 ஆயிரத்து 200 மெகாவாட். இதில் அனல்மின் நிலையங்கள் மூலம் 84 ஆயிரத்து 150 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர, சுமார் 34 ஆயிரம் மெகாவாட் நீர் மின் நிலையம் மூலமும் 3,900 மெகாவாட் அணு மின்நிலையம் மூலமும், இதர புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலம் 6190 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அணுமின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
1969-ம் ஆண்டு முதல் இதுவரை 17 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் 7 அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் நமது நாட்டின் அணுமின் உற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி, மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இருப்பினும், இன்றளவும் அணுமின் உற்பத்தி அவசியமா, ஆபத்தானதா என்ற விவாதம் தொடர்கிறது.
ஒரு நாட்டின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை மின்சாரம். அனைத்து வளர்முக நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், மின் உற்பத்திக்குத் தேவையான நீர், நிலக்கரியின் வளம் குன்றி வருகிறது. காற்று, சூரியசக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல வகையிலான விசை ஆதாரங்களின் உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தினாலும், அவற்றின் உற்பத்தி போதுமானதாக இல்லை. எனவே, மின் தேவையைப் பூர்த்திசெய்வதில் அணுமின் நிலையங்களின் பங்களிப்பைத் தவிர்க்க இயலாது என்கின்றனர் ஒருசாரார்.
அதேநேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் உயிர்ப்பலி பெருமளவில் இருக்கும்; பல தலைமுறைகளுக்கும் பாதிப்பு தொடரும்; அணுமின் கழிவு அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும். இது உலகின் அழிவுப்பாதைக்கு வித்திடும்; அணுமின் உலைகள் அமைப்பதற்கான நிர்மாணச் செலவும் மிக அதிகம்; அணுக்கழிவைக் கையாளுவது குறித்து வெளிப்படை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்கின்றனர்.
ஆனால், அணுமின் அவசியத்தை வலியுறுத்துபவர்களோ, ரயில் விபத்து, சாலை விபத்தில்கூட ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். அதற்காகப் பயணங்களை எவரும் தவிர்ப்பதில்லை. நவீனமுறை விமானப் பயணங்கள், கப்பல் பயணங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர். அதுபோன்று அணுமின் தயாரிப்பும் தவிர்க்க இயலாதது.
கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் கொந்தளிப்பு, நில நடுக்கம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படாது. இது நவீனத் தொழில்நுட்பத்தில் அமைந்தது என அதன் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவசியமான அடிப்படைத் தேவையில் மின்சாரம் பிரதானமாக உள்ளது. மின் உற்பத்தியில் அணுசக்தியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் அணுமின் நிலையங்கள் உள்ளன.
ஒவ்வோர் அணு உலை அமைக்கும்போதும் அந்த நாடுகள் மிகவும் எச்சரிக்கையோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.
ஆனால், உலைகள் அமைக்கும்போது வெவ்வேறான தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் ஒன்றில் ஏற்படும் குறைபாடு, பாதிப்பு மற்றோர் இடத்தில் அதை நீக்கப் பயன்படுகிறது.
அணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்பது உண்மைதான் என்றாலும், பெருகிவரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டால், வேறு வழியில்லை என்கிற நிலையில், அது தவிர்க்க முடியாத விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.