Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார்
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய இலுப்பைக்கடவை பகுதியில் வேன் ஒன்றின் மீது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை அணியினர் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராகிய சார்ல்ஸ் எனப்படும், கேர்னல் அருள்வேந்தன் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
ஆனால், அருள்வேந்தன் கிளேமோர் மூலம் கொல்லப்படவில்லை, அவர் மோதலின் போதே கொல்லப்பட்டார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.
இவருடன் பயணம் செய்த கேர்னல் தரத்திலான வேறு 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
மன்னார் இலுப்பைக்கடவைக்கும் பள்ளமடுவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் நீண்டகாலமாக இருந்து வந்த கேர்னல் சார்ல்ஸ் கடந்த 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் என்றும் விடுதலைப் புலிகள் விபரம் வெளியிட்டிருக்கின்றனர்.
இதற்கிடையே, முகமாலையில் இராணுவத்தின் முன்னரங்க பகுதி மீது விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்திய திடீர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சுமார் 25 நிமிடங்கள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலின்போது தமது தரப்பில் சேதங்கள் எதுவுமில்லை என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
முகமாலை முன்னரங்க பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 4 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.
ஜயந்த தனபாலா ராஜினாமா
 |
|
இலங்கை ஜனாதிபதியுடன் ஜயந்த தனபாலா |
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுதலைப் புலிகள் உடனான சமாதான முயற்சியில் பிரதான ஆலோசகராக செயற்பட்ட ஜயந்த தனபாலா ராஜினாமா செய்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் கடந்த 2002 ம் ஆண்டு செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து தன்னிச்சையாக விலகி கொண்டதாக அரசாங்கம் அறிவித்த சில தினத்தில் இந்த ராஜினாமா இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜயந்த தனபாலா கூறியுள்ளார்.
கலாநிதி ஜயந்த தனபாலவை அரசாங்க சமாதான செயலகத்தின் பணியாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நியமித்திருந்தார், அதன் பின்னர் 2005 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இவரை தனது பிரதான ஆலோசகராக நியமித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் பதவிக்கு இலங்கை சார்பில் இலங்கையின் சார்பின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் ஜயந்த தனபாலா.
Posted in ambush, Army, Charles, CIA, dead, Eelam, Eezham, FBI, I&B, Iluppaikkadavai, Intelligence, Jaffna, KGB, Killed, LTTE, Mannaar, Military, Murder, Pallamadu, Pirapaharan, Ravishankar, RAW, Shanmuganathan, Shanmuganathan Ravishankar, Sri lanka, Srilanka, Vanni, War | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007
உளவுத் துறையில் ஊடுருவல்
டி.புருஷோத்தமன்
நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய இடம் வகிப்பது “ரா’ (ரிசர்ச் அண்டு அனலிசிஸ் விங்) என்னும் உளவுத் துறையாகும்.
உலகின் தலைசிறந்த அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ. (சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி) அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு “ரா’ உளவு அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
1968 செப்டம்பர் 18-ல் “ரா’ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ரூ. 2 கோடி முதலீட்டில் 250 ஏஜெண்டுகளுடன் இது செயல்படத் தொடங்கியது. பின்னர் 200 ஏஜெண்டுகளாக அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் ஏஜெண்டுகளுடன் ரூ.1500 கோடி பட்ஜெட்டில் விரிவான அளவில் செயல்பட்டு வருகிறது. இதை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர் ஆர்.என்.காவ்.
இதன் தலைமையகம் தில்லியிலும் அதன் பிராந்திய அமைப்புகள் நாட்டின் இதர பகுதிகளிலும் அமைந்துள்ளன. “ரா’ இயக்குநர் முக்கியத் தகவல்களை பிரதமரிடம் உடனுக்குடன் தெரிவிப்பார். நாடாளுமன்றத்துக்கு இத்தகவல்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
அண்டை நாடுகள் அனைத்திலும் நடைபெற்றுவரும் சம்பவங்கள் நமது நாட்டுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்னும் உளவுத் துறை நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டிவிட்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் ஆடுவதற்கு ஐ.எஸ்.ஐ. முக்கிய காரணமாகும்.
மேலும் பஞ்சாபில் சீக்கியர்களிடையே தீவிரவாதத்தை விதைக்கும் பணியிலும் பாகிஸ்தான் உளவுத் துறை ஈடுபட்டது.
இவற்றையெல்லாம் முறியடிக்கும் முக்கியப் பணியை “ரா’ மேற்கொண்டது. 1983-93 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் இந்திய உளவு அமைப்பின் ஏஜெண்டுகள் 35 ஆயிரம் பேர் பணியாற்றியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
வங்கதேசத்தில் முஜிபுர் ரகுமானின் தலைமையிலான முக்தி வாகினி அமைப்புக்கு “ரா’ உளவுத் துறை முழு ஒத்துழைப்பை அளித்து தனி வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்தது என்பது உலகறிந்த உண்மை.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற “ரா’ உளவு அமைப்பில் சதிகாரர்களின் ஊடுருவல் இருந்துவருவது கவலையளிக்கும் விஷயமாகும்.
பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் “ரா’ அமைப்பின் இணை இயக்குநராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை அங்கு உயர் அதிகாரியாக அவர் பணியாற்றி வந்தார். உளவு அமைப்பின் அனைத்து ரகசியங்களையும் சேகரித்து வைத்திருந்தார்.
இதற்கிடையில் உளவு அமைப்பின் மிக முக்கிய ரகசியங்கள் பிற நாடுகளுக்குக் கசியத் தொடங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அமைச்சரவை செயலகம் புலனாய்வில் இறங்கியது. தேவன் சந்த் மாலிக் மீது கண்காணிப்பு தொடங்கியது. உளவு அமைப்பின் ரகசியங்களை மாலிக்தான் வெளிடுவது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியது.
எனவே மாலிக் மீது தில்லி காவல் நிலையத்தில் மத்திய அமைச்சரவைச் செயலகத்தில் உள்ள “ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்’ இயக்குநர் அனுஜ் பரத்வாஜ் புகார் செய்தார். போலீஸ் கிடுக்கிப்பிடி இறுகியதை அடுத்து வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார் மாலிக்.
மாலிக்கை பற்றிய விவரங்களை சேர்க்க முற்பட்ட போலீஸôர் அதிர்ச்சி அடைந்தனர். அரசு பதிவேட்டில் அவரைப் பற்றிய விவரம் ஆய்வு செய்யப்பட்டது. மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அந்தப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த முகவரியில் விசாரித்தபோதுதான், மாலிக் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வங்கதேசத்துக்காக ஒற்றர் வேலை பார்த்தார் என்பதும் உறுதியானது.
மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், குறிப்பாக உளவுப் பிரிவுகளில் உளவாளிகள் ஊடுருவது அடிக்கடி நடைபெறும் விஷயமாகிவிட்டது.
2004 ல் “ரா’ உளவுப் பிரிவின் இணைச் செயலராகப் பணியாற்றிவந்த ரவீந்தர் சிங் என்பவரும் இதேபோன்று அமெரிக்க அரசுக்கு ஒற்றராகச் செயல்பட்டார். அவரைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கு முன்பாகவே அவர் அமெரிக்காவுக்கு தப்பியோடி விட்டார். அத்துடன் “ரா’ உளவுப் பிரிவின் முக்கிய ஆவணங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றுவிட்டார்.
நமது நாட்டின் உளவுத் துறையில் பணியாற்றுவோரை அந்நிய நாடுகள் ரகசியமாக விலைகொடுத்து வாங்கி முக்கிய ஆவணங்களைப் பெற்றுவிடத் துடிக்கின்றன.
எனவே இனியாவது இத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை நன்கு ஆய்வுசெய்து பணிப் பொறுப்புகளை அளிக்க வேண்டும். இல்லாவிடில் அரும்பாடுபட்டு சேகரிக்கப்படும் முக்கியத் தகவல்கள் எதிரி நாடுகளுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் எளிதில் கிடைத்துவிட ஏதுவாகிவிடும். இது நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
Posted in 007, agent, Arms, Attack, Bad, Bangladesh, Bengal, Betray, Bribery, Bribes, Budget, CBI, Cells, Cheat, China, CIA, Corruption, counterintelligence, defence, espionage, Extremism, FBI, Foreign, Govt, Infiltration, Influence, Intelligence, International, Investigation, ISI, J&K, Jammu, Kashmir, KGB, kickbacks, Military, Negative, Pakistan, RAW, secret, Spy, Srinagar, Tamil, Terrorism, Terrorists, Undercover, Weapons, World | Leave a Comment »