தயாளுஅம்மாள் – கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு திட்டம்: குறைந்த செலவில் சிகிச்சை
கரூர், டிச. 3: கரூரில், தயாளுஅம்மாள் கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்புத் திட்டம் எனும் புதிய திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்தார் கே.சி. பழனிசாமி எம்பி.
இது தொடர்பாக அவர் கூறியது:
உதயம் அறக்கட்டளை மற்றும் ஜி.சி. மருத்துவமனை ஆகியவை இத்திட்டத்தைச் செயலாக்கும். ஏழை, நடுத்தர கர்ப்பிணிப் பெண்கள் 4-வது மாதத்திலிருந்து உதயம் அறக்கட்டளையில் ரூ. 2000 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். இதில், தனிப்பட்ட எனது பங்களிப்பு ரூ. 500. எனவே, பெண்கள் ரூ. 1,500 செலுத்தினால் போதுமானது.
இவர்களுக்கு 6-வது மாதம் முதல், ஸ்கேன், பரிசோதனை, சிகிச்சை என அனைத்தும் இலவசமாக கிடைக்கும். சுகப்பிரசவம் எனில் இத்தொகையே போதுமானது.
அறுவை சிகிச்சை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதற்கு ரூ. 5000 ஆயிரம் செலவாகும். இதில், ஏற்கெனவே பெற்ற 1,500 போக, கூடுதலாக ரூ. 3,500 செலுத்த வேண்டும். இந்த ரூ. 3,500லும் எனது சொந்த தொகை ரூ. 1000 பங்களிப்பாக அளிக்கப்படும் என்றார்.