Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Kathaazhai’ Category

Mooligai Corner: Herbs & Naturotherapy – Katraazhai (Aloe vera)

Posted by Snapjudge மேல் மே 18, 2007

மூலிகை மூலை: சூடு தணிக்கும் கற்றாழை

விஜயராஜன்

சதைப் பற்றாகவும், விளிம்பில் முள்ளும் உள்ள தாவரம் கற்றாழை இனத்தைச் சேர்ந்ததாகும். நடுவில் நீண்டு உலர்ந்த தண்டில் பூங்கொத்து இருக்கும். இதற்கு வேர்கள் அவ்வளவாக இருக்காது. இலைகள் கிடையாது. மடல்களே இலையைப் போல காணப்படும். இவை சதைப் பற்று நிறைந்ததாகும். மடலும் வேரும் மருத்துவக் குணம் கொண்டவை. தோல் நீக்கிய மடலை ஏழு முறை கழுவினால் அதிலுள்ள கசப்புத் தன்மை நீங்கும். இதைச் சாப்பிடுவதால் தாது சூடு தணிந்து விடும். தமிழகம் எங்கும் எல்லா இடங்களிலும் வளர்கின்றது.

வேறு பெயர்கள் : அங்கனி, அங்கினி, அமேதநீக்கி, கன்னி, சுங்கிளி, குமரி, குமரி சட்சமனாரி, சோற்றுக் கற்றாழை, கற்றாழை.

சாம்பல் நிறக் கற்றாழை : இந்த வகை கற்றாழையின் மடல்கள் சாம்பல் நிறத்துடன் கூடிய பச்சை நிறத்தில் இருக்கும். இந்த வகையான கற்றாழையை யானைக்கால் கற்றாழை என்றும் அழைக்கப்படுவது உண்டு.

பச்சைப் புள்ளி கற்றாழை : இந்த வகை கற்றாழையின் மடல்களில் வரி போன்ற கோடுகளும், புள்ளிகளும் இருக்கும். மடல்களின் இரு ஓரங்களிலும் சற்று இலேசாக வளைந்து முட்கள் இருக்கும். இந்த இரண்டு வகையான கற்றாழைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் தானாகவே வளர்கின்றது. இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் குமரி மாவட்டம், விருதுநகர் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுற்றியுள்ள இடங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது.

சிவப்புக் கற்றாழை : இந்த வகைக் கற்றாழையில் மடலில் சிவப்பு நிறம் கலந்த பச்சை இருக்கும். மிகவும் அரிதாகவே பார்க்க முடிகின்றது. இந்த வகை கற்றாழை 3 அடிக்கு மேல் வளர்வதில்லை.

ஆங்கிலத்தில் : Aloe vera, Linn, Liliaceae

மருத்துவக் குணங்கள் : சோற்றுக் கற்றாழையின் மடலில் உள்ள சோற்றை மட்டும் சீவி எடுத்து 7 முறை தண்ணீரில் அலச வேண்டும். இப்படிச் செய்வதால் கசப்புத் தன்மை நீங்கி, குமட்டல் வாடையும் நீங்கி மருத்துவத்திற்கு ஏற்றதாக மாறும். இதைச் சிறு துண்டுகளாக வெட்டி தேனில் குழப்பி 3 துண்டுகள் 3 வேளை சாப்பிட்டு வர உடலிலுள்ள சூடு தணியும்.

சோற்றுக் கற்றாழையின் சோறு 10 முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.

பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.

மேற்கண்ட எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும். எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.

சோற்றுக் கற்றாழையின் சோற்றை மட்டும் சீவி எடுத்து மண் சட்டியில் போட்டு சிறு தீயில் கிளறி வந்தால் பாகு பதம் வரும். அத்துடன் கொஞ்சம் மஞ்சனத்தைச் சாறு பிழிந்து விட்டு மறுபடியும் கிளறி நீர் வற்றியவுடன் வேறு ஒரு பீங்கான் பாத்திரத்தில் விட்டு மைசூர்பாகு போல ஆற வைத்தால், பாளமாகத் தென்படும். இதை இரத்த பாளம் என்று அழைப்பார்கள். இதை எலும்பு முறிவு, சதை பிறழ்தல் மற்றும் அடிபட்ட இடத்தில் இரத்தம் உறைந்து காணப்படும் இடத்தில் காசிக் கட்டியுடன் சேர்த்து அரைத்துப் பற்றிட குணமாகும்.

சோற்றுக் கற்றாழையின் வேரை மட்டும் எடுத்து அலசி பால் ஆவியில் அவித்து, நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 மேசை கரண்டி (15 மில்லியளவு) எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் சூடு தணிந்து ஆண்மை நீடிக்கும்.

சோற்றுக் கற்றாழையின் மடல் 7 முறை அலசி எடுத்தது அரை கிலோ, புள்ளி விழுந்த சிற்றாமணக்கு கொட்டை விளக்கெண்ணெய் 1 கிலோ, இரண்டையும் சேர்த்து பதமாகக் காய்ச்சி எடுத்து, அத்துடன் வெள்ளை வெங்காயச் சாறு 100 கிராம் பனங்கற்கண்டு அரை கிலோ இடித்துப் போட்டு நன்றாகப் பிசைந்து குழம்பாக்கி, சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து மீண்டும் இலேசான சூடு ஏற்றி கிளறிக் கொண்டே வந்தால் பாகு பதம் வரும். அப்போது இறக்கி வைக்கவும். பெரியவர்களுக்கு 10 கிராம் அளவிலும், 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்கு 5 கிராம் அளவிலும் 2 வேளை கொடுத்து வர எலும்பு முறிவு ஏற்பட்டு சதை பிறழ்வது மற்றும் அடிபட்ட இடத்தில் இரத்தம் உறைந்து இருப்பது குணமாகும்.

Posted in Aloe vera, Alternate, Ayurveda, Ayurvedha, Herbs, Kathaazhai, Katraalai, Katraazhai, Liliaceae, Mooligai, Naturotherapy | 3 Comments »