தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை
“சினிமா எடுப்பதை விட கூலி வேலைக்கு போகலாம்”
சினிமா பட விழாவில், டைரக்டர்கள் கஸ்தூரிராஜா-செல்வமணி வேதனை
சென்னை, பிப்.1-
“சினிமா தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. படம் எடுப்பதை விட, கூலி வேலைக்கு போகலாம்” என்று ஒரு பட விழாவில் டைரக்டர்கள் கஸ்தூரிராஜா, செல்வமணி ஆகிய இருவரும் பேசினார்கள்.
சினிமா பட விழா
புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து, சந்தர்நாத் டைரக்டு செய்துள்ள புதிய படம், `கண்களும் கவிபாடுதே.’ கே.ஜி.ரங்கமணி, ஆர்.நந்தகுமார், பி.ரமேஷ் ஆகிய மூன்று பேர் சேர்ந்து தயாரிக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.
விழாவில், `பிலிம்சேம்பர்’ தலைவர் கே.ஆர்.ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், நடிகர் சத்யராஜ், டைரக்டர்கள் கஸ்தூரிராஜா, செல்வமணி, பட அதிபர் எச்.முரளி, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் பேசும்போது, “திரையுலகுக்கு தமிழக அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி இருக்கிறது. என்றாலும், இந்த வருடம் பொங்கல் வெளியீடாக வந்த 6 படங்களும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. இந்த நிலை மாற வேண்டும்” என்று கூறினார்.
கே.ஆர்.ஜி.
`பிலிம்சேம்பர்’ தலைவர் கே.ஆர்.ஜி. பேசும்போது, “50 படங்கள் தயாரித்தவன், நான். ஆனால் இப்போது, செல்வமணியிடம் உதவியாளராக சேர்ந்து விடலாமா? என்ற சூழ்நிலையில் இருக்கிறேன்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசவந்த டைரக்டர் கஸ்தூரிராஜா கூறியதாவது:-
“50 படங்கள் தயாரித்த கே.ஆர்.ஜி, செல்வமணியிடம் உதவியாளராக போகலாமா என்ற சூழ்நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார். நான், 35 படங்களில் உதவி டைரக்டராக வேலை செய்து இருக்கிறேன். 20 படங்களை டைரக்டு செய்துள்ளேன். 12 படங்களை தயாரித்து இருக்கிறேன். இனிமேல் படம் எடுக்க வேண்டுமா? என்ற கேள்விக்குறி பெரிதாக என் முன் நிற்கிறது.
ஒரு நடிகரால் 100 படங்கள் நடிக்க முடிகிறது. ஒரு லைட்மேனால் 100 படங்களில் பணிபுரிய முடிகிறது. ஆனால், இந்த காலத்தில் 10 படங்களுக்கு மேல் யாராவது தயாரிக்க முடிகிறதா? இதற்கு காரணம் என்ன? என்று தெரிந்துகொள்ளும் பொறுப்பை, ராம நாராயணனிடம் ஒப்படைக்கிறேன்.
பாதுகாப்பு இல்லை
தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், தன்மானத்துடன் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. இப்போது நான் ஒரு படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். ஒருநாள் கூட நிம்மதியாக படப்பிடிப்பு நடத்திவிட்டு வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலை பற்றி திரையுலகம் ஆலோசனை நடத்தவேண்டும். அதற்கான முயற்சியை, ராம நாராயணன் எடுக்க வேண்டும்.”
இவ்வாறு கஸ்தூரிராஜா பேசினார்.
செல்வமணி
அடுத்து பேச வந்த டைரக்டர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:-
“என்னிடம் உதவியாளராக சேர்ந்து விடலாமா என்று யோசிப்பதாக கே.ஆர்.ஜி. வருத்தத்துடன் சொன்னார். படம் எடுப்பது அந்த அளவுக்கு `டார்ச்சர்’ ஆன விஷயமாக இருக்கிறது.
சினிமா துறையில் இருந்தே விலகிவிடலாமா? என்ற எண்ணம் வருகிறது. வேறு ஏதாவது கூலி தொழில் செய்யலாம் போல் இருக்கிறது. சினிமாவில் செலவுகள் அதிகரித்து வருகிறது. நான் டைரக்டு செய்த `புலன் விசாரணை’ படத்தில், மிகப்பெரிய `கிளைமாக்ஸ்’ சண்டை காட்சி இடம்பெற்றது. அப்போது, `கிராபிக்ஸ்’ இல்லை.
ஆனால், இப்போது எல்லா சண்டை காட்சிகளிலும் `ரோப்’ (கயிறு) பயன்படுத்துகிறார்கள். அது படத்தில் தெரியுமே? என்று கேட்டால், `கிராபிக்ஸ்’சில் அழித்து விடலாம் என்கிறார்கள். தயாரிப்பாளர்களால், தொழில்நுட்ப கலைஞர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.”
மேற்கண்டவாறு செல்வமணி பேசினார்.
உடனே கே.ஆர்.ஜி. எழுந்து வந்து, `மைக்’கை பிடித்தார்.
“பிரச்சினைகளை மேடையில் சொல்லக்கூடாது. அதற்கென்று சங்கம் இருக்கிறது. அங்கே சொல்லலாம். இது, மேடையில் விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. அந்தக்காலத்தில் ஸ்ரீதர் எனக்கு `துடிக்கும் கரங்கள்’ படத்தை 40 ரோல்களில் எடுத்துக்கொடுத்தார். பாரதிராஜா `சிவப்பு ரோஜாக்கள்’ படத்தை 30 ரோல்களில் எடுத்துக்கொடுத்தார். இப்போது முடியுமா? இவ்வளவு பேசுகிற கஸ்தூரிராஜாவை, பிரச்சினை வரும்போது தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. சூழ்நிலை-சந்தர்ப்பத்துக்காக மட்டும் மேடையை பயன்படுத்தக் கூடாது” என்று கூறினார்.
சத்யராஜ் சமரசம்
தொடர்ந்து பேச வந்த சத்யராஜ், இரு தரப்பினரையும் சமரசம் செய்வது போல் பேசினார். “இது, குடும்பத்தில் நடந்த ஒரு கலந்துரையாடல். அவ்வளவுதான். திரையுலக நன்மைக்காக நடந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
முன்னதாக, டைரக்டர் சந்தர்நாத் வரவேற்று பேசினார். விழா முடிவில், பட அதிபர் ரங்கமணி நன்றி கூறினார்.