“கருத்து’ கூட்டத்தில் கருத்து மோதல்
சென்னை, நவ. 30: மரண தண்டனை குறித்து கருத்து அமைப்பு சென்னையில் புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது. “கருத்து‘ அமைப்பு சார்பில் மரணதண்டனை குறித்த கருத்துகளை பதிவு செய்யும் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
- கார்த்தி சிதம்பரம்,
- பாஜக தலைவர் இல.கணேசன்,
- மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வி.சுரேஷ்,
- வழக்கறிஞர் அருள்மொழி,
- கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
பாஜக தலைவர் இல.கணேசன் மரணதண்டனைக்கு ஆதரவாக தனது கருத்துகளை பதிவு செய்தார். அப்போது, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தியாகு, தமிழ் திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் கூட்டம் நடைபெற்ற அரங்குக்கு வந்தனர்.
மரணதண்டனைக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்ததால் இல.கணேசனிடம் பலரும் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டனர். அதற்கு, தனது பதில்களைத் தெரிவித்தார்.
இதனிடையே, மரணதண்டனை குறித்து இல.கணேசன் தெரிவித்த கருத்துகள் வேறுமாதிரி திசைதிரும்பியது. பார்ப்பனர்கள் தொடர்பான கருத்துகளுக்கு இட்டுச் செல்லப்பட்டது. இதற்கு, பார்வையாளர்களின் ஒருபிரிவினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில், மரணதண்டனை குறித்து தியாகு எழுப்பிய கேள்வியுடன் கூட்டம் நிறைவுற்றது.