நவீன திருதராஷ்டிரர்கள்!
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
திருதராஷ்டிரரின் சிக்கலான குணநலன்களுக்கு அடிப்படையாக அமைந்த அம்சம் என்னவென்றால், தனது ஆவி, பொருள் அத்தனையையும் செலவழித்தாவது தனது மகன்களை மாமனிதர்களாக்கிவிட வேண்டும் என்னும் அவரது ஆசைதான்.
தனது மகன்களின் நலனை தன் ராஜ்ஜியத்தின் நலன்களுக்கும் மேலானதாகக் கருதினார் அவர். செயல்களில் நேர்மை குறித்த கேள்வி ஒருபொழுதும் அவரது நெஞ்சில் எழவில்லை.
வியாசர் இப்பொழுது இருந்திருப்பாரானால், 21-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பற்றியும் எழுதியிருப்பார். அதில் ஒரே வேறுபாடு என்னவென்றால், அக்கால இந்திரப்பிரஸ்தத்தில் நூறு மகன்களைக் கொண்ட ஒரே ஒரு திருதராஷ்டிரர்தான் இருந்தார். ஆனால் இன்று ஒன்று அல்லது இரு மகன்களைக் கொண்ட நூறு திருதராஷ்டிரர்கள் இருக்கின்றனர்.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகியவை அடங்கிய இன்றைய இந்திரப்பிரஸ்தத்தில் நாம் காண்பது என்ன?
பொது வாழ்க்கையின் அடிப்படை நாகரிகங்களையெல்லாம் உதறிவிட்டு, தமது வாரிசுகளை மட்டுமே தலைவர்களாக்குவதற்காக தமது திறமை, சாதுர்யம் அனைத்தையும் பயன்படுத்தும் அபிநவ திருதராஷ்டிரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அந்த வியாசருக்கே ஓரிரு சகுனிவித்தைகளைக் கற்றுக்கொடுக்கக்கூடியவர் ஒருவர் உண்டென்றால், அது தேவ கௌடாதான். அவரை நெருங்கிவந்துகொண்டிருப்பவர்கள் கருணாநிதியும் கருணாகரனும். தில்லியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்.பி.க்களைக் கொண்டிருப்பதால் கிடைத்திருக்கும் தாற்காலிக செல்வாக்கால் ஒருவர் தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.
இன்னொருவரோ, அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு மகனுக்காக எதையெதையோ செய்துகொண்டு, தள்ளாடிக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய நபராகிவிட்டார்.
தேவ கெüடாவின் பிடியும் நழுவிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் தனது நிலையை மாற்றிக்கொள்வதுடன், தனக்குத்தானே முரண்பாடான நிலைகளை மேற்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார் அவர். தனது எதிரிகளே மிரளும் அளவுக்கு வில்லங்கமான சதித் திட்டங்களைத் தீட்டக்கூடிய மூளை அவருக்கு. இப்போதோ அவரது நண்பர்களே அஞ்சி நடுங்கும் மனிதராகிவிட்டார் அவர். இதைப்பற்றி பாஜகவினரைக் கேட்டால் தெரியும்.
கெட்டிக்கார திருதராஷ்டிரராக இருக்க வேண்டுமென்றால், வஞ்சகப் புத்தி மட்டும் இருந்தால் போதாது; இரக்கமற்ற கல்நெஞ்சராகவும் இருந்தாக வேண்டும். நவீன யுகத்தின் மிக வெற்றிகரமான வம்சத் தலைவராக இந்திரா காந்தியை ஆக்கியவை அந்தக் குணங்களே ஆகும். அவர் மறைந்து 23 ஆண்டுகள் ஆன பிறகும் உறுதியாக, வலிமையாக, வெற்றி கொள்ள முடியாததாக, தகர்க்க முடியாததாக… ஓர் அரசாட்சியைப்போல அவரது வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அது முடிவின்றி நீள்வதைப்போலத் தோன்றுகிறது; மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து ராகுல் காந்தி வரவிருக்கிறார்; அவருக்குப் பின் பிரியங்கா காந்தி வருவார். இந்திரா காந்தியில் தொடங்கி வழிவழியாக வந்ததைப்போல மீண்டும் அடுத்த வாரிசுகளின் வரிசை தொடங்கிவிடும்போலத் தோன்றுகிறது.
அதனுடன் ஒப்பிட்டால் கெüடாவின் வம்சாவளி ஒன்றுமே இல்லை. அவர் காங்கிரûஸக் காலைவாரி விட்டுவிட்டு பாரதிய ஜனதாவுடன் கைகோத்தபோது, தனது மகனை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு அவர் மேற்கொண்ட சாதுர்யமான நடவடிக்கையாக அது கருதப்பட்டது.
பிறகு காங்கிரஸýடன் உறவு கொள்வதற்காக பாஜகவைக் காலைவாரிவிட்டார் அவர். பின்னர் மீண்டும் பாஜகவைக் கரம்பிடிக்க காங்கிரûஸக் கைகழுவினார். பிறகு ஏறக்குறைய பாஜகவைக் கவிழ்க்கும் வகையில் புதிய “12 கட்டளைகளை’ அறிவித்தார் கெüடா. அதன் மூலம் அவர் விடுத்த செய்தி என்னவென்றால், பாவப்பட்ட மனிதரான எடியூரப்பா முதல்வராகிவிட்டாலும் சரி, ஒருநாள்கூட அவர் நிம்மதியாக உறங்கிவிட முடியாது என்பதுதான். காலைவாருவதில் மன்னரான கெüடா, அவரை தன் விருப்பம்போல ஆட்டுவித்துவிடுவார் என்பது நிச்சயம்.
இருந்தபோதிலும், தேவ கெüடாவுக்கும் பரிதாபகரமான ஒரு பக்கம் உள்ளது. மதச்சார்பின்மை என்ற துரும்பைப் பிடித்துக்கொள்ள அவர் செய்யும் முயற்சிதான் அது. “மதச்சார்பற்ற ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் -செக்யூலர்) என்பதற்கு, “மகன்களின் ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் ~ சன்ஸ்) என்று எப்பொழுதோ விளக்கம் கொடுத்துவிட்டனர் கர்நாடக மக்கள்.
ஆனால், அதன் மூத்த தலைவரால்தான் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள இயலவில்லை. மாறாக, பாஜகவுடன் கூட்டணி வைப்பதாலேயே தான் மதச்சார்பற்றவர் என்பது இல்லை என்றாகிவிடாது என்று கஷ்டப்பட்டு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் கெüடா. அதாவது, மதச்சார்பின்மை என்பது இனி “நேர்மையின்மை’ என்பதாகிவிடும்.
இவ்வளவு அனுபவம் மிக்க மனிதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இதற்கான பதிலை எப்பொழுதோ யுகாந்தவில் கூறிவிட்டார் ஐராவதி கார்வே.
“”திருதராஷ்டிரருக்கு யோசனை கூறும்போது, பேராசையின் அறிவீனம் குறித்தும், நீதியின் அவசியம் குறித்தும், ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்தும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் விதுரர். ஆனால், அந்த யோசனைகளுக்கு அவர் செவிசாய்க்கவுமில்லை; அதனால் பயன்பெறவும் இல்லை. விழலுக்குப் போய்ச் சேர்ந்தன அந்த யோசனைகள். சரியெது, தவறெது என்று பிரித்தறியும் திறனை இழந்துபோய்விட்டார் திருதராஷ்டிரர்” என்று அப்பொழுதே கூறிவிட்டார் கார்வே.
(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)
—————————————————————————————————————————-
சாணக்கியருக்கு ஒரு தர்மசங்கடம்
நீரஜா செüத்ரி
அரசியல் சாணக்கியர் எனக் கருதப்படும் எச்.டி. தேவ கெüடாவுக்கே இப்போது ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதா, வேண்டாமா என்பதுதான் அது. அவருக்கோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. பாஜகவின் ஆதரவு இல்லாமலே அவரது மகனின் அரசு தொடரட்டும் என்று முதலில் நினைத்தார். இப்போதோ பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்; அதே நேரத்தில் அதை முழுமையாகத் தாம் ஆதரிக்கவில்லை என்று காட்டிக்கொள்ளவும் விரும்புகிறார். இதுதான் இப்போது சிக்கலாகிவிட்டது.
இதே கெüடாதான், 1997-ல் காங்கிரஸ் அளித்துவந்த ஆதரவை சீதாராம் கேசரி திரும்பப் பெற்றவுடன், பாஜக ஆதரவு தர முன்வந்தபோதிலும், அதை நிராகரித்துவிட்டு பிரதமர் பதவியில் இருந்து இறங்கினார் என்பதை மறந்துவிட முடியாது.
2006-ல் பாஜகவுடன் அவரது மகன் கூட்டணி சேர்ந்தவுடன், அதைத் “துரோகச் செயல்’ என்று வர்ணித்தார் கெüடா. தனது பாஜக எதிர்ப்பு நிலையை நிரூபிப்பதற்கு அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகளில் அதுவும் ஒன்று. அப்போது, “துரோகம்’ செய்ததற்காக தனது மகனைத் தகுதி நீக்கம் செய்யுமாறும், மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.பி. பிரகாஷை நியமிக்குமாறும் கோரி கர்நாடக ஆளுநருக்கு 2006-ல் கடிதம் எழுதினார் கெüடா. “மனந்திருந்திய மைந்தனை’ சில வாரங்களிலேயே அவர் வரவேற்றுச் சேர்த்துக்கொண்டபோதிலும், அவர் எழுதிய கடிதத்துக்குப் பதிலாக வேறு கடிதம் எதையும் அவர் அனுப்பவில்லை.
இப்போது பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ள போதிலும், 12 நிபந்தனைகளை விதித்திருக்கிறார் கெüடா. அந்த நடவடிக்கையில் இருந்து தான் விலகியிருப்பதாகக் காட்டிக்கொள்வதே அதன் நோக்கம். கர்நாடகத்தை ஹிந்துத்துவா சோதனைச்சாலையாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது என்று கூறியே, முதலில் அக் கட்சிக்கு ஆதரவு தர ம. ஜனதா தளம் மறுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.
கூட்டணி உடன்பாட்டின்படி, பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராவதற்கு வழிவிட்டு அக்டோபர் 3-ல் எச்.டி. குமாரசாமி பதவியில் இருந்து விலகியாக வேண்டிய நிலை இருந்தது; அப்பொழுது, காங்கிரஸýடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், அக் கட்சிக்குத் தூது விட்டார் கெüடா. ஆனால், அந்தத் தூண்டிலில் காங்கிரஸ் சிக்கவில்லை; சோனியாவையும் அவரால் சந்திக்க முடியாமல் போனதால், எரிச்சலடைந்தார் கெüடா.
நம்ப முடியாததாகத் தோன்றும் இன்னொரு விஷயம் என்னவென்றால், கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துவிட்ட பிறகு, மாநில சட்டப் பேரவையைக் கலைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடந்த வாரம் தேவெ கெüடா கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுவதுதான். பாஜகவுடன் கைகோப்பதைவிட தேர்தலைச் சந்திப்பதற்கு அவர் தயாராக இருந்தார் என்பதைப் பதிவுசெய்வதாக அது இருக்கும் என்று நினைத்திருக்கக்கூடும்.
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள வொக்கலிகர் சமுதாயத்தின் பெருந்தலைவராகக் கருதப்படும் அவர், முஸ்லிம்களைக் கவர்ந்திழுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார். அண்மையில்தான், கட்சியின் மாநிலத் தலைவராக ஒரு முஸ்லிமை அவர் நியமித்தார். அண்மையில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றியை மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்றது. சிறுபான்மைச் சமுதாயத்தினர் அக் கட்சிக்கு வாக்களித்திருக்காமல் அந்த வெற்றி கிடைத்திருக்காது. பாரம்பரியமாக ஜனதா தளத்துக்கு இருந்துவந்த முஸ்லிம்களின் ஆதரவில் குறிப்பிடத் தக்க பங்கை தேவெ கெüடா சுவீகரித்துக்கொண்டிருக்கிறார்.
உள்ளாட்சி மன்றத் தேர்தலில், தனது பலத்தை முன்பிருந்ததைவிட மும்மடங்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் அக் கட்சியைப் பொருத்தவரை தேர்தலைச் சந்திப்பதற்கு இது சரியான நேரமல்ல என்று கருதியதால்தான் பி.எஸ். எடியூரப்பா முதல்வர் ஆவதற்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவுக்கு கெüடா குடும்பம் வந்தது.
கூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், “தந்தை-மகன்’ கூட்டணியால் ஏமாற்றப்பட்டதால், பாஜக மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுவிட்டது. நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் (எடியூரப்பா) மாநிலத்தின் தலைமைப் பதவிக்கு வருவதைத் தடுத்துவிட்டார்களே என்று லிங்காயத்து சமுதாயத்தினரும் கோபமுற்றனர். அந்தச் சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால், பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்திருக்கும். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மற்றவற்றைவிட அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது பாஜகவே என்பது கவனிக்கத்தக்கது.
இன்றைய அரசியலில் வர்த்தக நோக்கங்களும் ஒரு முக்கியப் பங்கை வகித்துக்கொண்டு இருக்கின்றன. பெங்களூர்- மைசூர் அடிப்படைக் கட்டமைப்பு வளாகத் திட்டத்தை நிறைவேறாமல் முடக்கிவிட கெüடாக்கள் விரும்பினர் என்பது அனைவரும் அறிந்ததுதான். பலநூறு கோடியில், “புது பெங்களூர்’ நகரத்தை நிர்மாணிப்பது குறித்தும் பேச்சு இருக்கிறது. உறவை முறித்துக்கொள்வது என்ற முடிவை பாஜகவும் ம. ஜனதா தளமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவ்விரு கட்சிகளையும் அத் திட்டத்தில் அக்கறை கொண்ட சக்திகள் வலியுறுத்தி இருக்கவும்கூடும்.
கெüடாவுடன் கூட்டணி வைக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பெரும்பான்மையினர் அதற்கு எதிராக உள்ளனர். அதுவேதான் காங்கிரஸ் மேலிடத்தின் நிலையும். ஏற்கெனவே கூட்டணி வைத்து, கையைச் சுட்டுக்கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே, தேவ கெüடாவை நம்ப முடியாது என அக் கட்சி கருதுகிறது. அதோடு, கெüடாவுடன் கைகோப்பது அரசியல் ரீதியில் பயன்தரக்கூடியதுதல்ல என்றும் காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.
அதோடு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து பிரிந்துவந்து காங்கிரஸில் சேர்ந்திருக்கும் சித்தராமய்யாவைப் பகைத்துக்கொள்வதாகவும் அது ஆகிவிடும். மேலும், கர்நாடகத்தின் மூன்றாவது பெரிய சமூகமான குருபா சமூகத்தைச் சேர்ந்தவர் சித்தராமய்யா. அவர்களது ஆதரவு காங்கிரஸýக்குப் பலம் சேர்ப்பதாக அமையும்.
கெüடாவும் அவரது மகனும் இல்லாத மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து காங்கிரஸ் ஆலோசித்திருக்கக்கூடும். ஆனால், 12 எம்எல்ஏக்களுடன் தில்லியில் முகாமிட்டிருந்த ம. ஜனதா தளத்தின் மூத்த தலைவரான எம்.பி. பிரகாஷால், தேவையான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களைத் திரட்ட முடியவில்லை.
கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைவது, விந்திய மலைக்குத் தெற்கே அக் கட்சி முதல் முறையாகக் காலூன்ற வழிவகுத்துவிடும் என்பதால், மாநில சட்டப் பேரவையைக் கலைத்துவிட வேண்டும் என்று சில காங்கிரஸôர் கூறுகின்றனர்.
வேறு சிலர் அதற்கு மாறாக வாதிடுகின்றனர். முதலாவதாக, பேரவையைக் கலைத்தால் உடனடியாகக் கண்டனங்கள் எழும். பாஜக -ம. ஜனதா தள கூட்டணிக்கு 129 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. குடியரசுத் தலைவர் முன் 125 எம்எல்ஏக்களின் அணிவகுப்பையும் நடத்திவிட்டனர். குடியரசுத் தலைவர் ஆட்சியை கர்நாடகத்தில் பிரகடனம் செய்தபொழுதே சட்டப் பேரவையையும் கலைத்துவிட்டிருந்தால், அது வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
ஆனால் அப்பொழுது அதை பிரதமர் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பொம்மை வழக்கின் தீர்ப்பு, பிகார் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்சினையில் இடதுசாரிகளுடனான உரசலை மனத்தில் கொண்டும், இந்த நேரத்தில் இன்னொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கருதியும் பிரதமர் அவ்வாறு முடிவுசெய்திருக்கலாம்.
அது மட்டுமல்லாமல், அரசியல் நோக்கங்களும் உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைக்குமானால், அதற்கு அனுதாப ஆதரவு என்பது இனி இருக்க வாய்ப்பில்லை. தேவ கெüடா விதித்திருக்கும் நிபந்தனைகளால் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்து, ஆட்சி சுமுகமாக நடைபெறுவதைக் கடினமாக்கிவிடும். எனவே, தேர்தல் இப்போது வந்தாலும் சரி, பிறகு வந்தாலும் சரி, பொறுத்திருப்பதன் மூலம் சிறப்பான வெற்றியைப் பெற முடியும் என நினைக்கிறது காங்கிரஸ் கட்சி.
—————————————————————————————————————————-
சந்தர்ப்பவாதமும் வாரிசு அரசியலும்
பொதுவாக, மன்னராட்சி மீதான மோகமும், அடிமைத்தன சிந்தனையும் படித்தவர்கள் மத்தியிலும் பரவலாகவே காணப்படுகிறது என்பதுதான் உலகம் ஒத்துக்கொண்டிருக்கும் உண்மை.
பிரிட்டன், பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் பெயரளவிலாவது மன்னராட்சி முறை தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்போதும் பிரிட்டிஷ் மகாராணியின் தலைமைக்குத் தலைவணங்குவதாகப் பெயரளவில் சொல்லிக் கொள்கின்றன. இந்தியாவிலும் சரி, முன்னாள் மகாராஜாக்கள் மட்டுமல்ல, ஜமீன்தார்களும் பண்ணையார்களும் இப்போதுகூட அவரவர் இடங்களில் மரியாதைக்குரியவர்கள்தான். இவர்களில் பலர் மக்கள் பிரதிநிதிகளாகவும் வம்சாவளியாகத் தொடர்கின்றனர்.
நிலைமை இப்படி இருக்கும்போது, தெற்கு ஆசியாவில் வாரிசு அரசியல் தொடர்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், அனைத்து மாவட்டங்களிலும், சொல்லப்போனால் தாலுகா வரையில் அனைவருக்கும் தெரிந்த அரசியல் குடும்பம் நிச்சயமாக நேரு குடும்பம் மட்டும்தான். அந்தக் குடும்பத்தின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், இந்தியாவை ஒரு நாடாகப் பிணைத்து வைத்திருக்கும் பல விஷயங்களில் நேரு குடும்பத்தின் செல்வாக்கும் ஒன்று.
மன்னராட்சி வாரிசுகளுக்கும், இப்போதைய மக்களாட்சி வாரிசுகளுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அரச குடும்பத்தினர், அவர்கள் ஆண்ட நாட்டைத் தங்களது உரிமைக்கு உள்பட்ட சொத்து என்று கருதினார்கள். அதனால்தானோ என்னவோ, அரசர்களில் பலரும் தனது நாடும் மக்களும் செழிப்புடன் திகழ வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர். ஆனால் அரசியல் வாரிசுகள் அந்த அளவுக்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கிறார்களா என்று கேட்டால், தயக்கம்தான் தலைதூக்குகிறது. அதற்குக் காரணம், எந்தவிதத் தியாகமும் செய்யாமல், உரிமையும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக அடைந்த பதவிகள் பொறுப்புணர்வையும் கடமையுணர்வையும் தருவதில்லை.
அரசியலை ஒரு வியாபாரம் அல்லது தொழில்போலக் கருதி தங்களது வாரிசுகளை கட்சியின்மீதும் ஆட்சியின்மீதும் திணிக்கும் தலைவர்கள், தங்களை மன்னர்களாகக் கற்பனை செய்து கொண்டு, தங்களது வாரிசுகளைத் தயார்படுத்துகின்றனர். அந்த வாரிசுகளுக்கு நாடாளும் திறமை இருக்கிறதா என்று யோசிப்பதில்லை. அதனால்தான், எல்லா வாரிசுகளாலும் அரசியலில் வெற்றி பெற முடிவதில்லை.
மக்களாட்சியில் ஒரு மிகப்பெரிய நன்மை உண்டு. மன்னராட்சியில் இருப்பதுபோல, இறைவனால் அனுப்பப்பட்டவன்தான் அரசன் என்கிற மனப்போக்கு இங்கே செல்லுபடியாகாது. மக்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாவிட்டால், என்னதான் திணித்தாலும் எந்த வாரிசாலும் தாக்குப்பிடிக்க முடியாது. தங்களை நிலைநிறுத்திக் கொண்ட வாரிசுகளைவிட, வந்த சுவடு தெரியாமல் காற்றோடு கலந்த வாரிசுகளின் எண்ணிக்கைதான் அதிகம்.
அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் ஆனாலும் திறமை மட்டும்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதுதான் மக்களாட்சி மலர்ந்ததால் ஏற்பட்டிருக்கும் மகத்துவம். வாரிசு என்கிற அடையாளம் நுழைவுச்சீட்டாக இருக்க முடியுமே தவிர துருப்புச் சீட்டாக முடியாது.
அனுதாப அலையை சாதகமாக்கி அரசியல் லாபம்தேட வாரிசுகளைக் களமிறக்குவது என்பது தெற்கு ஆசியாவின் அத்தனை நாடுகளிலும் பலமுறை கையாளப்பட்ட யுக்திதான். அந்த வரிசையில் இப்போது பேநசீர் புட்டோவின் 19 வயது மகன் பிலாவலைக் களமிறக்கி இருக்கிறது பாகிஸ்தான் மக்கள் கட்சி. பிலாவல் தாக்குப்பிடிப்பாரா இல்லையா என்பதை காலம்தான் கணிக்க வேண்டும்.
ஆனால், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். வாரிசுகளை முன்னிறுத்தி அனுதாபம் தேடும் சந்தர்ப்பவாதம் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. நிலையான வெற்றிக்கு உத்தரவாதம் திறமையே தவிர பரம்பரை பாத்தியதை அல்ல!