முகங்கள்: கரகாட்டத்தில் திருக்குறள்!
வி. கிருஷ்ணமூர்த்தி
ஆண்டு: 1957; இடம்: வந்தவாசி அருகே மங்கலம் கிராமம்; கையில் எப்போதும் இருக்கும் திருக்குறள் புத்தகம். எதற்கும் திருக்குறள் மேற்கோள். சீனிவாசனை உறவினர்கள் மட்டுமல்லாது ஊரில் உள்ளவர்களும் திருக்குறள் பைத்தியம் என கிண்டலடித்தனர். ஆனால் அவரைப் பைத்தியம் என்று ஒதுக்கவில்லை, அவரது சகோதரி மகளான செல்லம்மாள்.
திருக்குறள் சொல்பவரை பைத்தியம் என்கிறார்களே ஏன்? அப்படி திருக்குறளில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் திருக்குறளை படிக்க ஆரம்பித்தார் அவர். 10 வயதில் ஏற்பட்ட திருக்குறள் ஆர்வம், செல்லம்மாவை குறளுக்கு அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம். திருக்குறள் மீது ஆர்வம் வருவதற்குப் பலருக்குப் பல காரணங்கள் உண்டு. செல்லம்மாளுக்கு ஏற்பட்ட ஆர்வம் இந்த வகையில் வித்தியாசமானதுதானே?
6-வது படிக்கும் போது செல்லம்மாள் கரகாட்டத்தைக் கற்றுக் கொண்டார். திருக்குறளும், கரகாட்டமும் தனது வாழ்க்கையை எந்த அளவுக்கு ஆட்கொள்ளப் போகிறது என்பது அப்போது தெரியாது செல்லம்மாளுக்கு. இந்த இரண்டிலும் ஏற்பட்ட ஆர்வம் திருக்குறளுக்குக் கரகாட்டம் ஆடும் அளவுக்கு அவரை உயர்த்தியது.
- திருக்குறள் மாமணி,
- திருக்குறள் தூதர்,
- திருக்குறள் செம்மல்,
- திருக்குறள் திருத்தொண்டர்
என ஏராளமான விருதுகளைப் பெற்ற, பெற காரணமாக இருந்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் புலவர் கோ.ப. செல்லம்மாள் இனி உங்களுடன்…
“”திருக்குறள், கரகாட்டம் இவற்றுடன் எனது பள்ளிப்படிப்பு நல்லபடியாக முடிந்தது.
பள்ளிப்பருவத்தில் கரகாட்டம் ஆடியும், திருக்குறளை பாடியும் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற்றதால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது சக மாணவர்களிடமும் பாராட்டுகளைப் பெற முடிந்தது. பள்ளிப்படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி அதுவும் திருக்குறள், கரகாட்டத்துடன் வெற்றிகரமாக முடிய ஆசிரியர் பணி கிடைத்தது.
ஆசிரியர் பணிக்கிடையே கரகாட்டத்துடன் எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி., டி.டி.எச். என படிப்பிலும் பல்வேறு சிகரங்களைத் தொட திருக்குறள் அடிப்படையாக இருந்தது.
படிப்பில் ஏற்பட்ட உயர்வு எனது பணியின் நிலையையும் மேம்படுத்தியது. உதவி ஆசிரியையாக, தலைமை ஆசிரியை வரை பல்வேறு உயர்வுகள் கிடைத்தன.
ஆசிரியர் பணியில் இருந்த 33 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்துவிட்டன. ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, என்னிடம் படித்த மாணவர்கள், மாணவிகளுக்குக் கரகாட்டத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்களைக் கல்வி மட்டுமல்லாது கலையிலும் வல்லவர்களாக உருவாக்கினேன்.
வெறுமனே கரகாட்டத்தை எப்படி ஆடுவது என சொல்லிக் கொடுக்காமல் மாணவர்களுக்குக் கரகாட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, சிறப்புகள், தற்போதைய நிலை ஆகியவைக் குறித்துச் சொல்லிக் கொடுப்பதால் நான்படித்தக் கலையை மற்றவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்த திருப்தி கிடைத்துள்ளது.
ஆசிரியர் பணியின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கரகாட்டத்தைக் கற்றுக் கொடுத்திருந்தாலும் அதில் மது, சந்திரா உள்ளிட்ட சில மாணவமணிகள் இந்தக் கலையில் பெரிய அளவில் சிறப்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கரகாட்டம் கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களுக்குத் திருக்குறளையும் கற்றுக்கொடுத்தேன். அனைத்து மாணவர்களையும் திருக்குறளை முழுமையாகப் படிக்கச் செய்து, அதில் போட்டிகள் நடத்தியும், மற்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அளவுக்குத் தயார்படுத்தினேன்.
இந்தச் சமயத்தில், கரகாட்டத்துக்கு வழக்கமான கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்களுக்குப் பதிலாக திருக்குறளின் சில பகுதிகளைப் பாடலாக மாற்றி கரகாட்டம் நடத்தினேன். பார்வையாளர்களிடம் இதற்குக் கிடைத்த வரவேற்பு இதனை மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டியது. இதனால், பக்தி மற்றும் கிராமியப் பாடல்களே இல்லாமல் அவற்றின் மெட்டில் திருக்குறளையும் அது வலியுறுத்தும் கருத்துகளையும் பாடலாக அமைத்து கரகாட்டம் நடத்த தொடங்கினோம். பல மாணவர்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தேன்.
உலகத் திருக்குறள் மையத்தில் இணைந்தது, எனது திருக்குறள் பணியை மேலும் விரிவுப்படுத்தியதுடன் என்னை திருக்குறள் தூதராக்கியது. திருக்குறள் கருத்துகளை மக்களிடம் விளக்க பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றேன். 1996-ம் ஆண்டில் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் திருக்குறள் கருத்து விளக்கத்துக்காகச் சென்ற போது திருக்குறள் இசைப் பாடலுக்குக் கரகாட்டம் ஆடியது பலராலும் பாராட்டப்பட்டது.
திருக்குறள் பிரசாரம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான மன்றங்கள், மையங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். இது எனது திருக்குறள் பணியின் எல்லையை மேலும் விரிவுபடுத்தியது. தமிழகம் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்கள் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் திருக்குறள் பிரசார மாநாடுகளில் பங்கேற்றேன்.
ஒரு கட்டத்துக்கு பின்னர் எனது அன்றாட செயல்களில் ஒன்றாகவே திருக்குறள் பிரசாரம் மாறிவிட்டது. எனது மகன் மகள் இருவருக்கும் திருக்குறளுடன் கரகாட்டத்தைக் கற்று கொடுத்து மேடை ஏற்றிவிட்டேன். வீட்டுக்கு வெளியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் எந்த நிகழ்ச்சியும் திருக்குறள் இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
திருக்குறள் பிரசாரத்தில் கிடைத்த சந்தோஷம் அதிகம் இருந்தாலும், கரகாட்டத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நமது கலாசாரத்தில் நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது கரகாட்டகலை. ஒரு சமயத்தில் கடவுள் வழிபாடாக மட்டும் இருந்த கரகாட்டகலை பிற்காலத்தில் பொழுதுபோக்காகவும் மாறியது. இந்தக் காலகட்டத்தில் பொழுதுபோக்காக இருந்தாலும் அதன் அடிப்படை புனிதத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி ஆடும்போது பல்வேறு சாகசங்கள் செய்து மக்களை அசத்துவதோடு ஆச்சரியப்பட வைத்தனர் கரகாட்ட கலைஞர்கள். ஆனால், தற்போது கரகாட்டத்தை முறையாகக் கற்றுக் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் மற்ற பொழுதுபோக்குகளில் இருந்து மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவும் கரகாட்டக் கலைஞர்கள் பல தவறான அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். ஆபாச சைகைகள் போன்றவற்றால் இந்தக் கலையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது கவலை அளிக்கிறது” என்றார் செல்லம்மாள்.