யார் செய்த தவறுகள்?
சட்டத்துக்குப் புறம்பாக உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைப்பதை எதிர்த்து வணிகர்கள் தில்லி மாநகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டங்களை நடத்தத் தொடங்கிவிட்டனர்.
நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய தில்லி அரசும் மத்திய அரசும் “”வர்த்தகர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்” என்று சொல்லி சலுகை காட்டுங்கள் என்று நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.
தில்லியைத் தவிர, வேறு எங்கு இப்பிரச்சினை நடந்திருந்தாலும் இந்த அளவுக்கு மத்திய அரசு “கருணை’காட்டியிருக்குமா என்பது சந்தேகமே.
சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டிய அரசு, சட்டத்தை வளைந்து போகச் செய்வது சரியானதல்ல. தில்லியில் இன்று ஏற்பட்டுள்ள இதே பிரச்சினை எல்லா நகரங்களிலும் இருக்கிறது. தில்லியில் அரசு மேற்கொள்ளும் உறுதியான முடிவினால் இந்தியாவில் அனைத்து நகரங்களுக்கும் புதிய விடிவு பிறக்கும். மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.
“”கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அரசு வலிமையற்றது அல்ல. கழுத்தில் கத்தியை வைத்து சலுகையை யாரும் கேட்க முடியாது. சட்டம் ஒழுங்கை மீறி மக்களை பணயம் வைத்து சலுகை கேட்க முடியாது” என்று நீதிமன்றம் அளித்துள்ள பதில் மிக அழுத்தமானது.
நாற்பது ஆயிரம் வர்த்தகர்கள் இப்பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதை வர்த்தகர்களும் ஏற்க வேண்டும்.
தேவையற்ற ஆக்கிரமிப்புகளால் திணறிக் கொண்டிருக்கும் தில்லி நகரை சீரமைக்கும் முதல் முயற்சிக்கே இந்த அளவுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இதற்குக் காரணம் அரசியல். வாக்குவங்கிகளை வசமாக்கும் முயற்சியில் எந்த வழியை வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம் என்ற அரசியலால் இந்த நிலைமை.
சட்டத்துக்குப் புறம்பான கடைகளைத் தொடக்க நிலையிலேயே தடுக்க வேண்டிய நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளே பல இடங்களில் இவை நிரந்தரமாக நீடிக்கக் காரணமாக இருக்கின்றனர்.
பல ஊர்களில், நிரந்தரக் கட்டடத்தில் கடை இருந்தாலும் அதை “தினசரி கடை’ என்பதாகக் குறைந்த கட்டணத்துக்கு (அதிகக் கையூட்டுப் பெற்று) நாள் வாடகை ரசீது கொடுக்கிறார்கள். அதே இடத்தில் பல ஆண்டுகளாகத் தொழில் செய்து வருவதாக ஒரு “ஆதாரத்தை’ ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். ஒரு நேர்மையான அதிகாரி இந்த ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டால், இந்த ரசீதுகளை ஆதாரமாகக் காட்டி, “தினசரி கடைகளை’த் தொடர்ந்து நடத்த அனுமதி கேட்டு வழக்குப்போட்டு, வழக்கு முடியும் வரை தினசரி கடைகள் மீது நடவடிக்கை கூடாது என்று தடையுத்தரவும் பெற்று, நிரந்தரக் கடைகள் நீடிக்கின்றன.
அண்மையில், ஒரு மாநகராட்சிக்குச் சொந்தமான 3.4 ஏக்கர் நிலம் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் (பல ஆண்டுகள் கழித்து) கையகப்படுத்தப்பட்டது. அங்கிருந்த நூறு கடைக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். பின்னர் போராட்டத்தைக் கைவிட்ட கடைக்காரர்கள் அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கை இதுதான்: “”….நாங்கள் (ஓர் அரசியல்வாதியிடம்) முப்பதாயிரம், நாற்பதாயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளோம். அட்வான்ஸ் மட்டும் திரும்பக்கிடைக்க வகை செய்யுங்கள்”.
இப்படிப்பட்ட நிலைமை இருக்கும்போது, தில்லி போன்ற பெருநகரில் 40,000 வர்த்தகர்கள் மூலம் அரசுக் கருவூலத்துக்கு வராமல் திசைமாறிய தொகை எத்தனை கோடியாக இருக்கும்?
The areas being targetted are:
- Category A – Defence Colony, Friends Colony, Panchsheel Park, Vasant Vihar.
- Category B – G K 1, 2, 3 4, Green Park, Green Park Extension, Hauz Khas, Gulmohar Park, Panchsheel Enclave, South Extension.
டெல்லியில் அனுமதியற்ற கடைகளுக்கு `சீல்’ வைப்பு இன்று தொடங்கியது
டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதி இல்லாமல் கடைகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த கடைகளை இடித்தும், சீல் வைத்தும் டெல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் செப்டம்பர் மாதம் நடத்திய ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது.
இதை தொடர்ந்து கடைகளுக்கு சீல் வைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. குடியிருப்பு பகுதி களில் உள்ள 44 ஆயிரம் கடைகளுக்கும் சீல் வைக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி யாக உத்தரவிட்டது.
இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முழு அடைப்பில் ஈடுபட்டனர். தடியடி நடந்தது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. வியாபாரிகள் கல்வீசியதில் பஸ்கள் சேதம் அடைந்தது. துணை ராணுவத்தால் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.
கடைகளுக்கு சீல் வைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பு கமிட்டி ஒன்றை அமைத்தது. இந்த கமிட்டியின் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இன்று முதல் மீண்டும் கடைகளுக்கு சீல் வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி டெல்லி குடியிருப்பு பகுதிகளில் அனுமதியற்ற கடைகளுக்கு `சீல்’ வைப்பு பணி இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. அசம்பாவிதங்கள் நடைபெற்று விடாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »