ஆர்.எம்.வீ. 81-வது பிறந்த நாள் விழா- தமிழ் அறிஞர்கள் ஐவருக்கு விருது
சென்னை, செப். 7: எம்.ஜி.ஆர். கழகம், கம்பன் கழகம் ஆகியவற்றின் தலைவர் ஆர்.எம். வீரப்பனின் 81-வது பிறந்த நாள் விழா தமிழ் அறிஞர்களைக் கெüரவிக்கும் நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ் அறிஞர்கள் 5 பேருக்கு தலா ரூ.10,000 கொண்ட பொற்கிழி, தமிழ் செம்மல் விருது ஆகியவற்றை சனிக்கிழமை சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.
இதுதொடர்பாக ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனச் செயலர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆர்.எம்.வீ. பிறந்தநாள் விழாக் குழுச் செயலர் எம். ஜெகதீசன் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:
ஆர்.எம்.வீ. பிறந்த நாள் விழா 9.9.2006-ல் எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
பொற்கிழி பெறுவோர்: காலை 10.30 மணிக்குப் பிறந்த நாள் மங்கலம் இலக்கிய விழா நடைபெறுகிறது. தமிழ் அறிஞர் நன்னன், எழுத்தாளர் விக்கிரமன், திருக்குறள் ஆராய்ச்சியாளர் காரைக்குடி லெ. நாராயணசாமி, கவிஞர் சாமி பழனியப்பன், பத்திரிகையாளர் க. திருநாவுக்கரசு ஆகிய 5 பேருக்கும் பொற்கிழி -விருதுகளை முதல்வர் வழங்குகிறார்.
ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் நினைவுப் பரிசை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வழங்குகிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றுகின்றனர்.