யார், புதிய வெளியுறவு அமைச்சர்?
நீரஜா செüத்ரி :: தமிழில்: லியோ ரொட்ரிகோ
அணிசாரா நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பியதும் வெளியுறவுத் துறைக்குப் புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என்று உறுதி அளித்திருந்தார் பிரதமர். அதைத் தொடர்ந்து, அப் பதவியைப் பிடிப்பதற்கான போட்டியும் நெருக்குதல்களும் காங்கிரஸ் கட்சியில் அதிகரித்துவிட்டன.
இந்திய ~ அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உறுதியாகும் வரையில் வெளியுறவு இலாகாவைத் தன் வசமே வைத்துக்கொள்ளவே பிரதமர் விரும்புவார் என பலர் கருதுகின்றனர். நேரம் வரும்போது புதியவரின் பெயரையும் அறிவித்து நியமனமும் செய்துவிட்டுப் போகலாம். முன்னறிவிப்பை வெளியிட்டதன் மூலம் பல்வேறு தரப்புகளில் இருந்தும் நெருக்குதல்களை வரவழைத்துக் கொண்டுவிட்டார் பிரதமர்.
இது ஒருபுறம் இருக்க; அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டைப் பொருத்தவரை, அது வெற்றி பெற்றால், பிரதமரின் கிரீடத்தில் வைத்த வைரக்கல்லாக அது கருதப்படும். ஒருவேளை தோல்வி அடைந்தாலும், “அமெரிக்க நெருக்குதலுக்கு அடிபணிந்துவிடவில்லை’ என்ற பெருமை அவருக்குக் கிடைத்துவிடும். அதனால் அவரது மதிப்பும் உயர்ந்துவிடும். நாடாளுமன்றத்தில் திட்டவட்டமான உறுதிமொழியை அளித்திருக்கும் அவரால், அதிலிருந்து பின்வாங்குவது இயலாத காரியம்.
மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம் எதையும் மேற்கொள்ளும் உத்தேசம் பிரதமருக்கு இல்லை. ஏனென்றால், ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து நெருக்குதல்களை வரவழைப்பதாக அது அமைந்துவிடும்.
பாதுகாப்புத் துறை அமைச்சரான பிரணப் முகர்ஜி வெளியுறவுத் துறைக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார்; அனுபவத்தில் மூத்தவர், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட 35-க்கு மேற்பட்ட அமைச்சரவைக் குழுக்களுக்குத் தலைமை வகித்திருப்பவர்; எதிரும் புதிருமாக நாடுகள் அணி சேர்ந்திருக்கும் இன்றைய உலகச் சூழலில், இந்தியாவுக்கு வரக்கூடிய நெருக்குதல்களைச் சமாளிக்கக்கூடியவர். ஆனால், பாதுகாப்புத் துறையிலிருந்து வெளியுறவுக்கு மாற்றப்படுவதை அவர் விரும்பவில்லை.
தெளிவாகச் செயல்படக்கூடிய ப. சிதம்பரமும் அப் பொறுப்புக்குப் பொருத்தமானவர்தான். ஆனால், தமிழரான அவருக்கு, இலங்கை தொடர்பான கொள்கையை ~ அதிலும் குறிப்பாக அங்கு நிலைமைகள் மேலும் சிக்கலடைந்துள்ள நேரத்தில் ~ கையாள்வது சங்கடமானதாக இருக்கக்கூடும். அதோடு, நிதித் துறையை அவர் கையாள்கிற விதமும் பிரதமருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது.
புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக கரண் சிங், எஸ்.எம். கிருஷ்ணா, கமல் நாத், கபில் சிபல் ஆகியோரில் யாராவது ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அண்மைக் காலமாக அரசியல் வட்டாரத்தில் அடிபட்டுக்கொண்டு இருந்தது. சிதம்பரத்துக்கு எப்படி இலங்கை விவகாரமோ, அதேபோல கரண் சிங்குக்கு பாகிஸ்தான் விவகாரம். காங்கிரஸ் கட்சியின் வெளியுறவு விவகாரக் குழுவுக்கு அவர்தான் தலைவர்; அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவர்; பிரதமரின் தூதராக நேபாள விவகாரத்தைத் திறமையாகக் கையாண்டவர். இருந்தபோதிலும், அவர் ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற அம்சம் அவருக்குப் பாதகமாக இருக்கிறது.
வெளியுறவுத் துறையில் புத்தெழுச்சியுடனும் உத்வேகத்துடனும் செயல்படக் கூடியவர்தான் கபில் சிபல். பிரதமரின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. கூர்மையாகவும் சிந்தனைத் தெளிவுடனும் செயல்படக்கூடியவர்; சட்டம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அறிவும் அவருக்கு இருக்கிறது. பாரம்பரியமாக இந்தியாவின் நண்பர்களாக இருப்பவை இஸ்லாமிய நாடுகள்; ஆயினும், அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு, ஈரான் விவகாரம் ஆகியவற்றில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக அவை அதிருப்தி அடைந்துள்ளன. எனவே, அவற்றுடன் மீண்டும் நெருங்கிய உறவை ஏற்படுத்துவது புதிய அமைச்சருக்கு முன்னுள்ள சவால்களில் ஒன்று. கபில் சிபலுக்கு சிறுபான்மைச் சமுதாயத்தினருடனும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால், அப் பதவிக்கு நியமிக்கும் அளவுக்கு அவர் மூத்தவரல்லர்; பலருக்கு “இளையவர்’ என்று கருதப்படுவதான் அவருக்கு உள்ள சிக்கல். அதோடு, கட்சியில் அவருக்கு எதிராக இருக்கும் சக்திகளும் பலமாக உள்ளன.
அனுபவத்தால் மெருகேறிய, மகாராஷ்டிரத்தின் ஆளுநராக இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அண்மைக் காலத்தில் அடிபட்டது. மத்திய அரசியலில் தீவிரமாக இறங்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு சில காலமாக இருந்துவருகிறது. ஆனால், அவருக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர், அண்மைக் காலத்தில் மத்திய அரசியலில் செல்வாக்கும் பலமும் மிக்கவராக உருவெடுத்திருக்கும் வீரப்ப மொய்லி ஆவார். பல்வேறு கமிட்டிகளின் தலைவராக, பிரதமரால் நியமிக்கப்பட்டிருப்பவர் அவர். கர்நாடகத்தைச் சேர்ந்த இருவர், ஒரே நேரத்தில் தில்லி அரசியலில் அதிகார மையங்களாகச் செயல்பட முடியாது.
கடைசியாக வெளியுறவுத் துறைப் பொறுப்புக்கு காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்ட பெயர் சிவராஜ் பாட்டீல்; உள் துறையில் குறிப்பிடும்படி செயல்படாத அவர், வெளியுறவுத் துறைப் பொறுப்புக்கு மாற்றப்பட்டு, தற்போது மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் சுஷில் குமார் ஷிண்டே, உள் துறை அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என்ற பேச்சு அடிபட்டது.
கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே பிரதமர் செயல்பட வேண்டியுள்ளது. பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி, சைபுதீன் சோஸ் உள்பட 8 மத்திய அமைச்சர்கள் தமது துறைச் செயலர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இப்போது அந்த வேலையில் இறங்கினால், அது குழவிக்கூட்டைக் கலைத்தது போலாகிவிடும் என்று அதைத் தவிர்த்துவருகிறார் பிரதமர்; எனவே, அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்வது அதைவிடச் சிக்கலானதாகிவிடும்.
இருந்தபோதிலும், வெளியுறவுத் துறைக்குப் புதிய அமைச்சரை நியமிக்கும் விஷயத்தைக் காலவரையின்றி மன்மோகன் சிங் தள்ளிப்போட முடியாது. வெளியுறவுத் துறை அமைச்சரின் பணிகளை பிரதமர் கவனித்துக் கொண்டிருக்க முடியாது; இந்தியாவுக்கு வருகை தருகின்ற பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை மன்மோகன் சந்தித்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஒரு நாட்டுக்கு வரும் வெளியுறவுத் துறை அமைச்சரை அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்தான் சந்திக்க வேண்டும் என்பது அரச நடைமுறையாகும். எனவே, இந்தியாவுக்கு வரக்கூடிய வெளிநாட்டு வெளியுறவு அமைச்சர் எவரும், இணை அமைச்சரைச் சந்திப்பதை விரும்ப மாட்டார்கள்.
இராக்கிய எண்ணெய்க்கு உணவுத் திட்ட ஊழல் தொடர்பாக விசாரித்த விசாரணைக் குழு, “நட்வர் சிங் குற்றமற்றவர்‘ என்று அறிவிக்கும் பட்சத்தில், அப் பொறுப்புக்கு அவர் மீண்டும் நியமிக்கப்படுவார் என்பதை அவருக்குத் தெரிவித்து, அவரை அமைதிப்படுத்தும் நோக்கத்தில்தான், முதலில் அப் பதவி நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிலைமைகள் வேறு விதமாக அமைந்துவிட்டன. நேரு, இந்திரா காந்தி, நரசிம்ம ராவ் போன்றவர்கள் நீண்ட காலத்துக்கு வெளியுறவுத் துறைப் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்து வந்திருக்கின்றனர். ஆனால், அக் காலச் சூழல் வேறு. இன்று, வெளியுறவுக் கொள்கையானது மிகவும் சிக்கலானதாகிவிட்டது; அப் பொறுப்பைக் கவனிக்கத் தனியாக ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுவும், பிராந்திய வல்லரசாக இந்தியா உருவெடுத்துவரும் நிலையில் அதற்கான அவசியம் மேலும் அதிகரித்திருக்கிறது.
தமிழில்: லியோ ரொட்ரிகோ